Friday, April 23, 2004

ஜொலிக்குது... ஜொலிஜொலிக்குது...

... என்று செயற்கைப் பாடினியாக சினேகா ஆடும் நினைவுதான் இன்றைக்குப் பூராவும். மத்தியானம் இரண்டுமணி சுமாருக்கு ஆரம்பித்த போக்குவரத்துக் கொடுநெரிசல் இரவு எட்டுமணியாகியும் இன்னும் தீரவில்லை. இங்கு சென்னையில் பனகல் பூங்காவைச் சுற்றி தென் உஸ்மான் தெரு, வட உஸ்மான் தெரு, வெங்கடரமணா தெரு, ஜிஎன் செட்டி தெரு என்று எல்லாத் தெருக்களிலும் கார்,மக்கள், பஸ், ஆட்டோ, மக்கள், வேன், போலீஸ், மக்கள், சைக்கிள், மக்கள்,கார், ஆட்டோ, மக்கள், மக்கள், என்று ஒரே ஆரவாரம். என்ன வென்று ஒரு போக்குவரத்துக் காவலரைக் கேட்டேன். "அதுசார் இன்னிக்கு அக்ஷயத்ருதியை, அதுக்காக தங்கம் வாங்குராங்க" என்று ஏதோ சொன்னார். என்னடா தாத்தா இப்படியெல்லாம் ஒன்றும் சொல்லித்தரலையே என்று வீட்டுக்கு ஓடிவந்து சர்வமுகூர்த்தப் பஞ்சாங்கத்தப் பார்த்தால், கடலிலோ ராட்சஷ அலைகள், ஆனால் நாப்பது நாழிகைக்கே திருதியை முடிந்தது என்றிருக்கிறது. இன்னும் மக்கள் தங்கம் வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இன்னிக்கு தங்கம் வாங்கினா ஐஸ்வர்யம் வீட்டிலே பொங்குமாம். வெ.ஆ. மூர்த்தி மாதிரி "அதுக்காக, இப்ப்ப்பிடியா?" என்று கேட்கலாம் போலிருக்கிறது. போன வருஷம் இன்னொரு ஏதோ ஒரு நாளிலே (தீபாவளி சமயத்திலே) பெங்களூரில் கமர்ஷியல் தெருவில் குடும்பத்தோடு இப்படி தங்கம் வாங்கும் நாளில் மாட்டிக் கொண்டேன். நகையே எப்போதும் போடாத என் மனைவியும் அந்த ஜனஜாத்திரையைப் பார்த்து, ஏதாவது கொஞ்சம் நாமும் வாங்கலாமா என்று கேட்க சரி பாக்கலாம் என்று ஒரு புகழ் பெற்ற பழைய கடை ஒன்றில் நுழைந்தது... போதும்டா சாமி. கோலாரில் தங்கச் சுரங்கத்துக்கு உள்ளே ஆயிரம் அடி சென்றிருக்கிறேன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அங்கே ராபர்ட்சன் பேட்டைத் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டாக உழைத்து உழைத்து மண்ணைப் பிழிந்து தங்கம் தனிப்படுத்தி எல்லாம் முடிந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னாலேயே ஒருடன் தனிமமண்ணிலிலிருந்து ஐந்து கிராம் தங்கம்தான் கிடைக்கும். இப்போது ஏதாவது டைனொசார் எலும்புத்துகள்தான் கிடைக்கும். அத்தனை ஆழம் போயாச்சு. அந்தக் கடையில் ஏதோ ஒரு தங்கத் தகடுக் காசு வாங்கிக்கொண்டு ஓடி வந்து விடலாமென்று போனால், அதற்கு கோலாரே தேவலாம் போலாகிவிட்டது. ஆமா எதுக்கு மக்கள் இன்னும் தங்கம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்?

தங்கத்தின் மதிப்பு ஒரு பதினைந்து வருடங்களாக உலகச் சந்தையில் குறைந்து கொண்டேதான் வருகிறது. நம்ப இணையக் குமிழ் வெடிப்பதற்கு முன்னால், எல்லாவிதமான முதலீட்டு பரிவுரையாளரும் தங்கம் வாங்காதீங்க, பணத்தை பங்குச் சந்தையிலே போடுன்னாங்க. போட்டவங்க எல்லாம் ரெண்டு வருஷத்திலே காலி. சரி தங்கமே தேவலாம் என்று மக்கள் அங்கே போனார்கள். ஆனா டாலர் கப,கப என்று புஷ்ஷின் புத்தி மீட்டர் மாதிரி கீழே போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தால் திரும்பவும் இப்ப பங்குச் சந்தைக்கு வாங்க என்கிறார்கள். ஆனா டாலர் நிலையாக நிக்காதபோது அமரிக்காவுக்கு நாம எப்படி நிரல், பொருள், ஆனந்தம் நல்லண்ணை எல்லாம் ஏற்றுமதி பண்ணி சம்பாதித்து சுபிட்சமாவது. அதனாலே பங்குச் சந்தைக்குப் போகாதீங்க, உங்க பளபள உடம்புக்கு ஆகாதுங்க என்று ஒரு சாரார். தேர்தல் முடியட்டும், தேனாறு பாயும் என்று மோடி, மஸ்தான்கள் சொன்னாலும், மழை வரணுமே. இல்லாட்டி, FMCG, வெள்ளைச் சரக்குப் பொருள்களெல்லாம் கிராமப் பின்னிலங்களிலே விக்கணும் என்றால், மைக்கிரோவேவ் வாங்கி எலிக்கறிதான் ஸ்கீவர்ல போட முடியும்.
எல்லாம் வல்ல எல்நினோ பெருமாளை எல்லோரும் சேவியுங்கள்.

ஆனாலும் பாருங்க, ஒருகாலத்திலே அலுமினியத்துக்கு ஏக மதிப்பு. பிரெஞ்சு அரச விருந்திலே மிகமிக உயர்குடியினருக்கு அலுமினியக் கோப்பைகளிலும் மற்றவர்களுக்கு சாதாரண வெள்ளிக் கோப்பைகளிலும் பரிமாறினார்கள். நாமோ இட்டிலியை வேகவைக்கக்கூட அலுமினியக் குக்கர் அல்ல, 'எவர்சில்வர்' குக்கர்தான் பரிசுத்தமான ஆவியைத்தருகிறது என்று நம்புகிறோம். எப்படியோ உவர்தாமிரக் குண்டான்களிடமிருந்து நம் மகளிர் மீட்சியடைந்துள்ளது ஒரு முன்னேற்றம்தானே. தாமிரம், அலுமினியம், வெள்ளி, தங்கம் என்று ஒருமாதிரி அனைவரும் மதிப்புப் போட்டு வைத்திருக்கும்போது, கடந்த இரண்டு வருடங்களாக பிளாட்டினம் விளம்பரம் நாளிதழ், வார இதழ் என்று ஆக்கிரமித்து உள்ளது. வெள்ளைக்காரன்கள் கலை உணவுக்கு சோள அவல், அமரிக்கப் பட்டாணி, பிஸ்த்தாப் பருப்பு இவற்றோடு பிளாட்டினத்தையும் இந்தியர்களுக்கு கற்றுத் தந்தே தீருவார்கள் போலிருக்குது. பழனி வைத்தியர்கள் பிளாட்டினப் பஸ்பம் ஒரு மாத உபயோகத்துக்கு ஸ்பெஷல் செட் 300 ரூ என்று விற்காமல் இருந்தால் போதும்.

சரிசரி ஒரிஜினல் தங்கபஸ்பம் எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

போகர்:

பேசுகிறேன் தங்கம்ஒரு பலம்தான் வாங்கிப்
பெலக்கவே தகடுசெய்து வில்லை யாக
வீசுகிறேன் நறுக்கிஅதன் மேலே கேளு
விருந்தான விலையரைத்துப் பொதிந்து நன்றாய்
தேசியுடன் கட்டிநூறு எருவில் போட்டால்
செப்பரிய தங்கபுடம் உருகி நீரும்
ஆசியாம் வியாதிகளுக் காகச் சொன்னேன்
அதில்முக்கால் புடம்போடப் பதமாம் நீறே.

புரிகிற மொழிதானே. தங்கத் தகடுகளை கருந்துளசி அரைத்துப் பொதியவைத்து நூறு எருவில் புடம்போட்டு .....

இதை கடமையாக தொடர்ந்து சாப்பிட்டால் எல்லாப் பிணிகளும் நீங்கும். உடல் பொன்போல் மின்னும் என்று சித்தர் சொல்கிறார்.
பாத்து செய்யுங்க, கிட்னி கழண்டுவிடும் என்று அல்லோபதி மருத்துவர் சொல்கிறார்.

தங்கத்திலே ஒரு குறை இருந்ததாலும் ...

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா
இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா ...

ஹூம்.

Sunday, April 11, 2004

வெங்கட்ரமணனின் "குவாண்டம் கணினி" -2

பெரும்பாலும் திண்ணையில் எழுதிய கட்டுரைகளையும் ஓரிரு இதழ் கட்டுரைகளையும் அடக்கியது இத்தொகுப்பு.

