Friday, July 16, 2004

கல்வி, உயர்கல்வி பற்றி ...1

கடந்த இரு தினங்களாக பத்ரி மற்றும் வெங்கட் இன் பதிவுகளும், அவற்றிற்கு வரும் பின்னூட்டங்களும் மிகவும் முக்கியமானவை. சிறந்த கல்வி நிலையங்கள், கல்விச் சிறப்பு என்ற கருத்துகள் சாதி பற்றிய விவாதங்களாக மாறிவிட்டதாக சிலர் வருந்தலாம். அனால் அனைத்தும் தொடர்புடையன ஆகையால் நாம் இதைப் பற்றியெல்லாம் பேச நல்ல சந்தர்ப்பம் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாக முதலிலேயே இரண்டு விஷயங்களை சொல்லிவிடுகிறேன். ஒன்று - நானோ, என் உடன் பிறந்தோரோ அரசின் எந்த இடஒதுக்கீட்டின் மூலமும் பயன் பெற்றவர்கள் அல்லர். இரண்டு - நான் கிராமத்து பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியிலிருந்து நாட்டின் மிகச் சிறந்த ஆய்வுநிலையம் வரை எல்லாவிதமான கல்விநிலையங்களிலும், மக்கள் செலவில், கற்றிருக்கிறேன். எந்த பிராமணரும் நான் பயின்ற எந்தக் கல்வி நிலையத்திலும் சாதியை முன்வைத்து அறிவை மறுத்ததில்லை. (உடனே கிளம்பிவிடாதீர்கள். பிராமணீயத்தின் மற்றொருமுகமான சூத்திரனுக்கு மறைபொருளை கற்றுத்தராதே என்பதும் தெரியும். ஆனால் அது கருத்துலக சண்டை. அதை தனியாகப் போடலாம். சரியா) . இட ஒதுக்கீடு சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

1.குடும்ப ஏழ்மையை கணக்கில் கொண்டு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது ஒரு புது வாதம். இதை விவாதித்து ஏதேனும் நியாயம் இருந்தால்தான் நடைமுறைப்படுத்தவேண்டும். சமுதாயத்தில் பல தலைமுறைகளாக சாதியின் காரணமாக அடிமைப் படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முதல் நோக்கமே அதன் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தி விட்டதா என்பதை சரிபார்த்த பின்னரே அடுத்த கட்டமாகிய ஏழ்மை பற்றிய விவாதத்தை துவக்கவேண்டும். முதல் நோக்கமே அகில இந்திய அளவில் இன்னும் நிறைவேறவில்லை என்பதே என் கருத்து. பிராமணரைத்தவிர்த்த பிற சாதியின மாணவர் தமிழகம், ஆந்திரம், மராட்டியம், கேரளம் என்ற மூன்று நான்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து ஐஐடி/ஐஐஎஸ்ஸி இவற்றில் பயில்வது அரிதாகவே இன்னும் இருக்கிறது. 80 களின் முதலில் ஐஐஎஸ்ஸியில் ஏன் தமிழகத்திலிருந்து மட்டும் இளங்கலை பொறியியல் மாணவர் அதிகம்
அங்கே சேர்கிறார்கள் என்பதப் பற்றி ஒரு கேள்வி வந்தது. 80 பேர் கொண்ட எங்கள் பேட்ச் இல் 37 பேர் தமிழகத்தில் இருந்து. இது ஒரு அகில இந்தியத் தேர்வின் முடிவில். இதை சரி செய்ய காரணங்களை ஆய்வதற்காக நாங்கள் students council இல் ஒரு சர்வே நடத்தினோம். அப்போது கண்ட சில உண்மைகள் இன்னும் இருக்கின்றன. அது இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வி இன்னும் பரவலாக்கப் படவில்லை என்பதுதான். மாநில அரசுகளின் செயல்பாடே இதற்குப் பெரும் காரணமாக இருக்கிறது.
சாதியை முன் வைத்து அளிக்கப்படும் இட ஒதுக்கீடு பற்றிய என்னுடைய இப்போதைய கருத்து இதுதான்:
இது தமிழகத்தை பற்றிய என்னுடைய கருத்து. மற்ற மாநிலங்களில் நிலைமை வேறு.

2. இப்போதைக்கு, தமிழகத்தில் முன்னேறிய, ஆளும் சாதிகள் ஏறக்குறைய கல்வி/அரசு அலுவல்கள் மற்றும் இதர ஆதிக்க மையங்களில் போதுமான அளவு பிரதிநிதுத்துவப் பட்டு இருக்கிறார்கள். அதற்கு தமிழகத்தில் சென்ற நூற்றாண்டில் நடந்த அரசியல் போராட்டங்கள் காரணமாக இருக்கலாம். முக்கிய காரணங்களாக நான் கருதுவது: தமிழகத்தில் ஆரம்பமுதலே தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் அரசுகளினால் போற்றி வளர்க்கப் பட்டது. காமராசர் கொண்டுவந்த, பின்னர் கழக அரசுகளால் இன்னும் தீவிரமாக அமல்படுத்தப் பட்ட பகல் உணவுத்திட்டம் இதில் மிக முக்கிய பங்காற்றியது. இன்றைய அரசு மீண்டும் பகலுணவில் முட்டை சேர்த்ததை ஆதரிப்போம். (இதைப்பற்றி எழுபதுகளிலும், தொடர்ந்தும் எதிர்ப்புத்தெரிவித்த சோ போன்ற அறிவி ஜீவிகள் இப்போதும் இதைப் பகடி (மட்டுமே) செய்யமுடியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்). எந்தக் கிராமத்திற்கும் ஒன்று/இரண்டு கிமீ தொலைவில் இன்று தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலை எல்லா மாநிலங்களிலும் வர நடுவண் அரசு மாநில அரசுகளை ஊக்குவிக்கவேண்டும் . இதற்காக மட்டும் இந்த பட்ஜெட்டின் படி நாம் அளிக்கும் அதிகப் படியான cess உபயோகப் படுத்தப் படுமானால் நான் பெருமகிழ்சி அடைவேன். இன்னும் 5% அதிகம் தரக் கூட சம்மதம். நாற்பது ஆண்டுகள் பல பரிமாணங்களிலும் (தொடக்கக் கல்வி ஊக்கம், கல்வியின் முக்கியத்தைப் பற்றிய பரப்புரை, மதிய உணவுத்திட்டம், இட ஒதுக்கீடு, அளவான குழந்தை எண்ணிக்கை
பற்றிய குடும்ப நலப் பரப்புரை, கிராம சுகாதார நிலையங்கள், மகளிர் சுகாதார நிலயங்கள்) அரசு செயல் பட்டதால் தமிழகத்தில் இன்றைய நிலைமை உயர் மற்றும் பிற்பட்ட சாதியினருக்கு ஏற்றத்தையே தந்துள்ளது. ஆனால் மேற்கூறிய இந்தக் கருத்து ஒரு ஆளும் சாதியினரின் 'கதையாடல்' தான். அதற்கும் காரணம் உண்டு. 60களின் இறுதியில் தொடங்கி நடந்த வேளாண்மைப் புரட்சி, எண்பதுகளில் தொடங்கிய தொழில்ப் புலம் சார்ந்த அரச திட்டங்கள் அனைத்தும், நிலமுடைமையாளர்களையும், முதல் உடைமையாளர்களையுமே நோக்கில் கொண்டு அவர்களின் முயற்சிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவே தீட்டப்பட்டவை. இன்னிலையில் அவர்களின் குழந்தைகள் மிக விரைவில் அரசு ஏற்படுத்திய சாதகமான கல்விச் சூழலைப் பயன்படுத்தி பொறியியல், அறிவியல், மருத்துவம் கற்று மேலே வந்துவிட்டார்கள். நிலமற்ற, பொருளுடைமையற்ற பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, மிகவும் பிற்பட்ட சாதியினர் இந்தச் சுற்றில் வெற்றிபெற இயலவில்லை. அதற்கு அடுத்த சுற்று இப்போது தொடங்குகிறது.

3. மேற்சொன்ன கருத்து மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட, தலித் சாதியினருக்குப் பொருந்தாது என்பது கண்கூடு. இன்றும் அவர்களின் நிலைமை ஒன்றும் பெரிதாக முன்னேறிவிடவில்லை. தற்போதைய அரசியல் மாற்றங்களே இதற்கு சாட்சிகளாக உள்ளன. மிகவும் பிற்படுத்தப் பட்ட, தலித் இனச் சார்புக் கட்சிகள் இப்போது தமக்குக் கிடைக்கும் பங்குக்கு போராட ஆரம்பித்துள்ளார்கள். இந்த அரசியல் செயல் பாடுகளை வன்முறை என்றும் கலாச்சார சீரழிவு என்றும் ஒரு பயங்கரமான ஜோக் ஆக நமது உயர்சாதி ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பின்னணியில் உள்ளது நாட்டின் ஏற்றத்தில் தாம் பங்கு பெற இயலாமை குறித்த ஆதங்கத்தின் வெளிப்பாடே ஆகும். அரசின் திட்டங்கள் உடனடியாக இத்தகய சமுதாய கீழ்த்தட்டு மக்களை குறிவைத்து செயல் பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட்டு, தற்போதைய ஆதிக்க சாதிகளுக்கு, ஒருதலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு போன்ற மாறுதல்களும், தற்போது பிற்படுத்தப்பட்டதாக வகைப் படுத்தப் படும் சில சாதிகளை உயர்சாதிகள் என மாற்றம் செய்தலும் போன்றவற்றை செயல் படுத்தி, மிஞ்சும் இடங்களை மிக தாழ்த்தப் பட்ட, தலித், ஆதிவாசி இன மக்களுக்கு ஒதுக்க வேண்டும். இதனால் ' மெரிட்' என்னாவது என்ற சில எப்போதும் கேட்கும் அறிவுஜீவிக் கூச்சல்களை அலட்சியப் படுத்தலாம். 'மெரிட்' ஒரு மண்ணாங்கட்டியும் ஆகாது. (கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் பொறியியல், மருத்துவ இடங்களுக்கு பிசி கோட்டாவுக்கும், மெரிட் கோட்டாவுக்கும் உள்ள
கட் ஆஃப் மதிப்பெண்களின் வித்தியாசம் என்ன?. 85 க்கும் 95 க்கும் 'அறிவில்' பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. 100 களையும் 90 களையும் வாங்கியிருக்கும் அனுபவத்தில் சொல்லுகிறேன். தேர்வில் 100 மதிப்பெண் பெறுவது ஒரு செயல்திறம்தான். "technique' மட்டுமே. 80/85 க்கு மேல் அது அதிர்ஷ்டம் மற்றும் தேர்வெழுதும் போது மாணவனுக்கு இருக்கும் முனைப்பு இவற்றைச் சார்ந்தது. விஷய ஞானத்தையோ, அறிவையோ குறிப்பது அல்ல). ஒரு அரசு நாட்டின் திட்டங்களைத் தீட்டுவது சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்தான். 'மெரிட்' என்று அறியப்படும் தேர்வில் மார்க் வாங்கும் ஒரு குரங்கு வித்தைக்கல்ல என்பதை எல்லோரும் மனிதில் கொள்ளவேண்டும்.

4. இட ஒதுக்கீடு உயர்கல்வியிலும் தேவையா என்பது முக்கியமான ஒரு வாதம் ஆகும். இது இப்போதைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் முக்கிய கேள்வியாக உள்ளது. அதற்குக் காரணம் இரு நாடுகளும் பல்கலாச்சார, பல்லினக்குழு உள்ளடக்கிய, ஜனநாயக நாடுகள். அடிமைப்படுத்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களும் இவ்விரு நாடுகளிலும் கணிசமாக உள்ளது முதன்மைக் காரணம். இரு நாடுகளின் கல்வியாளர்களும் இவ்விஷயத்தப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். நாமும் reservation என்பதை அமெரிக்கர்கள்போல் affirmative action என்று பெயர் மாற்றிவிட்ட்டால் நம் அறிவுஜீவிகளுக்கு இதெல்லாம் எளிதில் புரியுமோ என்று எனக்குத் தோன்றுகிறது. கல்வியில் இட ஒதுக்கீடு தவிர அரசு மற்றும் இப்போது பேசப்படும் தனியார்துறை இட ஒதுக்கீடு பற்றியும் கருத்துகள் பரிமாற்றம் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் நாங்கள் ஒரு affirmative action employer என அறிவிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே முடியாது என்றா சொல்லிவிடும்? இதுவும் இந்திய மேலாண்மையார்களின் 'மெரிட்' திரிபு என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

(இன்னும் தொடர்வேன்)

4 comments:

Anonymous said...

அன்புள்ள அருள்,

உங்கள் கருத்துக்களை மேலோட்டமாகப் படித்துவிட்டு உடனடியாக பதில் சொல்ல முடியாது. சில வார்த்தைகளில் சொல்லப்பட்ட இவற்றில் பல தகவல்களும் கருத்துகளும் இருக்கின்றன. என்னுடைய ஐஐடி பற்றிய கருத்துக்களை முடித்துவிட்டு ஏற்கனவே சொன்னதுபோல் இதற்கு வருகிறேன். அப்பொழுது உங்களுடைய இந்த இடுகை எனக்குத் துவக்கமாக இருக்கும். உங்களுடைய இடுகை ஒட்டுமொத்தமாக ஒதுக்கீட்டைப் பற்றியானது. (கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு...).

ஐஐடிக்களின் தோல்வி பற்றிய எனது வாதங்களின் மீதான உங்கள் கருத்துக்களை நேரம் இருக்கும்பொழுது எழுதுங்கள்.

உங்கள் பக்கங்களில் பின் தொடர்தல் (TrackBack) வசதியை ஏலுமாக்குங்கள்.

Kasi Arumugam said...

//85 க்கும் 95 க்கும் 'அறிவில்' பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடையாது. 100 களையும் 90 களையும் வாங்கியிருக்கும் அனுபவத்தில் சொல்லுகிறேன். தேர்வில் 100 மதிப்பெண் பெறுவது ஒரு செயல்திறம்தான். "technique' மட்டுமே. 80/85 க்கு மேல் அது அதிர்ஷ்டம் மற்றும் தேர்வெழுதும் போது மாணவனுக்கு இருக்கும் முனைப்பு இவற்றைச் சார்ந்தது. விஷய ஞானத்தையோ, அறிவையோ குறிப்பது அல்ல).//

100/100 சரி. :)

ஒரே புத்தகங்களை வைத்து (ஒன்றாகவே உட்கார்ந்து) ஒரே மாதிரியாக படித்து ஒரே தேர்வை எழுதுவோம் நானும் என் அன்பு நன்பரும். ஆனாலும் 20 - 25 மதிப்பெண் வித்தியாசம் இருக்கும். அவர் தன்னை வெளிப்படுத்தும் விதத்தின் குறைபாடு காரணமாக 5- 10 மதிப்பெண் குறைவாகவும், நான் அதே திறமை(?)யின் காரணமாக 5- 10 கூடவும் பெற, உண்மையான வித்தியாசமான 5- 10, இப்படி அதிகமாக வெளிப்படுவதை நன்றாக கண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் 1%, அரை% கட்-ஆஃப்பில் என்ன பெரிய மெரிட் குறைந்து விடப்போகிறது? இடங்களைத்தீர்மானிக்க ஒரு வழிமுறை இந்த மெரிட், கட்-ஆஃப் எல்லாம். இதனால் என்னமோ திறமையில்லாதவர்கள் பொறுப்புக்கு வந்துவிடுவார்கள் என்பது ஒரு பூச்சாண்டி என்பது என் எண்ணம்.

Thangamani said...

அருள், உங்களுடைய இந்தக் கருத்துக்களோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன். தொடர்ந்து எழுதவும். மெரிட் என்பது ஒரு பூச்சாண்டி. ஆனால் ஒட்டுமொத்தமாக இங்கு கல்வி என்பதே மீள்பார்வைக்கும் மக்கள் மயமாக்கவும் படவேண்டும் என்று கருதுகிறேன். இதுபற்றி நமது சமூக கல்வியாளர்கள், சான்றோர்கள் போதிய சிந்தனையை பரப்பவில்லை என்றே நான் கருதுகிறேன். பாரதி சுதந்திரத்திற்கு முன்பே தேசியக்கல்வி பற்றிய கருத்தை முன்வைத்தான். ஆனால் அதற்குப்பிறகு நாம் அதை எடுத்துக்கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும், செம்மைப் படுத்தவும் மறந்துபோய்விட்டோம். மக்களுக்கு தொடர்பில்லாத கல்வியை அவர்களிடம் திணித்ததன் மூலம், தன்னம்பிக்கையற்ற, சுமூக உணர்வற்ற, திறமை குறைந்த, ஊழல் மிகுந்த வெறும் படித்தவர்களை மட்டும் உருவாக்கிவருகிறோம். இந்தக் கல்வி மக்களை முற்றாக அலட்சியப்படுத்துகிறது. அவர்களது பாரம்பரிய அறிவை, பங்களிப்பை, திறனை புறக்கணிக்கிறது. இது அடியில் இருந்து கட்டியெழுப்பப்படாமல் மேலிருந்து திணிக்கப்படும் ஒருவழிக் கல்வியாய் இருக்கிறது.

arulselvan said...

வெங்கட், காசி, தங்கமணி,
நன்றி.
வெங்கட், இந்த கருத்துகளை தொடக்கமாகத்தான் வைத்தேன். நண்பர்கள் பலர் அவ்வப்போது இதைத் தொடர்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது.
காசி, நம் எல்லோருடைய அனுபவமுமம் அப்படித்தானே. இல்லையா?. அறிவின் அலகுகள் மதிப்பெண்கள் தவிர இன்னும் உள்ளன.
தங்கமணி, தொடர்ந்து உங்கள் பதிவுகளில் இவ்விஷயத்தைப் பற்றி எழுதுங்கள். பல கருத்துகள் மோதித்தான் சரியான கருத்துகள் உருவாக வேண்டும்

அருள்