Friday, October 15, 2004

கூழாங்கற்கள்

கூழாங்கற்கள்
-------------------

இந்தக் கூழாங்கல்
ஒரு முழுமையான உயிரி

தனக்கே அது நிகரானது
தனது எல்லைகளை
தானே அது உணர்ந்துள்ளது

கல்தன்மையாலே
முழுதும் நிரம்பியுள்ளது

அதன் மணமோ
எதையும் நினைவுபடுத்துவதில்லை
எதையும் வெருட்டி ஓட்டுவதில்லை
எத்தாபத்தையும் எழுப்புவதுமில்லை

அதன் களிப்பும் விறைப்புமே
அதன் தகைமையும் பொற்பும்

என் கையில் அதை ஏந்தும்போதும்
அதன் பொலிவுடம்பில்
இப்பொய் வெதுப்பு ஏறும்போதும்
மனம் கனத்து வாடுகிறேன்

கூழாங்கற்களை
நாம் அடக்கியாள முடியாது
அமைதியான நிர்மலமான கண்கொண்டு
இறுதிவரை நம்மைப் பார்த்திருக்கும் அவை.ஸ்பிக்னியூ ஹெர்பர்ட் (1924-98) போலந்து நாட்டுக்கவி. சென்ற நூற்றாணடில் இரண்டு இலக்கிய நொபல்கள் போலிஷ் மொழிக்கு கிடைத்தும், ஹெர்பர்ட் அதை அடையாததில் போலந்து மக்களுக்கு பெருவியப்பு. போலிஷ்சின் தலைமைக் கவியாக இவரையே அனைவரும் கருதுகிறார்கள்.

84-85 வாக்கில் எங்கள் கல்லூரி மாணவர் இதழுக்காக இவரின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தேன். 'கூழாங்கற்கள்', 'ஒரு முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து தகவலறிக்கை' போன்ற கவிதைகள் அவை. அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு போலந்து ஏரண இயலாளர் (logician) கல்லூரிக்கு அழைப்பு விஞ்ஞானியாக வந்திருந்தார். அவருடன் பேசும்போது ஹெர்பர்ட்டைப் பற்றி கேட்டேன். மிகவும் மகிழ்சியாக பல விடயங்களை பார்க்கும்போதெல்லாம் பகிர்ந்து கொள்வார். அவரும் கராகோவ் நகரத்தில் ஹெர்பர்ட்டுடன் கல்லூரியில் கழிந்த காலங்கள் என பலவற்றையும் பற்றி பேசுவார். அறிவியப் புனைகதைகள் எழுதும் ஸ்டானிஸ்லா லெம் எனக்கு மிகப்பிடித்தமாவர் என்று ஒரு நாள் சொல்லப்போக அவரும் க்ராகோவ் ஆள்தான், நாங்க எல்லோரும் ஒரே கும்பல் என்று கூறி இன்னும் வியக்கவைத்தார். ஒரு நாள் காபி குடிக்கும்போது 'அருள், ஹெர்பர்ட்டின் கவிதைகளுக்கு எங்கு வாசிப்பு நிகழ்வுகள் நடத்துவோம் தெரியுமா?. கத்தோலிக்க தேவாலயங்களில்தான்' என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. கம்யூனிஸ்டுகள் எல்லாவித அறிவியக்கங்களையும் சந்தேகமாகப் பார்த்தது, அது தொடர்பான அடக்குமுறைகள் என பல செய்திகள் சொன்னார். நாங்களெல்லாம் பரம நாத்திகர்கள். ஆனால் தேவாலயம்தான் அறிவுஜீவிகளின் ஒரே புகலிடம் என்று சொல்லி சிரிப்பார். அடக்குமுறையினை எதிர்கொள்ள மிக வலிமையான ஆயுதம் நகைச்சுவையும், எள்ளலும்தான் என்றும் சொல்வார்.
அதற்குப் பின்பு வரிசையாக நடைபெற்ற magic lantern புகழ் ஹாவெல்லின் வெற்றி, சாலிடாரிடியின் வெற்றியும் தோல்வியும், சோவியத்தின் சரிவும் பிரிவும் என பல நிகழ்ச்சிகளை புரிந்துகொள்ள அவருடன் பேசிய விவாதங்கள் உதவின.
இருபது ஆண்டுகளில் எத்தனை சரித்திரம் !
ஆமாம் திடீரென்று என்ன பழைய நினைவுகள்? சென்ற வாரம் பெங்களூரில் பழைய குப்பைகளை கிளறும்போது கிளம்பிய பூதம்தான் இது. மேலே கண்ட மொழிபெயர்ப்பு பழையது அல்ல. புதியது.

2 comments:

writerpara said...

மிக அழகான கவிதை; நேர்த்தியான மொழிபெயர்ப்பு. எப்போதாவது தான் ரசிக்கக்கூடிய கவிதைகள் கிடைக்கின்றன - இப்படி.

arulselvan said...

பாரா, நன்றி.