Sunday, September 12, 2004

வன்புலம் (சிறுகதை)
உயர்ந்தோங்கிய குடவரையின் அப்பால் சூரியன் இறங்கத் தொடங்கிய போது எழினி ஆடுகளைப் பத்தி வீடு திருப்பினாள். இரண்டு கிடாரிகளும் ஆறு பெட்டைகளுமாகிய அச்சிறு மந்தையை அவள் கரட்டாற்றங்கரையில் நடத்தியபோது அருகிருந்த மரக்கூட்டங்களிடையே சலசலத்தது. இடைக்குறுவாளை வலக்கையில் தொட்டுத் திரும்பிய கணத்தில் இரு பெருங்குதிரைகள் எதிரே பாய்ந்தன.

குதிரைகள் இரண்டும் சுடுமூச்சுடன் அவள் பாதையின் குறுக்கே பாய்ந்ததில் ஆடுகள் சிதறி மரக்கூட்டத்தினுள் ஓடின. ஆற்றை நோக்கிப் பாய்ந்த இரு கிடாரிகளும் சிறுதொலைவு ஓடித் திரும்பி அவையும் மரங்களினூடே மறைந்தன.

எழினி கூர்புலன் நிலையில் நெருங்கும் குதிரைகளையும் கண்டாள். இடுப்பளவு சடாரெனக் குனிந்து அதே அசைவில் குறுவாளை எறிந்தாள். அவள் மணிக்கட்டின் சுழற்சியின் விசை அவ்வாள் ஒரு வீரனின் கழுத்தில் தைத்த ஆழத்தில் தெரிந்தது. அவன் அலறி விழ அவன் துணைவீரன் குதிரையின் பக்கவாட்டில் சரிந்து எழினியின் தலை உயரத்தில் இருந்து பிணைக்கயிற்றை வீசினான். அவள் சுழன்று தரை வீழ்ந்தாள். அவ்வீரன் குதித்து அவள் கைகால் அமுக்கிக் கயிற்றால் பினைத்தான். குத்துப் பட்டு வீழ்ந்த வீரனைக் குதிரையில் இருத்தி ஒரு சீழ்க்கையோடு அதைத்தட்ட அது மரச் சோலையூடே சேர்விடம் நோக்கிப் புகுந்தது.

" உன் மனைக்குத்தான் போகிறோம். அஞ்சாதே. " என்றான்.

எழினியின் பார்வையில் தீர்க்கமும் சற்றே அச்சமும் தெறித்தது. இவன் பணிவீரனா, அன்றி எயினர்க் குழுவினனா என மயங்கினாள்.

" ஏன் என்னைப் பிணைத்திருக்கின்றாய். வீரம்தான்" என்றாள்.

அவன் சிரித்தவாறே, " கொங்குப் பெண்டிர் வாள் பயிற்சியை எம்குழுத்தலைவர் எமக்கு முழுவதும் விரித்திருக்கின்றார் " என்றான்.

இவன் கொங்கன் இல்லையா, பின்? " நீ எயினன் அல்லவா? கோசனா?" என்று கேட்டாள்.

" உனக்கெதற்கு அவை பெண்ணே. எயினன் போல்த் தெரிகிறேனா. அல்லது கோசன் போல்க் காண்கிறேனா? "

" எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என்னை விடுவி "

அவ்வீரனின் கண்கள் ஆற்றின் அக்கரையில் ஒருகணம் பதிந்தன.
அக்கணத்தில் எழினி நிலத்தில் சரிந்து இடுப்பை ஒடித்து கால்களால் அவனை எற்றினாள்.
அதை அவ்வீரன் மார்பில் தாங்கி ஐந்து முழம் அகன்று விழுந்தான்.

விழுந்தவன் உருண்டெழுந்து அவள் மேல் பாய்ந்து,

" எழினி, நீ யார், உன் தந்தை யார் என்பது எனக்குத் தெரியும். தனிப்போர் நன்கு கற்றவன் நான். இதைப்போல் மடத்தனமாக முயற்சிகள் செய்யாதே. உம் இருவரையும் கொன்று வரத்தான் உத்தரவு. இமைப்பொழுதில் வெறுங்கையால் அதைச் செய்து விடுவேன். நினைவில் கொள்"

எழினிக்கு நிலமை புரிந்தது. இவனின்றேல் இன்னும் பலர் வரக்கூடும் என்றறிந்தாள்.

" என்ன கருதி எம்மைக்கொல்ல உம்குழு முயல்கிறது வீரனே ..."

" உன் தந்தையிடம் பேசி பிறகு சொல்கிறேன். இன்றேல் கொல்கிறேன். என்னை மாறன் என்றழைப்பர். புரவியில் ஏறு பெண்ணே. தப்ப முயலாதே. இறந்து படுவாய்"

ஆற்றைக் கடந்து, கரிமேடு தாண்டி, நிலச்சரிவில் குதிரை இறங்கத் தொடங்கியது.
தனித்த அவள் மனை மாலை ஒளியில் தினைப்புலத்தினூடே ஒளிர்ந்தது.

" நிச்சயம் தந்தை நாம் வருவதைக் கண்டிருப்பார் வீரனே. அவரைக் கொன்றுவிடாதே ..."

பேச்சு அவன் கவனத்தை மாற்றும், தந்தைக்கு ஓரிரு கணங்களே போதும் என்பதை அவள் அறிவாள்.

தினைச் செடிகளினூடே குதிரை விரைந்தபோது அடைய வந்திருந்த புட்கள் எழுந்து பறந்தோடின.

ஆதன் முதலிலேயே வீட்டை விட்டு வெளியேறி தாழம்புதருக்குள் ஒடுங்கிவிட்டார். அவர் கையில் பற்றியிருந்த குத்தீட்டியின் முனை மாறனின் மார்பின் தொடர்கோட்டில் மேல் கீழாக அசைந்து கொண்டிருந்தது.

மறுகணப்பொழுதில், குதிரை எழினியை மட்டும் தாங்கி, புலத்தை விட்டு வெளியேறி, வீட்டின் முன் களத்தை அடைந்து நின்றது. மாறன் எங்கும் தென்படவில்லை.

ஆதன் கூர்பார்வையில் தினைக்கதிர்களின் உச்சங்களை அவற்றின் அசைவைப் பார்த்து ஆய்ந்தார். எழினியுடன் வந்த வீரன் அசாதாரணன் என உணர்ந்தார். பார்வையை வீட்டருகில் குவித்தார். எழினி குதிரையில் இருந்து குதித்து நின்È¡ள். அவள் மனம் பதற்றமாயிருந்தது. மாறன் நிச்சயம் தந்தையைத் தாக்குவான் என்பதுணர்ந்தாள். ஆதன் மிகுமதிப் போராளன். ஆனால் மாறன் இளையவன். சிறுத்தையின் விரைவு உடல் பாய்ச்சல் கொண்டவன். ஆதனுக்கு உதவி வேண்டும். எழினி தன் கைக்கட்டுகளை நெகிழ்த்த முயன்றாள்.

" உம் ஈட்டியைத் தாழ்த்துங்கள் ஐயா. அன்றேல் இறந்து படுவீர்"

மாறனின் குரல் மனையின் கூரையின் மீதிருந்து ஒலித்தது.
அவன் கையில் சிறு வளைவில்லும் வைத்திருந்தான். ஆதன் அவ்வில் இத்துணை தொலைவு எய்ய வல்லதா என நினைத்தார். ஈட்டியை மாறனை நோக்கித்திருப்பி தோளைப் பின்னிழுத்தார்.

சரக்கென அவர் காதிற்கு ஒரு விரற்கடை விட்டு ஓர் அம்பு கடந்தது.

" ஈட்டியைத் தாழ்த்துங்கள். அடுத்த அம்பு உம் இதயத்தைத் துளைக்கும். மற்றது எழினியை" என்றான் மாறன்.
ஆதன் ஈட்டியத்தாழப் பற்றி புதரினின்று வெளிவந்தார்.

"யார் நீ. உன் பணி என்ன? " எனக்கேட்டவாறே எழினியின் கட்டுகளை அவிழ்த்தார் ஆதன்.

"என்னை வச்சியன் மாறன் என்றழைப்பர். உம் இருவரையும் கொன்று சில பொருட்களைக் கவர்ந்துவர உத்தரவு"

" எயினர் தனித்துப் போரிடவும் துணிந்திருக்கிறீர் போலும் " என்று இகழந்தார் ஆதன்.

" நான் எயினன் அல்லன். உம் மகள் என் இணைவீரனைக் கொன்றுவிட்டாள். அதற்காகவேனும் உம்மிருவரையும் கோறல் தவறாகாது"

ஆதன் தன் மகளைப் பார்த்தார். இருவரும் குறிப்புணர்த் தசையசைவுகளில் செய்திகள் பரிமாறினர் "

என்னேரமும் பிறர் சூழலாம் என்பதை ஆதன் தெளிவாக உனர்ந்தார்.

" வீரனே, நீ எங்களை கொன்று உன் தேட்டையைக் கவர்ந்து செல்லாமல் ஏன் நிற்கிறாய் என்றறியேன். ஆனால் நன்றி மிக்கவனாக இருப்பேன் என்று எண்ணாதே " என்றார்.

