Friday, July 27, 2007

இரண்டு நிமிடத்தில் கார்ட்டூன் போடுவது எப்படி?

(படிக்கப் பொறுமை இல்லை என்றால் கடைசியில் ஒரு குட்டி வீடியோ சுட்டி உள்ளது. பாருங்கள்)


பெயின்ட் செயலி பயன்படுத்தி வரைகலை போட்டி நடக்கிறது. புதிதாக பழகும் நண்பர்களுக்கு இந்தச் செயலியின் மூலம் என்னென்ன சாத்தியங்கள் என்று காட்ட என்னுடைய பழைய இடுகைகளுக்கு சில சுட்டிகள் கொடுத்திருந்தேன். இனி நான் கற்றுக்கொண்டது - எனக்குத் தெரிந்த அளவு:


பெரும்பாலும் நான் இயல்வகை (ரியலிச) ஓவியங்கள் வரைய வேண்டுமானால் பெயின்ட் செயலியை பயன்படுத்துவது இல்லை- இணையத்தில் அதிவேகத்தில் கார்ட்டூன் போட மட்டும்தான். மொத்தம் 5-10 நிமிடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது. ஒரு இடுகையை எழுதி இடுவதைவிட இது வேகமான வழி என்பதால் பல சமயங்களில் ஒரு கிறுக்கு கிறுக்கி சொல்ல வந்ததை இட்டுவிட்டு ஓடிவிடுவேன்.

இங்கு நான் பாவிக்கும் சில வழிமுறைகளைச் சொல்லுகிறேன். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி.

அ. கணினி எலியை ஒரு வரைகோலாக பயன்படுத்துவது பற்றி:

1. இதுவே போதும். பழகப் பழக நன்றாக வரும். சாதாரண ஒரு எலியே போதும். லேசர் எலியோ, பிற விலை அதிகமான எலிகளோ தேவையில்லை.
2. மேசை பரப்பு போன்ற எத்தகைய பரப்பும் சரிதான். ஒரு கட்டி அட்டை போட்ட 80 பக்க நோட்டுப் புத்தமே சிறந்த எலித்தளம்.
3. முதலிலேயே பென்சில்- தாள் கொண்டு வரையத்தெரிந்தால் நலம். எவ்வளவு நன்றாக உங்களால் பென்சிலில் வரையமுடியுமோ, அவ்வளவுக்கு எலியில் கற்றுக்கொள்ள நேரம் குறையும்.
4. தப்புத் தப்பாக வந்தால் கவலைப் படாதீர்கள். பழகப் பழக வரும். நீங்கள் செய்த தவறுகளைக் கண்டு பிடிக்க மற்றவருக்கும் வரையத் தெரிய வேண்டும். பெரும்பாலும் எல்லோரும் நல்லா இருக்கு என்றுதான் சொல்வார்கள். :-)
5. நன்றாக பென்சில் கொண்டு வரையத் தெரிந்தவரானால் ஒரு வரைதளம் - மின்னெழுதி (டேப்லெட்) வாங்கலாம். விலை அதிகம். வாங்காமல் இருப்பது நல்லது.

ஆ. தவறுகள் செய்வது தவறல்ல. அதை எத்தனை விரைவில் எளிதாகக் களைகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்காக ஒரு வீடியோ இறுதியில் உள்ளது. இரண்டு நிமிடம் செய்த வேலையில் எத்தனைமுறை தவறி அதை சரி செய்திருக்கிறேன் என்று பாருங்கள். (இது நாலு நிமிடம் ஓடும். ஆனால் 2 நிமிடத்தில் போட்டதுதான்). தவறுகளை பட்டியலிட்டுள்ளேன்.

இ. பொதுவாக ஒரு கார்ட்டூன் போடுவதில் இருக்கும் படிகள்:

1. விரைவான வரைகோட்டு கீற்றுதல்
2. பின்னால் வண்ணங்களை வெள்ளமாக நிரப்பப் போகிறோம். அதாவது ஒரு பரப்பை ஒரே நிறம் கொண்டு ஒரு சொடுக்கில் நிரப்புதல். இதை "ஃபிளட் ஃபில்" என்பார்கள். இதில் ஒரு மூடிய கோட்டுப் பரப்பை செயலி நிரப்பிவிடும்.
3. ஒரே வண்ணம் நிரப்பவேண்டிய மூடிய கோட்டுப் பரப்புகள் மூடி இருக்கின்றனவா என சோதித்தல். காட்டாக இந்த வீடியோவில் முகம், சட்டை, தலை முடி, மூக்குக் கண்ணாடி போன்றைவை.
4. அவை மூடிய கோட்டுப்பரப்புகளாக இல்லாவிட்டால் அவற்றை சிறு கோடிகளைக் கொண்டு மூடுதல்.
5. நிறங்களை நிரப்புதல்.
6. தவறுகளைக் களைதல் - அநேகமாக சிறு கோடுகளால் மூடுதல். இதற்கு உருப்பெருக்கியைப் பயன்படுத்துங்கள்.
7. மீண்டும் நிறங்களால் நிரப்புதல்.

திரும்பத் திரும்ப 2-7 படிகளை செய்தல். அவ்வளவுதான்.

ஈ. மீண்டும் நினைவு படுத்த:

1. வேகமாக வரைதல்
2. மூடிய பரப்புகளுக்காக சோதித்தல்
3. வண்ணம் நிரப்புதல்
4. உருப்பெருக்கி மூடா பரப்புகளை மூடுதல்
5. மீண்டும் வண்ணம் நிரப்புதல்.


உ. வண்ணங்களைப் பற்றி:

பின்னால் இன்னொருமுறை எழுதுகிறேன்.
முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்துங்கள்.
மங்கலான வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்.

நிறைய வண்ணங்களைப் பயன்படுத்தவும், பளிச்சென்ற வண்ணங்களைப் பயன்படுத்தவும் ஒரு ஒழுக்கம் வேண்டும். அது பழகப் பழக வரும்.



http://media.putfile.com/show1-40


-


-





-

9 comments:

-/பெயரிலி. said...

பயனான இடுகை

Balaji-Paari said...

அற்புதம்!! நன்றிகள்!!

agraharathil kazuthai said...

கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா?

கார்ட்டூன் என்பது வரைதலுடன் நின்று விடுகிறதா அல்லது வரைதலில் துவங்குகிறதா?

வரையத் தெரிந்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிடலாமா? கார்ட்டூன் வரைய மேட்டர் பிடிப்பது எப்படி?

படத்தை மறைத்துவிட்டு வாசகத்தைப் படித்தாலோ அல்லது வாசகத்தை மறைத்து விட்டு படத்தைப் பார்த்தாலோ கார்ட்டூன் விளங்கக் கூடாது என்று ஒரு இலக்கணத்தை, குமாரி கமலாவின் வீட்டுக்காரரும், மால்குடிக்காரரின் இளையருமான லெச்சுமண் ஒரு முறை சொன்னார், அது பற்றி உங்கள் கருத்து என்ன?

வற்றாயிருப்பு சுந்தர் said...

Super பதிவு. மிகுந்த உபயோகமான பதிவு.

ரொம்ப நன்றி.

பத்மா அர்விந்த் said...

நன்று. வரைதல் மட்டும் அல்லாது அனைத்திற்குமே பயனான குறிப்புகள்.

அருள் செல்வன் கந்தசுவாமி said...
This comment has been removed by the author.
அருள் செல்வன் கந்தசுவாமி said...

----
ரமணி, பாலாஜி, சுந்தர்
நன்றி.
-----------------------
பத்மா:
>>வரைதல் மட்டும் அல்லாது அனைத்திற்குமே பயனான குறிப்புகள்
நாம் வளர்ந்த காலம் வேறு என்றே பல முறை நினைக்கத்தோன்றுகிறது.
----------------------
அ.க:

உங்கள் கேள்விகள்:

>> கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா?

நம் எல்லோருக்குமே தெரியும். நிச்சயம் வேறு வேறுதான். ஆனால் இங்கு கார்ட்டூன் பற்றி நான் எழுதியது அவற்றையே நிறைய என் பதிவில் போட்டிருப்பதால் - எடுத்துக்காட்ட உதவியாய். பலவகைப் படங்கள் இப்பதிவில் இருக்கின்றன, இல்லஸ்ட்ரேஷன் போலவும். ஆனால் அவை குறைவு. மேலும் அவை பெயின்ட் மட்டும் கொண்டு வரையப்பட்டவை அல்ல. அதனால் இந்த இடுகைக்கு மட்டும் கார்ட்டூன் = வரைதல் சரியா.

பதிவிற்கு வெளியில் பேசினால் வரைகலை என்பதே பெரும் நிலப்பரப்பு. ஒரு ஓவியத்தை எளிதாக அணுக வரைதல் + தீற்றல் (sketching+painting) எனப் பிரிக்கலாம். சிலர் வரைதலில் சிறப்பாக இருப்பார்கள். சிலர் தீற்றலில். ஆனால் வரைதல்தான் அடிப்படை என்பதிலிருந்து மாறி நவீன ஓவியம் பல ஓவியர்களின் முயற்சிகளுக்குப் பின் வெறும் தீற்றலாகவும் இருக்கலாம் என்ற முறைக்கு கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நகர்ந்து வந்துவிட்டது. இப்போது வரைதல் ஒரு stylised/stylish genre. கருப்பு வெள்ளைப் படங்களைப் போல. தனிப்பட்டமுறையில் பேப்பர், துணி இவற்றில் நான் ஒரு வரைவன். நல்ல தீற்றன் அல்ல. ஆனால் கணினி தீற்றலை நன்கு கற்றுக்கொள்ள பொறுமை இல்லாதிருக்கும் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கும் நல்ல தீற்றும் சாத்தியத்தை அளித்திருக்கிறது. :-)


>> கார்ட்டூன் என்பது வரைதலுடன் நின்று விடுகிறதா அல்லது வரைதலில் துவங்குகிறதா?

கார்ட்டூனில் வெறும் வரைதல் மட்டுமே இருக்கும் மொழியில்லாக் கார்ட்டூகள் உண்டு. வரைதலில் துவங்கி மொழியைச் சேர்த்து முழுமை பெரும் கார்ட்டூன்கள். மொழியே இல்லாமல் வரைதல் மட்டும் கொண்டு ஆனால் மொழியின் அர்த்தத்துடன் இருக்கும் விஷுவல் பன்னிங் வகை கார்ட்டூன்கள் உண்டு. Punning is the lowest form of humour - இல்லையா; இந்தகாரணத்துக்காகவே ஹிந்துவின் கேசவ் சில சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கார்ட்டூனிஸ்ட்.


>> வரையத் தெரிந்தால் கார்ட்டூனிஸ்ட் ஆகிவிடலாமா? கார்ட்டூன் வரைய மேட்டர் பிடிப்பது எப்படி?

வரையத் தெரிந்தால் மட்டுமே கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது இல்லையா. சற்றே அபத்தத்தை உணரும் மனநிலை வேண்டும். சற்று அபத்தம், சற்று அனைத்து அதிகார எதிர்ப்பு, சற்று எள்ளல் தன்மை, சற்று முட்டாள்தனம் எல்லாம் இயல்பாக கலந்தால்தான் நல்ல கார்ட்டூன். மேட்டர் விஷயம் ரொம்ப சுலபம். நாம் வாழும் அனைத்துக் கணங்களும், அனைத்து நிகழ்வுகளும் முன்னே சொன்ன அபத்தம், எதிர்ப்பு,.. இன்னபிற கூறுகளுடன்தான் இருக்கின்றன அல்லவா. அதை உணரத் தெரிந்தால் போதும். என் இந்தப் பதிவில் நிறைய அறிவியல் தொடர்பான கார்ட்டூன்கள் இருக்கின்றன. அவை வேண்டும் என்றே ஒரு சீரியஸான அறிவியல் பார்வையை உடைத்து எனக்கு நானே உள்வாங்கிக்கொள்ள நான் பயன்படுத்தும் வழிமுறைகள். அந்த வகையில் அவை மிகவும் பெர்சனல் எனக்கொள்ளலாம். மற்றவை பல வகையில் playing to the gallery. தப்பில்லை இல்லையா. :-)


>> படத்தை மறைத்துவிட்டு வாசகத்தைப் படித்தாலோ அல்லது வாசகத்தை மறைத்து விட்டு படத்தைப் பார்த்தாலோ கார்ட்டூன் விளங்கக் கூடாது என்று ஒரு இலக்கணத்தை, குமாரி கமலாவின் வீட்டுக்காரரும், மால்குடிக்காரரின் இளையருமான லெச்சுமண் ஒரு முறை சொன்னார், அது பற்றி உங்கள் கருத்து என்ன?

