Sunday, October 31, 2004

Tea for the Tillerman

" சின்ன வயசிலேயே அம்மா சொன்னாங்க, ஒரு டீயாவது போடக் கத்துக்கடான்னு. ஹூம். ... இப்பத் தூக்கீட்டானுங்க. .."

Saturday, October 30, 2004

பழசு கண்ணா பழசு

இந்த வாரம் பெங்களூரில் மறுபடி பழைய குப்பைகளை கிளரிக் கொண்டிருக்கும்போது அகப்பட்டது கணையாழி அக்டோ பர் 1983 இதழ். அதில் கிடைத்தது.


சாலை
---------


பொது மக்களுக்கு
அன்பார்ந்த அறிவிப்பு:
பாதசாரிகள்
நடைபாதையில் செல்லவும்
தார்ச்சாலைகள்
கார்களுக்காக. அன்றில்பிற
பெட்ரோல் வாகனங்கள்
பெற்றுள்ளீரா?
வேகத்துக்கு முதலிடம்
முக்கியமாய் முக்குகளிலும்
வாகனங்கள் வருவதை
பார்த்து நடங்கள்
மிதிவண்டிகள் எந்நாளும்
மெதுவாய்ச் செல்வதால்
அவையும் நடைபாதையில்
அனுமதிக்கப்படும்
ஹவாய் செருப்புகள்
சரிப்படாது சகதியில்
தோல் ஷூக்கள் பாவியுங்கள்
வெறும் கால்களும் வழுக்குவதில்லை.
பதித்திருக்கிறோமே பலகற்கள்
புழுதி இடையில் பரவி
நாளடைவில் அவை சரியாகும்
கிழிந்த பாய்கள் கால்கள்
சில கைகளும் பரப்பியிருக்கிறோம்
தாண்டிப் பயிலவும்
மண் குவியல்களை
நடந்து கலைக்காதீர்கள்
விலகி நடவுங்கள் - இந்த இடத்தில்
சாலையை உபயோகியுங்கள்
சவுளிக்கடை ரிப்பேர்
இந்தக்கம்பம் முக்கியம்
இதை சுற்றிச் செல்லுங்கள்
பாம்புப்புற்று கீழே பார்க்கவில்லையா
பைசா போடலாம்
விபூதிக்கு நாலடி போனால்
பாலிதீன் பைகளில் கிடைக்கும்
அடுத்ததாய் நீங்கள்
கவனிக்க வேண்டியது
ஒன்றுதான்
கழிப்பிடங்கள்
சரியாய் சில்லரை வேண்டும்
அன்றேல் வீடுவரை
காத்திருக்க நேரிடும்
கடந்தவுடன் கம்பிகள் வரும்
மாணவர் அமர. பின்பு
ரோட்டரி உபய பஸ் ஸ்டாப்
அங்கே
காத்திருக்கலாம் அல்லது கடக்கலாம்.

-----------

அப்போதெல்லாம் மொழி அழகுகளைத் தவிர்த்து, குரலை உயர்த்தாமல் உரை நடைக்கு மிக அருகில் எழுதினால் கவிதையில் கவிதை மட்டுமே இருக்கும், மற்ற வெட்டி விஷயங்களில் கவனம் சிதறாது என்பது ஒரு சாரார் முன்வைத்து செயலாக்கிய கவிதைபற்றிய ஒரு கருத்துருவாக்கமாக இருந்தது. கநாசு இந்த மாதிரி plain verse எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நல்ல தமிழ் இலக்கியப் பயிற்சியுடைய சி.மணி யில் ஆரம்பித்து ஞானக்கூத்தன் போன்றோர் இன்னொரு விதக் கவிதைகள் எழுதினர். அங்கதம் கலந்து, தமிழ் இலக்கணத்துக்கு எழுதப்பட்டவையோ என சந்தேகிக்கும் அளவு உள்ளுறை மொழிச்சந்த அலகுகளுடன் அவர்கள் எழுதினார்கள். பிச்சமூர்த்தியின், பிரமீளின் கவிதைகள் இந்துக் காவியங்கள், தத்துவங்களைத் தொட்டு வேறு பாதையில் சிறந்த கவிதைகளாயின. இதன் இன்னொரு கிளையாக நகுலன், சுரா போன்றோர் எழுதியவை அன்றாட வாழ்வின் இருண்மைப் பொந்துகளை தேடிக்கொண்டிருந்த்தன. வானம்பாடிகள் ஒரு இயக்கமாக, அரசியல், மக்கள் கலை போன்றவற்றை முன்னெடுத்துச் சென்று கவிதையை பொதுமைப் படுத்தினார்கள்.
தமிழ் புதுக்கவிதையின் இத்தகைய ஒவ்வொரு கிளையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்தித்தன. மொழிப்பயிற்சி அற்ற, சோம்பேறிகளால் எழுதப்படும் சொற்கூட்டங்களின் இருண்மையே கவித்துவமாகவும், கோஷங்கள், இரு அடி தத்துவ மலினங்களின் ஹைக்கூக்கள் போன்ற வடிவங்கள் அழகுணர்சியாகவும் பிறழ்ந்தறிதலால் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டு மூட்டைமூட்டையாக தமிழ்க் கவிதைகள் உற்பத்தியாகின. சிறந்த கவிஞர்கள் நல்ல கவிதையையே என்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைத் தொழில்நுட்பம் மேற்சொன்ன எல்லாக் கூறுகளிலிருந்தும் பெற்றதாக இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழ்க்கவிதை நல்ல உயர்தளத்திலும், படு பாதாளத்திலும் சமமாகக் கால் பரப்பி இப்போது விரிந்திருக்கிறது.

மேலே இருக்கும் கவிதையை எழுதியது நான்தான். சிறுவயதில் இப்படி plain ஆகத்தான் எழுத பழகிக்கொண்டிருந்தேன். இப்போது என் கவிதை பற்றிய அழகுணர்ச்சி மேலே கண்டதுபோல் இல்லை. தற்கால இலக்கியச் சிறு பத்திரிக்கை இதழ் ஒன்றையும் , அக்கால செந்தமிழ்ச் செல்வியின் நான் படிக்காத ஒரு இதழையும் காட்டி இதில் எதை முதலில் படிப்பாய் என்று கேட்டால் நிச்சயமாக செந்தமிழ்ச் செல்வி இதழைத்தான் என்று இப்போது கூறுவேன். மேலே இருக்கும் பயிற்சிக் கவிதையையும் இப்போது வேறுமாதிரி எழுதுவேன் என்று நினைக்கிறேன். நல்ல வேளையாக கவிஞனாக நான் முயற்சிக்கவில்லை.

அந்தக் கணையாழி இதழின் சிறந்த கவிதை இரா. முருகனின் பாம்புப் பிடாரன் பற்றிய கவிதையே. அருமையான கவிதை அது. அப்புறமா போடறேன்.

Tuesday, October 26, 2004

இ.தி - 3

" ஆமாங்க டாக்டர்.
ஊர்ல ரொம்ப கொசுத்தொல்ல ஜாஸ்தி.
அதுதான் இப்படி ... மனுசக்கால் வியாதி வந்துடுச்சு ..."

Friday, October 22, 2004

நிரலாளர்களின் ஜெ ...

J எனும் நிரல்மொழியை யாத்த கென் ஐவெர்சன் ஒக்டோபர் 19 ம் நாள் (செவ்வாய்) மதியம் தன் கம்யூட்டரில் புது J lab ஒன்றிற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு வயது 83. மூன்று நாள் கழித்து நேற்று இறந்தார். J பற்றி : இது பழைய APL மொழியின் உருமாற்ற வளர்நிலை மொழி. ( இதன் பைனரிகள் வேண்டுவோர் இதன் இணையத்தளத்திலிருந்து இலிருந்து பெறலாம் - அனைத்து தள அமைப்புகளுக்கும் கிடைக்கும்). மிக அடர்த்தியான மொழி. சி வழிவந்த மொழிகளில் முப்பது நாற்பது நிரல் வாக்கியங்கள் செய்யும் வேலையை ஜே யில் ஒரே வரியில் செய்து விடலாம்.
சற்றே கணிதப் பயிற்சி உள்ளவர்களும் நிரல் எழுதுவது எவ்வளவு எளிதானது என்பதை உணரலாம்.
இன்றைய நிரலாளர்களில் எல்லோரும் பொதுவாக அறிந்த சி, சி++, ஜாவா போன்ற மொழிகளைத்தவிர இன்னும் மிக சக்தியும் வீச்சும் கொண்ட சில மொழிகள் உள்ளன. சில பெரும் நிறுவனங்களில் தம் உள்பயனுக்காக எழுதப்படும் மிக சிக்கலான, பெரிய அளவிலான நிரல்க்கட்டுகளை அவை இம்மொழிகளில் தம் பணியாட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக்கொள்கின்றன. நூற்றுக்கணக்கில் (இங்கே இந்தியாவில் அயிரக்கணக்கில்) பணியாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனக்களில் இம்மொழிகளைக் காண்பது அரிது. லிஸ்ப், ஸ்மால்டாக், ஜே போன்றவை இத்தகைய 'ரகசிய' மொழிகளில் அடங்கும். இவற்றில் ஜே முக்கியமாக பங்குச்சந்தை கணிப்பிலும், ஆக்சுவரீஸ் போன்ற துறைகளிலும் உபயோகமாகிறது. இது வரிசை(array) களினூடே இயங்கும் மொழியாதலால் மிகப்பெரிய அணி (matrix) களை உள்ளிட்ட கணிப்புகளை விரைவில் செயலாக்க ஏதுவாகிறது. ஒரு உதாரணமாக நிலத்தரவு நிரல்களில் (GIS) அதிகப்படியாக உபயோகப்படுத்தும் ரேஸ்டர் டேடா உள்ளிட்ட கணிப்புகளுக்கு பெரும் அணிகளை தன்னிச்சையாக பயன்படுத்தும் மொழி உள்கட்டுகள் மிகவும் உதவியாக இருக்கும்.

சும்மா ஒரு ஜாலிக்கு இதை 'இறக்கி' பயன்படுத்திப் பாருங்கள். போதுமான செயல்பாட்டுக் குறிப்புகளும், பயிற்சிகளும் இணைத்தளத்திலேயே உள்ளன.

Wednesday, October 20, 2004

இ.தி..." தற்கொலைன்னு பேசிக்கறாங்களே சார் ... "

" சே. சே. தற்கொலையெல்லாம் ஒண்ணும் இல்லே. விஷ ஊசி போட்டு நாலு உடும்புங்களை நாங்கதான் சுத்து வட்டாரத்திலே உலவ விட்டோம் ..."

Tuesday, October 19, 2004

இ.தி...
பெருசா தான் வீரப்பனோட ஆளுன்னு சொல்லீட்டு அலஞ்சானே, இப்ப என்ன செய்வான் பாப்போம்...

Saturday, October 16, 2004

அற்றைத் திங்கள் ...

" ஐயா, ஆமாங்க. பாலாத்தில தாங்க. நீங்க சொன்ன மாதிரியேதாங்க. அளந்துதாங்க போடுறேன். "

Friday, October 15, 2004

கூழாங்கற்கள்

கூழாங்கற்கள்
-------------------

இந்தக் கூழாங்கல்
ஒரு முழுமையான உயிரி

தனக்கே அது நிகரானது
தனது எல்லைகளை
தானே அது உணர்ந்துள்ளது

கல்தன்மையாலே
முழுதும் நிரம்பியுள்ளது

அதன் மணமோ
எதையும் நினைவுபடுத்துவதில்லை
எதையும் வெருட்டி ஓட்டுவதில்லை
எத்தாபத்தையும் எழுப்புவதுமில்லை

அதன் களிப்பும் விறைப்புமே
அதன் தகைமையும் பொற்பும்

என் கையில் அதை ஏந்தும்போதும்
அதன் பொலிவுடம்பில்
இப்பொய் வெதுப்பு ஏறும்போதும்
மனம் கனத்து வாடுகிறேன்

கூழாங்கற்களை
நாம் அடக்கியாள முடியாது
அமைதியான நிர்மலமான கண்கொண்டு
இறுதிவரை நம்மைப் பார்த்திருக்கும் அவை.ஸ்பிக்னியூ ஹெர்பர்ட் (1924-98) போலந்து நாட்டுக்கவி. சென்ற நூற்றாணடில் இரண்டு இலக்கிய நொபல்கள் போலிஷ் மொழிக்கு கிடைத்தும், ஹெர்பர்ட் அதை அடையாததில் போலந்து மக்களுக்கு பெருவியப்பு. போலிஷ்சின் தலைமைக் கவியாக இவரையே அனைவரும் கருதுகிறார்கள்.

84-85 வாக்கில் எங்கள் கல்லூரி மாணவர் இதழுக்காக இவரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். 'கூழாங்கற்கள்', 'ஒரு முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து தகவலறிக்கை' போன்ற கவிதைகள் அவை. அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு போலந்து ஏரண இயலாளர் (logician) கல்லூரிக்கு அழைப்பு விஞ்ஞானியாக வந்திருந்தார். அவருடன் பேசும்போது ஹெர்பர்ட்டைப் பற்றி கேட்டேன். மிகவும் மகிழ்சியாக பல விடயங்களை பார்க்கும்போதெல்லாம் பகிர்ந்து கொள்வார். அவரும் கராகோவ் நகரத்தில் ஹெர்பர்ட்டுடன் கல்லூரியில் கழிந்த காலங்கள் என பலவற்றையும் பற்றி பேசுவார். அறிவியப் புனைகதைகள் எழுதும் ஸ்டானிஸ்லா லெம் எனக்கு மிகப்பிடித்தமாவர் என்று ஒரு நாள் சொல்லப்போக அவரும் க்ராகோவ் ஆள்தான், நாங்க எல்லோரும் ஒரே கும்பல் என்று கூறி இன்னும் வியக்கவைத்தார். ஒரு நாள் காபி குடிக்கும்போது 'அருள், ஹெர்பர்ட்டின் கவிதைகளுக்கு எங்கு வாசிப்பு நிகழ்வுகள் நடத்துவோம் தெரியுமா?. கத்தோலிக்க தேவாலயங்களில்தான்' என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கம்யூனிஸ்டுகள் எல்லாவித அறிவியக்கங்களையும் சந்தேகமாகப் பார்த்தது, அது தொடர்பான அடக்குமுறைகள் என பல செய்திகள் சொன்னார். நாங்களெல்லாம் பரம நாத்திகர்கள். ஆனால் தேவாலயம்தான் அறிவுஜீவிகளின் ஒரே புகலிடம் என்று சொல்லி சிரிப்பார். அடக்குமுறையினை எதிர்கொள்ள மிக வலிமையான ஆயுதம் நகைச்சுவையும், எள்ளலும்தான் என்றும் சொல்வார்.
அதற்குப் பின்பு வரிசையாக நடைபெற்ற magic lantern புகழ் ஹாவெல்லின் வெற்றி, சாலிடாரிடியின் வெற்றியும் தோல்வியும், சோவியத்தின் சரிவும் பிரிவும் என பல நிகழ்ச்சிகளை புரிந்துகொள்ள அவருடன் பேசிய விவாதங்கள் உதவின.
இருபது ஆண்டுகளில் எத்தனை சரித்திரம் !
ஆமாம் திடீரென்று என்ன பழைய நினைவுகள்? சென்ற வாரம் பெங்களூரில் பழைய குப்பைகளை கிளறும்போது கிளம்பிய பூதம்தான் இது. மேலே கண்ட மொழிபெயர்ப்பு பழையது அல்ல. புதியது.

Saturday, October 09, 2004

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ...

" பகல் நேரத்திலே முனி சிலைகிட்ட தனியா வெளையாடாதேடா.
முனி முழிச்சிட்டு அலையுற நேரம். ராத்திரி வரலாம் வா."

Friday, October 08, 2004

வையத் துண்டுகள் - 2004 இயல்பியல் நொபெல் --1

" வாளைச் சுற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் ... "
- பாரதிதாசன்


வையத்தைத் துண்டு செய்வது பண்டைக்காலத்திலிருந்தே அதை அறிவதற்கான ஒரு வழிதான். மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி போன்ற பொருண்மைகள் அனைத்தும் பஞ்சபூதங்களினால் ஆனவை என்ற ஒரு கருத்தும் இப்படி வையத்தை துண்டு செய்து அறிதல் எனும் மனிதனின் இயல்பான அறிவியல் செயல்பாடுபாடுகளில் ஒன்றே ஆகும். உலகின் அனைத்துக் கலாச்சாரங்களும் தத்தம் அன்றாட வாழ்வை நடத்தத் தேவையான ஊண், உடை, உறையுள், போர் போன்றவற்றை வளமாக்கிப் பெருக்க தொழில் நுட்பங்களைக் காணவும், மிஞ்சியநேரத்தில் யாக்கையின் நிலையாமை பற்றி யோசித்து சமயங்களை வளர்த்து வளப்படுத்தவும், இத்தகைய வையத்தைத் துண்டு செய்யும் தேர்ந்தறி (reductionist) முறையை பயன்படுத்தி உள்ளன. நவ அறிவியல் இம்முறையை அதன் எல்லைக்கே கொண்டுசென்று சென்ற நூற்றாண்டில் இயல்பியலிலும், உயிரியலிலும் பெரும் பாய்ச்சல்களைக் கண்டுள்ளது. இருநூற்றாண்டுகளாகவே அறிவியலின் இந்த செயல்பாட்டினால் செறிவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட முழு 'அறிவையும்' மனிதனின் பிற பழமையான அறிமுறைகளான தத்துவமும், இறையியலும் (philosophy and theology) இன்னும் தமக்குள் உள்வாங்கி முழுக்கச் செரிக்க முடியவில்லை. இதைப் பற்றி பின்னால் பதிக்க எண்ணியுள்ளேன். இப்பதிவில் இவ்வாண்டின் இயல்பியல் நொபல் பரிசுபற்றி.

