Sunday, November 07, 2004

பல்பொருள் பேரங்காடிகளும் பன்முக இந்தியத்துவமும்

நான்கைந்து வருடங்களுக்கு முன் தெற்காசிய வாணிகத்தை சற்றே சுவர் நீக்கி சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது இங்கே சென்னையில் ஒரு பேரங்காடியில் மளிகைச் சாமான்கள் பொறுக்கிக்கொண்டிருக்கும் போது 'லெமன் பஃப்' என்றொரு மஞ்சள் பொட்டலம் கண்ணில் பட்டது. ஒரு நொடி கழித்து என்னமோ தப்பு நடக்குது என்று மண்டையில் கிர்ர்ர் சுற்ற மீண்டும் ஒருமுறை அதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் மேலே பூனைமுதுகு மாதிரி நொகுநொகு என்று ஆனால் கீழே தளம் தளமாக எண்ணெய்ப்பாளங்கள் நிறைந்த வெஜிடபிள் பஃப் எனப்படும் உடனடி வயிற்றமிலச் சுரப்பூக்கிகள்தான். அந்தப் பெயர் மட்டும் என்னை இழுக்கவில்லை. அது தமிழில் அச்சடித்திருந்தது. அதிர்ச்சியில் தாவி அதைக் கைப்பற்றி திருப்பிப் பார்த்தால் அது இலங்கையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கைக்கூடையில் இரண்டைப் போட்டுக்கொண்டு வந்தேன்.

நானும் சிறுவயதிலிருந்து சோப்பு, பற்பசை, கிரைப் வாட்டர், பெப்ஸ் வில்லைகள், போன்ற சகலவித அகில இந்தியத் தயாரிப்புப் பொட்டலங்களின் அட்டைகளையும் காகிதங்களையும் பிளாஸ்ட்டிக் பைகளையும் பொறுக்கிப் பொறுக்கி திருப்பித் திருப்பி படித்திருக்கிறேன். நண்பர்கள் ஹாஸ்டலில் ஏதாவது உள்ளாடை வாங்கினால் கூட 'டேய் அந்த அட்டையை அவனுக்குக் கொடுத்துடுங்கடா, அவன் படிக்காமல் விடமாட்டான்' என்று கிண்டல் செய்யுமளவுக்குப் போன இந்தப் பொட்டலம் படிக்கும் வியாதி இன்னும் எனக்கு இருக்கிறது. எனக்குத் தெரிந்து எல்லா அகில இந்தியத் தயாரிப்புகளிலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே அச்சடித்திருப்பார்கள். அதனால் ஒரு பிஸ்கட் பாக்கட்டில் தமிழ் என்பது இப்போதைய செம்மொழி அறிவிப்பை விட எனக்கு அப்போது மகிழ்ச்சியளித்தது. வீட்டிலோ மனைவியும் குழந்தையும் அதைத் தொடக்கூட இல்லை. நானே இரண்டு பொட்டலங்களையும் சாப்பிட்டேன். அதற்கப்புறமும் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் பலமுறை வாங்கினேன். இரண்டு மூன்று வருடம் கழித்து அந்த நிறுவனமே சென்னையில் ஒரு கிளைத் தொழிலகத்தை திறந்து விட்டார்கள். இங்கேயே உற்பத்தி, இங்கேயே சந்தை. நிறைய லாபம். ஆனால் பொட்டல மேற்புறத்தில் தமிழைக் காணோம். ஆங்கிலம் மட்டும்தான்! உடனே அதை வாங்குவதை நிறுத்திவிட்டேன். இந்தச் சின்ன எதிர்ப்புக் கூட காட்டாவிட்டால், அதுவும் உயிர்வாழச் சற்றும் தேவையற்ற ஒரு சந்தைப் பொருளை வாங்குவதற்கு, பின் என்ன இது சந்தைச் சமுதாயம். இப்போது ஆறுமாதம் முன்னால் மறுபடியும் மஞ்சள் பொட்டலத்தில் தமிழில் லெமன் பஃப். எடுத்துப் பார்த்தால் இது வேறே ஒரு நிறுவனத் தயாரிப்பு. சரி என்று மீண்டும் லெமன் பஃப்.

எண்பதுகளில் தேசியத் தொலைக்காட்சியில் பரப்பப் பட்ட ராமாயண, மஹாபாரதக் கொடுந்தொடர்கள் நாட்டின் ஒற்றைப் பரிமாண தேசியத்தை முன்னுறுத்தி விரைவாக சிந்தனைக் குறுக்கங்களை நாட்டின் சகல மூலைகளுக்கும் சென்று எட்டவைத்தன. ஒரு பேட்டியில் ஆர்.கே. நாராயணன் அப்போது, 'ஐ கேன் நாட் வாட்ச் வெல் ஃபெட் குஜராத்தீஸ் ப்ராட் அப் ஆன் வனஸ்பதி ப்ளேயிங் கிருஷ்ணா' என்று மனம் வெறுத்துக் கூறினார். அத்தனை அழகுணர்ச்சியோடு தயாரிக்கப் பட்டவை அத்தொடர்கள். இந்தியாவிற்கே வந்தடையாத ஆப்பிள் கூட புராணகால அரச மாளிகை பழக்கூடைகளில் அலங்கரிக்க இருக்கும். ஆனால் ஷத்ரியனான ராமன் பதினாலு வருஷம் காட்டிலிருந்தாலும் வேட்டையாடி மாமிசம் சாப்பிடுவதை காட்டாமல் மிகக் கவனமான விழுமியங்களோடு தயாரிக்கப் பட்ட தொடர்கள் அவை. இவற்றின் கலாச்சாரத் தாக்கங்களின் தொடர்ச்சியாக ஹிந்தி கலந்த ஆங்கில விளம்பரங்கள், ஹிங்கிலீஸ் பொட்டல வாசகங்கள் எல்லாம் பரவிய கதை இப்போது ஒரு மார்க்கடிங் தொல்புராணமாகவே ஆகி விட்டது. அதே எண்பதுகளில் நடந்த ஒரு சர்வேயில் நாட்டின் சோப்பு விற்பையில் 40% தமிழ் நாட்டிலேதான் என்று கண்டனர். ஆனாலும் ஒரு அகில இந்திய தயாரிப்பு நிறுவனமும் சோப்புக்கட்டிகளின் உறையைத் தமிழில் அடிக்கவில்லை (சந்திரிகா போன்ற தமிழ் நாட்டுத் தயாரிப்புகளைத்தவிர). இப்போதோ பேரங்காடிகளில் பன்னாட்டு சோப்புகள், அழகு சாதனங்கள் முதல் பழச்சாறுகள் வரை குவிந்த்து கிடக்கின்றன.
சந்தையின் கடும் போட்டியும் புது உற்பத்தியாளர்களின் செயல்முறைகளும் அகில இந்திய உற்பத்தி நிலையங்களை காய்ச்சி எடுக்கின்றன என்றே தோன்றுகிறது. சென்ற வாரம் நான் வாங்கிய ஹமாம் சோப்பிலும், இன்று வாங்கிய புரூக் பாண்ட் ரெட் லேபில் தேயிலையிலும் அட்டைகளில் தமிழ் இடம் பெற்றிருப்பது தற்செயலானது அல்ல என்றே படுகிறது. ஹிந்துஸ்தான் லீவர் வளைந்து கொடுக்கிறது. இன்னும் சில வணிகச் சுவர்களை உடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க முடியுமோ ?

5 comments:

இராதாகிருஷ்ணன் said...

நம்மூர் பொட்டலங்கள் பெரும்பாலானவற்றில் தமிழில் இல்லையென்ற பிரக்ஞை மக்களிடம் மிகவும் குறைவு. அதைப்பற்றி அக்கறையும் இருப்பதில்லை.

