Saturday, October 30, 2004

பழசு கண்ணா பழசு

இந்த வாரம் பெங்களூரில் மறுபடி பழைய குப்பைகளை கிளரிக் கொண்டிருக்கும்போது அகப்பட்டது கணையாழி அக்டோ பர் 1983 இதழ். அதில் கிடைத்தது.


சாலை
---------


பொது மக்களுக்கு
அன்பார்ந்த அறிவிப்பு:
பாதசாரிகள்
நடைபாதையில் செல்லவும்
தார்ச்சாலைகள்
கார்களுக்காக. அன்றில்பிற
பெட்ரோல் வாகனங்கள்
பெற்றுள்ளீரா?
வேகத்துக்கு முதலிடம்
முக்கியமாய் முக்குகளிலும்
வாகனங்கள் வருவதை
பார்த்து நடங்கள்
மிதிவண்டிகள் எந்நாளும்
மெதுவாய்ச் செல்வதால்
அவையும் நடைபாதையில்
அனுமதிக்கப்படும்
ஹவாய் செருப்புகள்
சரிப்படாது சகதியில்
தோல் ஷூக்கள் பாவியுங்கள்
வெறும் கால்களும் வழுக்குவதில்லை.
பதித்திருக்கிறோமே பலகற்கள்
புழுதி இடையில் பரவி
நாளடைவில் அவை சரியாகும்
கிழிந்த பாய்கள் கால்கள்
சில கைகளும் பரப்பியிருக்கிறோம்
தாண்டிப் பயிலவும்
மண் குவியல்களை
நடந்து கலைக்காதீர்கள்
விலகி நடவுங்கள் - இந்த இடத்தில்
சாலையை உபயோகியுங்கள்
சவுளிக்கடை ரிப்பேர்
இந்தக்கம்பம் முக்கியம்
இதை சுற்றிச் செல்லுங்கள்
பாம்புப்புற்று கீழே பார்க்கவில்லையா
பைசா போடலாம்
விபூதிக்கு நாலடி போனால்
பாலிதீன் பைகளில் கிடைக்கும்
அடுத்ததாய் நீங்கள்
கவனிக்க வேண்டியது
ஒன்றுதான்
கழிப்பிடங்கள்
சரியாய் சில்லரை வேண்டும்
அன்றேல் வீடுவரை
காத்திருக்க நேரிடும்
கடந்தவுடன் கம்பிகள் வரும்
மாணவர் அமர. பின்பு
ரோட்டரி உபய பஸ் ஸ்டாப்
அங்கே
காத்திருக்கலாம் அல்லது கடக்கலாம்.

-----------

அப்போதெல்லாம் மொழி அழகுகளைத் தவிர்த்து, குரலை உயர்த்தாமல் உரை நடைக்கு மிக அருகில் எழுதினால் கவிதையில் கவிதை மட்டுமே இருக்கும், மற்ற வெட்டி விஷயங்களில் கவனம் சிதறாது என்பது ஒரு சாரார் முன்வைத்து செயலாக்கிய கவிதைபற்றிய ஒரு கருத்துருவாக்கமாக இருந்தது. கநாசு இந்த மாதிரி plain verse எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நல்ல தமிழ் இலக்கியப் பயிற்சியுடைய சி.மணி யில் ஆரம்பித்து ஞானக்கூத்தன் போன்றோர் இன்னொரு விதக் கவிதைகள் எழுதினர். அங்கதம் கலந்து, தமிழ் இலக்கணத்துக்கு எழுதப்பட்டவையோ என சந்தேகிக்கும் அளவு உள்ளுறை மொழிச்சந்த அலகுகளுடன் அவர்கள் எழுதினார்கள். பிச்சமூர்த்தியின், பிரமீளின் கவிதைகள் இந்துக் காவியங்கள், தத்துவங்களைத் தொட்டு வேறு பாதையில் சிறந்த கவிதைகளாயின. இதன் இன்னொரு கிளையாக நகுலன், சுரா போன்றோர் எழுதியவை அன்றாட வாழ்வின் இருண்மைப் பொந்துகளை தேடிக்கொண்டிருந்த்தன. வானம்பாடிகள் ஒரு இயக்கமாக, அரசியல், மக்கள் கலை போன்றவற்றை முன்னெடுத்துச் சென்று கவிதையை பொதுமைப் படுத்தினார்கள்.
தமிழ் புதுக்கவிதையின் இத்தகைய ஒவ்வொரு கிளையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்தித்தன. மொழிப்பயிற்சி அற்ற, சோம்பேறிகளால் எழுதப்படும் சொற்கூட்டங்களின் இருண்மையே கவித்துவமாகவும், கோஷங்கள், இரு அடி தத்துவ மலினங்களின் ஹைக்கூக்கள் போன்ற வடிவங்கள் அழகுணர்சியாகவும் பிறழ்ந்தறிதலால் கவிதைகளாக அடையாளம் காணப்பட்டு மூட்டைமூட்டையாக தமிழ்க் கவிதைகள் உற்பத்தியாகின. சிறந்த கவிஞர்கள் நல்ல கவிதையையே என்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைத் தொழில்நுட்பம் மேற்சொன்ன எல்லாக் கூறுகளிலிருந்தும் பெற்றதாக இருக்கிறது. அந்தவிதத்தில் தமிழ்க்கவிதை நல்ல உயர்தளத்திலும், படு பாதாளத்திலும் சமமாகக் கால் பரப்பி இப்போது விரிந்திருக்கிறது.