முகப்புக் கட்டுரையான "காமம் செப்பாது கண்டது மொழிமோ" இந்நூலை இதன் பயன்படு சூழலில் வைக்க ஏதுவாக எழுதப்பட்ட நல்ல கட்டுரை. அனைவரும் அறிந்த "கவிதை மனம்" போல "அறிவியல் மனம்" கூட மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்ததுதான் எனும் கருத்தை விவரிப்புடன் சொல்லுகிறது. இது திரும்பத் திரும்ப நாம் நினைவூட்டிகொள்ள வேண்டிய ஒரு கருத்தாகும். நாம் அனைவரும் நம் இளைமையில் ஒரு கவிதையாவது காதலைப் பற்றியோ புரட்சியைப் பற்றியோ எழுதிவிடுகிறோம். இது ஒரு இயல்பான செயலாகத்தான் நமக்குப் படுகிறது. இதைப்போலத்தான் நமக்குப் பிடிக்காத ஆசிரியரை கேலிச்சித்திரம் தீட்டுதல் போன்றவையும். இதே வகையில் ஒரு சின்ன "அறிவியல்" கண்டுபிடிப்பையாவது நாமும் செய்திருப்போம். அதை யாரும் அப்படி உணர்வதில்லை. அந்த சிந்தனைப்போக்கை நாம் வளர்த்தெடுப்பதில்லை. நாளடைவில் அந்த அம்சமே சிந்தனைத்தளத்திலிருந்து மறைந்துவிடுகிறது. இதுபோலவே அறிவியல் துறையில் நுழைபவரும் மற்ற கலைத் துறைகளில் மனஓட்டத்தை மட்டுப்படுத்தி அவை நமக்கு அன்னியமானவை என விலக்குவது உண்டு. இது நம் கல்வி கற்பிக்கும் முறையிலும், குமுகாயச் சிந்தனை முறையிலும் உள்ளடங்கியிருக்கும் ஒரு பாவனையே அன்றி மனிதனின் இயல்பு அல்ல.

கதிரவனைச்சுற்றி கோள்களின் இயக்கத்தை அறிவியல் கண்டறிந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறிவியல் செயல்படும் விதத்தை, அது கடக்கும் படிகளை, கருதுகோள்கள் அறிவியல் விதிகளாகவும் தேற்றங்களாகவும் பரிணமிக்கும் முறையை விளக்குகிறார். படங்களுடன் நல்ல விளக்கம். ஒக்காம் (OCCAM)இன் கத்தி எப்படி அறிவியல் கருத்துப் புலத்தில் பயனற்ற தொங்குசதைகளை அறுத்தெறிந்து ஒரு அறிவியல்க் கோட்பாட்டை சரியானதாகவும், கறாரானதாகவும், எளிமையானதாகவும் வைத்திருக்க உதவுகிறது என்பதையும் தெரிவிக்கிறார். மற்ற கருத்துக் களன்களை ஒப்பு நோக்கும்போது அறிவியல் ஏன் இப்படி அசாதாரணமாக செயல்திறனுடன் இருக்கிறது (the unreasonable effectiveness of science) என்பதற்கு ஒக்காமின் கத்தி ஒரு முக்கியக் குறியாகும். அதே போல் அறிவியல் முற்று முடிபான உண்மைகளைக் கூறவில்லை; அது ஒரு வளரும், கூட்டிப் பொருள்கொள்ளும் ஒரு இயக்கம் என்பதும் சரிதான்.

அறிவியலாரும் மனிதரே எனவே அறிவியலும் மோசடியும் என்று ஒரு சிறு விவரணம் கொடுத்துள்ளார். அறிவியலும் அறம்/மதம் பற்றி ஒரு (ஒரே) பக்கம். இதில் வெங்கட் கீழை நாட்டு மதங்கள் அன்றாட வாழ்வில் அதிகமாக கட்டுப் பாடுகளை விதிக்காததால் அறிவியல் கோட்பாடுகள் இம்மதங்களாடு மிகவும் பிணக்கு கொள்ள வழியில்லை என்பதுபோல் ஒரு கருத்தை சொல்லுகிறார். காலத்தைப் பொருத்து சீர்திருத்தவாதிகள் வந்து மதக் கட்டுகளை நெகிழ்வூட்டிச் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய அசீவக மத ஏரணங்களைப் பார்த்தால் இந்திய அறிவியலின் இன்னொரு முகம் தெரியலாம்.

இறுதியாக இக்கட்டுரையில் அறிவியலும் அழகியலும் என்ற ஒரு நல்லதோர் தலைப்பில் சிறு பகுதி எழுதியுள்ளார். இது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும். சிந்தித்துப் பார்த்தால் நிறைய ஏமாற்றங்களையும் தரவல்ல ஒரு இழை. பின்னால் முயற்சிக்கிறேன்.

