பல்லாயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தனர் மனிதர்
புதர்களில் விலங்குகளை உண்டபடி
பின்னர் அறிவித்தனர்
"கீழ்க்கண்ட முறைகளில்
வாழ்க்கையை அழைக்கலாம்:
நாடகம், தண்டனை, விளையாட்டு
கனவு, பயணம்
தான் ஒரு புண்ணாக்கு என அறிதல்"
ஆகவே மனிதர் சாயம் தரித்தனர்
முகங்களில்
தாழ்ந்த விட்டங்களில்
தொங்கினர் கழுத்தில் சுருக்கிட்டு
மிஞ்சினவர் நடந்தனர்
தார் உருகும் சாலைகள் வழியே
மைதானங்களின் சப்தம் கேட்கும் வரை
மரங்கள் வீட்டுக் கூரைமீது
கும்பலாய் கையசைத்து கதறி
வென்ற அணியின் செருப்புகள் வாங்க
கடைகளில் நுழைந்தனர்
வெய்யிலின் புழுதியை வாளிநீர்
தெளித்தடக்கி வாசல்தோறும் கோலமிட்டு
திண்ணைக்குக்கீழே சாக்கடையில்
கொசுமருந்து பீச்சினர்
இலக்கமிட்ட வீடுகளில்
மின்சாரம் நீர்வர குழாய்களை
கூரையில் பதித்தனர்
சிலர்பேச பலர்பேச அனைவரும்பேச
கருவிகள் நாற்றிசையும்
செயல்வழி இருத்தலைக் காண்பிப்போம்
எனவே உலகம் சுற்ற
சூரியனை முந்திச் செல்ல விமானங்கள்
பூமியை உதறி இருட்டு அண்டம்புக
கணம்தான் தேவை
நட்சத்திரங்களை அடைந்து உயிரினம் தேடுவோம்
பிறகும் நீளுது எல்லைகள்
அலைமிதக்கும் சிற்றெறும்பின்
கரைத்தொலைவு போல
(91187)
2 comments:
கவிதை பற்றி கருத்துச் சொல்ல எனக்கு 'பத்தாது'. ஆகவே, திருவாழ்த்தான்த்தனமாக ஒரு கேள்வி. கவிதை, 9.11.87 அன்று எழுதப்பட்ட கவிதையா?
!!
Post a Comment