Friday, December 31, 2004

அயல்தொழில் நுட்ப ஆபத்துகள்

நேற்று சுனாமி அலை மீண்டும் வரச் சாத்தியம் உண்டென நடுவன் அரசு அறிவித்ததால் பல பணிகள் தடைப்பட்டன. பார்க்க பத்ரியின் பதிவு.

இதை டெர்ரா ரிசர்ச் என்ற தனியார் கம்பெனியின் எச்சரிக்கையை அடிப்படையாக கொண்டு அறிவித்ததாககவும் அனால் அதற்கு முழுப்பொறுப்பு தாம் அல்ல என்பது போலவும் உள்துறை அமைச்சகமும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் சச்சரவில் ஈடுபட்டன. இந்தச் சச்சரவை ndtv பலமுறை காண்பித்தது. யார் இந்த டெர்ரா ரிசர்ச் என்று இணையத்தில் குடைந்ததில் டெர்ரா ரிசர்ச்.நெட் எனும் இணையத் தளத்தில் அந்த நிறுவனம் பூகம்ப முன்னறிவிப்பு தொழில் நுட்பக் கருவிகளை தயாரிப்பதாகவும் மற்ற அது சம்பந்தமான பிற தகவல்களும் இருந்தன.
முதல் பக்கத்திலேயே 'Forbidden Secrets of Earthquake Revealed"
என்ற 104$ (!) புத்தகத்தின் விளம்பரம் இருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு 'அறிவியல்' புத்தகத்தின் தலைப்பு இருந்தால் எனது அநுபவத்தில் உடனே சந்தேகமணி அடிக்க ஆரம்பித்துவிடும். எதற்கும் பார்க்கலாம் என்று பிற தொடர்புச் சுட்டிகளையும் தொடர்ந்து தளத்தில் சுற்றினேன். முக்கியமாக அத்தளத்தில் இருந்த தகவல் அறிக்கைகள் கட்டுரைகளின் பகுதியில் இருப்பதைப் படித்தவுடன் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. முதலில் கருவிகளைப் பற்றியும் நிலநடுக்க அலைகள் தரையின் இறுக்கமேல்பகுதியில் பரவுவதைப்பற்றியும் எதிர்பார்க்கக்கூடிய தகவல்கள் இருந்தன. தொடர்ந்து படித்தால் விலங்குகள் நிலஅதிர்வை முன்னுணர்வதெப்படி என்பது போன்ற இன்னும் அறிவியலில் முடிவுகாணப்படாத சில கேள்விகளுக்கு விடைகளும் அதைப் பற்றிய கருதுகோள்களும்!. இன்னும் தொடர்ந்தால் ஐன்ஸ்டைன்னின் சார்பியல் கோட்பாடைப்பற்றியும் மைக்கேல்சன்- மோர்லெ ஆராய்சியைப்பற்றியும் அவை எவ்வாறு தவறாகும், நிக்கொலாய் டெஸ்லாவின் தொலைந்துபோன ஒரு கட்டுரையில் எப்படி அவர் ஐன்ஸ்டைனை எதிர்த்தார் எப்படி இன்றைய வான் இயல்பியல் ஆராய்ச்சிகள் அத்தனையும் தவறு என்றெல்லாம் அடுக்கடுக்காக. இது எங்கே போய் முடியும் என்று தெளிவாகி விட்டது. வேறெங்கே? பைபிளில் தான். கடவுளே. இவர்களை நம்பியா நமது அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்தது.
சரியான கோமாளித்தனம் என்று பத்ரி எழுதி இருந்தார். It is no more funny. இதற்குக் காரணமான அரசு அதிகாரியை தேடிப் பிடித்து உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

Wednesday, December 29, 2004

செயல்படும் நேரம்

1. அறிவியல், திட்டமிடுதல் தடுமாற்றம்

இன்றுதான்தான் தொலைக்காட்சியில் முழுமையாகப் பார்க்கிறேன். இணையம் வழி மட்டுமே பேரழிவின் செய்திகளைக்கண்டு வந்தேன். கடல் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி. சென்னையிலேயே நிலவரம் மோசமாகத்தான் இருக்கிறது. இன்னும் கடலூர், நாகப்பட்டினத்திலும், ஈழத்திலும் மனம்பதைக்கும் அளவு.

நடந்த பேரழிவு நாட்டின் அறிவியல் திட்டமிடல் சட்டகத்தின் ஒரு செயல்பிறழ்வையே காட்டுகிறது. இந்தியா இப்போதுதான் 26 நாடுகளை உறுப்பிராகக் கொண்ட ட்சுனாமி முன்அறிவிப்பு வலையில் இணையப் போகிறது. அனைவரின் கருத்துப்படியும் முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான் உயிர்களைக் காத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. குழந்தைகளும், சிறார்களினதுமாகிய இழப்பு மிக அதிகம். ஒரு மணிநேர முன்னெச்சரிக்கைகூட இவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இன்று இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அமைச்சர் கபில் சைபல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முன்னறிவிப்பிற்காக உணர்பொறிகளும் தொடர்புவலைப் பின்னலும் அமைக்கப் பட்டுவிடும் என்று அறிவித்திருக்கிறார். இந்தியா இதை சற்றே பெரிய கடல்பரப்பில் வங்காள வளைகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல் பரப்பில் அமைந்த அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்கும் இவ்வசதியை அளிக்கவேண்டும். இதற்கான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கவும், இதை கடல்பரப்பில் நிர்வாகிக்கவும் தேவையான அனைத்து திறமைகளும் இந்தியாவில் இன்றே இருக்கின்றன. தேசிய அளவில் பல்துறை ஒத்துழைப்புடன் திட்டமிட்டு முடிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பவியலாலர்தான் இப்போது நம் குடியரசுத்தலைவராக இருக்கிறார். அவர் நெய்தல் நிலத்தில் வளர்ந்தவர் என்பதும் முக்கியமானது. இதற்குள் நிச்சயம் அரசு, அறிவியல் சட்டகத்தின் சக்கரங்கள் உருளத்தொடங்கியிருக்கும் என்று நினைக்கலாம்.

மீனவர்களுக்கு கடற்கரை அருகில் குடியிருப்பதுதான் வசதி. அவர்களை அங்கிருந்து விலக்கி நகருள் அடுக்குமாடிக்கட்டடங்களில் அடுக்குவதைப்போல அபத்தம் ஏதுமில்லை. முக்காலும் ஒன்றிரு படகுகளை வைத்திருக்கும் சிறு மீனவர்கள். கடற்கரைக்கு அருகில் உள்நிலத்தில் முதல் வரிசைவீடுகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இதற்கு முன்பே தமிழக அரசு சென்னை கடற்கரை மேம்பாட்டுத்திட்டத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் பல்லடுக்கு மாளிகைகள் கட்ட போட்ட ஒப்பந்தப்படி சில மீனவக்குப்பங்களை அகற்ற முயன்றபோது அவர்களின் எதிர்ப்பால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இப்போது வசதியாக இயற்கையே அவர்களை அடித்து பிளாட்பாரத்தில் தள்ளிவிட்டது.

சிவிலியன்களைக் கொண்ட கடற்கரை பாதுகாப்புப் படை ஒன்றை அமைத்து போதுமான பயிற்சி, கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பணிகள், தவறும் பொதுமக்களைக் காத்தல், அழிவுக்காலங்களின் போது உதவிப்பணி போன்ற பணிகளுக்கு செயல் படுத்தலாம். இதற்கு கடலுடன் அறிமுகமான மீனவ இளைஞர்களையே கொண்ட ஒரு அமைப்பை முழு தமிழக கடற்கரையோரப் பகுதிகளிலும் ஏற்படுத்தலாம். இதற்கெல்லாம் பொருட்செலவை விட அமைப்புத் திறமைகள் உடனே வேண்டும். எந்த ஒரு அழிவையும் எதிர்கொள்ள குழுப் பயிற்சிகள் நம்மிடையே இல்லை. மக்கள் தத்தமக்குத் தோன்றியதை மனிதாபிமானம் ஒன்றே கொண்டு உதவுகிறார்கள். ஒரு குழுவாக முன்பயிற்சியோடு இதைச் செய்தால் இன்னும் பல அழிவுகளைத் தவிர்க்கலாம். ஆனாலும் சென்னையில் நிலைமை மற்ற ஊர்களைவிட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஈழத்தில் வடகிழக்கில் நிலைமை பேசுந்தரமாக இல்லை. இந்திய அரசு உதவக்கூடிய நிலையில்தான் இருக்கும் என நினைக்கிறேன். பின்னணியில் நடக்கலாம் என்று நம்பத்தான் முடியும்.

2. ஆத்மாக்களின் அறுவடைக்காரர்கள்.

தெரிந்த விஷயம் என்றாலும் சில மனவிகாரங்கள் கருத்துருவங்களாக வெளிப்படையாக வருவது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
நண்பர்கள் முன்பே பதித்ததுபோல் குரானின் வாசகங்கள் அவர்களின் கடவுளின் செயல்பாடுகளைச் சொல்லி நம்மை பயமுறுத்த வெளியிடப்படுகின்றன. கிறுத்துவர்களின் பிரச்சாரம் ஓய்வில்லாது பாவத்தையும் பணத்தையும் காட்டி அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கிறது. சமீபத்திய 'இந்து' வைதீகமும் இதே முறைகளை பரவலாக்க முயல்கிறது. காஞ்சி சாமியாரின் புனிதத்தின் சக்தியைப்பற்றிய பொளராணிகப் புனைவுகள் திட்டமிட்டு மக்களிடையே விதைக்கப் படுகின்றன. எவன் செய்த பாவத்திற்காக, எவன் கடவுள் எம்மக்களைக் கொல்லத் தொடுகிறது?

Friday, December 24, 2004

ஹராஜிக்கு, தோக்கியோ

ஹராஜிக்கு, தோக்கியோஇடம் வலமாய் போவது போல்
எதிர்வந்து விலகும் விரல்கள்
பற்றியெழ விட்டு உதிரும்
ஒருநூறு குரல் முழக்கம்
கடகடத்துச் செல்லும் உலோகம்
நிலம்அமிழும் எஞ்சும் காகிதங்கள்
Tuesday, December 21, 2004

இ. தி -21
" ஒரு பேயக் கட்டிகிட்டு எங்கனா காடு வநாந்திரத்தில செட்டிலாயிடலாம்ன்னு பாத்தா இப்பிடி ஊருக்குள்ள கூட்டிவந்து இந்த பிரிட்ஜப் பாரு அந்த சோபாவைப்பாருன்னு காண்பிக்கிறயே உனக்கே நல்லாயிருக்கா ?..."

Monday, December 20, 2004

ஹரப்பா நாகரிகத்தின் 'மொழி' - 2

ஹரப்பா நாகரிகத்தின் மொழி - 2
-------------------------------------------------


சென்ற வாரம் ஹரப்ப நாகரிகத்தின் மொழி பற்றி ஒரு மாற்றுக்கருத்தை முன் வைத்த கட்டுரை பற்றிய முதல் பதிவை இட்டிருந்தேன். அதன் இரண்டாம் பகுதியாக ஸயன்ஸ் இதழில் வந்த கருத்துகளைத் தொகுத்து இப்பதிவில் இடுகிறேன். உரிமைபெற்ற பதிப்பாகையால் மொத்த மொழிபெயர்ப்பாக இல்லாமல் குறிப்புகள் மட்டும் கீழே:

-> புதையாராய்ச்சி, வரலாற்று அறிஞர்கள் முன் கருதியிருந்ததைப் போல ஹரப்ப நாகரிகம் ஒருமுனைப்படுத்தப்பட்ட, அமைதியான, பலத்த நடுவண் அரசைக்கொண்டதாக இராமல், பன்முகமான, பல்மொழி புழங்கும் ஒரு பெரும்பரப்பு நாகரிகமாக இருந்ததாக இப்போது காண்கின்றனர். இவ்வரசை ஒன்றாகக் கட்ட தொழுகுறிகள் கொண்ட இலச்சினைகளும், பலகைகளும் பிற வழங்கிகளும் பயன்பட்டன என்பது இக்கருதுகோளாகும்.

எழுத்துருவா, இல்லையா?
------------------------------------

-> இத்தகைய கருதுகோளுக்கு எதிர்ப்பும் பலமாகவே இருக்கிறது. பல சிந்து சமவெளி நாகரிக அறிஞர்களின் பதில்வினைகள் இப்படி:

-> "இந்த குறித்தொகுப்பு ஒரு மொழியைக் குறித்ததாகாது எனும் கருத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன் " மார்க் கெனோயர், புதையாராய்ச்சி நிபுணர், விஸ்கான்ஸின் மாடிசன் பல்கலைக் கழகம்
-> "அம்மக்கள் மொழியை பொருள்கட்டுமைக்காமல் வேறே என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? " அஸ்கோ பர்போலா, மொழியியல் வல்லுனர், ஹெல்சிங்கி பல்கலைக் கழகம், ஃபின்லாந்து
-> "அவை ஒரு மொழிக்குறிகளாகவன்றி வேறெதுவாக இருப்பதற்கும் சாத்தியமே இல்லை. அது ஒரு முழுமையான மொழிக்குறியீடு. அது ஒரு பேச்சுஒலிக்குறியீடும் ஆகும்" கிரிகோரி பொஸ்ஸெல், மொழியியலாளர், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகம்.
->இப்படி எதிர்ப்புகள் இருந்தாலும், ஆதரவாளர்களும் கூடுகின்றனர்
-> ஹார்வர்ட் மானுடவியலாளர் ரிச்சர்ட் மெடோ, " இந்தக் கட்டுரை இத்துறைக்கு மிக முக்கியமான பயனளிப்பாகும். இது இத்துறையில் ஹரப்ப மொழிபற்றிய முடிச்சவிழாச்சிக்கலாக இருந்த ஒன்றையும் விடுவிக்கும்" என்கிறார்
-> வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழக ஸ்டீவென் வெபர்," சில சமயங்களில் துறைசாராத வெளியாட்கள் வந்துதான் இத்தகைய மிக அதாரமான கேள்விகளை எழுப்புகிறார்கள். இனி ஹரப்ப குறிகள் இன்ன மொழியின் எழுத்துவடிவம் தான் எனச் சொல்பவர்கள் முதலில் அது ஒரு எழுத்துவடிவம் தான் என்பதை முதலில் நிரூபிக்கவேண்டும்" என்கிறார்.

குறிகளின் காலம்:
--------------------------
-> ஏறக்குறைய 3200 கி.மு வில் இக்குறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன(எகிப்திய ஹீரோக்ளிபிக்ஸ் மற்றும் இராக்கிய கூனிபோர்ம் எழுத்துகளின் காலத்துக்கு இணையாக ). 2800 கி.மு வாக்கில் அவை சகஜமான புழக்கத்தில் வருகின்றன. 2400 கிமு வில் மிகப்பலதரப்பட்ட பன்முகத்தன்மையுடையவையாக காணப்படுகின்றன. 1900 கிமு வாக்கில் குறையத்தொடங்கும் இவை 1700 கி.மு வில் முற்றும் மறைந்து விடுகின்றன.
-> இவை குப்பைத்தொட்டிபோன்ற இடங்களில் வீசிஎறியப்பட்டவை போன்றே தோன்றுகின்றன. மரியாதையுடன் இறந்தவர்களுடன் புதைக்கப்பட்டோ, கல்லறைகளிலோ அல்லது அன்றாட புழக்கத்திலிருக்கும் வீட்ட்டறைகளிலோ காணப்படவில்லை என்பது சுவாரசியமானதாகும்.

ஒட்டியும் வெட்டியும் வாதங்கள்
---------------------------------------
முந்தைய பதிவில் கூறப்பட்ட விவாதங்களையும் ஸயன்ஸ் கட்டுரை குறிப்பிடுகின்றது. அதில் காணாததை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
-> முக்கியமாக இச்சின்னங்கள்/குறிகள் மொழியின் வடிவக்குறிப்புகள் அல்ல என்றும் அவை தொழுபயன் குறித்தவை அல்லது பிற குழுக் குறுகளாகவோ இருக்கலாமென்றும் கருத்து எழுந்துள்ளது.
-> முக்கியமான புதையாராய்ச்சியாளர்களும், மொழியியலாளரும் இதை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்வதாயில்லை:
-> "எழுத்துசார்ந்த மொழியில்தான் குறிகளின் அலையெண்கள் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து காணப்படும்." என்கிறார் ஐராவதம் மஹாதேவன். அதாவது ஒலிக்குறியாக மொழியை எழுதினால் அதில் முன்கண்டதைப்போன்ற அலையெண் சீரமைதி காணப்படத்தேவையில்லை என்பது அவர் வாதம்.
-> வெல்ஸ் மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்,"ஒரு கல்வெட்டாய்வாளராக, மொழிக் குறிவல்லுனராக சிலவற்றை பார்த்தாலே அவை ஒரு மொழியின் குறிகள்தான் எனத் தெரிந்துவிடும்" (அதாவது அவ்வளவு வெளிப்படையாக ஹரப்பாவின் குறிகள் ஒரு மொழி குறித்தவை எனத்தெரியும் போது இந்த வாதங்களே தேவையற்றவை என்ற பொருளில்)
->மேலும் "இந்த எழுத்துரு முற்றிலும் வளர்ந்த உட்கட்டமைப்பு உடையதாகவும், சரியான இலக்கணங்களைக் கொண்டதாகவும் தென்படுகிறது" என்றும் வெல்ஸ் கூறுகிறார்.பர்போலாவும் இக்கருத்தை ஆமோதிக்கிறார்.

மற்றும் சில ஆய்வாளர்களுக்கு இந்த புது கருதுகோள் பயனின்றி தேக்கமடைந்து போயிருந்த துறையில் புது உற்சாகம் கொடுக்கும் ஒரு ஊக்கியாக காணப்படுகிறது.
-> ஹன்ஸ் ஹொக், இல்லினாய் பல்கலைக்கழகம், அர்பான ஷாம்பய்ன், " இருபுற வாதங்களும் இன்னும் உறுதியானவையாக முழுமையாக இல்லை. அவர்கள் தத்தம் வாதங்களை முறையாக்கட்டும் "
-> சிலர் முன்னர் இருந்த தம் கொள்கைகளை சற்றே தளர்த்தவும் தொடங்கியிருக்கின்றனர்:
போஸ்ஸல் போன்றவர்கள் இப்போது இக்குறிகள் ஒரு முழுமயடைந்த மொழியின் சொல்லாடல்களாக இல்லாமல் இடம், ஊர், குழு, கடவுளர் போன்றவற்றின் பெயர்குறித்த சொற்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வந்த்துள்ளனர்.
ஹார்வர்ட்டின் புதையாராய்ச்சியாளர் கர்ல் லாம்பர்க்-கார்லோவ்ஸ்கி இக்குறிகள் ஆழம்,அர்த்தம் காணமுடியாதவையாக இருக்கின்றன என்கிறார். அவை மொழிச் சொல்லாடல்களா இல்லையா என்பதைவிட அவை ஒருவித கருத்துப் பறிமாற்ற வழி என்பதுதான் முக்கியம் எனக் கருதுகிறார்.


இப்படி பல்வேறு விதமான கருத்துகள் இருந்தபோதிலும், " துரதிருஷ்டவசமாக இதை இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகத் தான் காண்பார்கள்" என டில்லியின் நேரு பல்கலைக்கழகத்திலிருந்த்து ஓய்வுபெற்ற புதையாராய்ச்சியாளர் ஷிரீன் ரட்னாகர் கூறுகிறார்.
மேற்கத்திய இந்தியத்துறை ஆய்வியலாளர்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றி பெரும் சச்சரவாக மாற சாத்தியங்கள் உள்ளன என்றே பலரும் கருதுகின்றனர்.
நாம் திறந்த மனத்துடன் இதை அணுகவேண்டும் என்று ஷிரீன் ரட்னாகர் கூறுகிறார். அதுதான் இருப்பதிலேயே கடினமான செயல் என்று தோன்றுகிறது.

Thursday, December 16, 2004

ஹரப்பா நாகரிகத்தின் 'மொழி'

ஹரப்பா நாகரிகத்தின் 'மொழி'
-----------------------------------------------


வேதகாலத்துக்கு முற்பட்டதாக (2600-1900 BC ) வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படும் ஹரப்பா நாகரிகம் இந்தியத் துணைக்கண்ட இன, சமுதாய, மொழி வரலாற்றை எழுதுவதற்கான முக்கிய துவங்கு புள்ளியாகவே இன்னும் இருக்கிறது. அவ்வளவில் ஹரப்ப நாகரிகத்தைப் பற்றிய இக்கால கொள்கைகளும் கருத்தாக்கங்களும் தமிழ் மொழி பேசும் மக்களின் வரலாற்றை முழுமைப்படுத்த தவிர்க்க இயலாதவையாகும். 19ம் நூற்றாண்டில் அகழ்ந்தாய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, ஹரப்ப முத்திரைகள் என்று அழைக்கப்படும் மட்பாண்டங்களிலும், சில தகடுகளிலும் இன்ன பிற ஊடகங்களிலும் காணப்பட்ட சின்னங்களை ஹரப்ப மொழியை மீழ்வாசித்தல் என்ற பெயரில் அது முன் இந்திய-ஐரோப்பிய மொழியாக இருக்கலாமோ என்றும் பின்னர் ரஷ்ய-ஃபின்னிஷ் அறிஞர்களால் 60 களிலும்,70களிலும், ஐராவதம் மகாதேவன் போன்றோராலும் அது திராவிடக் குடும்பத்தை சார்ந்ததெனவும் வாசிக்கப் பட்டதை இங்கு நாம் நினைவுகூற வேண்டும்.

