நீர்மழை பெய்தோய்ந்த நெடுங்காலை
நகரா முனையருகே
காத்திருக்கும் இரண்டில் ஒன்று
பதுங்கிக் கொண்டிருந்தது
எச்சரிக்கு முன்
எரிந்து போனான் இணைப் பயணி
மற்றொன்றின் உடல் சிதற
அழல் குழல் உமிழ்ந்து அகன்றேன்
உணர்பொறிகள் தெருவெங்கும் ஓலமிட
தொடர் அசைவைக் கண்டிறங்கும் சுழல்கோளம்
கால்சரவில் தொடுமுனைகள் உயிர்பறிக்க
கூர்சரங்கள் பெய்தோடும் நிழல்திரட்டு
பட்டும் வெடித்தும்
தொட்டும் துடித்தும்
மெய்தீண்டிப் படரும்
கரும்பச்சைத் தொடரரவங்கள்
மூச்சில் முகம் அழியும்
பேச்சில் வளை அதிரும்
ஊர் சூழ்ந்து மேல்விரியும்
ஒளிதுளையா மென்போர்வை
ஒன்றொன்றாய் அடுத்து அடங்கும்
ஆயிரமாயிரம் முனைப்பின் குறுஉருக்கள்
No comments:
Post a Comment