தயாரிப்பாளர்களுக்கு ஆங்கிலத்தில் அடித்துவிடுவது மிகவும் சுலபமானது; அதை இந்தியா முழுவதற்கும் விநியோகித்துவிட முடிகிறது.

ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழியும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கான வலுவான நுகர்வோர் சட்டங்கள் ஏதேனும் இல்லையா என்று தெரியவில்லை.

அதேபோல, பொட்டலங்களில் அச்சடிக்கப்படும் தகவல்களும் மிகவும் குறைவு. தயாரிப்பில் கலந்துள்ள பொருட்கள், உணவெனில் சத்து சம்பந்தமான தகவல்கள், பயன்படுத்தியபின் பொட்டலத்தை எவ்வாறு கையாளவேண்டுமென்ற (மறுசுழற்சி முதலானவை) விவரங்கள் கண்டிப்பாக்கப்படவேண்டும்.

Kasi Arumugam said...

அருள்,

நல்ல கட்டுரை.

ராதா://நம்மூர் பொட்டலங்கள் பெரும்பாலானவற்றில் தமிழில் இல்லையென்ற பிரக்ஞை மக்களிடம் மிகவும் குறைவு.//

இதுதான் மிகமுக்கியமான விஷயம். எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்தப் 'பிரக்ஞை' ஏற்படுத்துவது ஒன்றே நாலு விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு செய்யக்கூடிய சமூகப்பணி. ஒவ்வொருவரும் இதை செய்தால் பரவலான விழிப்புணர்வு ஏற்படும்.

Anonymous said...

அருள், இலங்கையிலிருந்து வரும் "மிருகக் கொழுப்பில்லாத சுத்த்மான வெண்டர்லைட் சவர்க்காரத்தை" அதன் மேலிருந்த தமிழ் உறைக்காகவே பலநாட்கள் முகர்ந்து பார்த்துக்கொண்டு பெட்டியில் வைத்திருந்த நாட்கள் நினைவிருக்கிறது.

இந்தக் கருத்தின் தொடராக நான் இன்றைக்கு எழுதியது இங்கே; http://www.domesticatedonion.net/blog/?itemid=322

dondu(#11168674346665545885) said...

தமிழ் எழுத்துக்களுக்காக நீங்கள் சந்தோஷப்ப்படும் பட்சத்தில் உங்களுக்கு இன்னுமொரு உதாரணம் கொடுக்கிறேன். சிக்கிம், பூட்டான் லாட்டிரிச் சீட்டுகளில் தமிழ் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் சூட்சுமம் என்னவென்றால் தமிழனை விடப் பெரிய இளிச்சவாயனை இவ்வுலகம் கண்டதில்லை என்பதே ஆகும். இதற்கும் பெருமை கொள்வீர்களா தாங்கள்?
ராகவன்

arulselvan said...

ராகவன்,
இதில் பெருமை சிறுமையெல்லாம் இல்லை. ஒரு பயனாளி என்ற முறையில் நான் வாங்கும் பொருள் அது அமிர்தப் புட்டியோ, ஆலகால விஷ கோலாவோ அது என்ன என்பதை என்மொழியில் எனக்குத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். அதற்கான சட்டங்களை என் அரசு ஆக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நுகர்வோர் உரிமையில் இது நிச்சயம் அடங்கும். நான் லாட்டரிக் காகிதமும் வாங்கலாம், கள் மொந்தையும் வாங்கலாம். சட்டப்படி விற்பனைக்கு வந்தபிறகு இதற்காக நான் ஏன் பெருமையோ சிறுமையோ கொள்ளவேண்டும். அது என் தனி மனித விழுமியம் சார்ந்தது அல்லவா. வயதுவந்தபிறகு எல்லோருக்கும் நாட்டுக்கே எது நல்லது என்று வாக்களிக்கும் உரிமை உள்ளது. தனிமனிதனுக்கு எது நல்லது என்பது அவரவர்களுக்குத் தெரியாதா?

அருள்