பொருண்மையின் கட்டமைப்பு என்பது அறிவியலின் மிக ஆதாரமான அறிபுலன்களில் ஒன்று. அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பது இன்று பொதுஅறிவு. அவ்வணுக்களை பொருண்மையாக (முன்னே சொன்ன 'மனிதன், மைசூர்பாகு, மலேரியா சுரக்கிருமி') வைத்திருக்க சில விசைகள் தேவை. சில அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள், பல மூலக்கூறுகள் சேர்ந்து உயிர்ச் செல்கள், பல செல்கள் சேர்ந்து உயிரிகள் என பல அடுக்குகளாக கட்டப் பட்டது நம் ஒவ்வொருவர் உடம்பும் என்பதும் நாம் அறிந்ததே. அணுக்களையும் அவற்றின் கட்டமைப்புகளையும் அவற்றில் இயங்கும் விசைகளையும் இயல்பியல் ஆராய்கிறது. இதேபோல் மூலக்கூறுகளின் அமைப்பு விசைகளை வேதியியலும், உயிர்ச்செல்லின் அமைப்பு, உயிரிகள், அவற்றின் வினையாற்றும் செயல்களை உயிரியலும் ஆராய்கின்றன.

இயல்பியல் அண்டத்தின் அனைத்து பொருண்மைகளின் ஊடேயும் இயங்கும் விசைகளாக நான்கு விசைகளைக் கண்டறிந்துள்ளது. அவை:

1. பொருண்மையீர்ப்பு விசை ( Gravitation. இதை புவி ஈர்ப்பு விசை என்று தமிழில் அழைக்கிறோம். ஆனால் புவி மட்டுமல்லாது எல்லாப் பொருண்மைகளுக்கு ஊடேயும் இது செயல்படுவதால் இதை பொருண்மையீர்ப்பு/நிறைஈர்ப்பு விசை என்பதே சரியானது. ஈர்ப்பு விசை எனும் பயன் பாடும் உள்ளது.)
2. மின்காந்த விசை (Electromagnetic force)
3. வல்விசை (Strong force)
4. மென் விசை (weak force)

இவற்றை முன்பெல்லாம் விசைகள் என்று அழைத்தாலும் தற்போதைய இயல்பியலில் இடைவினைகள் (interactions) என்றே அழைக்கின்றனர். நாம் இரண்டையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு விசையாகப் பார்ப்போம்.


1. பொருண்மைஈர்ப்பு/ நிறைஈர்ப்பு விசை:

அனைவரும் உனர்ந்த, அறிந்த விசை. தடுக்கிவிழும்போதும், நாற்காலி மேஜை ஏணி இவற்றிலிருந்து கீழே விழுந்திருந்தாலும் நமக்கு இதன் விசை என்னவென்று புரிந்திருக்கும். புவி நம்மை இழுக்கும் விசை புவிஈர்ப்பு விசை. நியூட்டன் மண்டையில் விழுந்த ஆப்பிள் இதனால்தான் விழுகிறது என்று உணர்ந்த அவர் எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட இவ்வாறே பொருண்மையுடையவையாக இருப்பதால் அனைத்துக்கும் ஒரே விதிதான் இருக்கவேண்டும் என்ற கருதுகோள் உடன் இந்த விசைக்கு கணித சமன்பாடுகளை விதிகளாக வகுத்தார். இவ்விதியின் படி எல்லாப் பொருள்களும் ஒன்றைஒன்று ஈர்த்துக் கொண்டு இருக்கின்றன. ஆப்பிளை புவி ஈர்ப்பதைப்போல புவியையும் ஆப்பிள் இழுத்துக் கொண்டுதான் இருக்கும். நிறை அதிகமாக இருப்பதால் புவி ஆப்பிள் பக்கம் நகருவற்குள் குறைந்த நிறையுள்ள ஆப்பிள் ஓடோடி புவியிலோரிடம் என்று விழுந்துவிடுகிறது. அதனால் விசை என்றுபார்த்தால் ஒன்றிலிருந்து ஆரம்பித்து இன்னொன்றின் மேல் போய்ச்சேர்ந்த்து செயல்படுவது போல் இல்லை இது. இரண்டு பொருண்மைகளும் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நிறை குறைந்தது அதிக தூரம் கடந்து மற்றதை அடைகிறது. அதனாலேயே இதை ஈர்ப்பு விசை (gravitational force) என்று கூறாமல், நிறைஈர்ப்பு இடைவினை (gravitational inteaction) என்ற முறையில் கணித சமன்பாடுகளை வகுத்தால் எல்லா விசைகளையும் ஒன்றுபோலவே கணிதத்தில் பாவிக்கலாம்.