முக்கியமாக இருக்கு வேதத்தில் தென்படும் இறை, தொழில், கலை, உணவு, இசை போன்ற அன்றாட வாழ்க்கைக்கூறுகளின் பயில்மொழி வளம் இதற்கு முற்பட்ட காலகட்டத்தை சேர்ந்ததாக அறியப்படும் ஹரப்ப நாகரிகத்தின் வழங்கு மொழியின் தொடர்ச்சியாகவே கூறத்தகும் என்ற அளவில் ஹரப்ப இலச்சினைகள் சமஸ்கிருத மொழியின் ஆரம்ப கால வரலாற்றை ஆராய ஒரு முதல் படியாகவும் கருதப்பட்டது. இதன் தொடர் நிலைபாடாக 'தொலைந்த்து போன ஹரப்ப நூல்கள்' பற்றிய கருத்தாக்கமும் உருவானது. இன்று வெளியாகும் 'ஸயன்ஸ்' இதழில் ஹரப்ப மொழி என்று ஒன்றும் கிடையாது, காணப்படும் அனைத்து இலச்சினைகளும் குறியீடுகளே (முக்காலும் தொழுபயன் கருதியவை) அன்றி சொற்களோ, அடிகளோ அல்லது வேறு எந்த மொழிக் கூறுகளோ குறித்தன அல்ல என்ற ஒரு கோட்பாடு முன்வைக்கப் படுகிறது. இதனை ஸ்டீவ் ஃபார்மர், ரிச்சர்ட் ஸ்ப்ரோட் மற்றும் மைக்கேல் விட்ஸல் எனும் மூன்று ஆய்வாளர்கள் ஒரு ஆய்வுக்கட்டுரை மூலம் முன்வைக்கிறார்கள். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைப் பற்றிய முற்றிலும் புதிதான ஒரு நோக்கு என்பதால் மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. Frontline இதழில் 2000ம் ஆண்டு வந்த ஹிந்துத்துவவாதிகளின் ஹரப்ப குதிரை இலச்சினை பம்மாத்து பற்றிய 'Horseplay in Harappa' என்ற தொடர் கட்டுரைகள் வாசித்தவர்களுக்கு இவர்களை நினைவிருக்கும். (கடந்த ஒரு வருடமாகவே இக்கருத்தாக்கத்தின் முன்வரைவுப் பிரதிகள் ஸ்டீவ் ஃபார்மரின் இணைதளத்தில் இருந்து இறக்கம் செய்ய வைஇகப்பட்டிருந்தன. மூன்றுநாட்கள் முன்பு அவர் இண்டோலொஜி மடற்குழுவில் கட்டுரையின் இறுதிப்படியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். படிக்கப் படிக்க நான் எடுத்த குறிப்புகள் கீழே).

1. ஹரப்ப இலச்சினைகள் கண்டெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே ஒரு மொழியின் எழுத்து வடிவமாக கருதப்பட்டன.
பிராமி, சீனாவின் யீ, சுமேரிய, எகிப்திய, முன்திராவிட, முன்இந்தோ-ஆரிய, முன்முண்டா என பல மொழிகளின் எழுத்துருவாக அவை இருக்கலாமோ என ஆராயப்பட்டன.

2. ஜான் மார்ஷலும் அவரது கூட்டாளிகளும் ஹரப்ப நாகரிகம் பிற மொழிஎழுத்துப் பயிற்சியுடைய நாகரிகங்களாய எகிப்திய, மெசொபொடாமிய நாகரிகங்களைப் போன்றது என கருத்துருவாக்கம் செய்த்ததால், சிந்து சமவெளி நாகரிகமும் கற்றறிந்த மொழிவளம் மிக்கதாகவே அனைவராலும் கருதப்பட்டது.

3. மாய (Maya) நாகரிகத்தின் பண்டை மொழியை அறியப்பகுத்த சோவியத் ஆராய்ச்சியாளர் யூரி நோரொசோவ் மற்றும் பின்லாந்து நாட்டின் அஸ்கொ பர்பொலா போன்றோர்களின் குழுக்கள் 1960 களில் கணினி உதவியுடன் ஹரப்ப இலச்சினைகளை ஆராய்ந்து அவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த் மொழி குறித்தவை என கருத்துருவாக்கம் செய்தனர்

4. இக்குறிகளின் (signs) கூட்டங்களை 'படிப்பதற்கு' அவை எழுத்துக்களோ, சொற்களையோ குறிக்கவேண்டு. இவ்வகை 'வாசிப்புகள்' தமக்குள் ஒத்திசைவனவாக இருக்க பலநூறு வாய்பாடுகளை கண்டறிய வேண்டியிருந்தது. அதாவது ஒரு குறி யமெடுத்துக்கொண்டால் அதற்கு முன்னும் பின்னும் வரும் குறிகளைக்கொண்டு எப்படிப்பட்ட 'சொற்கள்' அமைகின்றன எனக்கண்டு அவற்றை ஒரு மொழியாக அடையாளம் காணலாம். இம்முறையில் ஆராய்ந்த போது குறிகளின் இட அமைப்புகள் பல நூறு சாத்தியங்கள் கொண்டதாக இருந்த்தால் பலநூறு விதிகளும் வாய்பாடுகளும் அவற்றை மொழியாக படிப்பதற்குத்தேவை.

5. மேற்கண்ட 'திராவிட' வாசிப்பு ஒருவழியாக ஓய்ந்தபின்பு 'ஆரிய' வாசிப்பு மீண்டும் துவங்குகிறது. 80 களில் ஆரம்பித்துத் தொடரும் இம்முறையை ராவ், காக், ஜா, ராஜாராம் போன்றவர்கள் செய்துவருகிறார்கள்.

6. ஏறக்குறைய 5000 இலச்சினைகள் பல்வேறு ஊடகங்களில் ( களிமண் பலகைகள், சுதைவட்டுகள், சுட்டமண்பாண்டங்கள், கற்கள், உலோக ஆயுதங்கள் ... போன்றவை) இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அனால் அனைத்திலும், இந்தக்குறியீட்டுச் சொற்கள் மிகக் குறைந்த எழுத்துக்களையே கொண்டு அமைந்திருக்கின்றன.

7. சராசரியாக மஹாதேவன் கணக்கிட்டபடி ஒரு சொல்/இலச்சினை 4 குறிகளை ('எழுத்துக்களைக்') கொண்டுள்ளதாக இருக்கின்றது. 1% சொற்களே/இலச்சினைகளே 10 குறிகளைக்கொண்டவையாக இருக்கின்றன. (இது முக்கிய தரவாகும். அதாவது சாதாரணமாக சொற்றொடர்கள்களின்/இலச்சினைகளின் நீளம் முன் இணை, பின் இணை விதிகளின் படி கணக்கிட்டால் 4 குறிகளே சராசரியாக கொண்டிறுத்தல் ஒரு 'மொழி'யினது வளமின்மையையே காட்டும். அது மொழியா என்ற சந்தேகத்திற்கும் இது இடமளிக்கிறது). ஒப்புமைக்காக ஈரானின் எலம் மொழியின் குறிச்' சொல்'(இலச்சினை) நீளங்களை இக்கட்டுரை காட்டுகிறது.

8. இவ்வாறு பெரும் தொடர்குறிகள் கொண்ட இலச்சினைலகள் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பதால் இக்குறிகள் ஒரு மொழியின் எழுத்துவடிவங்களா என்ற சந்தேகம் எழுகிறது. இச்சந்தேகத்தை ஒரு கறாரான model ஒன்றை உறுவாக்கி நிறுவுகின்றனர் இக்கட்டுரையாசிரியர்கள்.(இது ஒரு model மட்டும்தான். இதைப்பற்றின சந்தேகங்கள் எனக்கு நிறைய இருக்கின்றன. ஆனால் இத்தகைய அறிவுத்துறைகளில் ஒரு அளவுக்குமேல் இயல்பியல், பொறியியல் போன்று 'உண்மை'களைத் தேடக்கூடாது என்பதையும் எனக்கே நினைவுறுத்திக்கொள்கிறேன்).

9. பெரும்பாலும் இலச்சினைகள் பானை. தாழி போன்றவற்றின் உடைதுண்டங்களில் இருக்கின்றன. அதனால் சுட்ட மண் பலகைகளில் எழுதினர் என்பதில்லை. எழுதினபின்பே அவை உடைந்துள்ளன.

10. மாற்றமடையா குறிகளாகவும், இணைகளாகவும் பலநூறு ஆண்டுகள் காணப்படுகின்றன. சொல்லப்படும் சொற்களின் வடிவங்களாயிருந்தால் அவை மாறும். குறைந்த அலைஎண்களில் காணப்படும் இலச்சினைகள் (தனிம இலச்சினைகளும்) மிகுந்த அளவில் உள்ளதால் அவை எந்தவிதமான பொருள்கட்டுமையை (encoding) உள்ளடக்கும் என்பதும் சந்தேகத்துக்குறியதே.

11. மாக்கியின் முறைகளையும், ஐராவதம் மஹாதேவனின் ஹரப்ப இலச்சினைகளை திராவிட மொழியினதாக அறியப்பகுக்கும் முறையினதுமாகிய குறைகளை முன்வைக்கின்றனர். .

12. ஹரப்ப இலச்சினைகள் எவ்வாறு ஒரு மொழியினைச் சுட்டாது என்பதை எகித்திய ஹீராக்ளிபிக்ஸ் மற்றும் பிற குறித்தொகுப்புகளினதுமாகிய ஒப்புமை வாதங்களினாஅல் நிறுவுகின்றனர்..

இவ்வாறு பல வாதங்களைக் கொண்டு இக்கட்டுரை ஹரப்ப நாகரிகம் ஒரு கற்றறிந்தோர் (literate) நாகரிகம் அல்ல என நிறுவுகிறனர்.. இனிவரும் அகழ்வாராய்ச்சிகளில் எந்த வித தரவுகள் அகப்பட்டால் இந்த கருதுகோள் பொய்மைப்படும் (falsify) என்பதையும் தெரிவித்துள்ளனை. முறையான ஒரு ஆய்வுக்கட்டுரை, ஒரு முற்றும் புது கருதுகோளை முன்வைத்து அதற்குச் சார்பான வாதங்களையும் , அக்கருதுகோள்களின் பயனுறு எல்லைகளையும், பொய்மைப்படுத்தப்படும் சந்தர்பங்களையும் தானே விளக்கி எவ்வாறு எழுதப்படும் என்பதை அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளலாம். இதில் தமிழ் வரலாறு எங்கே ஒளிந்துள்ளது என்று கண்டறிபவர்களுக்கு பல உறக்கமில்லா இரவுகள் காத்திருக்கின்றன.
------------------------------------------------------------------------------
பின்குறிப்புகள்:

1. "The collapse of the Indus-Script Thesis: The myth of a literate harappa civilization"
Steve Farmer, Richard Spoat and Michael Witzel
இக்கட்டுரையும் இது தொடர்பான அனைத்துக் கட்டுரைகளும் ஸ்டீவ் ஃபார்மரின் இணைத்தளத்தில் கிடைக்கின்றன.
சுட்டி: http://www.safarmer.com/downloads/
2.
தமிழ் மொழியில் அமைப்பியல் (structuralism) கற்றவர்கள் குறிகள், ஒலியன்கள், உருபன்கள் போன்ற கலைச் சொற்களைப் பயன்படுத்துவர். அவற்றை நான் தவிர்த்திருக்கிறேன். இவை பற்றிக் கற்க இரு புத்தகங்கள்: தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிஸம், அகத்தியலிங்கத்தின் தமிழ்மொழி அமைப்பியல். குறியியல் (semiotics) பற்றி சரியான நூல்கள் தமிழில் இல்லை.

Friday, December 10, 2004

இ.தி - 20
" இந்தமாதிரி எத்தனையோ இருக்கு. ஒரு தடவை பாற்கடல்ல எறங்கிட்டு ஒரு வாய் தண்ணியப் பிரிச்சு குடிக்கிறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே. சொல்லமுடியாது ..."

Sunday, December 05, 2004

mysore-1

சாமுண்டீஸ்வரி கோயில் முகப்புக் கோபுரம் - உட்பக்க மேல் நுணுக்கிய பார்வையில்

இ.தி. - 19

"இங்கே வெறும் கொத்து பரொட்டாதாண்டா கிடைக்கும்.
முட்ட பரொட்டா கேட்டு தரும அடி வாங்காதே ..."

Friday, December 03, 2004

இ.தி. - 18

" ஆமாப்பா, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு பேற்றோல் தான். என்னது, ரெண்டு பணத் திமிங்கிலங்கள் கார்ல வருதா?
கடல்ல எறங்கி தப்பிக்காம பாத்துக்கணுமா? ஓக்கே, ஓக்கே. "

Thursday, December 02, 2004

இ.தி -17
" ஏம்மா தினமும் ஒண்ணு மேல வருதே, இன்னும் எவ்வளவு மண்ணுக்குள்ளே புதைஞ்சிருக்கோ ..."

"அப்படியெல்லாம் கணக்கு வழக்கில்லாம இல்லடா கண்ணா. புராணங்கள்லே தெளிவாப் போட்டிருக்காங்க. இன்னும் 1427 வெளிய வந்தப்புறம் யுகம் முடிஞ்சு உலகமே அழிஞ்சிடுமாம்"

Tuesday, November 30, 2004

இ.தி-16
"சரியாப் பாத்து சொல்லுங்க சார். இதுதானா? "

" சரியாத்தாம்பா சொல்றேன். இதே கிரகம்தான் பத்தாவது எடத்துல உக்காந்துகிட்டு என் பையனுக்கு உருப்படியா ஒரு வேல கிடைக்காம பண்ணுது "

" இதோ. ரெண்டு குண்டு போட்டாப்போதும் சார். நொடியிலே பஸ்பமாயிரும். கண்ண மூடிக்கோங்க... ""

Friday, November 26, 2004

இ.தி- 15
" இதோ பாருங்க ஏதோ நீங்க சொன்னீங்கன்னு வந்தேன்.
இப்ப போயி செவ்வாதோஷம் இருக்கிறவளை கட்டுனது தப்பூன்னா நான் என்ன பண்றது ..."

Thursday, November 25, 2004

இ.தி -14


"அப்பிடியெல்லாம் சொல்லி தப்பிச்சுவிட முடியாது. போட்டின்னா போட்டிதான். உயர உயர பறந்துட்டே இருந்தேனா, திடீர்னு பாத்தா இப்பிடி பருந்தாயிட்டேன்...."

Tuesday, November 23, 2004

இ. தி - 13

" இத்துனூண்டு இருக்கே. உன்னைப் பிடிக்க முடியமாட்டீங்குதே ..."
" எல்லாம் மனசுலேதான் இருக்குது. பிடிக்க முடியும்னு நெனச்சா பிடிச்சுடலாம். முடியாதுன்னா முடியாது."

Sunday, November 21, 2004

இ.தி - 12


" காலங்காத்தால இத்தனை ஸ்பேம்-ஆ. நம்மால் ஆகாது ..."

" Oh. No. I cant handle so much spam the first thing in the morning ..."

Saturday, November 20, 2004

Wednesday, November 17, 2004

கேசிஎஸ் பணிக்கரின் ஓவியக்காட்சி

கேசிஎஸ் பணிக்கரின் ஓவியக்காட்சிக்கு சென்று வந்தேன். பணிக்கரைப் பற்றியும் இக்காட்சி பற்றியும் ஓவியர் நாகராஜன் எழுதிய விரிவான அறிமுகம் இந்தச்சுட்டியில். 50/60 களில் ஆக்கப்பட்ட, நான்கு பெரிய கித்தான் ஓவியங்களும், ஒரு இயல்தன்மை நீர்மை ஓவியமும், பல கோட்டுருவ விரைகுறிப்பு வரைஓவியங்களுமாக இக்காட்சியை அமைத்திருந்தனர். காட்சியிலிருந்த கோட்டுருவ வரைவுகள் பலவும் முறைசார்ந்த பயிலகத்தில் கற்ற ஒரு ஓவியரின் வரைதாள்களைப் போலவே இருந்தன. பென்சில், கரிக்கட்டை, கரு மைப்பேனா கொண்டு வரையப்பட்டவை இவை. பலவும் குறிப்பு ஒவியங்கள் போலவே இருந்தன. இயல்முறை ஓவியங்கள். ஆண்,பெண் உருவ வரைவுகள். வரைவுகள் பலவும் முகம் மற்றும் தோள், மார்பு வரை திருத்தமாகவும் நுணுக்கமாகவும் அதற்குக்கீழே நுணுக்கமற்றும் இருந்தன. ஆகவே அவை குறிப்பு வரைவுகள்தான் என நினைக்கிறேன். மற்ற முழுமையான வரைவுகளின் கோட்டிழுப்புகளும், நிழல்-வெளிச்ச துல்லியத்தை வெளிக்கொணர பயன்படுத்திய வெண்கட்டி பிரயோகமும் தரப்படுத்திய தொழில் நுட்பத்தையே காட்டின. எந்த வரை ஓவியமும் பணிக்கருடையது எனக்கூறும்படி தனித்தன்மையுடையதாக இல்லை. ஒரு பிரபல கடந்த தலைமுறை ஓவியரின் வரலாற்றுத் தரவுகளாகவே அவை இருக்கின்றன.

ஆனால் வண்ணத் தீற்றோவியங்கள் பணிக்கருடையது என்பதை அடையாளம் காணக்கூடியவையாக இருந்தன. இருந்த ஒரே நீர்மை ஓவியம் தேர்ச்சிபெற்ற ஒரு ஓவியரையே காட்டியது. பெரும் கித்தான் ஓவியங்கள் அவருடைய பெயர் சொல்லும் "சொற்கள், குறிகள்" தொடர் ஓவியங்களின் பிரதிநிதிகளாக இருந்தன. இந்தியத்தன்மையை நவீன இந்திய ஓவியங்களுக்கு உள்ளிடுவது அவருடைய முயற்சியாக இருந்திருக்கிறது. தீற்றோவியங்களின் கோட்டுத்தன்மை ஒரு முக்கிய தென்னிந்திய அடையாளமாக காணப்பட்டு பின்னாளில் அது சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற பல ஓவியர்களின் தனிப் பெரும் குறியீடாகவும் ஆகியுள்ளது. madras metaphor என அறியப்படும் இவ்வடையாளம் பணிக்கருடன் ஆரம்பித்தது. அதற்கான முயற்சிகளின் ஆக்கங்களாக மூன்று கித்தான் ஓவியங்கள் இருந்தன. இவற்றைக் கண்டதில் மிகவும் மகிழ்தேன். மேற்கத்திய ஓவிய இயக்கங்களின் கருத்தாக்கப் பள்ளிகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெளிவந்து தீட்டிய ஓவியங்கள் எனக் குறிப்பிடப்பட்டவைகளிலும் பணிக்கர் அக்கருத்தாக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பது காட்சியிலிருக்கும் ஓவியங்களின் தொழில்நுட்பத்திலும் வரைகலையிலும் தெரிகிறது. பின்னாளில் ரெட்டப்ப நாயுடு போன்றவர்கள் இந்த முயற்சியை முழுமையாக்கினார்கள் என்றே தோன்றுகிறது.

ஆமாம் இதெல்லாம் தேவையா, கலையுணர்வு என்பதுதான் என்ன? மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு ஓவியக்காட்சிக்குப் போய் அங்கே ஓவ்வொரு படத்தின் முன்பும் அருகிலிருந்தும் தூரம் போயும் உன்னிப்பாய் பார்த்தும் யோசனை செய்தும் - இதெல்லாம் படு செயற்கையாக இல்லை? இப்படித்தான் சென்னையின் மக்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. நான் மட்டும் தனியாளாகத்தான் இதைப் பார்த்தேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.
பயன்படுத்திய தமிழ்-ஆங்கில இணைச்சொற்கள்
-------------------------------------
இயல்தன்மை நீர்மை ஓவியமும்: realist watercolour
குறிப்பு ஒவியங்கள்: study sketches
கரிக்கட்டை: charcoal
கரு மைப்பேனா: india ink pen
கோட்டுருவ ஓவியம்: drawing/sketch
தீற்றோவியம்: painting

Saturday, November 13, 2004

இ.தி - 9
" ஏம்பா, கொட்டி அரைமணிநேரம் ஆச்சே. இன்னுமா நெரி கட்டலே... ? "

இ.தி -8

Sunday, November 07, 2004

பல்பொருள் பேரங்காடிகளும் பன்முக இந்தியத்துவமும்

நான்கைந்து வருடங்களுக்கு முன் தெற்காசிய வாணிகத்தை சற்றே சுவர் நீக்கி சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இங்கே சென்னையில் ஒரு பேரங்காடியில் மளிகைச் சாமான்கள் பொறுக்கிக்கொண்டிருக்கும் போது 'லெமன் பஃப்' என்றொரு மஞ்சள் பொட்டலம் கண்ணில் பட்டது. ஒரு நொடி கழித்து என்னமோ தப்பு நடக்குது என்று மண்டையில் கிர்ர்ர் சுற்ற மீண்டும் ஒருமுறை அதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் மேலே பூனைமுதுகு மாதிரி நொகுநொகு என்று ஆனால் கீழே தளம் தளமாக எண்ணெய்ப்பாளங்கள் நிறைந்த வெஜிடபிள் பஃப் எனப்படும் உடனடி வயிற்றமிலச் சுரப்பூக்கிகள்தான். அந்தப் பெயர் மட்டும் என்னை இழுக்கவில்லை. அது தமிழில் அச்சடித்திருந்தது. அதிர்ச்சியில் தாவி அதைக் கைப்பற்றி திருப்பிப் பார்த்தால் அது இலங்கையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கைக்கூடையில் இரண்டைப் போட்டுக்கொண்டு வந்தேன்.

