தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.
1. நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.
2. நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள் குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தை வழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.
3. நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்கு தன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்க வேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.
4. நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனித வாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும் சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை, இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.
5. நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன. பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும் கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.
6. நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய, தூய்மையான சிந்தனைகள் கொண்ட,
பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன், சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்
வழங்குகிறது.
முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின்
இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)
8 comments:
RKK ஆத்திகர்கள் சொல்வதொரு பக்கம் இருக்கட்டும்; ஆனால், இது வேறு சிந்தனை.
அருள், தொடர்புள்ள எனது கருத்துக்கள் இங்கே
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000307.html
தொடர்பற்ற என்னுடைய கிறுக்குத்தனம் இங்கே :)
http://www.tamillinux.org/venkat/myblog/archives/000308.html
அன்புடன் - வெங்கட்
நல்ல குறிப்புகள் அருள். நீங்கள் குறிப்பிட்ட 5வது குறிப்பு மிகமுக்கியமானது. இதை மனிதன் பார்த்தாலே போதும் விடுதலை அடைந்துவிடுவான். ஏனெனில் உலகின் நடக்கும் குற்றங்களுக்கும் வன்முறைக்கும் அடிப்படைக் காரணமே இந்த்க் குற்ற உணர்ச்சிதான். மதம் மனிதனுக்கு இழைத்திருக்கும் ஆகப் பெரிய கேடு இதுதான்.
வெங்கட்
எங்க ஆளையே காணோம்? உங்கள் குறிப்பையும் பார்த்தேன். நாத்திகமும் ஆத்திகமும் ஒரே புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. தத்துவ தளத்தில் இரண்டும் இரண்டு கருதுகோள்கள் தானே. இரண்டில் எதையும் "நிரூபித்து" விடமுடியாது என்பதுதானே நிஜம். ஆனால் நமது நாட்டின் தத்துவப் புலத்தில் ஆத்திகம் "தர்க்கத்தினாலேயே" வென்றுவிட்டதாகவும், நாத்திகம் தோற்றுப் போய்விட்டதாகவும் ஒரு "சரித்திரம்" கட்டப் பட்டுள்ளது. அதனால்தான் இதை ஆரம்பித்தேன். நமது நாட்டின் நாத்திக பரம்பரை மிகப்பழையது. விரிவான கதை இது அல்லவா?. இன்னும் தொடரலாம். வாங்க.
தங்கமணி,
நன்றி. அதில் ஒரு வரி மறந்துவிட்டேன். நாத்திகம் மனிதனுக்கு அவன் மானுடத்தை மீட்டுத்தருகிறது.
இன்னும் தொடரலாம் வாருங்கள்
நான் ஆத்திகம் நாத்திகம் இரண்டிற்கு நடுவிலும் தொங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. ஆரவாரமற்ற ஆத்திகம் பிடித்திருக்கிறது. இயற்கையின் நளினத்தையும், சீற்றத்தையும் பார்க்கும்போது, என்னைவிட பெரிய சக்தி ஒன்று இயங்குகிறது என்று நினைக்கிறேன். அதே சமயம், மனிதர்களை, ஜீவராசிகளை முக்கியமாகக் கருதும் நாத்திகம் பிடித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினியில் வாடும்போது அனுஷ்டானங்கள், பூஜை புனஸ்காரம், அபிஷேகம் ஆராதனை என்று வீணடிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
1008 சங்காபிஷேகம், 10,008 சங்காபிஷேகம் என்று உணவுப்பொருட்களை வீணடித்து ஊருக்கு வேஷம்போடுவது வெறுப்பாக இருக்கிறது. இந்த சங்கதி எல்லாம் வேணாம்'னு சொல்லிச்சொல்லி வாங்கிக்கட்டிக்கிட்டதுதான் மிச்சம். If you want to communicate iwth God, why dont you do it quietly without any fanfare'னு சொன்னா 'ஙெ'னு பார்க்கிறாங்க.
நல்ல கட்டுரை. ஒவ்வொரு பாயிண்டையும் விரிவாக எழுதலாம்னு நினைக்கிறேன்.
அன்புடன்,
சந்திரமதி கந்தசாமி
(பி.கு: அடிக்கடி எழுதுங்க. :) )
நன்றி மதி. எல்லாரும் 'தொங்கிக்கொண்டுதான்' இருக்கிறோம். வெளியே எப்படி எப்படியோ புரிந்தது கொள்கிறார்கள்.
அருள் - நாத்திகம் எங்கே தோற்றுப்போயிற்று. முடியாட்சியில் வேண்டுமானால் அது சாத்தியப்பட்டிருக்கலாம். மக்களாட்சியில் நாத்திகமழிக்கும் மதவாதிகளுக்கும் ஆத்திகம் அழிக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிரந்தர இடம் கிடையாதல்லவா?
ஸார்வாகமும், லோகாயதமும் நம்முடைய பரம்பரைச் சொத்து என்று சொல்லும்பொழுது அறிவுத்தேடலை அடிப்படையாகக் கொண்ட எல்லோருக்கும் பெருமிதம் வரவேண்டும். - venkat
வெங்கட்
மிகச் சரி. நமது நாத்திக மரபை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வெகுநாளைக்கு முன் கேட்ட எங்கே "இந்திய" விஞ்ஞானம் என்ற கேள்விக்கு நம்மால் பதில் காண முடியாது. அதனால் தான் "நாத்திகம் பயில்" என்று சொன்னேன். நாம் தனிதனியாக ஆத்திகரா நாத்திகரா என்பதெல்லாம் இதற்கு தொடர்பே இல்லை. அவரவர்க்கு அதது. (டிப்பு எக்ஸ்ப்ரெஸ் இன்னும் ஒருமணிநேரத்தில். மூன்று நாள் கழித்து தொடர்வோம்).
Post a Comment