Saturday, May 17, 2008

பேராசிரியர்: எஸ். கே. ஆர் (Prof. S. K. Rangarajan)

பேராசிரியர்: எஸ். கே. ஆர்

எஸ்கேஆர் என்றே அறியப்பட்ட பேராசிரியர் கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் கடந்த 29 ஆம் தினம் தம் 75ஆம் அகவையில் காலமானார். இந்திய அறிவியல் கழகத்தில் கனிம வேதியியல் துறையில் பணிபுரிந்தார். மாணவனாக இருக்கும் போது பல முறை அவர் பேசக் கேட்டிருக்கிறேன். இஅக- விற்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. அங்கு பணிபுரியும் அறிவியலாளர்களில் பலரும் தம் துறைதவிர பிற அறிவியல் துறைகளிலும் சிறப்பான தேர்ச்சி உடையவர்களாகவும் அத்துறைகளில் சரளமாக இயங்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அறிவியல் என்பது துறை துறையாய் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் பிரிக்கப்பட்ட பெட்டிகளால் ஆனது என்பது போன்ற பொதுப் புத்தி மயமான பிம்பம் அறிவியலாளர் செயல்படும் போது பார்த்தால் முற்றிலும் தகர்ந்துவிடும். இதை நமது ஊடகங்கள் சரிவர மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை.

துறைக்கட்டுகளால் இறுக்கப்படாத அறிவியல் இயக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு எஸ் ஆர் கே. அவர் வேதியியல் துறையில், குறிப்பாக மின்வேதியியல் துறையில் இயங்கினார். இரும்பு துருப்பிடிப்பது, மின்சேமக்கலன்களின் இயக்கம், முலாம் பூசுதலின் அடிப்படை போன்ற அன்றாட வாழ்வில் காணும் பல பயனுறு செய்கைகள் இத்துறையில் பயிலப்படுகின்றன. ரங்கராஜன் இப்புலத்தின் கணித அமைப்புகளை, அடிப்படைகளை தேர்ந்த்து ஆராய்ந்தவர். குவாண்ட இயங்கியலைலக் கொண்டு மூலக்கூறுகளின் வேதிச் செயல்பாட்டை விளக்கும் பிரிவு குவாண்ட வேதியியல் என்று அழைக்கப் படுகிறது. இதைக்கொண்டே மேற்சொன்ன மின்வேதியியல் இப்போது கட்டமைக்கப் பட்டுள்ளது. இயல்பியலில் இருப்பது போன்றே இத்துறையிலும் கணிதமே இந்த குவாண்டம்மின் வேதியியலுக்கு மொழியாக உள்ளது. ஆனால் இயல்பியலில் பயிலப்படும் குவாண்டம் நிகழ்வுகளும் வேதியியலில் பயிலப்படும் குவாண்டம் நிகழ்வுகளும் வேறு வேறு நீட்டல் அலகுகளில் அமைந்தவை. அதனால் பயன்படுத்தப் படும் கணிதமும் சற்றே வேறுவகையானது. இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதலாம். ரங்கராஜன் கணிதத்தில் தேர்ந்த ஒரு அறிவியலாளர், அதனால் இத்துறையில் இயங்குவது இயல்பாக இருந்தது.

ரங்கராஜன் எப்பொழுதும் நிறைய மாணாக்கர்களை பெற்றவரல்லர். எப்போதுமே ஒன்றோ அல்லது இரண்டோ மாணவர்கள்தாம் அவரிடம் முனைவர் பட்டத்திற்காக பயின்று கொண்டிருப்பார்கள். ஆனால் யாரும் அவரிடம் சென்று இயல்பாக உரையாடலாம். எங்களைப் போன்ற பொறியியல் மாணவர்கூட. அனைவருக்கும் இயல்பாக, சரளமாக எதுவும் மிச்சம் வைக்காமல் கொடுக்கும் அறிவுத்திறம் அவருடையது. மிகுந்த மனிதநேயமும் ஆழ்ந்த முற்போக்கு சிந்தனையும் கொண்டவர். மாணவர்களிடமும் தொழிலாளர்களிடமும் நெருக்கமாக இயல்பாக பழகியவர். அவரைப் பற்றி பல நிகழ்வுகளைச் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம். பல சிறந்த முனைவர் பட்ட ஆய்வுகளை நடத்த வழிகாட்டிய அவர் முனைவர் பட்டமே பெற்றிருக்கவில்லை. இளங்கலைப் பட்டம் மட்டுமே பெற்றிருந்தார். அது வேறு காலம். அப்போது வேறு வகையான அறிவியலாளர்கள் இருந்தார்கள்.

1 comment:

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
எஸ்.கே.ஆர்.இன் மறைவுச் செய்தி வருத்தத்தை அளிக்கிறது. உங்களுடைய செறிவான இரங்கல் அவருடைய அறிவாற்றல், மனித நேயம், எளிமை முதலான அவருடைய பன்முக ஆளுமையைத் தொட்டுச் செல்கிறது.

இ.அ.க. தமிழ்ப் பேரவை விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேச ஏற்பாடு செய்திருந்தபோது கூட்டத்திற்கு தலைமை தாங்குமாறு எஸ்.கே.ஆர். ஐ அழைக்கச் சென்றபோது தான் முதன்முதலில் அவருடைய அறிமுகம் கிடைத்தது. இ.அ.க. இல் எனக்குத் தெரிந்த தமிழர் பேராசிரியர்களில் நவீன தமிழ் இலக்கியப் பரிச்சயம் இருந்தது எஸ்.கே.ஆர்.க்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.