அரிசி, ரவை, கோதுமை, சர்க்கரை, பால் என்று ஒரு தமிழன் உயிர்வாழத் தேவையான எதுவும் கடைகளில் கிடைக்காத காலம். அப்போது எல்லா மளிகைக்கடைக் காரரும் பதுக்கல்காரர்கள்தாம். இப்போது நாம் எல்லோரும் கையூட்டு அளிப்போராக இல்லையா, அதுபோலத்தான். ஆனால் சத்துணவுக்கூடங்களுக்கு அமெரிக்க உதவித்திட்டம் இருந்ததால் சில பண்டங்கள் மாதத்தவணைகளில் வரும். எங்கள் தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் இருவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு (15 கி.மி) சைக்கிளில் சென்று மூட்டைகளையும் எண்ணெய் டின்களையும் கொண்டு வருவார்கள். அதைவைத்து செய்யக்கூடிய ஒரே உணவு உப்புமாதான்.
பண்டம்: பன்னாட்டு பகலுணவு உப்புமா
-----------------------------------
(ஐம்பது கிராமிய, உழைக்கும் மக்களின் சிரார்களுக்கு).
தேவையான பொருட்கள்:
--------------------------------------
1. பர்கர் ரவை என்றழைக்கப் படும் உடைத்த கோதுமை - ஐந்து படி
2. சோயா எண்ணெய் - கால் படி
3. csm மாவு என்றழைக்கப் படும் சத்துமாவு - அரைப்படி
4. சின்னவெங்காயம், கடலைப் பருப்பு (ஒரு பிடி),
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, (ஒரு பிடி)
இஞ்சி (ஒரு துண்டு)
ஊசி பச்சை மிளகாய் (இருபது)
5. தேவையான அளவு நீர், உப்பு.
செய்முறை
-----------
ஒன்றாம், இரண்டாம் ரேங்க் வாங்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர் இருவரையும் எட்டு நாற்பது இறைவணக்கம் முடிந்தவுடன் சமையலறைக்கு விரட்டிவிடவும். அவர்கள் இருவரும் சமையலறையை சுத்தம் செய்து, அடுப்பின் சாம்பல் வழித்துக் கொட்டி, தென்ன ஓலை, பருத்தி மார், வரட்டி, விறகுத்துண்டங்கள் எல்லாம் சேர்த்துவைக்க முக்கால் மணிநேரம் ஆகும். இருவரும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே கண்ணில் நீர்வழிய வெங்காயத்தை உரித்து (வெங்காயம்னாலே அப்போது சின்ன வெங்காயம் தாங்க. இப்போது வெங்காயம் என்றழைக்கப்படும் பெரிய வெங்காயம், பல்லாரி வெங்காயம் அன்று அழைக்கப் படும். கிராமங்களில் கிடைக்காது. டவுனுக்குத்தான் போய் வாங்க வேண்டும். பீன்ஸ், காரட் போன்ற 'மலைக்' காய்களும் தான்) , மிளகாய், இஞ்சி அறுத்து வைக்க இரண்டு பீரியட் முடிந்துவிடும். இடைவேளை தானே. அப்போது போய் ஆசிரியரக் கூப்பிட்டால் அவர் வந்து, அடுப்பில் எல்லாம் அடுக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி, வரட்டியை பற்றவைத்து விட்டுப் போய்விடுவார்.
சிறுவர்கள் இருவரும் அந்தப் பெரிய குண்டானை அடுப்பில் ஏற்றி, சோயா எண்ணெய்யை ஊற்றவேண்டும். எண்ணெய் காய்ந்து வாசம் வந்தவுடன் ( அந்தச் சோயா எண்ணெய் சும்மா முகர்ந்தாலே குமட்டும். காய்ந்தவுடன் அதன் சுகந்தமே தனி) கடுகைப் போட்டு வெடித்து அடங்கிய உடன், கடலைப் பருப்பைப் போட்டு மரத்துடுப்பால் மெல்லக் கிண்ட வேண்டும். பிறகு மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி என்று அதே வரிசையில் ஒவ்வொன்றாகப் போட்டு அது வணங்கிய உடன் அடுத்ததைப் போடவேண்டும். எல்லாம் வெந்ததும் ரெண்டுவாளித் தண்ணீர் ஊற்றிவிட்டால் இரு பயல்களும் திரும்பவும் கொஞ்சநேரம் கதையளக்கலாம். (இப்போது நானும் 'ம' வும் மெல்லத்துடுப்பை வலித்து, கடலைப் பருப்புகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி தின்றுகொண்டே, (முதலில் எண்ணெயில் வறுபட்டு பின் வெந்நீரில் பாதிவெந்து அதன் ருசியே தனி) அடுப்பை எரியவைத்துக் கொண்டு இருப்போம்).
நீர் கொதிக்கும் போது பர்கர் ரவையை ஒரு சிறுவன் போட மறு சிறுவன் துடுப்பால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஆசிரியரிடம் ஓடிப் போய் கூற அவர் வந்து பார்ப்பார். அடுத்த கட்டம் மிகக்கடுமையானது. அதை சிறுவர்கள் செய்யவே இயலாதது. அது அந்த csm மாவைப்போட்டு கிளறுவதுதான். அதைப்போட்ட வுடனே கட்டிகட்டியாய்ச் சேர ஆரம்பித்துவிடும். ஆசிரியரே அதைத் துடுப்பால் கிளறி முடிக்கும்போது மூச்சுவாங்கி விடுவார். ஒரு வாய் சுவைத்துப் பார்த்துவிட்டு ஆசிரியர் மறுபடியும் கடைசி பீரியட்ஐத் தொடர சென்றுவிடலாம். சிறுவர்கள் அடுப்பை சற்று நேரம் சிறுதீயாய் எரித்து, குண்டானை மூடி கொஞ்சம் பொறுத்து விறகையெல்லாம் இழுத்து அணைத்து விட வேண்டும். அப்புறம் கைகால் கழுவி பத்து நிமிடம் காக்கை, அணில் இவற்றோடு ஆடிக்கொண்டிருந்த்தால், உணவு மணி சரியாக அடித்து விடும்.
சமையலை முடித்து விட்டு நானும், 'ம' வும் வீட்டுக்கு ஓடி அம்மாக்கள் சமைத்ததை சாப்பிடவேண்டும். பின்பு மதியம் ஓடிவந்து வகுப்பில் பாடம் படிக்கவேண்டும். (இப்படி ஐந்தாம் வகுப்பிலேயே ஏறக்குறைய ஐம்பது பேருக்கு உப்புமா செய்ததால் இப்போதும் வீட்டில் நான்தான் உப்புமா எக்ஸ்பர்ட்).
நானும் 'ம' வும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். மாலைகளில் சேர்ந்து கிராமம் பூராவும் சுற்றித்திரிவோம். 'ம' விவசாயியின் மகன். நானோ ஆசிரியர் பையன். எனக்கு எப்போதும் அவர்களின் நிலத்தில் வார விடுமுறை நாட்களில் திரியப் பிடிக்கும். வரட்சியும், மழைக்காலமும் ஒருங்கே பாடுபடுத்தும் புன்செய் நிலம் அவர்களுடையது. துவரையும், உளுந்தும், கடலையும், மானாவாரிப் பருத்தியும் முப்பது நாற்பது தென்னையும் விளைந்த நிலம்.
நாங்கள் ஆறாம் வகுப்பு சென்றபோது, கிராமத்திற்கு கோவை வேளாண்மைக் கல்லூரியிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலருடன் சில அதிகாரிகளும் வந்து இரண்டு நாள் 16mm ப்ரொஜெக்டரில் தீவிர விவசாய முறைகளைப் பற்றி ஊரிலிருந்த அனைவரையும் கூட்டி விளக்கினர். வீரிய விதைகளும், பூச்சிமருந்துகளும் பரவலாயின. நாட்டுப் பருத்தியிலிருந்து சுஜாதா, சுவின் என்ற நீண்ட இழைப் பருத்திகளுக்கு 'ம' வீட்டில் மாறினார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்க நான் பொள்ளாச்சிக்குச் சென்றுவிட்டேன். இரண்டுவருடங்கள் சென்ற பின் ஒரு விடுமுறையில் கிராமத்திற்கு சென்றபோது 'ம' பாலிடால் என்ற பூச்சிக்கொல்லி குடித்து இறந்து விட்டதாக அம்மா சொன்னார்கள். அவன் வீட்டிற்குச் சென்று அவன் அன்னையிடம் பேசிவிட்டு வந்தேன். நாட்டை பிச்சைக்கார நிலைமையிலிருந்து உணவு உபரி நாடாக மாற்றியது பசுமைப் புரட்சிதான். அந்த பசுமைப் புரட்சிக்கு, அந்த சோதனைக்கு சிறு, குறு விவசாயிகள் கொடுத்த விலை ஆகப் பெரியது.