விசைகளை கணிதம் மூலம் வடிவமைத்துப் பயிலும் ஒரு முறை "புலனக் கோட்பாடு" (Field Theory) ஆகும். இதன்படி, வெளியில் உள்ள பொருண்மைகள் எல்லாம் வெளியை நிறைஇர்ப்பு விசையினால் நிரப்பிஉள்ளன. அண்டவெளியிலுள்ள அனைத்து இடங்களிலும் இன்னிறைஈர்ப்பு விசை பரந்துள்ளது. எல்லாப் பொருண்மைகளும் இவ்விசையால் செலுத்தப் பட்டு ஒன்றைஒன்று ஈர்த்து உள்ளன. பெரும் நிறைப் பொருள்களாகிய விண்மீன்கள், சூரியன், கோள்கள் போன்றவை இவ்விசைக்குத் தக்கபடி நகர்த்து கொண்டு உள்ளன. ஐன்ஸ்டைன் இந்த புலனக் கோட்பாட்டை வரைகணித முறைப்படி மாற்றி அமைத்தார். அதை 'வரைகணிதமாக்கிய புலனக்கோட்பாடு' என்று அறிகிறோம். ஐன்ஸ்டைனின் பொது சார்புநிலைக் கோட்பாட்டின் (general theory of relativity) வழிமுறை இதுவேஆகும்.

நிறைஈர்ப்பு விசையின் ஒரு முக்கியத்தன்மை அது எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு விசைதான் என்பதாகும். அதாவது எந்த நிறையுள்ள பொருளும் மற்றதை ஈர்த்துக் கொண்டேதான் இருக்கும். விலக்காது. மேலும் இது ஒரு தொலை தூர செயலியும் ஆகும். அதாவது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் ஒவ்வொரு பொருண்மையும் அண்டவெளியில் இருக்கும் மற்ற எல்லாப் பொருண்மைகளையும் இழுத்துக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய இழுசக்தியே அண்டத்தைக் கட்டியும் வைத்துள்ளது. நாம் பூமியோடு நம் மிக அருகிலுள்ள நிறைஅசுரனான சூரியனை நோக்கி விழுந்துகொண்டேதான் இருக்கிறோம். இந்த விசையைக் கணக்கிடுவதும் எளிது. பத்தாம் வகுப்புப் பொடியன்கள் கூட

விசை = G x(நிறை1)x(நிறை2)%(இடைத்தூரம்)x(இடைத்தூரம்)

என்று இரு நிறைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்து விடுவார்கள். இங்கே G என்பது ஈர்ப்புமாறிலி எனும் ஒரு எண்.
( வீட்டுப்பாடம்: அடுக்களையில் வைத்திருக்கும் ஊறுகாய் பாட்டில் சற்றே தொலைவிலிருக்கும் உப்புஜாடியை எந்த விசையோடு இழுக்கும் என்று கணக்கிடுங்கள். எப்படி நம்மால் இரவில் டமால் டமால் என்று ஏதும் சத்தம் கேட்காமல் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்பதற்கு விடை கிடைக்கும்)


2. மின்காந்த விசை:

இதுவும் நாம் அனைவரும் உணர்ந்த விசையே. மின்சாரம், காந்த விசை இரண்டும் ஒரே விசையின் இரு தோற்றங்கள்தாம்.

கொஞ்சநாள் துடைக்காத தொலைக்காட்சிப் பெட்டியின் சென்று அதன் ஒளிர்பரப்பின் மிகாண்மையில் புறங்கையைக் காட்டினால், சடசடவென்ற சத்ததுடன் கைமுடியெல்லாம் சிலிர்க்கும். இது மின்காந்தப் புலம் செயல்படுவதுதான். வானில் இடிஇடித்துப் பாயும் மாபெரும் ஒளி மின்னல்களும் அதே மின்காந்தப் புலங்களே. வீட்டில் காஸ் லைட்டர் வெறும் தீக்குச்சி போன்றது அல்ல. அதுவே ஒரு மின்னல் உற்பத்தி சாதனம் தான். டப் என்று அமுக்கும்போது லைட்டரின் முனையில் பார்த்தால் ஒரு குட்டி மின்னல் நடுத்தண்டிலிருந்து லைட்டரின் ஓரத்துக்குப் பாய்வதைப் பார்க்கலாம். நம் கவிஞர்கள் யாராவது "மின்னல் கையில் மின்னல்; வயிற்றில் நெருப்பு " என்று ஹை(யோ)கூ எழுதுவதற்குள் ஓடிவிடலாம்.

