Saturday, October 02, 2004

காந்தி ?

தாத்தா ஒரு ராட்டை வைத்திருந்தார்.படுக்கை வசமாக வைத்து உபயோகிப்பது. நாங்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது தினமும் சிறிது நேரம் அதில் நூல் நூற்பார். நீளமான பஞ்சிலிருந்து எங்கே நூல் இழை துவங்குகிறது என்பதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். தக்களியின் அருகிலிருந்து கையை பின்னுக்கிழுத்து முட்டியை நேராக்கி தோளை உயர்த்தி முழு நீளமாய் நூல் திரியும் மர்மம் புரியாததாகவே இருந்தது. அப்புரம் சர்ர்ரென்று தக்களியில் அந்த நூல் சிண்டாக சுற்றும்போது ஆகா என்றிருக்கும். தாத்தாவுக்கு அது ஒருவிதமான பிரார்த்தனை என்றே நினைக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை அந்த நூலை எல்லாம் எடுத்துப் போய் சர்வோதய சங்கத்தில் கொடுத்து வருவார். வருடத்துக்கு ஒருமுறை பதிலியாக வேட்டியோ, துண்டோ கொடுப்பார்கள். டவுனுக்குப் போய் பஞ்சு வாங்கிவருவது, அதை நூலாக்குவது, நூலை சுற்றிமடித்து நீள் சுருளைகளாக்குவது அதை பத்திரப் படுத்துவது, அதைக் கொண்டு போய் சங்கத்தில் கொடுப்பது என்று ஒரு பெரிய பலபடிகள் நிறைந்த செயல்பாடு அது. ராட்டையை பண்படுத்த மூன்று வகை உருளைகளையும், தட்டுகளையும் முழுவதும் கழற்றி எண்ணெய் போடுவது, விசைக் கயறுகளை முறுக்கேற்றுவது என நுணுக்கமான தொழில்நுட்ப வேலைகளும் மாதமொருமுறை நடக்கும். இவ்வளவு வேலைகளும் இறுதியில் கிடைக்கும் ஒரு துண்டுக்காக அல்ல. எனக்கு Wren and Martin மற்றும் Loney கற்பித்த தாத்தாவின் ஒருவிதமான மனஒழுங்கு என்றே நினைக்கிறேன்.

என்னிடம் 'சத்திய சோதனை' ஒரே பதிப்பின் இரு பிரதிகள் இருந்தன. என் மாமாவும், சித்தியும் பள்ளியில் வாங்கிய பரிசுகள் இவை. அப்போதெல்லாம் பள்ளிகளில் டின் டின் பரிசு கொடுக்க மாட்டார்கள். ஐந்தாறு பிரதிகளில் இரண்டை நான் கொண்டு வந்தேன். முழு, சுருக்கப்படாத மொழிபெயர்ப்புகள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது விடுமுறையில் முழுவதும் படித்தேன். இன்றுவரை அதன் தாக்கம் நீங்கவில்லை. பின்னாளில் பதினாறு பதினேழு வயதில் காந்தியைப் பற்றிய பல படிமங்களும் மாறின. கல்லூரியில் வந்தபிறகு அரசியல் என்பது அவ்வளவு நேர்கோட்டுச் செயல்பாடு அல்ல என்பது புரிந்தது. இந்திய மரபின் பல முகங்களையும் முழுவீச்சில் எதிர்கொண்டால் அது சமூகத்தை முற்றும் சின்னாப் பின்னமாக்கும் என்பதும் விளங்கியது. இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களுக்கு நம் கலாச்சார புனைகதைகளின் மீது இருக்கும் கோபமும், அவற்றை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகளின் மீது அவநம்பிக்கையும் அயற்சியும் வெளிப்படையாக அரசியலில் வந்தாக வேண்டிய நிர்ப்பந்தங்களும் பரவலாகின. இன்றைய அரசியலுக்கும் காந்திக்கும் அவ்வளவாக தொடர்பில்லாமல் போனது தற்செயலானதல்ல.


இங்கே சென்னையில் வீட்டுக்கு சற்றே தொலைவில் இருக்கும் காதி கடைக்கு அடிக்கடி செல்லுகிறேன். பல மளிகைப் பொருள்களும் இங்கேதான் வாங்க எனக்கு விருப்பம். ஆனாலும் வீட்டருகே இருக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் தொடரின் ஒரு கிளையில்தான் மிகுதியாக வாங்குகிறோம். தரம் முக்கிய காரணி அல்ல. வசதிதான். இந்த தொடர்கடையில் விற்கும் பருப்பும், அரிசியும், அவர்கள் பிரீமியம் என்று போட்டிருக்கும் அடுக்கிலும் தரமில்லாதவையே. எப்பொழுதெல்லாம் காதி கடைக்கு செல்லுகிறேனோ அப்போதெல்லாம் நல்லெண்ணெய், பருப்பு, போன்றவைகளும் பிற மூலிகைப் பொருள்களும் நிறைய வாங்குகிறேன். காதிப் பொருள்களின் தரம் மிக நன்றாக இருக்கிறது. தற்போது மீண்டும் சர்வோதைய அமைப்பு விளம்பரப் படுத்துதலிலும் பிற காதிப் பொருள்களை சந்தைப் படுத்துவதிலும் முனைந்துள்ளது மகிழ்சியாக உள்ளது. காந்தியின் இந்தியப் பொருளாதாரம், உற்பத்தி முறை பற்றிய கருத்துகளில் பல இன்னும் நோக்கத் தக்கன.இன்றைக்கு நான் ஒரு காந்தீய வாதி அல்லன். ஆனாலும் காந்தியப் போல என்னைப் பாதித்த இந்தியச் சிந்தனை வாதியும் இல்லை.

1 comment:

புலம்பல்ஸ் said...

காதிக் கடையில் நீங்கள் வாங்குவது, வாங்க விழைவது, பாராட்டத்தக்கது. காதி உடுத்துவதுண்டா?