மாறனைச் செயல்பட வைத்தால் தப்ப வழி கிட்டலாம். இன்றேல் சிறைப் பிணையாளராக இருப்பது தகாது என்று உணர்ந்தார் ஆதன்.

மாறன் புன்னகைத்து, " ஐயா, உம் இருவரையும் கொல்லுதல் எனக்கு எளிது. என்னை நீங்கள் இருவரும் சேர்ந்தும் வெல்ல ஆகாது. எனக்கு நீங்கள் ஒன்றைக் கற்றுத்தர வேண்டும். எம் குழுவுக்கு அவ்வறிவு வேண்டியதில்லை. அதனால் பொறுத்திருக்கிறேன்" என்றான்."

" வீரனே, நாங்களோ வேட்டுவர். ஆயர்போல் நிலம் திருத்தி பயிர் வள்ர்த்தல் எம் தாத்தாவால் ஆனது. எம்மிடம் என்ன கற்க வந்தாய் நீ. பறவை ஓட்டி தினைப்பயிர் காப்பதா ..?"

மாறன் இப்போது நகைக்கவில்லை.
" ஐயா, உம் பளிக்குப் பணிக்களரி எங்குள்ளது ?"

ஆதன் துணுக்குற்றார்.

" எந்தப் பணிக்களரி?. யாம் வேட்டுவர் வீரனே"

"பளிக்குப் பணிக்களரி. பளிக்குப் பாளங்கள் சேர்த்த அறை. எங்கு கொண்டுள்ளீர் அதை?"

எழினி விரல்களை விரைப்பாக்கி தோள்களைத் தளர்த்தினாள். உடல் எடையை வயிற்றினின்று கீழாகவும், கால்களினின்று மேலாகவும் தொடைகளுக்கு மாற்றினாள். கால்களை சற்றே அகற்றி, குதிகால்களை ஒரு இழை உயர்த்தி, முன்கால்மடக்கி மூச்சைச் சீராக்கினாள். எம்பிப் பாய்ந்து மாறனின் விலாவின் கீழ் வலதுகால் கட்டை விரலைச் செலுத்தினாள்.
சுழன்று தப்பித் திரும்பிய மாறன் அவள் கெண்டக்காலைத்தட்டி உயர்த்தித் தள்ளினான். அவன் வீச்சில் பத்துமுழம் அகன்று வீழ்ந்த எழினி உருண்டாள்.

ஆதன் பறவையோட்டும் குதிரெறிப்பொறி ஒன்றைப் பற்றிச் சுழற்றி அடித்தார். மாறனின் நெற்றிப் பொட்டில் தாக்கிய கல் ஆழவெட்டித் தெறித்தது.சரிந்து கொண்டிருந்த மாறன் மேல்ப் பாய்ந்தார் ஆதன். மாறனின் கை இடைக்கச்சை விடுவித்து உறுவிச் சுழற்றிய சுருள்தொடுப்புக் கத்தி ஆதனின் கழுத்தில் பதிந்தது.

தன் முகத்தில் பெருகி கண்ணில் இறங்கிய குருதியை விலக்கி மாறன் எழினியை நோக்கி விரைந்தபோது அவள் புரவியின் மீது தாவியேறி தினைப்புலத்தைக் கீறி அப்பால் இருந்த புன்னைமரக் காட்டில் மறைந்தாள். அவன் இணைவீரர்கள் வந்தடைந்த போது மயங்கிய மாறனின் உடலும் உயிர்போகிய ஆதனின் உடலும் அருகாமையில் கிடந்தன. ஒரு கிடாரியத் தவிர மற்ற ஆடுகள் வழிகண்டு வந்து பட்டிக்குள் புகுந்து கொண்டிருந்தன. குடவரை கருக்கத் தொடங்கியிருந்தது.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வீறு மிக்க கதையின் வீறு மிக்க நடை!

என்ன தான் ட்விட்டரில், கருத்து சொன்னாலும், பதிவில் சொல்வது போல் வராது! தனி மனிதரை விடுத்து, இந்தப் பதிவுக்கு அன்றோ பெருமை சேர்க்கணும்? அதனால் மீண்டும் இங்கே சொல்கிறேன்! மன்னிக்க:)

விறுவிறு காட்சிகள்!
மிகுமதிப் போராளன்; குறிப்புணர்த் தசையசைவு; நறுக்குத் தெறித்தாற் போல் ஊடாடல்! "வன்"புலம்!

அருள்,
நீங்க சில முக்கியமான சங்கப் பாக்களைச் ஓவியமா வடிக்கணுமே! eg: கையில் ஊமன் கண்ணின் காக்கும்..