மின்காந்த விசையும் கணிதமுறைப்படி ஒரு புலனக்கோட்பாடாக முறைமைப் படுத்தப் பட்டுவிட்டது.இதுவும் ஒரு தூரச் செயலி விசைதான். அதாவது அண்டவெளி எல்லாம் இவ்விசை பரவியுள்ளது. இந்தவிசை மூலக்கூறுகளுக்கு இடையே செயல்பட்டு அனைத்து வேதிவினைகளுக்கு காரணியாகவும் இருக்கிறது. அணுக்களின் கட்டமைப்பில் எலக்ட்ரான்களும், அணுக் கருவும் செயல்படும் இடைவினைகளுக்கும் மின்காந்தப் புலன்களே காரணியாகும். ஒருவிதத்தில் மின்காந்த விசை நிறைஈர்ப்பு விசையிலிருந்து முக்கியமாக மாறுபடுகிறது. அதாவது மின்காந்தவிசையில் ஈர்ப்பும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. ஒத்த மின்னூட்டம் கொண்ட துகள்கள் எதிர்க்கவும், எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்கள் ஈர்ìகவும் செய்கின்றன. ஒருஅணுவில் எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டமும், அணுக்கருவிலுள்ள புரோட்டான்கள் நேர்மின்னூட்டமும் கொண்டவை. அவை ஒன்றஒன்று இழுத்துக்கொள்வதால் விதவிதமான தனிம அணுக்கள் கட்டப் பெறுகின்றன. இவ்வாறு நேர்,எதிர் ஆகிய இரு குணங்களும் பெற்றுள்ளதால், தூரச் செயலி விசையாக இருந்தாலும், மின்காந்தப் புலங்கள் அதிகதூரம் எட்டுவதில்லை. ஒன்றைஒன்று சமமாக்கிக்கொள்ளுவதால், எந்த அணுத்தொகுதியிலிருந்Ðõ வெகுதூரம் இவை திறனுடன் இயங்குவதில்லை. அண்டவெளியின் பெரும் கட்டுமானத்தை அதனால் நிறையீர்ப்பு விசையே தீர்மானிக்கிறது. ஆனால் சிறு தொலைவுகளில் வரவர மின்காந்த்த விசைகள் மிகப் பலம் பெறுகின்றன. ஒரு அணுவுக்குள் எலக்ட்ரான்களும் கருவும் எதிரெதிர் மின்னூட்டங்கள் பெற்றிருந்தும் அவை ஒன்றைஒன்று ஈர்த்து சேர்ந்து புஸ்வாணமாகாமல் இருக்க குவாண்ட விதிகள் செயல்படுகின்றன. குவாண்டப் புலன் கோட்பாடு ஒரு முழுமையான கோட்பாடாகும். சிறப்புச் சார்பியல் கொள்கையையும் குவாண்டக் கொள்கையையும் இணைத்து உருவாக்கிய குவாண்ட மின்காந்த இயங்கியல் (Quantum Electro Dynamics) முழுமையானதாகவும் சரியான வருவதுகூறும் (predictive) இயல்புள்ளதாகவும் இருக்கிறது.

இதுவரை நாம் கண்டது அண்டத்தின் ஆதார விசைகளில் இரண்டைப்பற்றி. இவற்றிற்கு இணையாக பருண்மைப் பொருள்களாக ஆதாரத் துகள்கள் உள்ளனவா? இருந்தால் அவை என்ன என்று பார்ப்போம்.

Saturday, October 02, 2004

காந்தி ?