அவரின் கார்ட்டூன்களில் இருந்தே இதற்கு மறுதலைகளைக் காட்டலாம். எழுபதுகளில் இருந்து அவரது கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
அவரது ஒரு பேட்டர்ன் பார்க்கலாம்:
ஒரு இடிந்த கூடிச் சுவர், கீழே தரையில் கிழிந்த துணியும், கலைந்த தலை,தாடியுடன் ஒரு ஏழை ஒருக்களித்து தரையில் கிடக்கிறான். பின்னணியில் ஒரு குடிசை. பக்கத்தில் ஒரு மாங்கரெல் நாய் ... இரண்டு பேண்ட், மூக்குக் கண்ணாடி போட்ட மீசையில்லாத அரசு அலுவலர் இருவர்.
கீழே இரண்டு நாட்களுக்கு முன் அரசு அறிவித்த திட்டத்தைப் பற்றி ஒரு கிண்டல் வாக்கியம். இதுதான் டெம்ப்ளேட். இந்தப்படத்தை வைத்து கடந்த முப்பது வருஷத்தில் அவர் ஒரு ஐயாயிரம் கார்ட்டூன் போட்டிருப்பாரா? இந்த கிரியேட்டிவிட்டி எனும் கலைஞர்களின் சிருஷ்டித்தன்மை பற்றி அறிவியலில் சில முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உண்டு. அவற்றை பரவலாக்க வேண்டும். தத்துவ பூச்சாண்டி காட்டுவதற்காக அல்ல. இந்த சிருஷ்டித்தன்மைக்கும் ஒரு இரைதேடும் எறும்பின் தேடலுக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் (அப்படி ஏதாவது இருந்தால்) புரிந்து கொள்ள.

பி.கு:

முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள். கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் பின்னூட்டத்தை இப்பெயரில் இம்முறை மட்டும் அனுமதிக்கிறேன்.
எனக்கும் தெளிவான அரசியல் நிலைபாடுகள் உண்டு. ஆனால் உங்களின் இந்தப் பெயர் உரையாடலின் திசையை கலைக்கும் வேலையைத்தான் செய்யும். புரிந்துகொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
மற்றபடி வெசா வின் அக்ரஹாரத்தில் கழுதையைப் பற்றி வேண்டுமானால் தனியாக விரிவாக பேசலாம். சரியா.

John Abraham's agraharathil kazuthai said...

மேலும் அவை பெயின்ட் மட்டும் கொண்டு வரையப்பட்டவை அல்ல. அதனால் இந்த இடுகைக்கு மட்டும் கார்ட்டூன் = வரைதல் சரியா.

பொதுவாக படம் வரைதல் பற்றி எழுதி விட்டு, கார்ட்டூன் வரைவது எப்படி என்று தலைப்பிட்டுருந்தது நெருடலாக இருந்தது. அதனால் தான் கேட்டேன். உள்குத்து வெளிக்குத்து எதுவும் இல்லை.

கார்ட்டூனில் வெறும் வரைதல் மட்டுமே இருக்கும் மொழியில்லாக் கார்ட்டூகள் உண்டு. வரைதலில் துவங்கி மொழியைச் சேர்த்து முழுமை பெரும் கார்ட்டூன்கள். Punning is the lowest form of humour - இல்லையா; இந்தகாரணத்துக்காகவே ஹிந்துவின் கேசவ் சில சமயம் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கார்ட்டூனிஸ்ட்.


உண்மை... கிரேசி மோகன் செய்யும் நகைச்சுவை போல, கொஞ்ச காலத்துக்குப் பிறகு போரடிக்கத் துவங்கி விடுகின்றன. கேசவ் ஒரு மகா கடியான கார்ட்டூனிஸ்ட். அதற்கு tier-II நாளிதழ்களில் வரும் கார்ட்டூனிஸ்ட்டுகள் எவ்வளவோ பரவாயில்லை.

வரையத் தெரிந்தால் மட்டுமே கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது இல்லையா. சற்றே அபத்தத்தை உணரும் மனநிலை வேண்டும். சற்று அபத்தம், சற்று அனைத்து அதிகார எதிர்ப்பு, சற்று எள்ளல் தன்மை, சற்று முட்டாள்தனம் எல்லாம் இயல்பாக கலந்தால்தான் நல்ல கார்ட்டூன்

அருமை...