மேலே இருக்கும் கவிதையை எழுதியது நான்தான். சிறுவயதில் இப்படி plain ஆகத்தான் எழுத பழகிக்கொண்டிருந்தேன். இப்போது என் கவிதை பற்றிய அழகுணர்ச்சி மேலே கண்டதுபோல் இல்லை. தற்கால இலக்கியச் சிறு பத்திரிக்கை இதழ் ஒன்றையும் , அக்கால செந்தமிழ்ச் செல்வியின் நான் படிக்காத ஒரு இதழையும் காட்டி இதில் எதை முதலில் படிப்பாய் என்று கேட்டால் நிச்சயமாக செந்தமிழ்ச் செல்வி இதழைத்தான் என்று இப்போது கூறுவேன். மேலே இருக்கும் பயிற்சிக் கவிதையையும் இப்போது வேறுமாதிரி எழுதுவேன் என்று நினைக்கிறேன். நல்ல வேளையாக கவிஞனாக நான் முயற்சிக்கவில்லை.

அந்தக் கணையாழி இதழின் சிறந்த கவிதை இரா. முருகனின் பாம்புப் பிடாரன் பற்றிய கவிதையே. அருமையான கவிதை அது. அப்புறமா போடறேன்.

2 comments:

Kannan Ramanathan said...

பெங்களூரில் எங்கு பழைய புத்தகங்கள் வாங்கறீங்க? பல நடை பாதை கடைகளில் வெறுமனே Shiv Kheraவையும் Sydney Sheldonனையும் தவிர வேறு எதுவுமே இல்லை :(

arulselvan said...

கண்ணன்,

நான் கிளறியது வீட்டிலிருந்த என்னுடைய பழைய புத்தகப் பெட்டிகளைத்தான். !
பெங்களூரில் முன்னெல்லாம் பழைய புத்தகங்கள் நிறையக் கிடைக்கும்.
இப்போது இங்கே தேடிப் பாருங்கள்(ஆங்கிலப் புத்தகங்களுக்கு மட்டும்):

1. பிரிகேட் ரோட் இல் இருக்கிற செலக்ட் புக் ஸ்டால்
(எம்ஜி ரோட்ல இருந்து போகும்போது இடதுகை பக்கம் சிறு சந்தில் இருக்கிறது. பல பொக்கிஷங்களை முன்னெல்லாம் இங்கே பார்க்கலாம்)
2. பளேபெட் தெருவோரங்கள்: அங்கே சூக் சாகர் குஜ்ஜு ஹோட்டலிலிருந்து உள்ளே போகும் சிறு சந்துகளில் முன்பு நிறைய கடைகள் இருக்கும்
3. மல்லேஸ்வரம்: ஆறாம் கிராஸ் கீதாஞ்சலி தியேட்டருக்குப் பின்னாடி வயாலிக்காவல் போகும் தெருவில் இரண்டொரு கடைகள் இருந்தன.

Lucky Sidewalking ...

அருள்