இதுமுதல் கட்டுரையைப் பற்றிய ஒரு நோக்குதான். இதிலிருந்தே வெங்கட் தொட முயற்சித்திருக்கும் வீச்சு தென்படுகிறது. வெங்கட்டின் சரளமான சொல்லிப்போகும் நடை ஒரு மிகநல்ல அம்சம் என சொல்லத்தேவையில்லை.

Saturday, April 10, 2004

வெங்கட்ரமணனின் "குவாண்ட்டம் கணினி " -1

வெங்கட்ரமணன் ஒரு சரியான புத்தகத்தை தக்க தருணத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இக்காலத்தில் அறிவியல் அறிஞர்கள் முதலில் கவலைப்படுவது கடந்த நூற்றாண்டில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜவஹர்லால் நேரு போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களால் கட்டமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனங்கள் கேட்பாரற்றுப் போய்விடுமோ என்பதுதான். இராமன், சாஹா, சாராபாய், தாவன் போன்ற ஆளுமை மிக்க அறிவியலாளர் இன்று இல்லை. நிர்வாகங்களை அறிவியலாளர் நிர்வாகிக்காமல் தொழில்முறை நிர்வாகிகள் நடாத்துகிறார்கள். அரசியல் பல வழிகளிலும் குறுக்கிடுகிறது. கடந்த நூற்றாண்டின் 50/60/70 களில் இருந்த, அறிவியல் சார் துறைகளைப் பட்ட பொதுவான ஆராய்ச்சிகள் குறைந்து 80/90 களில் குறிகளை எட்டும் முனைப்பு மிக்க (goal oriented) ஆராய்ச்சிகள் பண உதவி பெறுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளை தொழில்நுட்பமாக சந்தைப்படுத்தப் படாவிட்டால் அவற்றிற்கு மதிப்பே கிடையாது.

கடந்த 20 ஆண்டுகளினும் பார்க்க அறிவியல் சார் துறைகளில் மாணாக்கர் முன்போல ஆர்வம் காட்டுவதில்லை. ஒருவர் விட்டுச்சென்றதை பின்னெடுத்துச் செல்ல மாணாக்கர் இல்லை. ஆய்வகங்களில் இளம் ஆய்வாளர் இல்லை. இளைஞர் எல்லோரும் கணினியைத் தொழுதுண்டு பின்செல்வோராகிவிட்டதால் அறிவுத்துறைகள் அனைத்திலும் தன்முனைப்பு இல்லாத, ஊதியத்திற்காக வருவோரைக் கொண்டே ஆராய்ச்சிகளை செய்யவேண்டி உள்ளது. இவ்வாறு அறிவியலாளரின் கவலைகள் மிக துயரம் தரக் கூடியன. இந்நூற்றாண்டின் துவக்கம் இந்திய அறிவியலுக்கு உவப்பானதாக இல்லை.
அணுகுண்டு வெடிப்பதும், கண்டம் பாயும் வெடிக்குச்சிகள் பெருக்குவதும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்த்தெடுத்த விதைகளின் விருட்சங்களை அறுவடை செய்வதுதான். இன்றைக்கு ஒளிர்கிறது என்றால் அகலும், நெய்யும், திரியும், பொறியும் யார் உழைப்பில் வந்தது?

இந்த நிலைமையில் இந்தியத் தாய்மொழிகளில் அறிவுப் புலங்களனைத்தையும் அளிப்பதே நாட்டின் பெரும்பான்மை இளைஞரை இத்திசையில் ஊக்குவிக்கும் ஒரே வழி. அதற்காக ஒவ்வொரு மொழியினரும் முயலவேண்டும். கன்னடத்தின் சிவராம கரந்த போல தமிழில் இலக்கியக் காரர்கள் செயல்பாடு இதற்கு மிகத்தேவையான ஒன்று.

ஆனால் நம் வெங்கட்ரமணன் இலக்கியக்காரர் அல்ல (ஆகிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது). தொழில்முறை இயல்பியல் நிபுணர். ஆனால் எல்லாத்துறைகளைப் பற்றியும் சரளமாக எழுதுகிறார். தமிழ் மொழியில் அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த கட்டுரைகளைப் பலர் எழுதியுள்ளார்கள். பெ.நா. அப்புசுவாமி, கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா, பெ. தூரன், மணவை முஸ்தபா, சுஜாதா என ஒரு நல்ல பட்டியலே உள்ளது. அதுதவிர, 'கலைக்கதிர்' இல் எழுதிய பல பேராசிரியர்களும் வெளிஉலகுக்குத் தெரியாமலே இருந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது வெங்கட்டும் சேர்ந்திருக்கிறார்.


(இன்னும் ...)