தாத்தா ஒரு ராட்டை வைத்திருந்தார்.படுக்கை வசமாக வைத்து உபயோகிப்பது. நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது தினமும் சிறிது நேரம் அதில் நூல் நூற்பார். நீளமான பஞ்சிலிருந்து எங்கே நூல் இழை துவங்குகிறது என்பதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். தக்களியின் அருகிலிருந்து கையை பின்னுக்கிழுத்து முட்டியை நேராக்கி தோளை உயர்த்தி முழு நீளமாய் நூல் திரியும் மர்மம் புரியாததாகவே இருந்தது. அப்புரம் சர்ர்ரென்று தக்களியில் அந்த நூல் சிண்டாக சுற்றும்போது ஆகா என்றிருக்கும். தாத்தாவுக்கு அது ஒருவிதமான பிரார்த்தனை என்றே நினைக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அந்த நூலை எல்லாம் எடுத்துப் போய் சர்வோதய சங்கத்தில் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை பதிலியாக வேட்டியோ, துண்டோ கொடுப்பார்கள். டவுனுக்குப் போய் பஞ்சு வாங்கிவருவது, அதை நூலாக்குவது, நூலை சுற்றிமடித்து நீள் சுருளைகளாக்குவது அதை பத்திரப் படுத்துவது, அதைக் கொண்டு போய் சங்கத்தில் கொடுப்பது என்று ஒரு பெரிய பலபடிகள் நிறைந்த செயல்பாடு அது. ராட்டையை பண்படுத்த மூன்று வகை உருளைகளையும், தட்டுகளையும் முழுவதும் கழற்றி எண்ணெய் போடுவது, விசைக் கயறுகளை முறுக்கேற்றுவது என நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகளும் மாதமொருமுறை நடக்கும். இவ்வளவு வேலைகளும் இறுதியில் கிடைக்கும் ஒரு துண்டுக்காக அல்ல. எனக்கு Wren and Martin மற்றும் Loney கற்பித்த தாத்தாவின் ஒருவிதமான மனஒழுங்கு என்றே நினைக்கிறேன்.

என்னிடம் 'சத்திய சோதனை' ஒரே பதிப்பின் இரு பிரதிகள் இருந்தன. என் மாமாவும், சித்தியும் பள்ளியில் வாங்கிய பரிசுகள் இவை. அப்போதெல்லாம் பள்ளிகளில் டின் டின் பரிசு கொடுக்க மாட்டார்கள். ஐந்தாறு பிரதிகளில் இரண்டை நான் கொண்டு வந்தேன். முழு, சுருக்கப்படாத மொழிபெயர்ப்புகள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது விடுமுறையில் முழுவதும் படித்தேன். இன்றுவரை அதன் தாக்கம் நீங்கவில்லை. பின்னாளில் பதினாறு பதினேழு வயதில் காந்தியைப் பற்றிய பல படிமங்களும் மாறின. கல்லூரியில் வந்தபிறகு அரசியல் என்பது அவ்வளவு நேர்கோட்டுச் செயல்பாடு அல்ல என்பது புரிந்தது. இந்திய மரபின் பல முகங்களையும் முழுவீச்சில் எதிர்கொண்டால் அது சமூகத்தை முற்றும் சின்னாப் பின்னமாக்கும் என்பதும் விளங்கியது. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களுக்கு நம் கலாச்சார புனைகதைகளின் மீது இருக்கும் கோபமும், அவற்றை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளின் மீது அவநம்பிக்கையும் அயற்சியும் வெளிப்படையாக அரசியலில் வந்தாக வேண்டிய நிர்ப்பந்தங்களும் பரவலாகின. இன்றைய அரசியலுக்கும் காந்திக்கும் அவ்வளவாக தொடர்பில்லாமல் போனது தற்செயலானதல்ல.


இங்கே சென்னையில் வீட்டுக்கு சற்றே தொலைவில் இருக்கும் காதி கடைக்கு அடிக்கடி செல்லுகிறேன். பல மளிகைப் பொருள்களும் இங்கேதான் வாங்க எனக்கு விருப்பம். ஆனாலும் வீட்டருகே இருக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் தொடரின் ஒரு கிளையில்தான் மிகுதியாக வாங்குகிறோம். தரம் முக்கிய காரணி அல்ல. வசதிதான். இந்த தொடர்கடையில் விற்கும் பருப்பும், அரிசியும், அவர்கள் பிரீமியம் என்று போட்டிருக்கும் அடுக்கிலும் தரமில்லாதவையே. எப்பொழுதெல்லாம் காதி கடைக்கு செல்லுகிறேனோ அப்போதெல்லாம் நல்லெண்ணெய், பருப்பு, போன்றவைகளும் பிற மூலிகைப் பொருள்களும் நிறைய வாங்குகிறேன். காதிப் பொருள்களின் தரம் மிக நன்றாக இருக்கிறது. தற்போது மீண்டும் சர்வோதைய அமைப்பு விளம்பரப் படுத்துதலிலும் பிற காதிப் பொருள்களை சந்தைப் படுத்துவதிலும் முனைந்துள்ளது மகிழ்சியாக உள்ளது. காந்தியின் இந்தியப் பொருளாதாரம், உற்பத்தி முறை பற்றிய கருத்துகளில் பல இன்னும் நோக்கத் தக்கன.இன்றைக்கு நான் ஒரு காந்தீய வாதி அல்லன். ஆனாலும் காந்தியப் போல என்னைப் பாதித்த இந்தியச் சிந்தனை வாதியும் இல்லை.