Monday, August 21, 2006

கூகுள் செயலிகள் - 3

இப்படி கூகுள் இணையம் வழியாகவே நமக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான (!?) அனைத்துச் செயலிகளையும் வழங்க முற்படுகிறது. அதுவும் இலவசமாக. நிறைய கணினிச் செயலுறுப்புகளைக்கொண்ட பெரும் கணினிப் பண்ணைகள் அமைத்து அவற்றில் இருந்து இச்செயலிகள் நமக்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய கணினிப் பண்ணைகளை கூகுள் உலகில் பல இடங்களில் வழங்கிகளாக நிறுவி இருக்கிறது. இந்தியாவிலும் இத்தகை ஒரு பண்ணையை கூகுள் விரைவில் நிறுவ இருக்கிறது. இப்பண்ணைகள் இணையத்தின் ஒருபகுதியாகவும் இருக்கின்றன. ஆதலால் இணையத்தில் நாம் உலவும் போது நம் அடையாளங்களுடன் நம்மைப்பற்றிய தரவுகள் அனைத்தையும் கூகுள் நொடியில் கோர்த்துவிடலாம். இவை நமது இணையச் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும் கருவிகளாகவும் அரசுகளினால் பயன்படுத்தப் படலாம். உதாரணமாக அமெரிக்கா/இங்கிலாந்தில் தவிர்க்கப்பட்ட சமீபத்திய பயங்கரவாத வான் வெடிப்புகள் பற்றி இணையத்தில் கிடைக்கும் தகவல்களைக்கொண்டே அவர்களால் அதச் செய்ய இயலும் என அரசுகள் கணிக்கின்றன. சந்தேகத்துக்குரிய அத்தகைய நபர்களை அவர்கள் இணையத்தில் உலவும் தளங்கள், அவற்றில் இருந்து பெறும் தகவல்கள் இவற்றை அரசுகள் கூகுள் இடமிருந்து பெறலாம். கெட்டவர்களுக்குத்தான் இதைப்பற்றிய கவலை எல்லாம் ஆகவே பொதுவாக நாம் நிம்மதியாக இருக்கலாம்.

ஒருபக்கம் தேடுபொறி அமைப்பைச் செம்மைப்படுத்துவதிலும் மறுபுறம் மேலும் மேலும் பயன்படு செயலிகளை அனைவருக்கும் அளித்து அனைவரையும் பயனாளராக்கி அவர்களது தரவுகளை தன்வயமாக்குவதிலும் இன்னொருபுறம் மாபெரும் கணினிப்பண்ணைகள் நிறுவி இணையக் கட்டமைப்பின் இன்றியமையாப் பகுதியாக தன்னை ஆக்குவதிலும் இப்படி அனைத்து வழிகளிலும் கூகுள் தவிர்க்க இயலாத பொதுமக்கள் தரவுக் காவலனாக மாறிக்கொண்டிருக்கிறது. 'Dont be evil' என்பது கூகிளின் (மைக்ரோசாப்ட் நிறுவனத்தை திறமூல நிரலாளர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) உயிர்மூச்சான மந்திரம். அப்படியா இல்லையா என்று சில வருடங்களில் தெரியும்.

No comments: