Sunday, April 11, 2004

வெங்கட்ரமணனின் "குவாண்டம் கணினி" -2

பெரும்பாலும் திண்ணையில் எழுதிய கட்டுரைகளையும் ஓரிரு இதழ் கட்டுரைகளையும் அடக்கியது இத்தொகுப்பு.

முகப்புக் கட்டுரையான "காமம் செப்பாது கண்டது மொழிமோ" இந்நூலை இதன் பயன்படு சூழலில் வைக்க ஏதுவாக எழுதப்பட்ட நல்ல கட்டுரை. அனைவரும் அறிந்த "கவிதை மனம்" போல "அறிவியல் மனம்" கூட மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்ததுதான் எனும் கருத்தை விவரிப்புடன் சொல்லுகிறது. இது திரும்பத் திரும்ப நாம் நினைவூட்டிகொள்ள வேண்டிய ஒரு கருத்தாகும். நாம் அனைவரும் நம் இளைமையில் ஒரு கவிதையாவது காதலைப் பற்றியோ புரட்சியைப் பற்றியோ எழுதிவிடுகிறோம். இது ஒரு இயல்பான செயலாகத்தான் நமக்குப் படுகிறது. இதைப்போலத்தான் நமக்குப் பிடிக்காத ஆசிரியரை கேலிச்சித்திரம் தீட்டுதல் போன்றவையும். இதே வகையில் ஒரு சின்ன "அறிவியல்" கண்டுபிடிப்பையாவது நாமும் செய்திருப்போம். அதை யாரும் அப்படி உணர்வதில்லை. அந்த சிந்தனைப்போக்கை நாம் வளர்த்தெடுப்பதில்லை. நாளடைவில் அந்த அம்சமே சிந்தனைத்தளத்திலிருந்து மறைந்துவிடுகிறது. இதுபோலவே அறிவியல் துறையில் நுழைபவரும் மற்ற கலைத் துறைகளில் மனஓட்டத்தை மட்டுப்படுத்தி அவை நமக்கு அன்னியமானவை என விலக்குவது உண்டு. இது நம் கல்வி கற்பிக்கும் முறையிலும், குமுகாயச் சிந்தனை முறையிலும் உள்ளடங்கியிருக்கும் ஒரு பாவனையே அன்றி மனிதனின் இயல்பு அல்ல.

கதிரவனைச்சுற்றி கோள்களின் இயக்கத்தை அறிவியல் கண்டறிந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு அறிவியல் செயல்படும் விதத்தை, அது கடக்கும் படிகளை, கருதுகோள்கள் அறிவியல் விதிகளாகவும் தேற்றங்களாகவும் பரிணமிக்கும் முறையை விளக்குகிறார். படங்களுடன் நல்ல விளக்கம். ஒக்காம் (OCCAM)இன் கத்தி எப்படி அறிவியல் கருத்துப் புலத்தில் பயனற்ற தொங்குசதைகளை அறுத்தெறிந்து ஒரு அறிவியல்க் கோட்பாட்டை சரியானதாகவும், கறாரானதாகவும், எளிமையானதாகவும் வைத்திருக்க உதவுகிறது என்பதையும் தெரிவிக்கிறார். மற்ற கருத்துக் களன்களை ஒப்பு நோக்கும்போது அறிவியல் ஏன் இப்படி அசாதாரணமாக செயல்திறனுடன் இருக்கிறது (the unreasonable effectiveness of science) என்பதற்கு ஒக்காமின் கத்தி ஒரு முக்கியக் குறியாகும். அதே போல் அறிவியல் முற்று முடிபான உண்மைகளைக் கூறவில்லை; அது ஒரு வளரும், கூட்டிப் பொருள்கொள்ளும் ஒரு இயக்கம் என்பதும் சரிதான்.

அறிவியலாரும் மனிதரே எனவே அறிவியலும் மோசடியும் என்று ஒரு சிறு விவரணம் கொடுத்துள்ளார். அறிவியலும் அறம்/மதம் பற்றி ஒரு (ஒரே) பக்கம். இதில் வெங்கட் கீழை நாட்டு மதங்கள் அன்றாட வாழ்வில் அதிகமாக கட்டுப் பாடுகளை விதிக்காததால் அறிவியல் கோட்பாடுகள் இம்மதங்களாடு மிகவும் பிணக்கு கொள்ள வழியில்லை என்பதுபோல் ஒரு கருத்தை சொல்லுகிறார். காலத்தைப் பொருத்து சீர்திருத்தவாதிகள் வந்து மதக் கட்டுகளை நெகிழ்வூட்டிச் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய அசீவக மத ஏரணங்களைப் பார்த்தால் இந்திய அறிவியலின் இன்னொரு முகம் தெரியலாம்.

இறுதியாக இக்கட்டுரையில் அறிவியலும் அழகியலும் என்ற ஒரு நல்லதோர் தலைப்பில் சிறு பகுதி எழுதியுள்ளார். இது மிக முக்கியமான ஒரு கேள்வியாகும். சிந்தித்துப் பார்த்தால் நிறைய ஏமாற்றங்களையும் தரவல்ல ஒரு இழை. பின்னால் முயற்சிக்கிறேன்.

இதுமுதல் கட்டுரையைப் பற்றிய ஒரு நோக்குதான். இதிலிருந்தே வெங்கட் தொட முயற்சித்திருக்கும் வீச்சு தென்படுகிறது. வெங்கட்டின் சரளமான சொல்லிப்போகும் நடை ஒரு மிகநல்ல அம்சம் என சொல்லத்தேவையில்லை.

No comments: