Sunday, August 15, 2004

அறிவியலும் தமிழும்

(திரு கிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரையை முன்வைத்து ராகாகியில் நான் மாதங்களுக்கு முன் எழுதியது இது. அதனை தொடர்ந்து இங்கே அடுத்த பகுதிகளை எழுதலாம் என்று இருக்கிறேன் .)

1.
நான் பள்ளியில் கற்ற போது "தமிழன் அறிவியல் முன்னோடி" என்று ஒரு பாடம் இருந்தது.
நினைவிலிருக்கும் காட்டுகளைச் சொல்கிறேன்.
அ. "நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்" என்பது நியூட்டன்-இன் விதியை முன்உரைக்கிறது.
ஆ. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ..." அணுவைப்பற்றிய கொள்கை நம்மிடமே இருந்தது.
இ. "ஆழ அமுக்கி முகப்பினும், நாழி முகவாது நானாழி ..." பஸ்கால்-இன் நீர்ம விதி
ஈ. ஒரு இளவரசி (மீனாக்ஷி ?) ஊஞ்சலில் ஆடும் போது ஊஞ்சலின் வீச்சும், அவள் காதணிகளின் வீச்சும் வேறு வேறு அலைஎண்களில் இருந்ததான ஒரு பாடல் (பாடல் நினைவில்லை. யாரேனும் எடுத்துக்காட்டி சிறு விளக்கமும் கொடுத்தால் நன்றி).
இப்படி இன்னும் சில இருந்ததாக நினைவு. இவைகளிலிருந்தே பார்ப்போமே.

2. என் இப்போதைய தெளிதல் படி:
அ: இறையின் உயர் ஆற்றலை உரைக்க எழுதிய பாடல். நல்ல கவிதை வரிகள். ஆனால் இவை உயிர்/உயிரற்ற இரு திணைகளையும் குறித்த வரிகள். இயல்பியல் விதிகள் உயிரற்ற பொருண்மைகளைப் பற்றியவை. இவ்வரிகள் ஏதாவது 'விதி'களைச்சுட்டினாலும் அவை இறையியல் 'விதி'கள். இயல்பியல் விதிகளல்ல.
ஆ: இதற்கும் இன்றைய இயல்பியலின் அணுவுக்கும் தொடர்பில்லை. உயர்வுபுகழ்ச்சி அணி. அவ்வளவுதான். ஆனால் வேறு பரிமாணங்கள் உள்ளன. அவைபற்றி கீழே.
இ. அறிவியல் கூற்றாகவே கொள்ளலாம். பருண்மைக் காட்சி --> கருதுகோள் --> இசைவு நோக்கல் --> பொதுமைப் படுத்துதல் --> விதி என்ற நவஅறிவியலின் கூறுகளில் முதல் மூன்றும் ஏகதேசம் சரி. பொதுமைப் படுத்துதல் படி தவறு. அதனால் என்ன. பாடலாசிரியர் (ஔவை?) நவ அறிவியலுக்கு முந்தியவர். பாடு பொருளும் அறிவியல் தொடர்பானது அல்ல. ஒரு Phenomenological Theory க்கு இது போதும். நவ அறிவியல் மொழிதான் இல்லை.
ஈ. ம்ம்ம். பாடல் வரிகள் இல்லை. மிகச்சிறந்த கூர்மையான காட்சிப் பதிவு. இந்த அளவு பொருண்மை உலகை ஒருவர் இக்காலத்தில் நோக்கினால் கூட நாம் 'scientific temper' என கவலைப் படவேண்டியது இல்லை.

3. மேற்கூறியவை எல்லாம் எப்படி ஒரு பழம் சமுதாயத்தை, அதன் கலை இலக்கிய வெளிப்பாடுகளை, அதன் கால கருத்துப் புலத்தில் இருத்தி இசைவாக்கி, இக்கால அறிவியலின் கூறுகள் ஏதேனும் அவற்றில் உண்டா என்று நோக்குவதுதான். எங்களுக்கு அப்பவே தெரியும் என்று குரலெழுப்ப அல்ல. இன்றைய இயல்பியல் பாவிக்கும் 'atom' எனும் கருதுகோளுக்கும், கிரேக்கர்கள் பாவித்த 'atom' என்பதற்கும் ஒரே semantics இல்லை. ஆனாலும் மேற்கில் அவர்கள் பழையதின் தொடர்ச்சியாக, வளர்ச்சியாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். இப்படி பிற கலாச்சாரங்களும் தம் முன்னோர் கருதுகோள்களை மீட்டெடுக்க யாதொரு தடையும் இல்லை. அவை வகையாக, சரியாக செய்யப் படவேண்டியவை கூட.

4. அறிவியலின் முதற்படி அளத்தல் அல்லவா. அளவைகளில் தமிழில் உள்ளவை ஒருபாடு குறிகளும், கருத்தமைவுகளும்.

எண்ணல்:
முழுக்கள் : ஒன்றிலிருந்து ஆயிரம் வரை, அப்புறம் இருக்கிறது அதிர்ச்சி: பதினாயிரம், நூறாயிரம்,பத்து நூறாயிரம், கோடி, அற்புதம்(10^8),... கற்பம்(10^12) ..., வெள்ளம் (10^16)...புரியம்(10^20) ......
பின்னங்கள்: நமக்குத் தெரி஢ந்த முக்கால்,அரை,கால்,வீசம் போக, மும்மா(3/20) ... இருமா(1/20)...முக்காணி (3/80) ... கீழ்னாலுமா (1/16000) ..., கீழொருமா(1/64000), ... இம்மி(1/1075200) ... (எடுத்துக் காட்டுகள்தான். பலவற்றை விட்டுவிட்டேன்).
nano, giga எல்லாம் இங்கேயே சாத்தியம்தான். ஏதும் அந்நியமல்ல.
இப்படியே இன்னும் நிறுத்தல், முகத்தல், நீட்டல் எல்லாம் உண்டு. சங்க காலத்திலிருந்து தொடங்கி எத்தனையோ பாடல்கள் இவற்றை சுட்டியுள்ளன.

5. அறிவியலின் இரண்டாம் படி:

வகைப்படுத்துதல்:
தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீருயிரிகள், இப்படி தமிழ்ப் பாடல்களில் எவ்வளவு தேறும் என நினைத்தால் வியப்பாக உள்ளது. நான் கண்டவரை ஆயிரக்கணக்கில் உள்ளன. Naming, classifying ... all done.

நம் காட்டுக்குள் நம் மலைமைந்தர் வழிகாட்ட நடந்து சென்று அவர் காட்டிய செடிமர உயிரிகளுக்கு வெள்ளைக்காரர் தம் பெயர்களை வைத்தமையும், அவை அறிவியல் ஆய்வு ஆவணங்களாக இருப்பதையும் காண்கிறோம். யார் கொள்ளுவார் இச்செல்வம் யாவும்?

6. தமிழில் உள்ள சாத்திரங்கள்: சிற்ப,கட்டிட, சித்த,மருத்துவப் பனுவல்கள். எத்தனை. எத்தனை. நடராஜர் சிற்பத்தை செய்யும் முறையக்கொண்டு நம்மால் ஒரு முழு நவ உலோகவியல் பாடத்திட்டத்தையே வகுக்க முடியும். நமக்கோ சடங்குகள்தான் முக்கியம். ஒருசாரார் உடை. மறுசாரார் தொழு.

2 comments:

நற்கீரன் said...

நல்ல பதிப்பு.

ARIVUMANI, LISBON said...

Very good effort.. i expect more such articles from u ...

Arivumani