கீழே இரண்டு நாட்களுக்கு முன் அரசு அறிவித்த திட்டத்தைப் பற்றி ஒரு கிண்டல் வாக்கியம். இதுதான் டெம்ப்ளேட். இந்தப்படத்தை வைத்து கடந்த முப்பது வருஷத்தில் அவர் ஒரு ஐயாயிரம் கார்ட்டூன் போட்டிருப்பாரா

லக்ஷ்மணை ரொம்ப அடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். மய்ய நீரோட்டத்தில் கலக்கின்ற எவருமே செய்யக் கூடிய தவறைத்தான் அவரும் செய்தார் - வெற்றி பெற்ற மாடல்களை மீளுருவாக்கம் செய்தல் - அந்த ஆளின் ஸ்ட்ரோக்குகளில் தென்படும் அலட்சியத் தன்மையும், காலரிக்காக விளையாடியதும் எனக்குப் பிடிக்கும். காட்டூன்களை நகைச்சுவை என்ற ஒரே வகைப்பாட்டுக்குள் அடக்க முயன்றார் என்றாலும், இந்திய கார்ட்டூனுலகுக்கு, அந்த ஆளின் பங்களிப்பு கணிசமானது என்று நினைக்கிறேன்.

முதலில் உங்கள் பெயரை மாற்றுங்கள்

மாற்றிவிட்டேன். இப்புதுப் பெயரில் ஏதும் சிக்கல் இருக்கும் என்று தோன்றினால், மறுமொழியை வெட்டி ஒட்டி உங்கள் பெயரிலேயே போடவும்.

கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காக உங்கள் பின்னூட்டத்தை இப்பெயரில் இம்முறை மட்டும் அனுமதிக்கிறேன்

நன்றி.

ஆனால் உங்களின் இந்தப் பெயர் உரையாடலின் திசையை கலைக்கும் வேலையைத்தான் செய்யும்

அப்படியாகத் தோன்றினால் மன்னிக்கவும். அக்கிரகாரத்தில் கழுதை படத்தின் பாலுள்ள ஈர்ப்பினால் தான் புனைபெயராக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

மற்றபடி வெசா வின் அக்ரஹாரத்தில் கழுதையைப் பற்றி வேண்டுமானால் தனியாக விரிவாக பேசலாம். சரியா

வெங்கட்சாமிநாதனின் கழுதையா அது? சரி என்ன பேசுவது? :-) ஒரு பிராந்தன் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துப் பணம் சேகரித்து தன் உயிரையும் புத்தியையும் கொடுத்து ஆக்கிய பிரதியை கூலாக *வெசா*வின் கழுதை என்று அடையாளம் காட்டுகிறீர்கள். விரிவாகப் பேசுவதானால் முதலில் அதைப் பற்றித்தான் பேச வேண்டும்.:-)

விரிவான விளக்கத்துக்கு நன்றி நண்பர் அருள்செல்வன்.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

>>>
வெங்கட்சாமிநாதனின் கழுதையா அது? சரி என்ன பேசுவது? :-) ஒரு பிராந்தன் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துப் பணம் சேகரித்து தன் உயிரையும் புத்தியையும் கொடுத்து ஆக்கிய பிரதியை கூலாக *வெசா*வின் கழுதை என்று அடையாளம் காட்டுகிறீர்கள். விரிவாகப் பேசுவதானால் முதலில் அதைப் பற்றித்தான் பேச வேண்டும்.:-)
----------
"தப்பு தப்பு " என்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறேன். திருத்தியதற்கு நன்றி.
என்ன தான் முயற்சி செய்தாலும் சொற்களின் மலைகளைக் குவித்த சிறுபத்திரிக்கைச் சூழலிருந்து என்னைப்போன்றவர்களால் மாற்றிச் சிந்திக்க இயல்பாக வரமறுக்கிறது பார்த்தீர்களா?
நீங்கள் திரைப்படம்/தொலைக்காட்சி வழியே வளர்ந்த அடுத்த தலைமுறை என நினைக்கிறேன்.

பி.கு.
பெயர் மாற்றத்துக்கு நன்றி (திருத்த முடியாத கேசுங்க என்று நினைத்துக்கொள்கிறேன்). இப்ப கொஞ்சம் பரவாயில்லை.