நானும் சிறுவயதிலிருந்து சோப்பு, பற்பசை, கிரைப் வாட்டர், பெப்ஸ் வில்லைகள், போன்ற சகலவித அகில இந்தியத் தயாரிப்புப் பொட்டலங்களின் அட்டைகளையும் காகிதங்களையும் பிளாஸ்ட்டிக் பைகளையும் பொறுக்கிப் பொறுக்கி திருப்பித் திருப்பி படித்திருக்கிறேன். நண்பர்கள் ஹாஸ்டலில் ஏதாவது உள்ளாடை வாங்கினால் கூட 'டேய் அந்த அட்டையை அவனுக்குக் கொடுத்துடுங்கடா, அவன் படிக்காமல் விடமாட்டான்' என்று கிண்டல் செய்யுமளவுக்குப் போன இந்தப் பொட்டலம் படிக்கும் வியாதி இன்னும் எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லா அகில இந்தியத் தயாரிப்புகளிலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே அச்சடித்திருப்பார்கள். அதனால் ஒரு பிஸ்கட் பாக்கட்டில் தமிழ் என்பது இப்போதைய செம்மொழி அறிவிப்பை விட எனக்கு அப்போது மகிழ்ச்சியளித்தது. வீட்டிலோ மனைவியும் குழந்தையும் அதைத் தொடக்கூட இல்லை. நானே இரண்டு பொட்டலங்களையும் சாப்பிட்டேன். அதற்கப்புறமும் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் பலமுறை வாங்கினேன். இரண்டு மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனமே சென்னையில் ஒரு கிளைத் தொழிலகத்தை திறந்து விட்டார்கள். இங்கேயே உற்பத்தி, இங்கேயே சந்தை. நிறைய லாபம். ஆனால் பொட்டல மேற்புறத்தில் தமிழைக் காணோம். ஆங்கிலம் மட்டும்தான்! உடனே அதை வாங்குவதை நிறுத்திவிட்டேன். இந்தச் சின்ன எதிர்ப்புக் கூட காட்டாவிட்டால், அதுவும் உயிர்வாழச் சற்றும் தேவையற்ற ஒரு சந்தைப் பொருளை வாங்குவதற்கு, பின் என்ன இது சந்தைச் சமுதாயம். இப்போது ஆறுமாதம் முன்னால் மறுபடியும் மஞ்சள் பொட்டலத்தில் தமிழில் லெமன் பஃப். எடுத்துப் பார்த்தால் இது வேறே ஒரு நிறுவனத் தயாரிப்பு. சரி என்று மீண்டும் லெமன் பஃப்.

எண்பதுகளில் தேசியத் தொலைக்காட்சியில் பரப்பப் பட்ட ராமாயண, மஹாபாரதக் கொடுந்தொடர்கள் நாட்டின் ஒற்றைப் பரிமாண தேசியத்தை முன்னுறுத்தி விரைவாக சிந்தனைக் குறுக்கங்களை நாட்டின் சகல மூலைகளுக்கும் சென்று எட்டவைத்தன. ஒரு பேட்டியில் ஆர்.கே. நாராயணன் அப்போது, 'ஐ கேன் நாட் வாட்ச் வெல் ஃபெட் குஜராத்தீஸ் ப்ராட் அப் ஆன் வனஸ்பதி ப்ளேயிங் கிருஷ்ணா' என்று மனம் வெறுத்துக் கூறினார். அத்தனை அழகுணர்ச்சியோடு தயாரிக்கப் பட்டவை அத்தொடர்கள். இந்தியாவிற்கே வந்தடையாத ஆப்பிள் கூட புராணகால அரச மாளிகை பழக்கூடைகளில் அலங்கரிக்க இருக்கும். ஆனால் ஷத்ரியனான ராமன் பதினாலு வருஷம் காட்டிலிருந்தாலும் வேட்டையாடி மாமிசம் சாப்பிடுவதை காட்டாமல் மிகக் கவனமான விழுமியங்களோடு தயாரிக்கப் பட்ட தொடர்கள் அவை. இவற்றின் கலாச்சாரத் தாக்கங்களின் தொடர்ச்சியாக ஹிந்தி கலந்த ஆங்கில விளம்பரங்கள், ஹிங்கிலீஸ் பொட்டல வாசகங்கள் எல்லாம் பரவிய கதை இப்போது ஒரு மார்க்கடிங் தொல்புராணமாகவே ஆகி விட்டது. அதே எண்பதுகளில் நடந்த ஒரு சர்வேயில் நாட்டின் சோப்பு விற்பையில் 40% தமிழ் நாட்டிலேதான் என்று கண்டனர். ஆனாலும் ஒரு அகில இந்திய தயாரிப்பு நிறுவனமும் சோப்புக்கட்டிகளின் உறையைத் தமிழில் அடிக்கவில்லை (சந்திரிகா போன்ற தமிழ் நாட்டுத் தயாரிப்புகளைத்தவிர). இப்போதோ பேரங்காடிகளில் பன்னாட்டு சோப்புகள், அழகு சாதனங்கள் முதல் பழச்சாறுகள் வரை குவிந்த்து கிடக்கின்றன.
சந்தையின் கடும் போட்டியும் புது உற்பத்தியாளர்களின் செயல்முறைகளும் அகில இந்திய உற்பத்தி நிலையங்களை காய்ச்சி எடுக்கின்றன என்றே தோன்றுகிறது. சென்ற வாரம் நான் வாங்கிய ஹமாம் சோப்பிலும், இன்று வாங்கிய புரூக் பாண்ட் ரெட் லேபில் தேயிலையிலும் அட்டைகளில் தமிழ் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல என்றே படுகிறது. ஹிந்துஸ்தான் லீவர் வளைந்து கொடுக்கிறது. இன்னும் சில வணிகச் சுவர்களை உடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க முடியுமோ ?

Friday, November 05, 2004

இ.தி - 7" These stupid birds drop their eggs from such height ... they all explode so bad. I wonder how the poor things multiply ..."

Wednesday, November 03, 2004

இ.தி - 6

"Gee, mate. That was an awesome race we put on the show ..."

"You bet. The dumbos couldn't even guess that we may look different animals but inside we are the same beast ..."

Monday, November 01, 2004

இ.தி - 4" கல்யாணத்தும் போதிருந்து சொல்றேன். இது தேவையான்னு. என்னமோ நீங்களும் உங்க தாடியும் ..."

Sunday, October 31, 2004

Tea for the Tillerman

" சின்ன வயசிலேயே அம்மா சொன்னாங்க, ஒரு டீயாவது போடக் கத்துக்கடான்னு. ஹூம். ... இப்பத் தூக்கீட்டானுங்க. .."

Saturday, October 30, 2004

பழசு கண்ணா பழசு

இந்த வாரம் பெங்களூரில் மறுபடி பழைய குப்பைகளை கிளரிக் கொண்டிருக்கும்போது அகப்பட்டது கணையாழி அக்டோ பர் 1983 இதழ். அதில் கிடைத்தது.


சாலை
---------


பொது மக்களுக்கு
அன்பார்ந்த அறிவிப்பு:
பாதசாரிகள்
நடைபாதையில் செல்லவும்
தார்ச்சாலைகள்
கார்களுக்காக. அன்றில்பிற
பெட்ரோல் வாகனங்கள்
பெற்றுள்ளீரா?
வேகத்துக்கு முதலிடம்
முக்கியமாய் முக்குகளிலும்
வாகனங்கள் வருவதை
பார்த்து நடங்கள்
மிதிவண்டிகள் எந்நாளும்
மெதுவாய்ச் செல்வதால்
அவையும் நடைபாதையில்
அனுமதிக்கப்படும்
ஹவாய் செருப்புகள்
சரிப்படாது சகதியில்
தோல் ஷூக்கள் பாவியுங்கள்
வெறும் கால்களும் வழுக்குவதில்லை.
பதித்திருக்கிறோமே பலகற்கள்
புழுதி இடையில் பரவி
நாளடைவில் அவை சரியாகும்
கிழிந்த பாய்கள் கால்கள்
சில கைகளும் பரப்பியிருக்கிறோம்
தாண்டிப் பயிலவும்
மண் குவியல்களை
நடந்து கலைக்காதீர்கள்
விலகி நடவுங்கள் - இந்த இடத்தில்
சாலையை உபயோகியுங்கள்
சவுளிக்கடை ரிப்பேர்
இந்தக்கம்பம் முக்கியம்
இதை சுற்றிச் செல்லுங்கள்
பாம்புப்புற்று கீழே பார்க்கவில்லையா
பைசா போடலாம்
விபூதிக்கு நாலடி போனால்
பாலிதீன் பைகளில் கிடைக்கும்
அடுத்ததாய் நீங்கள்
கவனிக்க வேண்டியது
ஒன்றுதான்
கழிப்பிடங்கள்
சரியாய் சில்லரை வேண்டும்
அன்றேல் வீடுவரை
காத்திருக்க நேரிடும்
கடந்தவுடன் கம்பிகள் வரும்
மாணவர் அமர. பின்பு
ரோட்டரி உபய பஸ் ஸ்டாப்
அங்கே
காத்திருக்கலாம் அல்லது கடக்கலாம்.

-----------

அப்போதெல்லாம் மொழி அழகுகளைத் தவிர்த்து, குரலை உயர்த்தாமல் உரை நடைக்கு மிக அருகில் எழுதினால் கவிதையில் கவிதை மட்டுமே இருக்கும், மற்ற வெட்டி விஷயங்களில் கவனம் சிதறாது என்பது ஒரு சாரார் முன்வைத்து செயலாக்கிய கவிதைபற்றிய ஒரு கருத்துருவாக்கமாக இருந்தது. கநாசு இந்த மாதிரி plain verse எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நல்ல தமிழ் இலக்கியப் பயிற்சியுடைய சி.மணி யில் ஆரம்பித்து ஞானக்கூத்தன் போன்றோர் இன்னொரு விதக் கவிதைகள் எழுதினர். அங்கதம் கலந்து, தமிழ் இலக்கணத்துக்கு எழுதப்பட்டவையோ என சந்தேகிக்கும் அளவு உள்ளுறை மொழிச்சந்த அலகுகளுடன் அவர்கள் எழுதினார்கள். பிச்சமூர்த்தியின், பிரமீளின் கவிதைகள் இந்துக் காவியங்கள், தத்துவங்களைத் தொட்டு வேறு பாதையில் சிறந்த கவிதைகளாயின. இதன் இன்னொரு கிளையாக நகுலன், சுரா போன்றோர் எழுதியவை அன்றாட வாழ்வின் இருண்மைப் பொந்துகளை தேடிக்கொண்டிருந்த்தன. வானம்பாடிகள் ஒரு இயக்கமாக, அரசியல், மக்கள் கலை போன்றவற்றை முன்னெடுத்துச் சென்று கவிதையை பொதுமைப் படுத்தினார்கள்.
தமிழ் புதுக்கவிதையின் இத்தகைய ஒவ்வொரு கிளையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்தித்தன. மொழிப்பயிற்சி அற்ற, சோம்பேறிகளால் எழுதப்படும் சொற்கூட்டங்களின் இருண்மையே கவித்துவமாகவும், கோஷங்கள், இரு அடி தத்துவ மலினங்களின் ஹைக்கூக்கள் போன்ற வடிவங்கள் அழகுணர்சியாகவும் பிறழ்ந்தறிதலால் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டு மூட்டைமூட்டையாக தமிழ்க் கவிதைகள் உற்பத்தியாகின. சிறந்த கவிஞர்கள் நல்ல கவிதையையே என்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைத் தொழில்நுட்பம் மேற்சொன்ன எல்லாக் கூறுகளிலிருந்தும் பெற்றதாக இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழ்க்கவிதை நல்ல உயர்தளத்திலும், படு பாதாளத்திலும் சமமாகக் கால் பரப்பி இப்போது விரிந்திருக்கிறது.

மேலே இருக்கும் கவிதையை எழுதியது நான்தான். சிறுவயதில் இப்படி plain ஆகத்தான் எழுத பழகிக்கொண்டிருந்தேன். இப்போது என் கவிதை பற்றிய அழகுணர்ச்சி மேலே கண்டதுபோல் இல்லை. தற்கால இலக்கியச் சிறு பத்திரிக்கை இதழ் ஒன்றையும் , அக்கால செந்தமிழ்ச் செல்வியின் நான் படிக்காத ஒரு இதழையும் காட்டி இதில் எதை முதலில் படிப்பாய் என்று கேட்டால் நிச்சயமாக செந்தமிழ்ச் செல்வி இதழைத்தான் என்று இப்போது கூறுவேன். மேலே இருக்கும் பயிற்சிக் கவிதையையும் இப்போது வேறுமாதிரி எழுதுவேன் என்று நினைக்கிறேன். நல்ல வேளையாக கவிஞனாக நான் முயற்சிக்கவில்லை.

அந்தக் கணையாழி இதழின் சிறந்த கவிதை இரா. முருகனின் பாம்புப் பிடாரன் பற்றிய கவிதையே. அருமையான கவிதை அது. அப்புறமா போடறேன்.

Tuesday, October 26, 2004

இ.தி - 3

" ஆமாங்க டாக்டர்.
ஊர்ல ரொம்ப கொசுத்தொல்ல ஜாஸ்தி.
அதுதான் இப்படி ... மனுசக்கால் வியாதி வந்துடுச்சு ..."

Friday, October 22, 2004

நிரலாளர்களின் ஜெ ...

J எனும் நிரல்மொழியை யாத்த கென் ஐவெர்சன் ஒக்டோபர் 19 ம் நாள் (செவ்வாய்) மதியம் தன் கம்யூட்டரில் புது J lab ஒன்றிற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு வயது 83. மூன்று நாள் கழித்து நேற்று இறந்தார். J பற்றி : இது பழைய APL மொழியின் உருமாற்ற வளர்நிலை மொழி. ( இதன் பைனரிகள் வேண்டுவோர் இதன் இணையத்தளத்திலிருந்து இலிருந்து பெறலாம் - அனைத்து தள அமைப்புகளுக்கும் கிடைக்கும்). மிக அடர்த்தியான மொழி. சி வழிவந்த மொழிகளில் முப்பது நாற்பது நிரல் வாக்கியங்கள் செய்யும் வேலையை ஜே யில் ஒரே வரியில் செய்து விடலாம்.
சற்றே கணிதப் பயிற்சி உள்ளவர்களும் நிரல் எழுதுவது எவ்வளவு எளிதானது என்பதை உணரலாம்.
இன்றைய நிரலாளர்களில் எல்லோரும் பொதுவாக அறிந்த சி, சி++, ஜாவா போன்ற மொழிகளைத்தவிர இன்னும் மிக சக்தியும் வீச்சும் கொண்ட சில மொழிகள் உள்ளன. சில பெரும் நிறுவனங்களில் தம் உள்பயனுக்காக எழுதப்படும் மிக சிக்கலான, பெரிய அளவிலான நிரல்க்கட்டுகளை அவை இம்மொழிகளில் தம் பணியாட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக்கொள்கின்றன. நூற்றுக்கணக்கில் (இங்கே இந்தியாவில் அயிரக்கணக்கில்) பணியாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனக்களில் இம்மொழிகளைக் காண்பது அரிது. லிஸ்ப், ஸ்மால்டாக், ஜே போன்றவை இத்தகைய 'ரகசிய' மொழிகளில் அடங்கும். இவற்றில் ஜே முக்கியமாக பங்குச்சந்தை கணிப்பிலும், ஆக்சுவரீஸ் போன்ற துறைகளிலும் உபயோகமாகிறது. இது வரிசை(array) களினூடே இயங்கும் மொழியாதலால் மிகப்பெரிய அணி (matrix) களை உள்ளிட்ட கணிப்புகளை விரைவில் செயலாக்க ஏதுவாகிறது. ஒரு உதாரணமாக நிலத்தரவு நிரல்களில் (GIS) அதிகப்படியாக உபயோகப்படுத்தும் ரேஸ்டர் டேடா உள்ளிட்ட கணிப்புகளுக்கு பெரும் அணிகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் மொழி உள்கட்டுகள் மிகவும் உதவியாக இருக்கும்.

சும்மா ஒரு ஜாலிக்கு இதை 'இறக்கி' பயன்படுத்திப் பாருங்கள். போதுமான செயல்பாட்டுக் குறிப்புகளும், பயிற்சிகளும் இணைத்தளத்திலேயே உள்ளன.

Wednesday, October 20, 2004

இ.தி..." தற்கொலைன்னு பேசிக்கறாங்களே சார் ... "

" சே. சே. தற்கொலையெல்லாம் ஒண்ணும் இல்லே. விஷ ஊசி போட்டு நாலு உடும்புங்களை நாங்கதான் சுத்து வட்டாரத்திலே உலவ விட்டோம் ..."

Tuesday, October 19, 2004

இ.தி...
பெருசா தான் வீரப்பனோட ஆளுன்னு சொல்லீட்டு அலஞ்சானே, இப்ப என்ன செய்வான் பாப்போம்...

Saturday, October 16, 2004

அற்றைத் திங்கள் ...

" ஐயா, ஆமாங்க. பாலாத்தில தாங்க. நீங்க சொன்ன மாதிரியேதாங்க. அளந்துதாங்க போடுறேன். "

Friday, October 15, 2004

கூழாங்கற்கள்

கூழாங்கற்கள்
-------------------

இந்தக் கூழாங்கல்
ஒரு முழுமையான உயிரி

தனக்கே அது நிகரானது
தனது எல்லைகளை
தானே அது உணர்ந்துள்ளது

கல்தன்மையாலே
முழுதும் நிரம்பியுள்ளது

அதன் மணமோ
எதையும் நினைவுபடுத்துவதில்லை
எதையும் வெருட்டி ஓட்டுவதில்லை
எத்தாபத்தையும் எழுப்புவதுமில்லை

அதன் களிப்பும் விறைப்புமே
அதன் தகைமையும் பொற்பும்

என் கையில் அதை ஏந்தும்போதும்
அதன் பொலிவுடம்பில்
இப்பொய் வெதுப்பு ஏறும்போதும்
மனம் கனத்து வாடுகிறேன்

கூழாங்கற்களை
நாம் அடக்கியாள முடியாது
அமைதியான நிர்மலமான கண்கொண்டு
இறுதிவரை நம்மைப் பார்த்திருக்கும் அவை.ஸ்பிக்னியூ ஹெர்பர்ட் (1924-98) போலந்து நாட்டுக்கவி. சென்ற நூற்றாணடில் இரண்டு இலக்கிய நொபல்கள் போலிஷ் மொழிக்கு கிடைத்தும், ஹெர்பர்ட் அதை அடையாததில் போலந்து மக்களுக்கு பெருவியப்பு. போலிஷ்சின் தலைமைக் கவியாக இவரையே அனைவரும் கருதுகிறார்கள்.

84-85 வாக்கில் எங்கள் கல்லூரி மாணவர் இதழுக்காக இவரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். 'கூழாங்கற்கள்', 'ஒரு முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து தகவலறிக்கை' போன்ற கவிதைகள் அவை. அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு போலந்து ஏரண இயலாளர் (logician) கல்லூரிக்கு அழைப்பு விஞ்ஞானியாக வந்திருந்தார். அவருடன் பேசும்போது ஹெர்பர்ட்டைப் பற்றி கேட்டேன். மிகவும் மகிழ்சியாக பல விடயங்களை பார்க்கும்போதெல்லாம் பகிர்ந்து கொள்வார். அவரும் கராகோவ் நகரத்தில் ஹெர்பர்ட்டுடன் கல்லூரியில் கழிந்த காலங்கள் என பலவற்றையும் பற்றி பேசுவார். அறிவியப் புனைகதைகள் எழுதும் ஸ்டானிஸ்லா லெம் எனக்கு மிகப்பிடித்தமாவர் என்று ஒரு நாள் சொல்லப்போக அவரும் க்ராகோவ் ஆள்தான், நாங்க எல்லோரும் ஒரே கும்பல் என்று கூறி இன்னும் வியக்கவைத்தார். ஒரு நாள் காபி குடிக்கும்போது 'அருள், ஹெர்பர்ட்டின் கவிதைகளுக்கு எங்கு வாசிப்பு நிகழ்வுகள் நடத்துவோம் தெரியுமா?. கத்தோலிக்க தேவாலயங்களில்தான்' என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கம்யூனிஸ்டுகள் எல்லாவித அறிவியக்கங்களையும் சந்தேகமாகப் பார்த்தது, அது தொடர்பான அடக்குமுறைகள் என பல செய்திகள் சொன்னார். நாங்களெல்லாம் பரம நாத்திகர்கள். ஆனால் தேவாலயம்தான் அறிவுஜீவிகளின் ஒரே புகலிடம் என்று சொல்லி சிரிப்பார். அடக்குமுறையினை எதிர்கொள்ள மிக வலிமையான ஆயுதம் நகைச்சுவையும், எள்ளலும்தான் என்றும் சொல்வார்.
அதற்குப் பின்பு வரிசையாக நடைபெற்ற magic lantern புகழ் ஹாவெல்லின் வெற்றி, சாலிடாரிடியின் வெற்றியும் தோல்வியும், சோவியத்தின் சரிவும் பிரிவும் என பல நிகழ்ச்சிகளை புரிந்துகொள்ள அவருடன் பேசிய விவாதங்கள் உதவின.
இருபது ஆண்டுகளில் எத்தனை சரித்திரம் !
ஆமாம் திடீரென்று என்ன பழைய நினைவுகள்? சென்ற வாரம் பெங்களூரில் பழைய குப்பைகளை கிளறும்போது கிளம்பிய பூதம்தான் இது. மேலே கண்ட மொழிபெயர்ப்பு பழையது அல்ல. புதியது.

Saturday, October 09, 2004

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ...

" பகல் நேரத்திலே முனி சிலைகிட்ட தனியா வெளையாடாதேடா.
முனி முழிச்சிட்டு அலையுற நேரம். ராத்திரி வரலாம் வா."

Friday, October 08, 2004

வையத் துண்டுகள் - 2004 இயல்பியல் நொபெல் --1

" வாளைச் சுற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் ... "
- பாரதிதாசன்


வையத்தைத் துண்டு செய்வது பண்டைக்காலத்திலிருந்தே அதை அறிவதற்கான ஒரு வழிதான். மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி போன்ற பொருண்மைகள் அனைத்தும் பஞ்சபூதங்களினால் ஆனவை என்ற ஒரு கருத்தும் இப்படி வையத்தை துண்டு செய்து அறிதல் எனும் மனிதனின் இயல்பான அறிவியல் செயல்பாடுபாடுகளில் ஒன்றே ஆகும். உலகின் அனைத்துக் கலாச்சாரங்களும் தத்தம் அன்றாட வாழ்வை நடத்தத் தேவையான ஊண், உடை, உறையுள், போர் போன்றவற்றை வளமாக்கிப் பெருக்க தொழில் நுட்பங்களைக் காணவும், மிஞ்சியநேரத்தில் யாக்கையின் நிலையாமை பற்றி யோசித்து சமயங்களை வளர்த்து வளப்படுத்தவும், இத்தகைய வையத்தைத் துண்டு செய்யும் தேர்ந்தறி (reductionist) முறையை பயன்படுத்தி உள்ளன. நவ அறிவியல் இம்முறையை அதன் எல்லைக்கே கொண்டுசென்று சென்ற நூற்றாண்டில் இயல்பியலிலும், உயிரியலிலும் பெரும் பாய்ச்சல்களைக் கண்டுள்ளது. இருநூற்றாண்டுகளாகவே அறிவியலின் இந்த செயல்பாட்டினால் செறிவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட முழு 'அறிவையும்' மனிதனின் பிற பழமையான அறிமுறைகளான தத்துவமும், இறையியலும் (philosophy and theology) இன்னும் தமக்குள் உள்வாங்கி முழுக்கச் செரிக்க முடியவில்லை. இதைப் பற்றி பின்னால் பதிக்க எண்ணியுள்ளேன். இப்பதிவில் இவ்வாண்டின் இயல்பியல் நொபல் பரிசுபற்றி.

பொருண்மையின் கட்டமைப்பு என்பது அறிவியலின் மிக ஆதாரமான அறிபுலன்களில் ஒன்று. அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பது இன்று பொதுஅறிவு. அவ்வணுக்களை பொருண்மையாக (முன்னே சொன்ன 'மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி') வைத்திருக்க சில விசைகள் தேவை. சில அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள், பல மூலக்கூறுகள் சேர்ந்து உயிர்ச் செல்கள், பல செல்கள் சேர்ந்து உயிரிகள் என பல அடுக்குகளாக கட்டப் பட்டது நம் ஒவ்வொருவர் உடம்பும் என்பதும் நாம் அறிந்ததே. அணுக்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் அவற்றில் இயங்கும் விசைகளையும் இயல்பியல் ஆராய்கிறது. இதேபோல் மூலக்கூறுகளின் அமைப்பு விசைகளை வேதியியலும், உயிர்ச்செல்லின் அமைப்பு, உயிரிகள், அவற்றின் வினையாற்றும் செயல்களை உயிரியலும் ஆராய்கின்றன.

இயல்பியல் அண்டத்தின் அனைத்து பொருண்மைகளின் ஊடேயும் இயங்கும் விசைகளாக நான்கு விசைகளைக் கண்டறிந்துள்ளது. அவை:

1. பொருண்மையீர்ப்பு விசை ( Gravitation. இதை புவி ஈர்ப்பு விசை என்று தமிழில் அழைக்கிறோம். ஆனால் புவி மட்டுமல்லாது எல்லாப் பொருண்மைகளுக்கு ஊடேயும் இது செயல்படுவதால் இதை பொருண்மையீர்ப்பு/நிறைஈர்ப்பு விசை என்பதே சரியானது. ஈர்ப்பு விசை எனும் பயன் பாடும் உள்ளது.)
2. மின்காந்த விசை (Electromagnetic force)
3. வல்விசை (Strong force)
4. மென் விசை (weak force)

இவற்றை முன்பெல்லாம் விசைகள் என்று அழைத்தாலும் தற்போதைய இயல்பியலில் இடைவினைகள் (interactions) என்றே அழைக்கின்றனர். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு விசையாகப் பார்ப்போம்.


1. பொருண்மைஈர்ப்பு/ நிறைஈர்ப்பு விசை:

அனைவரும் உனர்ந்த, அறிந்த விசை. தடுக்கிவிழும்போதும், நாற்காலி மேஜை ஏணி இவற்றிலிருந்து கீழே விழுந்திருந்தாலும் நமக்கு இதன் விசை என்னவென்று புரிந்திருக்கும். புவி நம்மை இழுக்கும் விசை புவிஈர்ப்பு விசை. நியூட்டன் மண்டையில் விழுந்த ஆப்பிள் இதனால்தான் விழுகிறது என்று உணர்ந்த அவர் எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட இவ்வாறே பொருண்மையுடையவையாக இருப்பதால் அனைத்துக்கும் ஒரே விதிதான் இருக்கவேண்டும் என்ற கருதுகோள் உடன் இந்த விசைக்கு கணித சமன்பாடுகளை விதிகளாக வகுத்தார். இவ்விதியின் படி எல்லாப் பொருள்களும் ஒன்றைஒன்று ஈர்த்துக் கொண்டு இருக்கின்றன. ஆப்பிளை புவி ஈர்ப்பதைப்போல புவியையும் ஆப்பிள் இழுத்துக் கொண்டுதான் இருக்கும். நிறை அதிகமாக இருப்பதால் புவி ஆப்பிள் பக்கம் நகருவற்குள் குறைந்த நிறையுள்ள ஆப்பிள் ஓடோடி புவியிலோரிடம் என்று விழுந்துவிடுகிறது. அதனால் விசை என்றுபார்த்தால் ஒன்றிலிருந்து ஆரம்பித்து இன்னொன்றின் மேல் போய்ச்சேர்ந்த்து செயல்படுவது போல் இல்லை இது. இரண்டு பொருண்மைகளும் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நிறை குறைந்தது அதிக தூரம் கடந்து மற்றதை அடைகிறது. அதனாலேயே இதை ஈர்ப்பு விசை (gravitational force) என்று கூறாமல், நிறைஈர்ப்பு இடைவினை (gravitational inteaction) என்ற முறையில் கணித சமன்பாடுகளை வகுத்தால் எல்லா விசைகளையும் ஒன்றுபோலவே கணிதத்தில் பாவிக்கலாம்.

விசைகளை கணிதம் மூலம் வடிவமைத்துப் பயிலும் ஒரு முறை "புலனக் கோட்பாடு" (Field Theory) ஆகும். இதன்படி, வெளியில் உள்ள பொருண்மைகள் எல்லாம் வெளியை நிறைஇர்ப்பு விசையினால் நிரப்பிஉள்ளன. அண்டவெளியிலுள்ள அனைத்து இடங்களிலும் இன்னிறைஈர்ப்பு விசை பரந்துள்ளது. எல்லாப் பொருண்மைகளும் இவ்விசையால் செலுத்தப் பட்டு ஒன்றைஒன்று ஈர்த்து உள்ளன. பெரும் நிறைப் பொருள்களாகிய விண்மீன்கள், சூரியன், கோள்கள் போன்றவை இவ்விசைக்குத் தக்கபடி நகர்த்து கொண்டு உள்ளன. ஐன்ஸ்டைன் இந்த புலனக் கோட்பாட்டை வரைகணித முறைப்படி மாற்றி அமைத்தார். அதை 'வரைகணிதமாக்கிய புலனக்கோட்பாடு' என்று அறிகிறோம். ஐன்ஸ்டைனின் பொது சார்புநிலைக் கோட்பாட்டின் (general theory of relativity) வழிமுறை இதுவேஆகும்.

நிறைஈர்ப்பு விசையின் ஒரு முக்கியத்தன்மை அது எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு விசைதான் என்பதாகும். அதாவது எந்த நிறையுள்ள பொருளும் மற்றதை ஈர்த்துக் கொண்டேதான் இருக்கும். விலக்காது. மேலும் இது ஒரு தொலை தூர செயலியும் ஆகும். அதாவது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் ஒவ்வொரு பொருண்மையும் அண்டவெளியில் இருக்கும் மற்ற எல்லாப் பொருண்மைகளையும் இழுத்துக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய இழுசக்தியே அண்டத்தைக் கட்டியும் வைத்துள்ளது. நாம் பூமியோடு நம் மிக அருகிலுள்ள நிறைஅசுரனான சூரியனை நோக்கி விழுந்துகொண்டேதான் இருக்கிறோம். இந்த விசையைக் கணக்கிடுவதும் எளிது. பத்தாம் வகுப்புப் பொடியன்கள் கூட

விசை = G x(நிறை1)x(நிறை2)%(இடைத்தூரம்)x(இடைத்தூரம்)

என்று இரு நிறைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விடுவார்கள். இங்கே G என்பது ஈர்ப்புமாறிலி எனும் ஒரு எண்.
( வீட்டுப்பாடம்: அடுக்களையில் வைத்திருக்கும் ஊறுகாய் பாட்டில் சற்றே தொலைவிலிருக்கும் உப்புஜாடியை எந்த விசையோடு இழுக்கும் என்று கணக்கிடுங்கள். எப்படி நம்மால் இரவில் டமால் டமால் என்று ஏதும் சத்தம் கேட்காமல் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்பதற்கு விடை கிடைக்கும்)


2. மின்காந்த விசை:

இதுவும் நாம் அனைவரும் உணர்ந்த விசையே. மின்சாரம், காந்த விசை இரண்டும் ஒரே விசையின் இரு தோற்றங்கள்தாம்.

கொஞ்சநாள் துடைக்காத தொலைக்காட்சிப் பெட்டியின் சென்று அதன் ஒளிர்பரப்பின் மிகாண்மையில் புறங்கையைக் காட்டினால், சடசடவென்ற சத்ததுடன் கைமுடியெல்லாம் சிலிர்க்கும். இது மின்காந்தப் புலம் செயல்படுவதுதான். வானில் இடிஇடித்துப் பாயும் மாபெரும் ஒளி மின்னல்களும் அதே மின்காந்தப் புலங்களே. வீட்டில் காஸ் லைட்டர் வெறும் தீக்குச்சி போன்றது அல்ல. அதுவே ஒரு மின்னல் உற்பத்தி சாதனம் தான். டப் என்று அமுக்கும்போது லைட்டரின் முனையில் பார்த்தால் ஒரு குட்டி மின்னல் நடுத்தண்டிலிருந்து லைட்டரின் ஓரத்துக்குப் பாய்வதைப் பார்க்கலாம். நம் கவிஞர்கள் யாராவது "மின்னல் கையில் மின்னல்; வயிற்றில் நெருப்பு " என்று ஹை(யோ)கூ எழுதுவதற்குள் ஓடிவிடலாம்.

மின்காந்த விசையும் கணிதமுறைப்படி ஒரு புலனக்கோட்பாடாக முறைமைப் படுத்தப் பட்டுவிட்டது.இதுவும் ஒரு தூரச் செயலி விசைதான். அதாவது அண்டவெளி எல்லாம் இவ்விசை பரவியுள்ளது. இந்தவிசை மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு அனைத்து வேதிவினைகளுக்கு காரணியாகவும் இருக்கிறது. அணுக்களின் கட்டமைப்பில் எலக்ட்ரான்களும், அணுக் கருவும் செயல்படும் இடைவினைகளுக்கும் மின்காந்தப் புலன்களே காரணியாகும். ஒருவிதத்தில் மின்காந்த விசை நிறைஈர்ப்பு விசையிலிருந்து முக்கியமாக மாறுபடுகிறது. அதாவது மின்காந்தவிசையில் ஈர்ப்பும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. ஒத்த மின்னூட்டம் கொண்ட துகள்கள் எதிர்க்கவும், எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்கள் ஈர்ìகவும் செய்கின்றன. ஒருஅணுவில் எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டமும், அணுக்கருவிலுள்ள புரோட்டான்கள் நேர்மின்னூட்டமும் கொண்டவை. அவை ஒன்றஒன்று இழுத்துக்கொள்வதால் விதவிதமான தனிம அணுக்கள் கட்டப் பெறுகின்றன. இவ்வாறு நேர்,எதிர் ஆகிய இரு குணங்களும் பெற்றுள்ளதால், தூரச் செயலி விசையாக இருந்தாலும், மின்காந்தப் புலங்கள் அதிகதூரம் எட்டுவதில்லை. ஒன்றைஒன்று சமமாக்கிக்கொள்ளுவதால், எந்த அணுத்தொகுதியிலிருந்Ðõ வெகுதூரம் இவை திறனுடன் இயங்குவதில்லை. அண்டவெளியின் பெரும் கட்டுமானத்தை அதனால் நிறையீர்ப்பு விசையே தீர்மானிக்கிறது. ஆனால் சிறு தொலைவுகளில் வரவர மின்காந்த்த விசைகள் மிகப் பலம் பெறுகின்றன. ஒரு அணுவுக்குள் எலக்ட்ரான்களும் கருவும் எதிரெதிர் மின்னூட்டங்கள் பெற்றிருந்தும் அவை ஒன்றைஒன்று ஈர்த்து சேர்ந்து புஸ்வாணமாகாமல் இருக்க குவாண்ட விதிகள் செயல்படுகின்றன. குவாண்டப் புலன் கோட்பாடு ஒரு முழுமையான கோட்பாடாகும். சிறப்புச் சார்பியல் கொள்கையையும் குவாண்டக் கொள்கையையும் இணைத்து உருவாக்கிய குவாண்ட மின்காந்த இயங்கியல் (Quantum Electro Dynamics) முழுமையானதாகவும் சரியான வருவதுகூறும் (predictive) இயல்புள்ளதாகவும் இருக்கிறது.

இதுவரை நாம் கண்டது அண்டத்தின் ஆதார விசைகளில் இரண்டைப்பற்றி. இவற்றிற்கு இணையாக பருண்மைப் பொருள்களாக ஆதாரத் துகள்கள் உள்ளனவா? இருந்தால் அவை என்ன என்று பார்ப்போம்.

Saturday, October 02, 2004

காந்தி ?

தாத்தா ஒரு ராட்டை வைத்திருந்தார்.படுக்கை வசமாக வைத்து உபயோகிப்பது. நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது தினமும் சிறிது நேரம் அதில் நூல் நூற்பார். நீளமான பஞ்சிலிருந்து எங்கே நூல் இழை துவங்குகிறது என்பதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். தக்களியின் அருகிலிருந்து கையை பின்னுக்கிழுத்து முட்டியை நேராக்கி தோளை உயர்த்தி முழு நீளமாய் நூல் திரியும் மர்மம் புரியாததாகவே இருந்தது. அப்புரம் சர்ர்ரென்று தக்களியில் அந்த நூல் சிண்டாக சுற்றும்போது ஆகா என்றிருக்கும். தாத்தாவுக்கு அது ஒருவிதமான பிரார்த்தனை என்றே நினைக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அந்த நூலை எல்லாம் எடுத்துப் போய் சர்வோதய சங்கத்தில் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை பதிலியாக வேட்டியோ, துண்டோ கொடுப்பார்கள். டவுனுக்குப் போய் பஞ்சு வாங்கிவருவது, அதை நூலாக்குவது, நூலை சுற்றிமடித்து நீள் சுருளைகளாக்குவது அதை பத்திரப் படுத்துவது, அதைக் கொண்டு போய் சங்கத்தில் கொடுப்பது என்று ஒரு பெரிய பலபடிகள் நிறைந்த செயல்பாடு அது. ராட்டையை பண்படுத்த மூன்று வகை உருளைகளையும், தட்டுகளையும் முழுவதும் கழற்றி எண்ணெய் போடுவது, விசைக் கயறுகளை முறுக்கேற்றுவது என நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகளும் மாதமொருமுறை நடக்கும். இவ்வளவு வேலைகளும் இறுதியில் கிடைக்கும் ஒரு துண்டுக்காக அல்ல. எனக்கு Wren and Martin மற்றும் Loney கற்பித்த தாத்தாவின் ஒருவிதமான மனஒழுங்கு என்றே நினைக்கிறேன்.

என்னிடம் 'சத்திய சோதனை' ஒரே பதிப்பின் இரு பிரதிகள் இருந்தன. என் மாமாவும், சித்தியும் பள்ளியில் வாங்கிய பரிசுகள் இவை. அப்போதெல்லாம் பள்ளிகளில் டின் டின் பரிசு கொடுக்க மாட்டார்கள். ஐந்தாறு பிரதிகளில் இரண்டை நான் கொண்டு வந்தேன். முழு, சுருக்கப்படாத மொழிபெயர்ப்புகள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது விடுமுறையில் முழுவதும் படித்தேன். இன்றுவரை அதன் தாக்கம் நீங்கவில்லை. பின்னாளில் பதினாறு பதினேழு வயதில் காந்தியைப் பற்றிய பல படிமங்களும் மாறின. கல்லூரியில் வந்தபிறகு அரசியல் என்பது அவ்வளவு நேர்கோட்டுச் செயல்பாடு அல்ல என்பது புரிந்தது. இந்திய மரபின் பல முகங்களையும் முழுவீச்சில் எதிர்கொண்டால் அது சமூகத்தை முற்றும் சின்னாப் பின்னமாக்கும் என்பதும் விளங்கியது. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களுக்கு நம் கலாச்சார புனைகதைகளின் மீது இருக்கும் கோபமும், அவற்றை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளின் மீது அவநம்பிக்கையும் அயற்சியும் வெளிப்படையாக அரசியலில் வந்தாக வேண்டிய நிர்ப்பந்தங்களும் பரவலாகின. இன்றைய அரசியலுக்கும் காந்திக்கும் அவ்வளவாக தொடர்பில்லாமல் போனது தற்செயலானதல்ல.


இங்கே சென்னையில் வீட்டுக்கு சற்றே தொலைவில் இருக்கும் காதி கடைக்கு அடிக்கடி செல்லுகிறேன். பல மளிகைப் பொருள்களும் இங்கேதான் வாங்க எனக்கு விருப்பம். ஆனாலும் வீட்டருகே இருக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் தொடரின் ஒரு கிளையில்தான் மிகுதியாக வாங்குகிறோம். தரம் முக்கிய காரணி அல்ல. வசதிதான். இந்த தொடர்கடையில் விற்கும் பருப்பும், அரிசியும், அவர்கள் பிரீமியம் என்று போட்டிருக்கும் அடுக்கிலும் தரமில்லாதவையே. எப்பொழுதெல்லாம் காதி கடைக்கு செல்லுகிறேனோ அப்போதெல்லாம் நல்லெண்ணெய், பருப்பு, போன்றவைகளும் பிற மூலிகைப் பொருள்களும் நிறைய வாங்குகிறேன். காதிப் பொருள்களின் தரம் மிக நன்றாக இருக்கிறது. தற்போது மீண்டும் சர்வோதைய அமைப்பு விளம்பரப் படுத்துதலிலும் பிற காதிப் பொருள்களை சந்தைப் படுத்துவதிலும் முனைந்துள்ளது மகிழ்சியாக உள்ளது. காந்தியின் இந்தியப் பொருளாதாரம், உற்பத்தி முறை பற்றிய கருத்துகளில் பல இன்னும் நோக்கத் தக்கன.இன்றைக்கு நான் ஒரு காந்தீய வாதி அல்லன். ஆனாலும் காந்தியப் போல என்னைப் பாதித்த இந்தியச் சிந்தனை வாதியும் இல்லை.

Saturday, September 18, 2004

பாப்பாப் பாட்டு

குட்டிப் பயல்கள் ஒருவரை ஒருவர் வேடிக்கை செய்து பள்ளியில் பாடும் பாடல்கள் இனிமையானவை.
அவை கேட்கும்போது உடனே புன்னகையை வரவைக்கும்.
கொஞ்சம் யோசித்தால் ஒரு பெரும் கதையையே உள்ளடக்கியும் இருக்கலாம்.

இன்றைக்கு பொருத்தமான கன்னட சிறுவர்கள் பாடலொன்று:


கணேஷா பந்தா
காய்கடபு திந்தா
சிக்கெரெல் எத்தா
தொட்டகெரேல் பித்தா

(கணேஷா வந்தான்
காய் கொழுக்கட்டை தின்றான்
சிறுஏரியிலிருந்து எழுந்தான்
பெரும்ஏரியில் விழுந்தான்)


காய் கடபு - தேங்காய் கொழுக்கட்டை
சிக்க கெரெ யல்லி - சிறு ஏரி யிலிருந்து
தொட்ட கெரெ யல்லி - பெரு ஏரி யில்
எத்தா - எழுந்தான்
பித்தா - விழுந்ததான்

Sunday, September 12, 2004

வன்புலம் (சிறுகதை)
உயர்ந்தோங்கிய குடவரையின் அப்பால் சூரியன் இறங்கத் தொடங்கிய போது எழினி ஆடுகளைப் பத்தி வீடு திருப்பினாள். இரண்டு கிடாரிகளும் ஆறு பெட்டைகளுமாகிய அச்சிறு மந்தையை அவள் கரட்டாற்றங்கரையில் நடத்தியபோது அருகிருந்த மரக்கூட்டங்களிடையே சலசலத்தது. இடைக்குறுவாளை வலக்கையில் தொட்டுத் திரும்பிய கணத்தில் இரு பெருங்குதிரைகள் எதிரே பாய்ந்தன.

குதிரைகள் இரண்டும் சுடுமூச்சுடன் அவள் பாதையின் குறுக்கே பாய்ந்ததில் ஆடுகள் சிதறி மரக்கூட்டத்தினுள் ஓடின. ஆற்றை நோக்கிப் பாய்ந்த இரு கிடாரிகளும் சிறுதொலைவு ஓடித் திரும்பி அவையும் மரங்களினூடே மறைந்தன.

எழினி கூர்புலன் நிலையில் நெருங்கும் குதிரைகளையும் கண்டாள். இடுப்பளவு சடாரெனக் குனிந்து அதே அசைவில் குறுவாளை எறிந்தாள். அவள் மணிக்கட்டின் சுழற்சியின் விசை அவ்வாள் ஒரு வீரனின் கழுத்தில் தைத்த ஆழத்தில் தெரிந்தது. அவன் அலறி விழ அவன் துணைவீரன் குதிரையின் பக்கவாட்டில் சரிந்து எழினியின் தலை உயரத்தில் இருந்து பிணைக்கயிற்றை வீசினான். அவள் சுழன்று தரை வீழ்ந்தாள். அவ்வீரன் குதித்து அவள் கைகால் அமுக்கிக் கயிற்றால் பினைத்தான். குத்துப் பட்டு வீழ்ந்த வீரனைக் குதிரையில் இருத்தி ஒரு சீழ்க்கையோடு அதைத்தட்ட அது மரச் சோலையூடே சேர்விடம் நோக்கிப் புகுந்தது.

" உன் மனைக்குத்தான் போகிறோம். அஞ்சாதே. " என்றான்.

எழினியின் பார்வையில் தீர்க்கமும் சற்றே அச்சமும் தெறித்தது. இவன் பணிவீரனா, அன்றி எயினர்க் குழுவினனா என மயங்கினாள்.

" ஏன் என்னைப் பிணைத்திருக்கின்றாய். வீரம்தான்" என்றாள்.

அவன் சிரித்தவாறே, " கொங்குப் பெண்டிர் வாள் பயிற்சியை எம்குழுத்தலைவர் எமக்கு முழுவதும் விரித்திருக்கின்றார் " என்றான்.

இவன் கொங்கன் இல்லையா, பின்? " நீ எயினன் அல்லவா? கோசனா?" என்று கேட்டாள்.

" உனக்கெதற்கு அவை பெண்ணே. எயினன் போல்த் தெரிகிறேனா. அல்லது கோசன் போல்க் காண்கிறேனா? "

" எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்னை விடுவி "

அவ்வீரனின் கண்கள் ஆற்றின் அக்கரையில் ஒருகணம் பதிந்தன.
அக்கணத்தில் எழினி நிலத்தில் சரிந்து இடுப்பை ஒடித்து கால்களால் அவனை எற்றினாள்.
அதை அவ்வீரன் மார்பில் தாங்கி ஐந்து முழம் அகன்று விழுந்தான்.

விழுந்தவன் உருண்டெழுந்து அவள் மேல் பாய்ந்து,

" எழினி, நீ யார், உன் தந்தை யார் என்பது எனக்குத் தெரியும். தனிப்போர் நன்கு கற்றவன் நான். இதைப்போல் மடத்தனமாக முயற்சிகள் செய்யாதே. உம் இருவரையும் கொன்று வரத்தான் உத்தரவு. இமைப்பொழுதில் வெறுங்கையால் அதைச் செய்து விடுவேன். நினைவில் கொள்"

எழினிக்கு நிலமை புரிந்தது. இவனின்றேல் இன்னும் பலர் வரக்கூடும் என்றறிந்தாள்.

" என்ன கருதி எம்மைக்கொல்ல உம்குழு முயல்கிறது வீரனே ..."

" உன் தந்தையிடம் பேசி பிறகு சொல்கிறேன். இன்றேல் கொல்கிறேன். என்னை மாறன் என்றழைப்பர். புரவியில் ஏறு பெண்ணே. தப்ப முயலாதே. இறந்து படுவாய்"

ஆற்றைக் கடந்து, கரிமேடு தாண்டி, நிலச்சரிவில் குதிரை இறங்கத் தொடங்கியது.
தனித்த அவள் மனை மாலை ஒளியில் தினைப்புலத்தினூடே ஒளிர்ந்தது.

" நிச்சயம் தந்தை நாம் வருவதைக் கண்டிருப்பார் வீரனே. அவரைக் கொன்றுவிடாதே ..."

பேச்சு அவன் கவனத்தை மாற்றும், தந்தைக்கு ஓரிரு கணங்களே போதும் என்பதை அவள் அறிவாள்.

தினைச் செடிகளினூடே குதிரை விரைந்தபோது அடைய வந்திருந்த புட்கள் எழுந்து பறந்தோடின.

ஆதன் முதலிலேயே வீட்டை விட்டு வெளியேறி தாழம்புதருக்குள் ஒடுங்கிவிட்டார். அவர் கையில் பற்றியிருந்த குத்தீட்டியின் முனை மாறனின் மார்பின் தொடர்கோட்டில் மேல் கீழாக அசைந்து கொண்டிருந்தது.

மறுகணப்பொழுதில், குதிரை எழினியை மட்டும் தாங்கி, புலத்தை விட்டு வெளியேறி, வீட்டின் முன் களத்தை அடைந்து நின்றது. மாறன் எங்கும் தென்படவில்லை.

ஆதன் கூர்பார்வையில் தினைக்கதிர்களின் உச்சங்களை அவற்றின் அசைவைப் பார்த்து ஆய்ந்தார். எழினியுடன் வந்த வீரன் அசாதாரணன் என உணர்ந்தார். பார்வையை வீட்டருகில் குவித்தார். எழினி குதிரையில் இருந்து குதித்து நின்È¡ள். அவள் மனம் பதற்றமாயிருந்தது. மாறன் நிச்சயம் தந்தையைத் தாக்குவான் என்பதுணர்ந்தாள். ஆதன் மிகுமதிப் போராளன். ஆனால் மாறன் இளையவன். சிறுத்தையின் விரைவு உடல் பாய்ச்சல் கொண்டவன். ஆதனுக்கு உதவி வேண்டும். எழினி தன் கைக்கட்டுகளை நெகிழ்த்த முயன்றாள்.

" உம் ஈட்டியைத் தாழ்த்துங்கள் ஐயா. அன்றேல் இறந்து படுவீர்"

மாறனின் குரல் மனையின் கூரையின் மீதிருந்து ஒலித்தது.
அவன் கையில் சிறு வளைவில்லும் வைத்திருந்தான். ஆதன் அவ்வில் இத்துணை தொலைவு எய்ய வல்லதா என நினைத்தார். ஈட்டியை மாறனை நோக்கித்திருப்பி தோளைப் பின்னிழுத்தார்.

சரக்கென அவர் காதிற்கு ஒரு விரற்கடை விட்டு ஓர் அம்பு கடந்தது.

" ஈட்டியைத் தாழ்த்துங்கள். அடுத்த அம்பு உம் இதயத்தைத் துளைக்கும். மற்றது எழினியை" என்றான் மாறன்.
ஆதன் ஈட்டியத்தாழப் பற்றி புதரினின்று வெளிவந்தார்.

"யார் நீ. உன் பணி என்ன? " எனக்கேட்டவாறே எழினியின் கட்டுகளை அவிழ்த்தார் ஆதன்.

"என்னை வச்சியன் மாறன் என்றழைப்பர். உம் இருவரையும் கொன்று சில பொருட்களைக் கவர்ந்துவர உத்தரவு"

" எயினர் தனித்துப் போரிடவும் துணிந்திருக்கிறீர் போலும் " என்று இகழந்தார் ஆதன்.

" நான் எயினன் அல்லன். உம் மகள் என் இணைவீரனைக் கொன்றுவிட்டாள். அதற்காகவேனும் உம்மிருவரையும் கோறல் தவறாகாது"

ஆதன் தன் மகளைப் பார்த்தார். இருவரும் குறிப்புணர்த் தசையசைவுகளில் செய்திகள் பரிமாறினர் "

என்னேரமும் பிறர் சூழலாம் என்பதை ஆதன் தெளிவாக உனர்ந்தார்.

" வீரனே, நீ எங்களை கொன்று உன் தேட்டையைக் கவர்ந்து செல்லாமல் ஏன் நிற்கிறாய் என்றறியேன். ஆனால் நன்றி மிக்கவனாக இருப்பேன் என்று எண்ணாதே " என்றார்.

மாறனைச் செயல்பட வைத்தால் தப்ப வழி கிட்டலாம். இன்றேல் சிறைப் பிணையாளராக இருப்பது தகாது என்று உணர்ந்தார் ஆதன்.

மாறன் புன்னகைத்து, " ஐயா, உம் இருவரையும் கொல்லுதல் எனக்கு எளிது. என்னை நீங்கள் இருவரும் சேர்ந்தும் வெல்ல ஆகாது. எனக்கு நீங்கள் ஒன்றைக் கற்றுத்தர வேண்டும். எம் குழுவுக்கு அவ்வறிவு வேண்டியதில்லை. அதனால் பொறுத்திருக்கிறேன்" என்றான்."

" வீரனே, நாங்களோ வேட்டுவர். ஆயர்போல் நிலம் திருத்தி பயிர் வள்ர்த்தல் எம் தாத்தாவால் ஆனது. எம்மிடம் என்ன கற்க வந்தாய் நீ. பறவை ஓட்டி தினைப்பயிர் காப்பதா ..?"

மாறன் இப்போது நகைக்கவில்லை.
" ஐயா, உம் பளிக்குப் பணிக்களரி எங்குள்ளது ?"

ஆதன் துணுக்குற்றார்.

" எந்தப் பணிக்களரி?. யாம் வேட்டுவர் வீரனே"

"பளிக்குப் பணிக்களரி. பளிக்குப் பாளங்கள் சேர்த்த அறை. எங்கு கொண்டுள்ளீர் அதை?"

எழினி விரல்களை விரைப்பாக்கி தோள்களைத் தளர்த்தினாள். உடல் எடையை வயிற்றினின்று கீழாகவும், கால்களினின்று மேலாகவும் தொடைகளுக்கு மாற்றினாள். கால்களை சற்றே அகற்றி, குதிகால்களை ஒரு இழை உயர்த்தி, முன்கால்மடக்கி மூச்சைச் சீராக்கினாள். எம்பிப் பாய்ந்து மாறனின் விலாவின் கீழ் வலதுகால் கட்டை விரலைச் செலுத்தினாள்.
சுழன்று தப்பித் திரும்பிய மாறன் அவள் கெண்டக்காலைத்தட்டி உயர்த்தித் தள்ளினான். அவன் வீச்சில் பத்துமுழம் அகன்று வீழ்ந்த எழினி உருண்டாள்.

ஆதன் பறவையோட்டும் குதிரெறிப்பொறி ஒன்றைப் பற்றிச் சுழற்றி அடித்தார். மாறனின் நெற்றிப் பொட்டில் தாக்கிய கல் ஆழவெட்டித் தெறித்தது.சரிந்து கொண்டிருந்த மாறன் மேல்ப் பாய்ந்தார் ஆதன். மாறனின் கை இடைக்கச்சை விடுவித்து உறுவிச் சுழற்றிய சுருள்தொடுப்புக் கத்தி ஆதனின் கழுத்தில் பதிந்தது.

தன் முகத்தில் பெருகி கண்ணில் இறங்கிய குருதியை விலக்கி மாறன் எழினியை நோக்கி விரைந்தபோது அவள் புரவியின் மீது தாவியேறி தினைப்புலத்தைக் கீறி அப்பால் இருந்த புன்னைமரக் காட்டில் மறைந்தாள். அவன் இணைவீரர்கள் வந்தடைந்த போது மயங்கிய மாறனின் உடலும் உயிர்போகிய ஆதனின் உடலும் அருகாமையில் கிடந்தன. ஒரு கிடாரியத் தவிர மற்ற ஆடுகள் வழிகண்டு வந்து பட்டிக்குள் புகுந்து கொண்டிருந்தன. குடவரை கருக்கத் தொடங்கியிருந்தது.

Wednesday, September 08, 2004

வெளியின் வடிவங்கள் : தற்போதைய உயர்கணித சிறு குறிப்பு -1

1. என்னதான் ரகசியமோ உலகத்திலே ...

வடிவக்கணிதம் எனும் geometry நமக்கெல்லாம் தெரியும். புள்ளி, கோடு, முக்கோணம், வட்டம், சதுரம், பிரமிடு, கோளம், கன சதுரம் என வடிவங்களின் தன்மைகளையும், அவை தளம், வெளி இவற்றில் அமைந்து இருக்கும் தன்மைகளையும் கணக்கிடும் கணிதப் பிரிவு. பள்ளியில் நாம் எல்லொரும் படித்த யூக்ளிட் இன் தேற்றங்களும், அதன் நிரூபண முறைகளுமே இந்தப் பிரிவின் ஆரம்ப அடித்தளம் ஆகும். அதன் மேல் கட்டப்பட்ட மாபெரும் அமைப்புதான் இன்றிருக்கும் பெரும்பான்மையான கணித அறிவுகள். இந்தியாவின் பங்கும் பழங்காலத்திலிருந்து கணிதத்தில் பெரியதெனினும், எண்கணிதம் சார்ந்த துறைகளிலேயே இந்தியாவின் புகழ் அறியப் பட்டுள்ளது. இந்திய வான சாத்திரமும், கோயில் முதலான சிக்கலான செறிவான கட்டிட அமைப்புகளும் மிக துல்லியமான வடிவக் கணித தீர்வுகளின் மூலமே சாத்தியம் என்றாலும், கிரேக்க கணிதமும், தர்க்க இயலும் சேர்ந்து அமைத்து பின் 16 ம் நூற்றாண்டில் தெகார்த் முதலான வல்லுனர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட 'மேற்கத்திய' வடிவக்கணிதமே பெரும் வீச்சுகளோடு வளர்ந்தது. இவற்றைப் பற்றி பின்னொரு பதிவில் நிதானமாக எழுதுகிறேன்.

சிலநாட்களாகவே இணையத்தில் பேசப்பட்டு, இன்று இந்துவில படித்த இந்தச் செய்தியே இதை எழுதத்தூண்டியது.
ரஷ்யநாட்டு கணித அறிஞரான கிரிகோரி பெரல்மான் ஒரு அதி முக்கிய கணிதக் கோட்பாடு ஒன்றிற்கு நிரூபணம் கண்டிருக்கிறார் என்பதே அது. தற்காலத்திய கணித முயற்பாட்டிலும், வளர்ச்சியிலும் யூகமுடிபுகள் (conjectures ) பெரும்பங்கு வகிக்கின்றன. அதாவது ஒரு கணித வல்லுனர் ஒரு கணித 'உண்மையை' ஒரு தேற்றமாக வடிவமைத்து எல்லோருக்கும் அறியத்தருவார். இந்த யூகமுடிபுக்கு அவரிடம் நிரூபணங்கள் இருக்காது. இது உண்மையாக இருக்கலாம் என்பது அவர் கற்றுணர்ந்த கணிதத்தின் அடிப்படியில் அவர் உணர்வது. உடனே கன்னாபின்னா என்று கண்டவர்களும் என்மனதுக்கும் இப்படித் தோன்றுகிறது என்று எழுதிக் குவித்து விட முடியாது. இத்தகைய யூகமுடிபுகளையும் எல்லா வல்லுனர்களும் கருத்துப் பரிபாற்றம் செய்யும் துறைசார் இதழ்களிலேயே வெளியிடுவர் அல்லது கருத்தரங்குகளிலும் பேசுவர். அதனால் 'நீ சொன்னால் காவியம் ' என்றபடி நம் புதுக்கவிதைகள் போல கணித யூகமுடிபுகளும் கொட்டிக்கிடக்க சாத்தியம் இல்லை. அவ்வாறு நிரூபணம் இன்றி இதுபோல் 'திறந்து' (open conjecture என்பது வல்லுனர் உபயோகிப்பது) இருக்கும் மிக முக்கியான யூகமுடிபுகளில் ஒன்று நாம் எல்லோரும் உணரக் கூடிய இவ்வெளியைப் பற்றியது. ஆன்ரி பொயின்கரே ( Henri Poincare) 1904 ல் கண்டது.

அதை ஆங்கிலத்தில் முதலில் எழுதிவிட்டு பின் தமிழாக்கமும் அதன் விளக்கமும் தருகிறேன். வேறு நல்ல தமிழ் இணைச்சொற்கள் தோன்றுபவர்கள் அதைப் பயன்படுத்த வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

" Every closed simply connected three manifold is homeomorphic to the three sphere " . இதுதான் பொயின்கரே உடைய யூக முடிபு. இதைத்தமிழில் முதலில் மொழி பெயர்த்துவிட்டு அதன் அர்த்தத்தைப் பார்க்கலாம்.

தமிழில்: " அனைத்து மூடிய, நேர்இணைந்த, குறுதளச்சேர்ப்புகளும், முக்கோளத்துக்கு சரியிணைத்தொடர்பானவையே "

மேலே கண்ட வாக்கியம் எந்த 'உண்மையப்' பற்றிப் பேசுகிறது என்பதை இனி பார்க்கலாம்.


2. சப்பாத்தி மாவில் அண்டவெளி ஆராய்ச்சி

இப்படி கணித வல்லுனர்கள் மோட்டுவளையப் பார்த்துக் கொண்டே கண்டுபிடிக்கும் சூத்திரங்களும், தேற்றங்களும் பிற அறிவியல் தொழில் நுட்ப அறிஞர்களுக்கு 'இயற்கையை' அறியவும் அதைக் கட்டுப் படுத்தவும், மாற்றவும் ஆன முயற்சியில், சொல்வது தெளியச் சொல்ல ஒரு மொழியாக, ஊடகமாக பயன்படுகின்றன. அதாவது தற்போதைய அறிவியல், தொழில் நுட்பத்தின் மொழி கணிதம் தான். ஆங்கிலம் என்று எல்லோரும் பீலா விடுவதை நம்பாதீர்கள். இதனால் இந்த மொழியை கற்கத் தொடங்கிய இயல்பியல் போன்ற இயல் அறிஞர்கள் நாளைடைவில் இம்மொழியை செறிவாக்குவதில், வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றினர். இப்போது உயர் இயல்பியலுக்கும், கணிதத்துக்கும் பெருத்த வேறுபாடு ஒன்றும் இல்லை. இருக்கும் வேறுபாடுகளைப் பின்னர் பதிக்கிறேன்.

ஐன்ஸ்டைன்னின் பொதுமைச்சார்புனிலைத் தத்துவமும் குவான்ட்டம் கோட்பாடும் இன்றைய இயல்பியலின் அஸ்திவாரங்கள். யாருக்காவது அறிவியல் அரைகுறை 'அறிவு'தான் என்று நிரூபிக்கவேண்டுமானால் இவ்விரண்டு கோட்பாடுகளையும் மறுதலித்தால் போதும். இவ்விரண்டு கோட்பாடுகளை விவரிக்கும் சமன்பாடுகளும் வடிவியல் கணிதத்தின் இற்றைய முன்னேற்றங்களையும் உடனுக்கு உடனே உள்வாங்கக் கூடியவை. எனவே வடிவியல் கணிதத்தின் 'வளர்ச்சி' இயல்பியலால் மிகக் கூர்ந்து கவனிக்கப் படும். ஆகவே முப்பரிமாண வெளியைப் பற்றிய பொயின்கரே வின் மேற்கண்ட யூகமுடிபு பிற துறைகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

முதலில் எல்லா அறிவியலுக்கும் அடிப்படை செய்முறைச் சோதனைகள். பருண்மை இருப்பை விலக்கி அந்தரத்தில் மிதக்கும் எந்த அறிவியல் புலமும் வேகமாக முன்னேறியதில்லை. முதலில் சப்பாத்தி மாவுடன் சற்றே விளையாடுவோம்.

அ.
அம்மாவோ, மனைவியோ சப்பாத்திக்கு மாவுபிசையும் போது கொஞ்சிக் கூத்தாடிப் பெற்ற நன்றாக பிசைந்த ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த மாவு உருண்டையை முதலில் சற்றே குழியாக்கவும். (படம்) முழுவதும் ஓட்டை போடுவிடாதீர்கள். ஒரு குழி மட்டும்தான். மாவிளக்கில் நெய் ஊற்ற செய்வது போல. இப்போது அந்தக் குழியை இன்னும் ஆழமாக்குங்கள். அப்படியே செய்து கொண்டுவந்தால் ஒரு கோப்பை போல வடிவம் கிடைக்கும். இதைச் செய்யும் போது என்ன நடந்தது? கோப்பையை ஆழப்படுத்த ஆழப் படுத்த அதன் சுவர்கள் மெலிகின்றன. மற்றபடி நாம் ஒரு கோளத்தை ஒரு குழியுள்ள கோப்பையாக மாற்றிவிட்டோ ம். இந்த செயலில் நாம் செஇய்யாது என்ன என்பதுதான் முக்கியம். நாம் கோள உருவை மாற்றினோம். ஆனால் அதை கிழிக்கவோ, ஓட்டை போடவோ இல்லை. இப்படி வடிவங்களை கிழிக்காமலோ, ஓட்டை போடாமலோ மாற்றும் செயல்களை 'உருமாற்றிகள்' (transformations) என அழைக்கலாம். இப்படிப்பட்ட உருமாற்றிகளைப் பற்றி கற்கும் கணிதத் துறைக்கு Topolgy என்று பெயர். மேலே சொன்ன பொயின்கரேயின் யூகமுடிபு இத்துறையைச் சார்ந்தது.
நாம் இப்போது செய்துள்ள கோப்பையின் முக்கியமான தன்மை அதில் 'ஒட்டை' கள் ஏதுமில்லை. காபியோ, கழுநீரோ குடிக்க ஏதுவாக ஒரு குழி மட்டும் தான் உள்ளது.
எனவே முதலில் நாம் எடுத்த மாவு கோளமும், இப்போதுள்ள கோப்பையும், Topology படி, சரியிணைத்தொடர்பானவை.
அதாவது இந்த இரு வடிவங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற நாம் பயன்படுத்தும் உருமாற்றிகள் (கணிதப்படி, உருமாற்றிகள். நம் சோதையில், கையால் நெகிழ்விப்பது ) ஓட்டை போடுவது, கிழிப்பது போன்றவற்றை செய்வதில்லை.ஆ.
சரி இப்போது கோப்பையை முடிப்போம்.
கோப்பையைப் பிடித்து அருந்துவதற்கு ஒரு பிடி தேவைப் படுகிறது. இதை இப்போது இன்னொரு சிறு மாவு உருண்டையை சற்றே நீளமாக உள்ளங்கையில் உருட்டி, அதை பிறை போல் வளைத்து பிடி செய்து விடலாம். இந்த செய்கையிலும், உருட்டுதல், வளைத்தல் இவை எல்லாம் topological உருமாற்றிகளே. இதிலும், கிழிப்பது, ஓட்டை போடுவது போன்றவை இல்லை.
இப்போது பிடியும் தயார்.
இ.
பிடியை கோப்பையில் ஒட்டவைத்தல். நிறுத்துங்கள். இப்போது செய்வது ஒரு topological உருமாற்றுச் செய்கை இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு 'ஓட்டையை ' கோப்பை வடிவத்துக்கு உள்ளிடுகிறீர்கள். அதாவது பிடியுள்ள கோப்பையில் ஒரு ஓட்டை உள்ளது. (நாம் விரலை உள்ளே விட்டு பிடித்துக்கொள்ள). பிடியில்லாத கோப்பைக்கு ஓட்டை இல்லை.

மேலே சொன்ன கோப்பையின் 'ஓட்டை' விடயம் மிக முக்கியமானது. நமது அண்டவெளியில் ஓட்டைகள் உள்ளனவா என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம்.

மீதியை அடுத்த பதிவில் காண்போம்

Saturday, September 04, 2004

நண்டுகளின் இருத்தலியல் - 3

கடுங்கோடை நண்பகலில், காமூ கடற்கரையில் ....

அம்மா நண்டுதான். அதுக்காக பச்சயாவா சாப்பிடமுடியும். அதுதான் சுட்டேன்.

Monday, August 30, 2004

இழப்பின் பாடல்

நீர் என்று சுரந்தது பாறை
பார் கண்ணில் துரும்பென
காணாமல் உறுத்திச் செல்லும்
விமானத்தின் பின்னோசை
பசுங்காய்கள் அசையும்
மரக்கிளைகள் துடைத்தெறிந்த
மேகம்போல் வாய்நுரைபெருக்கி
வீழ்ந்து மரித்தாய்
மீன்கொறிக்கும் கால்விரல்பற்றி
நான்குமுறும் இவ்விசுக்கல்
எதிரொலிக்கும் புவியெல்லாம்
எண்ணிலிச் சங்குகளின் மணல்வெளியில்

களிப்பாடல்

எல்லைகள் அமைத்து விட்டு
எண்திசையும் குறிவரைந்து
உள்ளே வந்தமர்ந்தேன்
ஊர்ந்து நுழைந்தவர்கள்
உடைத்துப் பாய்ந்தவர்கள்
கள்ளச் சாவியிட்டு
கதவு பெயர்த்தடைந்தவர்கள்
எல்லோரும் புலம் நிறைய
அய்யோ அய்யய்யோவென
அசைந்திடியும் மணல் நகரம்
கரைந்தழிந்த எரிமடல்கள்
தாவிச் சிறகடித்து
தணல் பெய்து உயிர்பொசுக்கி
ஓடிப் பறந்த என்
செல்லக்கிளி வகைகள்
முகம் மட்டும் காட்டி
முறுவலித்த மூடியெல்லாம்
டப்டப் பென வெடிக்க
எல்லோரும் சேர்ந்திசைக்கும்
எதிர்மடக்குக் களிப்பாடல்
ஆஹா என்சொல்வேன்
ஆண்டவனே படைத்துப் போந்த
அண்டம் இதுவன்றோ
இதற்கும் இணை உண்டோ

என்செய்கோ

கவிதை கவிதையென்றால்
கட்டுமரம் போல் மிதந்து
வந்ததிந்தப் பலகை
மேலேறி அமர்வதா
மெல்லக் கொறித்து சுவைப்பதா
பால்போல் கடவுளுக்குப் பெய்வதா
நோய்போல் உடல்வருத்தி விலக்குவதா
என்றேது மறியேன்
என்பிலது சிறியேன்.

Wednesday, August 25, 2004

நண்டுகளின் இருத்தலியல் - 2
" காப்பாத்துங்க, காப்பாத்துங்க .... காஃப்கா எழுதினா மாந்த்ரீக எதார்தவாதம் ஆகுதே, சனியன் நான் எழுதினா வெறும் எதார்த்த வாதமாயில்ல ஆகிப்போச்சு ...."
நண்டுகளின் இருத்தலியல்


"ஒளுங்கா வளையவிட்டு வந்து சிந்தனை விருந்து படைக்கலான்னா இந்த சைவ வேஷக் கொக்குங்க விடாது போலிருக்கே ...."Sunday, August 15, 2004

அறிவியலும் தமிழும்

(திரு கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரையை முன்வைத்து ராகாகியில் நான் மாதங்களுக்கு முன் எழுதியது இது. அதனை தொடர்ந்து இங்கே அடுத்த பகுதிகளை எழுதலாம் என்று இருக்கிறேன் .)

1.
நான் பள்ளியில் கற்ற போது "தமிழன் அறிவியல் முன்னோடி" என்று ஒரு பாடம் இருந்தது.
நினைவிலிருக்கும் காட்டுகளைச் சொல்கிறேன்.
அ. "நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்" என்பது நியூட்டன்-இன் விதியை முன்உரைக்கிறது.
ஆ. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ..." அணுவைப்பற்றிய கொள்கை நம்மிடமே இருந்தது.
இ. "ஆழ அமுக்கி முகப்பினும், நாழி முகவாது நானாழி ..." பஸ்கால்-இன் நீர்ம விதி
ஈ. ஒரு இளவரசி (மீனாக்ஷி ?) ஊஞ்சலில் ஆடும் போது ஊஞ்சலின் வீச்சும், அவள் காதணிகளின் வீச்சும் வேறு வேறு அலைஎண்களில் இருந்ததான ஒரு பாடல் (பாடல் நினைவில்லை. யாரேனும் எடுத்துக்காட்டி சிறு விளக்கமும் கொடுத்தால் நன்றி).
இப்படி இன்னும் சில இருந்ததாக நினைவு. இவைகளிலிருந்தே பார்ப்போமே.

2. என் இப்போதைய தெளிதல் படி:
அ: இறையின் உயர் ஆற்றலை உரைக்க எழுதிய பாடல். நல்ல கவிதை வரிகள். ஆனால் இவை உயிர்/உயிரற்ற இரு திணைகளையும் குறித்த வரிகள். இயல்பியல் விதிகள் உயிரற்ற பொருண்மைகளைப் பற்றியவை. இவ்வரிகள் ஏதாவது 'விதி'களைச்சுட்டினாலும் அவை இறையியல் 'விதி'கள். இயல்பியல் விதிகளல்ல.
ஆ: இதற்கும் இன்றைய இயல்பியலின் அணுவுக்கும் தொடர்பில்லை. உயர்வுபுகழ்ச்சி அணி. அவ்வளவுதான். ஆனால் வேறு பரிமாணங்கள் உள்ளன. அவைபற்றி கீழே.
இ. அறிவியல் கூற்றாகவே கொள்ளலாம். பருண்மைக் காட்சி --> கருதுகோள் --> இசைவு நோக்கல் --> பொதுமைப் படுத்துதல் --> விதி என்ற நவஅறிவியலின் கூறுகளில் முதல் மூன்றும் ஏகதேசம் சரி. பொதுமைப் படுத்துதல் படி தவறு. அதனால் என்ன. பாடலாசிரியர் (ஔவை?) நவ அறிவியலுக்கு முந்தியவர். பாடு பொருளும் அறிவியல் தொடர்பானது அல்ல. ஒரு Phenomenological Theory க்கு இது போதும். நவ அறிவியல் மொழிதான் இல்லை.
ஈ. ம்ம்ம். பாடல் வரிகள் இல்லை. மிகச்சிறந்த கூர்மையான காட்சிப் பதிவு. இந்த அளவு பொருண்மை உலகை ஒருவர் இக்காலத்தில் நோக்கினால் கூட நாம் 'scientific temper' என கவலைப் படவேண்டியது இல்லை.

3. மேற்கூறியவை எல்லாம் எப்படி ஒரு பழம் சமுதாயத்தை, அதன் கலை இலக்கிய வெளிப்பாடுகளை, அதன் கால கருத்துப் புலத்தில் இருத்தி இசைவாக்கி, இக்கால அறிவியலின் கூறுகள் ஏதேனும் அவற்றில் உண்டா என்று நோக்குவதுதான். எங்களுக்கு அப்பவே தெரியும் என்று குரலெழுப்ப அல்ல. இன்றைய இயல்பியல் பாவிக்கும் 'atom' எனும் கருதுகோளுக்கும், கிரேக்கர்கள் பாவித்த 'atom' என்பதற்கும் ஒரே semantics இல்லை. ஆனாலும் மேற்கில் அவர்கள் பழையதின் தொடர்ச்சியாக, வளர்ச்சியாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். இப்படி பிற கலாச்சாரங்களும் தம் முன்னோர் கருதுகோள்களை மீட்டெடுக்க யாதொரு தடையும் இல்லை. அவை வகையாக, சரியாக செய்யப் படவேண்டியவை கூட.

4. அறிவியலின் முதற்படி அளத்தல் அல்லவா. அளவைகளில் தமிழில் உள்ளவை ஒருபாடு குறிகளும், கருத்தமைவுகளும்.

எண்ணல்:
முழுக்கள் : ஒன்றிலிருந்து ஆயிரம் வரை, அப்புறம் இருக்கிறது அதிர்ச்சி: பதினாயிரம், நூறாயிரம்,பத்து நூறாயிரம், கோடி, அற்புதம்(10^8),... கற்பம்(10^12) ..., வெள்ளம் (10^16)...புரியம்(10^20) ......
பின்னங்கள்: நமக்குத் தெரி஢ந்த முக்கால்,அரை,கால்,வீசம் போக, மும்மா(3/20) ... இருமா(1/20)...முக்காணி (3/80) ... கீழ்னாலுமா (1/16000) ..., கீழொருமா(1/64000), ... இம்மி(1/1075200) ... (எடுத்துக் காட்டுகள்தான். பலவற்றை விட்டுவிட்டேன்).
nano, giga எல்லாம் இங்கேயே சாத்தியம்தான். ஏதும் அந்நியமல்ல.
இப்படியே இன்னும் நிறுத்தல், முகத்தல், நீட்டல் எல்லாம் உண்டு. சங்க காலத்திலிருந்து தொடங்கி எத்தனையோ பாடல்கள் இவற்றை சுட்டியுள்ளன.

5. அறிவியலின் இரண்டாம் படி:

வகைப்படுத்துதல்:
தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீருயிரிகள், இப்படி தமிழ்ப் பாடல்களில் எவ்வளவு தேறும் என நினைத்தால் வியப்பாக உள்ளது. நான் கண்டவரை ஆயிரக்கணக்கில் உள்ளன. Naming, classifying ... all done.

நம் காட்டுக்குள் நம் மலைமைந்தர் வழிகாட்ட நடந்து சென்று அவர் காட்டிய செடிமர உயிரிகளுக்கு வெள்ளைக்காரர் தம் பெயர்களை வைத்தமையும், அவை அறிவியல் ஆய்வு ஆவணங்களாக இருப்பதையும் காண்கிறோம். யார் கொள்ளுவார் இச்செல்வம் யாவும்?

6. தமிழில் உள்ள சாத்திரங்கள்: சிற்ப,கட்டிட, சித்த,மருத்துவப் பனுவல்கள். எத்தனை. எத்தனை. நடராஜர் சிற்பத்தை செய்யும் முறையக்கொண்டு நம்மால் ஒரு முழு நவ உலோகவியல் பாடத்திட்டத்தையே வகுக்க முடியும். நமக்கோ சடங்குகள்தான் முக்கியம். ஒருசாரார் உடை. மறுசாரார் தொழு.

Friday, July 30, 2004

பன்னாட்டுப் பகலுணவு உப்புமா

எங்கள் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பாடசாலை ஒரு பாடசாலையே அல்ல. அது ஒரு காளிகோவில் திண்ணை. மேலே தேள் பூரான் வசிக்க ஏதுவாக நாட்டு ஓடு போட்டு கூரையெல்லாம் உண்டு. செவ்வாய் வெள்ளி நாட்களில் படுஜாலி. காலையில் பூசாரி வந்து நீர்விளாவி, பூச்சாத்தி, மணியடித்து, பாட்டெல்லாம் உரக்கப் பாடி பூசை முடிக்க பதினோரு மணி ஆகிவிடும். ஆசிரியர்கள் இதற்கும் மீறி குரல் எழுப்பிப் பாடஞ்சொல்ல முடியாதாகையால், எங்களுக்கு பக்தியோடு மோனத்திலிருப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாது. இது எல்லா வகுப்புக்கு மாணவர்களுக்கும். ஆனால் ஐந்தாம் வகுப்பில் முதலிரண்டு ரேங்க் வரும் மாணவர்களின் கொண்டாட்டம் யாருக்கும் கிடைக்காது. அவர்கள் வருடம் பூரா காலை வகுப்புக்கே வரத்தேவையில்லை. ஐம்பது சிரார்களுக்கு மதிய உணவு உப்புமா செய்வதுதான் அவர்களின் காலை நேர கல்வி. பள்ளியில் பியூன் எல்லாம் அக்காலத்தில் கிடையாது. ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சமையல் செய்ய வேண்டும். இந்த தர்க்கத்தை வெல்ல யாரால் முடியும். இப்படியாகத்தானே நானும் என் சத்துணவுச் சமையல் இணை 'ம' வும் உற்ற நண்பர்களானோம்.

அரிசி, ரவை, கோதுமை, சர்க்கரை, பால் என்று ஒரு தமிழன் உயிர்வாழத் தேவையான எதுவும் கடைகளில் கிடைக்காத காலம். அப்போது எல்லா மளிகைக்கடைக் காரரும் பதுக்கல்காரர்கள்தாம். இப்போது நாம் எல்லோரும் கையூட்டு அளிப்போராக இல்லையா, அதுபோலத்தான். ஆனால் சத்துணவுக்கூடங்களுக்கு அமெரிக்க உதவித்திட்டம் இருந்ததால் சில பண்டங்கள் மாதத்தவணைகளில் வரும். எங்கள் தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் இருவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு (15 கி.மி) சைக்கிளில் சென்று மூட்டைகளையும் எண்ணெய் டின்களையும் கொண்டு வருவார்கள். அதைவைத்து செய்யக்கூடிய ஒரே உணவு உப்புமாதான்.

பண்டம்: பன்னாட்டு பகலுணவு உப்புமா
-----------------------------------
(ஐம்பது கிராமிய, உழைக்கும் மக்களின் சிரார்களுக்கு).

தேவையான பொருட்கள்:
--------------------------------------
1. பர்கர் ரவை என்றழைக்கப் படும் உடைத்த கோதுமை - ஐந்து படி
2. சோயா எண்ணெய் - கால் படி
3. csm மாவு என்றழைக்கப் படும் சத்துமாவு - அரைப்படி
4. சின்னவெங்காயம், கடலைப் பருப்பு (ஒரு பிடி),
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, (ஒரு பிடி)
இஞ்சி (ஒரு துண்டு)
ஊசி பச்சை மிளகாய் (இருபது)
5. தேவையான அளவு நீர், உப்பு.

செய்முறை
-----------
ஒன்றாம், இரண்டாம் ரேங்க் வாங்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர் இருவரையும் எட்டு நாற்பது இறைவணக்கம் முடிந்தவுடன் சமையலறைக்கு விரட்டிவிடவும். அவர்கள் இருவரும் சமையலறையை சுத்தம் செய்து, அடுப்பின் சாம்பல் வழித்துக் கொட்டி, தென்ன ஓலை, பருத்தி மார், வரட்டி, விறகுத்துண்டங்கள் எல்லாம் சேர்த்துவைக்க முக்கால் மணிநேரம் ஆகும். இருவரும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே கண்ணில் நீர்வழிய வெங்காயத்தை உரித்து (வெங்காயம்னாலே அப்போது சின்ன வெங்காயம் தாங்க. இப்போது வெங்காயம் என்றழைக்கப்படும் பெரிய வெங்காயம், பல்லாரி வெங்காயம் அன்று அழைக்கப் படும். கிராமங்களில் கிடைக்காது. டவுனுக்குத்தான் போய் வாங்க வேண்டும். பீன்ஸ், காரட் போன்ற 'மலைக்' காய்களும் தான்) , மிளகாய், இஞ்சி அறுத்து வைக்க இரண்டு பீரியட் முடிந்துவிடும். இடைவேளை தானே. அப்போது போய் ஆசிரியரக் கூப்பிட்டால் அவர் வந்து, அடுப்பில் எல்லாம் அடுக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி, வரட்டியை பற்றவைத்து விட்டுப் போய்விடுவார்.
சிறுவர்கள் இருவரும் அந்தப் பெரிய குண்டானை அடுப்பில் ஏற்றி, சோயா எண்ணெய்யை ஊற்றவேண்டும். எண்ணெய் காய்ந்து வாசம் வந்தவுடன் ( அந்தச் சோயா எண்ணெய் சும்மா முகர்ந்தாலே குமட்டும். காய்ந்தவுடன் அதன் சுகந்தமே தனி) கடுகைப் போட்டு வெடித்து அடங்கிய உடன், கடலைப் பருப்பைப் போட்டு மரத்துடுப்பால் மெல்லக் கிண்ட வேண்டும். பிறகு மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி என்று அதே வரிசையில் ஒவ்வொன்றாகப் போட்டு அது வணங்கிய உடன் அடுத்ததைப் போடவேண்டும். எல்லாம் வெந்ததும் ரெண்டுவாளித் தண்ணீர் ஊற்றிவிட்டால் இரு பயல்களும் திரும்பவும் கொஞ்சநேரம் கதையளக்கலாம். (இப்போது நானும் 'ம' வும் மெல்லத்துடுப்பை வலித்து, கடலைப் பருப்புகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி தின்றுகொண்டே, (முதலில் எண்ணெயில் வறுபட்டு பின் வெந்நீரில் பாதிவெந்து அதன் ருசியே தனி) அடுப்பை எரியவைத்துக் கொண்டு இருப்போம்).

நீர் கொதிக்கும் போது பர்கர் ரவையை ஒரு சிறுவன் போட மறு சிறுவன் துடுப்பால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஆசிரியரிடம் ஓடிப் போய் கூற அவர் வந்து பார்ப்பார். அடுத்த கட்டம் மிகக்கடுமையானது. அதை சிறுவர்கள் செய்யவே இயலாதது. அது அந்த csm மாவைப்போட்டு கிளறுவதுதான். அதைப்போட்ட வுடனே கட்டிகட்டியாய்ச் சேர ஆரம்பித்துவிடும். ஆசிரியரே அதைத் துடுப்பால் கிளறி முடிக்கும்போது மூச்சுவாங்கி விடுவார். ஒரு வாய் சுவைத்துப் பார்த்துவிட்டு ஆசிரியர் மறுபடியும் கடைசி பீரியட்ஐத் தொடர சென்றுவிடலாம். சிறுவர்கள் அடுப்பை சற்று நேரம் சிறுதீயாய் எரித்து, குண்டானை மூடி கொஞ்சம் பொறுத்து விறகையெல்லாம் இழுத்து அணைத்து விட வேண்டும். அப்புறம் கைகால் கழுவி பத்து நிமிடம் காக்கை, அணில் இவற்றோடு ஆடிக்கொண்டிருந்த்தால், உணவு மணி சரியாக அடித்து விடும்.


