Tuesday, June 22, 2004

எதிர்க் கணங்கள்

தமிழில் சில விடயங்கள் பாடு பொருளாய் அமைவதை நாம் அதிகம் பார்த்ததில்லை. எதிர்காலப் புனைகருத்துக்களை இடைஅமைத்து இயற்றுதல் அவற்றில் ஒன்று. அந்த வழியில் என் சிறு முயற்சி இது. இதை 'மரபு' -க்- 'கவிதை' என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். மரபும் கவிதையும் இயல்பாக வரப்பெற்றவர்கள் முயன்றால் அழகாக இருக்கும். (இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்கும்). ஒரு வெளிக் கப்பலோட்டியின் மனத்திலெழுமாறு அமைந்த பாடல்.எதிர்க் கணங்கள்
--------------

உறைஉயிர்க்கலம் செலுத்திவிண்
மீன்திரள் விதைத்தபோதும்
தரைஅகழ்களம் திருத்திபல
மறைநகர் சமைத்தபோதும்

ஒளிதவழ்பாய் விரித்துஇடை
வெளிப்பாழ் கடந்தபோதும்
பிழைகற்று தளைவிட்டுசெம்
மானுடம் கிளைத்தபோதும்

நனவறும்மதி பெற்றுஎதிர்க்
கணம்பல தெளிந்தபோதும்
துயரறுகதி கண்டுமயர்த்
திசைதப்பி வலித்தபோதும்

துணைவரும் நிழலன்றிஓர்
பிணையென்றே துமிலமே
அழல்பொழி சுடலைமிசைபெருங்
களிநட மாடும்சிவனே


--------------------------------------------------
இணைச் சொற்கள்/சொற்றொடர்கள்
----------------------------

உறைஉயிர்கலம் - cryogenic spaceships
விண் மீன்திரள் - galaxies
தரைஅகழ்களம் - subterran zone
ஒளிதவழ்பாய் - light sails
இடை வெளிப்பாழ் - intergalactic space

----------------------------------------------------

Wednesday, June 16, 2004

ரா. ரா. சோழன்


"நம்பி, இனி செம்மொழியில்தான் பேசவேண்டுமாமே.
இக் கொடுமா வேட்டைக்கு என்ன சொல்லுவதோ?"

"அட. நீ காணவில்லையா? தண்ட நாயகர் அரசாணை அனுப்பியிருந்தாரே.
இனி டைனோசார் வேட்டை என கூறவேண்டுமாம்."

Friday, June 11, 2004

கவிதைகள்

கவிதைகள் (*)
--------


உன் கவிதையை நீ எழுதுகிறாய்
அவன் கவிதையை அவன் எழுதிவிட்டான்
இவன் கவிதையை இவன் எழுதுவான்

என் கவிதையை நான் எழுதாமல்
ஊர்உறங்குமிப் பின்னிரவில்
சாலைதடதடக்க முன்பின்னாய்
ரோடுரோலரில் உருளுகிறேன்

சோளப்புலத்தில் பறவையோட்டி
பருத்திக்காட்டில் பிஞ்சுபொறுக்கி
எத்தனை நாட்கள் திரிந்தோம்

ஒரு நல்ல நட்பை
ஒரு நல்ல கவிதை
பிரித்துவிட்டது பார்த்தாயா இன்று-------------
(*) 'உன் கவிதையை நீ எழுது' - பசுவைய்யா

Monday, June 07, 2004

நூற்றாண்டுக் காட்சிகள் -1

1.

சுற்றிலும் நிகழ் காலம்
என்ன நினைத்துக் கொய்கின்றார்
அவன் இரு கைகளையும்

படை உண்டு
நிறம் தெறித்த சிகப்பே போல்
வானம் பொழியும் இக்கதிர்கள்

எட்டு எண்ணி முடிக்கும்முன்
அற்று வீழும் கரம்
மற்றதர்க்கு விரையும் செந்நாய்கள்.

Friday, June 04, 2004

முன்னோட்டம் வழங்கு

நிரல்தரு மதலையோரே, நண்பர் பாரா வலைப்பதிவு கண்டு இவண்வந்து தெளிவீர்.
நாள்செயல் தொகுப்பின் முன்னோட்டம்:

( (திங்கள் நம்மவன் நண்பன் துணைவன் எதிரி ஏய்ப்பன் வஞ்சன் வாய்மையன் கொஞ்சன் கெஞ்சன் )
(செவ்வாய் கலை எழுத்து கொலை கோப்பு வலை உலை உழவு களவு விலை )
(புதன் கத்தரித்துஒட்டு கருத்துப்பொறுக்கு வெல்லும்வழிசேர் வெருட்டிப்பிழை
அண்டிச்சமன்செய் ஆதரவுதவிர் பயன்பலகூறு இயல்மனம்மற ஈகைகாட்டிவை )
(வியாழன் அறிவியல் துறவியல் கரவியல் தெருவியல் விதியியல் சதியியல் மதியியல் ரதியியல் கதியியல்)
(வெள்ளி அறியாதவைபேசு அறிந்தவைகூசு மறந்தவைபோல்வாழ் மாற்றோர்வழிஇகழ் தெளிந்தவைமறை
தேறாதனபரப்பு எளியோர்வழக்கழி ஏனையோர்வினைசெய் அயல்கிளைசேர் )
(சனி தேசம்சுரண்டு தெற்கிருந்துவாழ் நடிகர்மனம்பயில் நாடுதாவிஆள் கொடிகொண்டுதட்டு
கோடிகள்பதுக்கு சுற்றம்உயர்த்து சூழல்நசி செப்புவதுசெயல்மற)
)

நிரல்தரு மதலையர் மேற்புகன்ற சொற்றொடர் அஃதுபோன்றே கம்பைல் செயும்வித்தை கற்றறிந்தீராயின் தனிமடல்

தொடர்பேற்று சர்வர்சைடு பணியொன்று வழங்குவன் அடியேன்.