கேசிஎஸ் பணிக்கரின் ஓவியக்காட்சிக்கு சென்று வந்தேன். பணிக்கரைப் பற்றியும் இக்காட்சி பற்றியும் ஓவியர் நாகராஜன் எழுதிய விரிவான அறிமுகம்
இந்தச்சுட்டியில். 50/60 களில் ஆக்கப்பட்ட, நான்கு பெரிய கித்தான் ஓவியங்களும், ஒரு இயல்தன்மை நீர்மை ஓவியமும், பல கோட்டுருவ விரைகுறிப்பு வரைஓவியங்களுமாக இக்காட்சியை அமைத்திருந்தனர். காட்சியிலிருந்த கோட்டுருவ வரைவுகள் பலவும் முறைசார்ந்த பயிலகத்தில் கற்ற ஒரு ஓவியரின் வரைதாள்களைப் போலவே இருந்தன. பென்சில், கரிக்கட்டை, கரு மைப்பேனா கொண்டு வரையப்பட்டவை இவை. பலவும் குறிப்பு ஒவியங்கள் போலவே இருந்தன. இயல்முறை ஓவியங்கள். ஆண்,பெண் உருவ வரைவுகள். வரைவுகள் பலவும் முகம் மற்றும் தோள், மார்பு வரை திருத்தமாகவும் நுணுக்கமாகவும் அதற்குக்கீழே நுணுக்கமற்றும் இருந்தன. ஆகவே அவை குறிப்பு வரைவுகள்தான் என நினைக்கிறேன். மற்ற முழுமையான வரைவுகளின் கோட்டிழுப்புகளும், நிழல்-வெளிச்ச துல்லியத்தை வெளிக்கொணர பயன்படுத்திய வெண்கட்டி பிரயோகமும் தரப்படுத்திய தொழில் நுட்பத்தையே காட்டின. எந்த வரை ஓவியமும் பணிக்கருடையது எனக்கூறும்படி தனித்தன்மையுடையதாக இல்லை. ஒரு பிரபல கடந்த தலைமுறை ஓவியரின் வரலாற்றுத் தரவுகளாகவே அவை இருக்கின்றன.
ஆனால் வண்ணத் தீற்றோவியங்கள் பணிக்கருடையது என்பதை அடையாளம் காணக்கூடியவையாக இருந்தன. இருந்த ஒரே நீர்மை ஓவியம் தேர்ச்சிபெற்ற ஒரு ஓவியரையே காட்டியது. பெரும் கித்தான் ஓவியங்கள் அவருடைய பெயர் சொல்லும் "சொற்கள், குறிகள்" தொடர் ஓவியங்களின் பிரதிநிதிகளாக இருந்தன. இந்தியத்தன்மையை நவீன இந்திய ஓவியங்களுக்கு உள்ளிடுவது அவருடைய முயற்சியாக இருந்திருக்கிறது. தீற்றோவியங்களின் கோட்டுத்தன்மை ஒரு முக்கிய தென்னிந்திய அடையாளமாக காணப்பட்டு பின்னாளில் அது சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற பல ஓவியர்களின் தனிப் பெரும் குறியீடாகவும் ஆகியுள்ளது. madras metaphor என அறியப்படும் இவ்வடையாளம் பணிக்கருடன் ஆரம்பித்தது. அதற்கான முயற்சிகளின் ஆக்கங்களாக மூன்று கித்தான் ஓவியங்கள் இருந்தன. இவற்றைக் கண்டதில் மிகவும் மகிழ்தேன். மேற்கத்திய ஓவிய இயக்கங்களின் கருத்தாக்கப் பள்ளிகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெளிவந்து தீட்டிய ஓவியங்கள் எனக் குறிப்பிடப்பட்டவைகளிலும் பணிக்கர் அக்கருத்தாக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை என்பது காட்சியிலிருக்கும் ஓவியங்களின் தொழில்நுட்பத்திலும் வரைகலையிலும் தெரிகிறது. பின்னாளில் ரெட்டப்ப நாயுடு போன்றவர்கள் இந்த முயற்சியை முழுமையாக்கினார்கள் என்றே தோன்றுகிறது.
ஆமாம் இதெல்லாம் தேவையா, கலையுணர்வு என்பதுதான் என்ன? மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு ஒரு ஓவியக்காட்சிக்குப் போய் அங்கே ஓவ்வொரு படத்தின் முன்பும் அருகிலிருந்தும் தூரம் போயும் உன்னிப்பாய் பார்த்தும் யோசனை செய்தும் - இதெல்லாம் படு செயற்கையாக இல்லை? இப்படித்தான் சென்னையின் மக்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. நான் மட்டும் தனியாளாகத்தான் இதைப் பார்த்தேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.
பயன்படுத்திய தமிழ்-ஆங்கில இணைச்சொற்கள்
-------------------------------------
இயல்தன்மை நீர்மை ஓவியமும்: realist watercolour
குறிப்பு ஒவியங்கள்: study sketches
கரிக்கட்டை: charcoal
கரு மைப்பேனா: india ink pen
கோட்டுருவ ஓவியம்: drawing/sketch
தீற்றோவியம்: painting