சமையலை முடித்து விட்டு நானும், 'ம' வும் வீட்டுக்கு ஓடி அம்மாக்கள் சமைத்ததை சாப்பிடவேண்டும். பின்பு மதியம் ஓடிவந்து வகுப்பில் பாடம் படிக்கவேண்டும். (இப்படி ஐந்தாம் வகுப்பிலேயே ஏறக்குறைய ஐம்பது பேருக்கு உப்புமா செய்ததால் இப்போதும் வீட்டில் நான்தான் உப்புமா எக்ஸ்பர்ட்).

நானும் 'ம' வும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். மாலைகளில் சேர்ந்து கிராமம் பூராவும் சுற்றித்திரிவோம். 'ம' விவசாயியின் மகன். நானோ ஆசிரியர் பையன். எனக்கு எப்போதும் அவர்களின் நிலத்தில் வார விடுமுறை நாட்களில் திரியப் பிடிக்கும். வரட்சியும், மழைக்காலமும் ஒருங்கே பாடுபடுத்தும் புன்செய் நிலம் அவர்களுடையது. துவரையும், உளுந்தும், கடலையும், மானாவாரிப் பருத்தியும் முப்பது நாற்பது தென்னையும் விளைந்த நிலம்.நாங்கள் ஆறாம் வகுப்பு சென்றபோது, கிராமத்திற்கு கோவை வேளாண்மைக் கல்லூரியிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலருடன் சில அதிகாரிகளும் வந்து இரண்டு நாள் 16mm ப்ரொஜெக்டரில் தீவிர விவசாய முறைகளைப் பற்றி ஊரிலிருந்த அனைவரையும் கூட்டி விளக்கினர். வீரிய விதைகளும், பூச்சிமருந்துகளும் பரவலாயின. நாட்டுப் பருத்தியிலிருந்து சுஜாதா, சுவின் என்ற நீண்ட இழைப் பருத்திகளுக்கு 'ம' வீட்டில் மாறினார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் பொள்ளாச்சிக்குச் சென்றுவிட்டேன். இரண்டுவருடங்கள் சென்ற பின் ஒரு விடுமுறையில் கிராமத்திற்கு சென்றபோது 'ம' பாலிடால் என்ற பூச்சிக்கொல்லி குடித்து இறந்து விட்டதாக அம்மா சொன்னார்கள். அவன் வீட்டிற்குச் சென்று அவன் அன்னையிடம் பேசிவிட்டு வந்தேன். நாட்டை பிச்சைக்கார நிலைமையிலிருந்து உணவு உபரி நாடாக மாற்றியது பசுமைப் புரட்சிதான். அந்த பசுமைப் புரட்சிக்கு, அந்த சோதனைக்கு சிறு, குறு விவசாயிகள் கொடுத்த விலை ஆகப் பெரியது.

Sunday, July 18, 2004

ஒரு சிலர்


நேற்றிலிருந்து இருக்கும் செயலற்ற இந்த மனநிலையில், நாட்டை இன்றைய
நிலைக்குத் தூக்கி நிறுத்திய சில சாதனையாளர்களைப் பற்றி எழுதுகிறேன்.
அப்படித்தான் ஒவ்வொருமுறையும் எழவேண்டியிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து சுமார் இருபது
இருபத்தைந்து ஆண்டுகள் மிகப் பெரும் தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது.
அவற்றுள் மிக முக்கியமான ஒன்று மக்களுக்கு போதிய உணவு இல்லாமை. உணவு
கிட்டாமை அல்ல. உணவு இல்லாமை. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முதல்
ஐந்தாண்டுத் திட்டதிலேயே பன்னோக்கு அணைகள் கட்டுதல் போன்ற திட்டங்களை
நடுவண் அரசு செயல் படுத்தத் தொடங்கியது. ஆனாலும் 60 களின் இறுதிவரை
கடுமையான பஞ்சங்கள் ஏற்பட்டன. பஞ்சங்கள் என்றால் உணவு கையிருப்பில்
இல்லாத நிலை. எத்தனை காசு கொடுத்தாலும் உணவு கிடையாது. உணவுக்கிடங்குகள்
காலி. சில பதுக்கல் காரரைத் தவிர்த்து ந்டுவண் அரசே நினைத்தாலும் உணவை
எங்கிருந்தும் கொணர முடியாது. PL480 போன்ற உதவித்திட்டங்கள் மூலம் அரசு
அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தது. தமிழ்நாட்டின் மதிய உணவுத்
திட்டத்திற்கும் உடைத்த கோதுமை, சோயா எண்ணெய், CornMaizeSoya கலந்த
சத்துப் பொடி என மூட்டை மூட்டையாக வரும். இதைக்கொண்டு உப்புமா போல் ஏதோ
கிளறி பள்ளிச் சிறார்களுக்கு மதியஉணவாக அளிக்கப் படும். பல கிராமங்களில்
சத்தான உணவு என்று ஒரு வேளையாவது சாப்பிட்டவர்கள் இப்பள்ளிச்
சிறார்கள்தாம். இந்தக் கையறு நிலையிலிருந்து நாட்டை வெளிக்கொணர முதலில்
அப்போதைய பிரதமராயிருந்த லால் பகதூர் ஸாஸ்திரியும், அவரின் அகால
மரணத்திற்குப் பின் வந்த இந்திரா காந்தியும் முழு மனதோடு செயல் பட்டனர்.
அதனை செயல் படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் அரசியல்வாதியான
சி. சுப்ரமணியமும், அறிவியலாளரான எம். எஸ். ஸ்வாமினாதனும்.
எத்தனையோ இகழ்ச்சிகளையும், சந்தேகங்களையும் மீறி அவர்களின் சேர்ந்த
நடவடிக்கைகள் நாட்டின் பசுமைப் புரட்சிக்கு அடிகோலின. ஐந்து வருடங்களில்
தொடங்கி, எழுபதுகளின் முடிவுக்குள் இந்நாட்டின் விவசாயிகள்
தொடர்ந்து பம்பர் ஹார்வெஸ்ட் என்று குவித்தார்கள். அதற்குப் பின் நாட்டில்
ஏதாவது ஒரு பகுதியில் உணவு இல்லை என்றால் அது அரசின் தவறு மட்டுமே, உணவு
கையிருப்பில் இல்லாததால் அல்ல என்ற நிலைமை வந்தது. இது ஒரு மாபெரும் சாதனை என்றே சொல்லவேண்டும். உயர் அறிவியலும், சரியான அரசியலும், மக்களின் அயராத உழைப்பும் சேர்ந்து சாதித்தது இது.
எத்தனை நாடுகள் இப்படி வெற்றி கண்டுள்ளன என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.
உணவுத்துறையில் அடுத்த சாதனை இதற்குச் சற்றேனும் சளைக்காத வெண்மைப்
புரட்சி. மீண்டும் 60 கள். பால் வேண்டுமென்றால், தன் சொந்த மாட்டில்
பால்காரர் கறந்து கொணர்ந்து தருவதுதான். கிராமத்துக் கால்நடை வளர்ப்போர்
ஏதோ படிக்கு 20 பைசா என்றவகையில் நகரத்து வியாபாரிகளுக்கு விற்றுக்
கொண்டிருந்தனர். நகரங்களுக்கும் உறுதிசொல்லப்பட்ட வினியோக முறைகள்
கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில், விவசாயிகள், கிராமப் பெண்கள் இவர்களுடைய
உழைப்பில் வரும் பாலுக்கு சரியான விலைகிடைக்கவும், நகரமக்களுக்கு சரியாக
தவறாமல் பால் கிடைக்கவும் வழிகாணவேண்டுமென வந்த ஒரு அரச அதிகாரிதான்
வர்கீஸ் குரியன்.

குஜராத்தில் அமுல் என்னும் கூட்டுறவுப் பால் பண்ணையை ஆரம்பித்து, அவர்
நடத்திய புரட்சி ஈடு இணை இல்லாதது. அன்றைக்கு பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே
எப்படி பிரதமர் வரை லாபி செய்து ஐரோப்பிய, நியூசீலாந்து பால்ப் பொடி
இறக்குமதிக்காக வக்காலத்து வாங்கி, இந்தியாவால் தனக்கு தேவையான பால்
உற்பத்தி செய்ய இயலாது என்றெல்லாம் நிரூபிக்க பாடுபட்டது, அதை எப்படி
அமுல் முறியடித்தது என்பதெல்லாம் பெரும் கதை. இன்று இந்தியா உலகின் பால்
உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் எங்கிருக்கிறது தெரியுமா? இதுவும் ஒரு அறிவியல் + அரசியல் + உழைக்கும் மக்கள் பெற்ற வெற்றிதான்.


அடுத்தது எண்பதுகள். நாட்டில போதுமான அளவு உணவு தானியங்கள் விளைகின்றன. தேவையான அளவு பால் உற்பத்தியாகிறது. ஆனால் எல்லோருக்கும் தேவையான அளவு புரதம் கிடைக்கிறதா? மீண்டும் ஒரு அறிவியலாளர். டாக்டர். பி.வி. ராவ்.இப்போது துறை: கோழி வளர்ப்பு. பத்தே வருடங்கள். நாட்டில் முட்டை உற்பத்தி இருபது
மடங்கு கூடுகிறது. உலகின் மிகச் சிறந்த பண்ணைகளும், கோழி இன தலைமுறைத்
தொடர்களும் இந்தியாவில். உலகின் இரண்டாவது (அல்லது ஒன்றாவதா?) இடத்தில்
இந்தியா. இவை அனைத்தும் இந்தியர்களால் திட்டமிடப் பட்டு, மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையில் நவீன அறிவியலின் உதவியுடன் தன்முனைப்புடைய சிலரால்
மக்களின் உழைப்போடு பன்னாட்டு சந்தைகளுடன் போட்டியிட்டு இந்தியர்கள்
செய்து காட்டிய சாதனைகள். இது ஒரு புறம்தான். இன்று இந்தியா முற்றிலும்
இருண்ட கண்டமாக இல்லாமல் ஏதோ பிரகாசமாக சிலருக்கும் மங்கலாக பலருக்குமம்
ஒளிர்கிறது என்றால் அதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவர்கள் ஒரு சிலர்.

இன்றைக்கு நாமெல்லாம் புட் கோர்ட்களுக்குப் போய் டீப் பேன் பீட்ஸா
சாப்பிடும் போது ஒருமுறை மனதிற்குள்ளே நினைவுகூறத்தக்கவர்கள்
இவர்கள்.

Friday, July 16, 2004

கல்வி, உயர்கல்வி பற்றி ...1

கடந்த இரு தினங்களாக பத்ரி மற்றும் வெங்கட் இன் பதிவுகளும், அவற்றிற்கு வரும் பின்னூட்டங்களும் மிகவும் முக்கியமானவை. சிறந்த கல்வி நிலையங்கள், கல்விச் சிறப்பு என்ற கருத்துகள் சாதி பற்றிய விவாதங்களாக மாறிவிட்டதாக சிலர் வருந்தலாம். அனால் அனைத்தும் தொடர்புடையன ஆகையால் நாம் இதைப் பற்றியெல்லாம் பேச நல்ல சந்தர்ப்பம் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாக முதலிலேயே இரண்டு விஷயங்களை சொல்லிவிடுகிறேன். ஒன்று - நானோ, என் உடன் பிறந்தோரோ அரசின் எந்த இடஒதுக்கீட்டின் மூலமும் பயன் பெற்றவர்கள் அல்லர். இரண்டு - நான் கிராமத்து பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியிலிருந்து நாட்டின் மிகச் சிறந்த ஆய்வுநிலையம் வரை எல்லாவிதமான கல்விநிலையங்களிலும், மக்கள் செலவில், கற்றிருக்கிறேன். எந்த பிராமணரும் நான் பயின்ற எந்தக் கல்வி நிலையத்திலும் சாதியை முன்வைத்து அறிவை மறுத்ததில்லை. (உடனே கிளம்பிவிடாதீர்கள். பிராமணீயத்தின் மற்றொருமுகமான சூத்திரனுக்கு மறைபொருளை கற்றுத்தராதே என்பதும் தெரியும். ஆனால் அது கருத்துலக சண்டை. அதை தனியாகப் போடலாம். சரியா) . இட ஒதுக்கீடு சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

1.குடும்ப ஏழ்மையை கணக்கில் கொண்டு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது ஒரு புது வாதம். இதை விவாதித்து ஏதேனும் நியாயம் இருந்தால்தான் நடைமுறைப்படுத்தவேண்டும். சமுதாயத்தில் பல தலைமுறைகளாக சாதியின் காரணமாக அடிமைப் படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முதல் நோக்கமே அதன் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தி விட்டதா என்பதை சரிபார்த்த பின்னரே அடுத்த கட்டமாகிய ஏழ்மை பற்றிய விவாதத்தை துவக்கவேண்டும். முதல் நோக்கமே அகில இந்திய அளவில் இன்னும் நிறைவேறவில்லை என்பதே என் கருத்து. பிராமணரைத்தவிர்த்த பிற சாதியின மாணவர் தமிழகம், ஆந்திரம், மராட்டியம், கேரளம் என்ற மூன்று நான்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து ஐஐடி/ஐஐஎஸ்ஸி இவற்றில் பயில்வது அரிதாகவே இன்னும் இருக்கிறது. 80 களின் முதலில் ஐஐஎஸ்ஸியில் ஏன் தமிழகத்திலிருந்து மட்டும் இளங்கலை பொறியியல் மாணவர் அதிகம்
அங்கே சேர்கிறார்கள் என்பதப் பற்றி ஒரு கேள்வி வந்தது. 80 பேர் கொண்ட எங்கள் பேட்ச் இல் 37 பேர் தமிழகத்தில் இருந்து. இது ஒரு அகில இந்தியத் தேர்வின் முடிவில். இதை சரி செய்ய காரணங்களை ஆய்வதற்காக நாங்கள் students council இல் ஒரு சர்வே நடத்தினோம். அப்போது கண்ட சில உண்மைகள் இன்னும் இருக்கின்றன. அது இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வி இன்னும் பரவலாக்கப் படவில்லை என்பதுதான். மாநில அரசுகளின் செயல்பாடே இதற்குப் பெரும் காரணமாக இருக்கிறது.
சாதியை முன் வைத்து அளிக்கப்படும் இட ஒதுக்கீடு பற்றிய என்னுடைய இப்போதைய கருத்து இதுதான்:
இது தமிழகத்தை பற்றிய என்னுடைய கருத்து. மற்ற மாநிலங்களில் நிலைமை வேறு.

2. இப்போதைக்கு, தமிழகத்தில் முன்னேறிய, ஆளும் சாதிகள் ஏறக்குறைய கல்வி/அரசு அலுவல்கள் மற்றும் இதர ஆதிக்க மையங்களில் போதுமான அளவு பிரதிநிதுத்துவப் பட்டு இருக்கிறார்கள். அதற்கு தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நடந்த அரசியல் போராட்டங்கள் காரணமாக இருக்கலாம். முக்கிய காரணங்களாக நான் கருதுவது: தமிழகத்தில் ஆரம்பமுதலே தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் அரசுகளினால் போற்றி வளர்க்கப் பட்டது. காமராசர் கொண்டுவந்த, பின்னர் கழக அரசுகளால் இன்னும் தீவிரமாக அமல்படுத்தப் பட்ட பகல் உணவுத்திட்டம் இதில் மிக முக்கிய பங்காற்றியது. இன்றைய அரசு மீண்டும் பகலுணவில் முட்டை சேர்த்ததை ஆதரிப்போம். (இதைப்பற்றி எழுபதுகளிலும், தொடர்ந்தும் எதிர்ப்புத்தெரிவித்த சோ போன்ற அறிவி ஜீவிகள் இப்போதும் இதைப் பகடி (மட்டுமே) செய்யமுடியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்). எந்தக் கிராமத்திற்கும் ஒன்று/இரண்டு கிமீ தொலைவில் இன்று தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலை எல்லா மாநிலங்களிலும் வர நடுவண் அரசு மாநில அரசுகளை ஊக்குவிக்கவேண்டும் . இதற்காக மட்டும் இந்த பட்ஜெட்டின் படி நாம் அளிக்கும் அதிகப் படியான cess உபயோகப் படுத்தப் படுமானால் நான் பெருமகிழ்சி அடைவேன். இன்னும் 5% அதிகம் தரக் கூட சம்மதம். நாற்பது ஆண்டுகள் பல பரிமாணங்களிலும் (தொடக்கக் கல்வி ஊக்கம், கல்வியின் முக்கியத்தைப் பற்றிய பரப்புரை, மதிய உணவுத்திட்டம், இட ஒதுக்கீடு, அளவான குழந்தை எண்ணிக்கை
பற்றிய குடும்ப நலப் பரப்புரை, கிராம சுகாதார நிலையங்கள், மகளிர் சுகாதார நிலயங்கள்) அரசு செயல் பட்டதால் தமிழகத்தில் இன்றைய நிலைமை உயர் மற்றும் பிற்பட்ட சாதியினருக்கு ஏற்றத்தையே தந்துள்ளது. ஆனால் மேற்கூறிய இந்தக் கருத்து ஒரு ஆளும் சாதியினரின் 'கதையாடல்' தான். அதற்கும் காரணம் உண்டு. 60களின் இறுதியில் தொடங்கி நடந்த வேளாண்மைப் புரட்சி, எண்பதுகளில் தொடங்கிய தொழில்ப் புலம் சார்ந்த அரச திட்டங்கள் அனைத்தும், நிலமுடைமையாளர்களையும், முதல் உடைமையாளர்களையுமே நோக்கில் கொண்டு அவர்களின் முயற்சிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவே தீட்டப்பட்டவை. இன்னிலையில் அவர்களின் குழந்தைகள் மிக விரைவில் அரசு ஏற்படுத்திய சாதகமான கல்விச் சூழலைப் பயன்படுத்தி பொறியியல், அறிவியல், மருத்துவம் கற்று மேலே வந்துவிட்டார்கள். நிலமற்ற, பொருளுடைமையற்ற பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியினர் இந்தச் சுற்றில் வெற்றிபெற இயலவில்லை. அதற்கு அடுத்த சுற்று இப்போது தொடங்குகிறது.

3. மேற்சொன்ன கருத்து மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட, தலித் சாதியினருக்குப் பொருந்தாது என்பது கண்கூடு. இன்றும் அவர்களின் நிலைமை ஒன்றும் பெரிதாக முன்னேறிவிடவில்லை. தற்போதைய அரசியல் மாற்றங்களே இதற்கு சாட்சிகளாக உள்ளன. மிகவும் பிற்படுத்தப் பட்ட, தலித் இனச் சார்புக் கட்சிகள் இப்போது தமக்குக் கிடைக்கும் பங்குக்கு போராட ஆரம்பித்துள்ளார்கள். இந்த அரசியல் செயல் பாடுகளை வன்முறை என்றும் கலாச்சார சீரழிவு என்றும் ஒரு பயங்கரமான ஜோக் ஆக நமது உயர்சாதி ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பின்னணியில் உள்ளது நாட்டின் ஏற்றத்தில் தாம் பங்கு பெற இயலாமை குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடே ஆகும். அரசின் திட்டங்கள் உடனடியாக இத்தகய சமுதாய கீழ்த்தட்டு மக்களை குறிவைத்து செயல் பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டு, தற்போதைய ஆதிக்க சாதிகளுக்கு, ஒருதலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு போன்ற மாறுதல்களும், தற்போது பிற்படுத்தப்பட்டதாக வகைப் படுத்தப் படும் சில சாதிகளை உயர்சாதிகள் என மாற்றம் செய்தலும் போன்றவற்றை செயல் படுத்தி, மிஞ்சும் இடங்களை மிக தாழ்த்தப் பட்ட, தலித், ஆதிவாசி இன மக்களுக்கு ஒதுக்க வேண்டும். இதனால் ' மெரிட்' என்னாவது என்ற சில எப்போதும் கேட்கும் அறிவுஜீவிக் கூச்சல்களை அலட்சியப் படுத்தலாம். 'மெரிட்' ஒரு மண்ணாங்கட்டியும் ஆகாது. (கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் பொறியியல், மருத்துவ இடங்களுக்கு பிசி கோட்டாவுக்கும், மெரிட் கோட்டாவுக்கும் உள்ள
கட் ஆஃப் மதிப்பெண்களின் வித்தியாசம் என்ன?. 85 க்கும் 95 க்கும் 'அறிவில்' பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. 100 களையும் 90 களையும் வாங்கியிருக்கும் அனுபவத்தில் சொல்லுகிறேன். தேர்வில் 100 மதிப்பெண் பெறுவது ஒரு செயல்திறம்தான். "technique' மட்டுமே. 80/85 க்கு மேல் அது அதிர்ஷ்டம் மற்றும் தேர்வெழுதும் போது மாணவனுக்கு இருக்கும் முனைப்பு இவற்றைச் சார்ந்தது. விஷய ஞானத்தையோ, அறிவையோ குறிப்பது அல்ல). ஒரு அரசு நாட்டின் திட்டங்களைத் தீட்டுவது சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தான். 'மெரிட்' என்று அறியப்படும் தேர்வில் மார்க் வாங்கும் ஒரு குரங்கு வித்தைக்கல்ல என்பதை எல்லோரும் மனிதில் கொள்ளவேண்டும்.

4. இட ஒதுக்கீடு உயர்கல்வியிலும் தேவையா என்பது முக்கியமான ஒரு வாதம் ஆகும். இது இப்போதைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் முக்கிய கேள்வியாக உள்ளது. அதற்குக் காரணம் இரு நாடுகளும் பல்கலாச்சார, பல்லினக்குழு உள்ளடக்கிய, ஜனநாயக நாடுகள். அடிமைப்படுத்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களும் இவ்விரு நாடுகளிலும் கணிசமாக உள்ளது முதன்மைக் காரணம். இரு நாடுகளின் கல்வியாளர்களும் இவ்விஷயத்தப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். நாமும் reservation என்பதை அமெரிக்கர்கள்போல் affirmative action என்று பெயர் மாற்றிவிட்ட்டால் நம் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் எளிதில் புரியுமோ என்று எனக்குத் தோன்றுகிறது. கல்வியில் இட ஒதுக்கீடு தவிர அரசு மற்றும் இப்போது பேசப்படும் தனியார்துறை இட ஒதுக்கீடு பற்றியும் கருத்துகள் பரிமாற்றம் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் நாங்கள் ஒரு affirmative action employer என அறிவிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே முடியாது என்றா சொல்லிவிடும்? இதுவும் இந்திய மேலாண்மையார்களின் 'மெரிட்' திரிபு என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

(இன்னும் தொடர்வேன்)

Monday, July 05, 2004

ஆண்ட்ரோமீடா வேட்டை

ஆண்ட்ரோமீடா வேட்டை
--------------------

அவரெல்லாம் வந்து
அருகருகே நின்று
அடுத்தாரின் கரம்பற்றி
சொற்றடங்கள் துடைத்தெறிந்து
கதிர்சாயக் குரலெழுப்பி
புரண்டாடும் தீங்காற்றாய்
விரைந்தசையும் வாள்வீசி
உருண்டோ யும் உடல்சேர்த்து
உடைமை எமதென்று
ஒவ்வொன்றாய் வால்பிணைத்து
தந்தங்கள் சேர்ந்ததிர
ஊர்மீழும் எம்சேனை
காத்திருக்கும் பெண்டிரெல்லாம்
உடல்பற்றி நிணம்வகுத்து
தணல்கூட்டி அரிநிரப்பி
வெண்சோறு வடித்தாங்கு
திசைவணங்கிச் சேர்ந்திசைக்க
பிறழ்ந்தேகும் காலக்கொழு
அகழ்ந்தவித்த எம்கணங்கள்
சிதறுண்ட கதைப்பாடல்
கேள்செல்லக் குழவியரே


-----------------------------------------------------

ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் அது பெறும்சொற்பொருள்:

எம்'கணங்'கள் -இதில், கணம்: கூட்டம்;விலங்குக் கூட்டம் (கழக அகராதி)

-----------------------------------------------------

Tuesday, June 22, 2004

எதிர்க் கணங்கள்

தமிழில் சில விடயங்கள் பாடு பொருளாய் அமைவதை நாம் அதிகம் பார்த்ததில்லை. எதிர்காலப் புனைகருத்துக்களை இடைஅமைத்து இயற்றுதல் அவற்றில் ஒன்று. அந்த வழியில் என் சிறு முயற்சி இது. இதை 'மரபு' -க்- 'கவிதை' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். மரபும் கவிதையும் இயல்பாக வரப்பெற்றவர்கள் முயன்றால் அழகாக இருக்கும். (இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்கும்). ஒரு வெளிக் கப்பலோட்டியின் மனத்திலெழுமாறு அமைந்த பாடல்.எதிர்க் கணங்கள்
--------------

உறைஉயிர்க்கலம் செலுத்திவிண்
மீன்திரள் விதைத்தபோதும்
தரைஅகழ்களம் திருத்திபல
மறைநகர் சமைத்தபோதும்

ஒளிதவழ்பாய் விரித்துஇடை
வெளிப்பாழ் கடந்தபோதும்
பிழைகற்று தளைவிட்டுசெம்
மானுடம் கிளைத்தபோதும்

நனவறும்மதி பெற்றுஎதிர்க்
கணம்பல தெளிந்தபோதும்
துயரறுகதி கண்டுமயர்த்
திசைதப்பி வலித்தபோதும்

துணைவரும் நிழலன்றிஓர்
பிணையென்றே துமிலமே
அழல்பொழி சுடலைமிசைபெருங்
களிநட மாடும்சிவனே


--------------------------------------------------
இணைச் சொற்கள்/சொற்றொடர்கள்
----------------------------

உறைஉயிர்கலம் - cryogenic spaceships
விண் மீன்திரள் - galaxies
தரைஅகழ்களம் - subterran zone
ஒளிதவழ்பாய் - light sails
இடை வெளிப்பாழ் - intergalactic space

----------------------------------------------------

Wednesday, June 16, 2004

ரா. ரா. சோழன்


"நம்பி, இனி செம்மொழியில்தான் பேசவேண்டுமாமே.
இக் கொடுமா வேட்டைக்கு என்ன சொல்லுவதோ?"

"அட. நீ காணவில்லையா? தண்ட நாயகர் அரசாணை அனுப்பியிருந்தாரே.
இனி டைனோசார் வேட்டை என கூறவேண்டுமாம்."

Friday, June 11, 2004

கவிதைகள்

கவிதைகள் (*)
--------


உன் கவிதையை நீ எழுதுகிறாய்
அவன் கவிதையை அவன் எழுதிவிட்டான்
இவன் கவிதையை இவன் எழுதுவான்

என் கவிதையை நான் எழுதாமல்
ஊர்உறங்குமிப் பின்னிரவில்
சாலைதடதடக்க முன்பின்னாய்
ரோடுரோலரில் உருளுகிறேன்

சோளப்புலத்தில் பறவையோட்டி
பருத்திக்காட்டில் பிஞ்சுபொறுக்கி
எத்தனை நாட்கள் திரிந்தோம்

ஒரு நல்ல நட்பை
ஒரு நல்ல கவிதை
பிரித்துவிட்டது பார்த்தாயா இன்று-------------
(*) 'உன் கவிதையை நீ எழுது' - பசுவைய்யா

Monday, June 07, 2004

நூற்றாண்டுக் காட்சிகள் -1

1.

சுற்றிலும் நிகழ் காலம்
என்ன நினைத்துக் கொய்கின்றார்
அவன் இரு கைகளையும்

படை உண்டு
நிறம் தெறித்த சிகப்பே போல்
வானம் பொழியும் இக்கதிர்கள்

எட்டு எண்ணி முடிக்கும்முன்
அற்று வீழும் கரம்
மற்றதர்க்கு விரையும் செந்நாய்கள்.

Friday, June 04, 2004

முன்னோட்டம் வழங்கு

நிரல்தரு மதலையோரே, நண்பர் பாரா வலைப்பதிவு கண்டு இவண்வந்து தெளிவீர்.
நாள்செயல் தொகுப்பின் முன்னோட்டம்:

( (திங்கள் நம்மவன் நண்பன் துணைவன் எதிரி ஏய்ப்பன் வஞ்சன் வாய்மையன் கொஞ்சன் கெஞ்சன் )
(செவ்வாய் கலை எழுத்து கொலை கோப்பு வலை உலை உழவு களவு விலை )
(புதன் கத்தரித்துஒட்டு கருத்துப்பொறுக்கு வெல்லும்வழிசேர் வெருட்டிப்பிழை
அண்டிச்சமன்செய் ஆதரவுதவிர் பயன்பலகூறு இயல்மனம்மற ஈகைகாட்டிவை )
(வியாழன் அறிவியல் துறவியல் கரவியல் தெருவியல் விதியியல் சதியியல் மதியியல் ரதியியல் கதியியல்)
(வெள்ளி அறியாதவைபேசு அறிந்தவைகூசு மறந்தவைபோல்வாழ் மாற்றோர்வழிஇகழ் தெளிந்தவைமறை
தேறாதனபரப்பு எளியோர்வழக்கழி ஏனையோர்வினைசெய் அயல்கிளைசேர் )
(சனி தேசம்சுரண்டு தெற்கிருந்துவாழ் நடிகர்மனம்பயில் நாடுதாவிஆள் கொடிகொண்டுதட்டு
கோடிகள்பதுக்கு சுற்றம்உயர்த்து சூழல்நசி செப்புவதுசெயல்மற)
)

நிரல்தரு மதலையர் மேற்புகன்ற சொற்றொடர் அஃதுபோன்றே கம்பைல் செயும்வித்தை கற்றறிந்தீராயின் தனிமடல்

தொடர்பேற்று சர்வர்சைடு பணியொன்று வழங்குவன் அடியேன்.

Friday, May 28, 2004

இற்றைத் திங்கள்

சீஈரியல் பாராமல் இருக்கவேண்டாம்
செம்மொழியே யானாலும் பேசவேண்டாம்
மாஆறாத பங்குவிலை நேர்க்கவேண்டாம்
மற்றுமொரு தன்ராஜை சேர்க்கவேண்டாம்


வேரோடு எமையுலுக்கி வெந்துமனம் போகவைக்கும்
பேராற்றுத் திட்டங்கள் தீட்டவேண்டாம்
பெற்றதெல்லாம் கால்சென்ட்டர் கதைக்கவேண்டாம்


தெருவெங்கும் சைபர்ஷாப் திறக்கவேண்டாம்
தேறாது நிலாச்சுற்று மறக்கவேண்டாம்
வாராது வந்த ரோமா மாதரெல்லாம்
கூறாது அறம்துறவு கோரவேண்டாம்


டெர்ராபைட் குழிப்பாதை அகழவேண்டாம்
டெல்லிவரை இசைப்புயல்கள் வீசவேண்டாம்
இத்தனையும் பார்த்தும் எத்திக்கும் எதிரொலிக்கும்
ஜக்கும் பாய்பஜனை வேண்டேவேண்டாம்

Wednesday, May 26, 2004

இரண்டாயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன் தமிழ் எழுத்து

காலையில் ஹிந்து பார்த்தால் ஒரு முக்கியமான பதிவு:

http://www.hindu.com/2004/05/26/stories/2004052602871200.htm


0. இந்தக் கண்டுபிடிப்பில் கணிக்கப் பட்ட காலம் சரியானதாக இருந்தால் இது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு. தமிழ் சரித்திரம் இனி வேறு வகையில் மாற்றி எழுதப்படும்.
1. இரண்டாயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன் தமிழ் எழுத்து (குடிவாழ் எச்சங்களுடன்) எனில், பலப் பல விஷயங்கள் மறு ஆய்வு செய்யப் படும்.
2. வையாபுரிப் பிள்ளை போன்றவர்களால் கி.பி. 300 என வகுக்கப்பட்ட சங்ககாலம் மிக எளிதாக கி.மு வுக்குப் போய்விடும்
3. சங்க காலப் பாடல்களின் எளிமை, ஒரு முதிர்வடைந்த மொழிக்குழுவின் வெளிப்பாடு என்ற கருத்தோடு சரியாக ஒத்திசையும்.
4. சங்கப் பாடல்களில் விரியும் வாழ்க்கைமுறையில் தென்படும் செரிந்த விடயங்கள் வெறும் கவிஞர் புனை கூற்றாகாமல் அவற்றின் மொழிஎளிமை, பொருள் பயன்பாட்டு இயல்பு இவற்றுடன் ஒத்திசையும் ஆவணமாக ஏற்கும் நிலையும் ஆகலாம்.
5. கேரளத்திலும், தமிழக கடற்கரையிலும் நடக்கும் கடல்தொன்மவியல் அகழ் முயற்சிகள் துரிதமாக்கப் பட்டால் வணிகச் சரிதமும் மாற்றி பொருள் கூறப்பட சாத்தியம் உள்ளது.
6. தமிழகத்தின் சங்ககாலத்து, அதன் முந்தைய சமயம் பற்றிய கோட்பாடுகள் நிச்சயம் மறுஆய்வுக்குள்ளாகும்.
7. தென்னாசிய மொழி வரலாறு மாறும் காலம் துவங்கிவிட்டதுபோல் தெரிகிறது.

அன்புடன்
அருள்

Thursday, May 20, 2004

நாத்திகம் பயில்

தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

1. நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

2. நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள் குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தை வழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

3. நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்கு தன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்க வேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

4. நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனித வாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும் சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை, இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

5. நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன. பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும் கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.

6. நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய, தூய்மையான சிந்தனைகள் கொண்ட,
பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன், சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்
வழங்குகிறது.

முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின்
இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)

Wednesday, May 19, 2004

Friday, April 23, 2004

ஜொலிக்குது... ஜொலிஜொலிக்குது...

... என்று செயற்கைப் பாடினியாக சினேகா ஆடும் நினைவுதான் இன்றைக்குப் பூராவும். மத்தியானம் இரண்டுமணி சுமாருக்கு ஆரம்பித்த போக்குவரத்துக் கொடுநெரிசல் இரவு எட்டுமணியாகியும் இன்னும் தீரவில்லை. இங்கு சென்னையில் பனகல் பூங்காவைச் சுற்றி தென் உஸ்மான் தெரு, வட உஸ்மான் தெரு, வெங்கடரமணா தெரு, ஜிஎன் செட்டி தெரு என்று எல்லாத் தெருக்களிலும் கார்,மக்கள், பஸ், ஆட்டோ, மக்கள், வேன், போலீஸ், மக்கள், சைக்கிள், மக்கள்,கார், ஆட்டோ, மக்கள், மக்கள், என்று ஒரே ஆரவாரம். என்ன வென்று ஒரு போக்குவரத்துக் காவலரைக் கேட்டேன். "அதுசார் இன்னிக்கு அக்ஷயத்ருதியை, அதுக்காக தங்கம் வாங்குராங்க" என்று ஏதோ சொன்னார். என்னடா தாத்தா இப்படியெல்லாம் ஒன்றும் சொல்லித்தரலையே என்று வீட்டுக்கு ஓடிவந்து சர்வமுகூர்த்தப் பஞ்சாங்கத்தப் பார்த்தால், கடலிலோ ராட்சஷ அலைகள், ஆனால் நாப்பது நாழிகைக்கே திருதியை முடிந்தது என்றிருக்கிறது. இன்னும் மக்கள் தங்கம் வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இன்னிக்கு தங்கம் வாங்கினா ஐஸ்வர்யம் வீட்டிலே பொங்குமாம். வெ.ஆ. மூர்த்தி மாதிரி "அதுக்காக, இப்ப்ப்பிடியா?" என்று கேட்கலாம் போலிருக்கிறது. போன வருஷம் இன்னொரு ஏதோ ஒரு நாளிலே (தீபாவளி சமயத்திலே) பெங்களூரில் கமர்ஷியல் தெருவில் குடும்பத்தோடு இப்படி தங்கம் வாங்கும் நாளில் மாட்டிக் கொண்டேன். நகையே எப்போதும் போடாத என் மனைவியும் அந்த ஜனஜாத்திரையைப் பார்த்து, ஏதாவது கொஞ்சம் நாமும் வாங்கலாமா என்று கேட்க சரி பாக்கலாம் என்று ஒரு புகழ் பெற்ற பழைய கடை ஒன்றில் நுழைந்தது... போதும்டா சாமி. கோலாரில் தங்கச் சுரங்கத்துக்கு உள்ளே ஆயிரம் அடி சென்றிருக்கிறேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அங்கே ராபர்ட்சன் பேட்டைத் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டாக உழைத்து உழைத்து மண்ணைப் பிழிந்து தங்கம் தனிப்படுத்தி எல்லாம் முடிந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னாலேயே ஒருடன் தனிமமண்ணிலிலிருந்து ஐந்து கிராம் தங்கம்தான் கிடைக்கும். இப்போது ஏதாவது டைனொசார் எலும்புத்துகள்தான் கிடைக்கும். அத்தனை ஆழம் போயாச்சு. அந்தக் கடையில் ஏதோ ஒரு தங்கத் தகடுக் காசு வாங்கிக்கொண்டு ஓடி வந்து விடலாமென்று போனால், அதற்கு கோலாரே தேவலாம் போலாகிவிட்டது. ஆமா எதுக்கு மக்கள் இன்னும் தங்கம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?

தங்கத்தின் மதிப்பு ஒரு பதினைந்து வருடங்களாக உலகச் சந்தையில் குறைந்து கொண்டேதான் வருகிறது. நம்ப இணையக் குமிழ் வெடிப்பதற்கு முன்னால், எல்லாவிதமான முதலீட்டு பரிவுரையாளரும் தங்கம் வாங்காதீங்க, பணத்தை பங்குச் சந்தையிலே போடுன்னாங்க. போட்டவங்க எல்லாம் ரெண்டு வருஷத்திலே காலி. சரி தங்கமே தேவலாம் என்று மக்கள் அங்கே போனார்கள். ஆனா டாலர் கப,கப என்று புஷ்ஷின் புத்தி மீட்டர் மாதிரி கீழே போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தால் திரும்பவும் இப்ப பங்குச் சந்தைக்கு வாங்க என்கிறார்கள். ஆனா டாலர் நிலையாக நிக்காதபோது அமரிக்காவுக்கு நாம எப்படி நிரல், பொருள், ஆனந்தம் நல்லண்ணை எல்லாம் ஏற்றுமதி பண்ணி சம்பாதித்து சுபிட்சமாவது. அதனாலே பங்குச் சந்தைக்குப் போகாதீங்க, உங்க பளபள உடம்புக்கு ஆகாதுங்க என்று ஒரு சாரார். தேர்தல் முடியட்டும், தேனாறு பாயும் என்று மோடி, மஸ்தான்கள் சொன்னாலும், மழை வரணுமே. இல்லாட்டி, FMCG, வெள்ளைச் சரக்குப் பொருள்களெல்லாம் கிராமப் பின்னிலங்களிலே விக்கணும் என்றால், மைக்கிரோவேவ் வாங்கி எலிக்கறிதான் ஸ்கீவர்ல போட முடியும்.
எல்லாம் வல்ல எல்நினோ பெருமாளை எல்லோரும் சேவியுங்கள்.

ஆனாலும் பாருங்க, ஒருகாலத்திலே அலுமினியத்துக்கு ஏக மதிப்பு. பிரெஞ்சு அரச விருந்திலே மிகமிக உயர்குடியினருக்கு அலுமினியக் கோப்பைகளிலும் மற்றவர்களுக்கு சாதாரண வெள்ளிக் கோப்பைகளிலும் பரிமாறினார்கள். நாமோ இட்டிலியை வேகவைக்கக்கூட அலுமினியக் குக்கர் அல்ல, 'எவர்சில்வர்' குக்கர்தான் பரிசுத்தமான ஆவியைத்தருகிறது என்று நம்புகிறோம். எப்படியோ உவர்தாமிரக் குண்டான்களிடமிருந்து நம் மகளிர் மீட்சியடைந்துள்ளது ஒரு முன்னேற்றம்தானே. தாமிரம், அலுமினியம், வெள்ளி, தங்கம் என்று ஒருமாதிரி அனைவரும் மதிப்புப் போட்டு வைத்திருக்கும்போது, கடந்த இரண்டு வருடங்களாக பிளாட்டினம் விளம்பரம் நாளிதழ், வார இதழ் என்று ஆக்கிரமித்து உள்ளது. வெள்ளைக்காரன்கள் கலை உணவுக்கு சோள அவல், அமரிக்கப் பட்டாணி, பிஸ்த்தாப் பருப்பு இவற்றோடு பிளாட்டினத்தையும் இந்தியர்களுக்கு கற்றுத் தந்தே தீருவார்கள் போலிருக்குது. பழனி வைத்தியர்கள் பிளாட்டினப் பஸ்பம் ஒரு மாத உபயோகத்துக்கு ஸ்பெஷல் செட் 300 ரூ என்று விற்காமல் இருந்தால் போதும்.

சரிசரி ஒரிஜினல் தங்கபஸ்பம் எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

போகர்:

பேசுகிறேன் தங்கம்ஒரு பலம்தான் வாங்கிப்
பெலக்கவே தகடுசெய்து வில்லை யாக
வீசுகிறேன் நறுக்கிஅதன் மேலே கேளு
விருந்தான விலையரைத்துப் பொதிந்து நன்றாய்
தேசியுடன் கட்டிநூறு எருவில் போட்டால்
செப்பரிய தங்கபுடம் உருகி நீரும்
ஆசியாம் வியாதிகளுக் காகச் சொன்னேன்
அதில்முக்கால் புடம்போடப் பதமாம் நீறே.

புரிகிற மொழிதானே. தங்கத் தகடுகளை கருந்துளசி அரைத்துப் பொதியவைத்து நூறு எருவில் புடம்போட்டு .....

இதை கடமையாக தொடர்ந்து சாப்பிட்டால் எல்லாப் பிணிகளும் நீங்கும். உடல் பொன்போல் மின்னும் என்று சித்தர் சொல்கிறார்.
பாத்து செய்யுங்க, கிட்னி கழண்டுவிடும் என்று அல்லோபதி மருத்துவர் சொல்கிறார்.

தங்கத்திலே ஒரு குறை இருந்ததாலும் ...

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா
இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா ...

ஹூம்.