Monday, December 20, 2004

ஹரப்பா நாகரிகத்தின் 'மொழி' - 2

ஹரப்பா நாகரிகத்தின் மொழி - 2
-------------------------------------------------


சென்ற வாரம் ஹரப்ப நாகரிகத்தின் மொழி பற்றி ஒரு மாற்றுக்கருத்தை முன் வைத்த கட்டுரை பற்றிய முதல் பதிவை இட்டிருந்தேன். அதன் இரண்டாம் பகுதியாக ஸயன்ஸ் இதழில் வந்த கருத்துகளைத் தொகுத்து இப்பதிவில் இடுகிறேன். உரிமைபெற்ற பதிப்பாகையால் மொத்த மொழிபெயர்ப்பாக இல்லாமல் குறிப்புகள் மட்டும் கீழே:

-> புதையாராய்ச்சி, வரலாற்று அறிஞர்கள் முன் கருதியிருந்ததைப் போல ஹரப்ப நாகரிகம் ஒருமுனைப்படுத்தப்பட்ட, அமைதியான, பலத்த நடுவண் அரசைக்கொண்டதாக இராமல், பன்முகமான, பல்மொழி புழங்கும் ஒரு பெரும்பரப்பு நாகரிகமாக இருந்ததாக இப்போது காண்கின்றனர். இவ்வரசை ஒன்றாகக் கட்ட தொழுகுறிகள் கொண்ட இலச்சினைகளும், பலகைகளும் பிற வழங்கிகளும் பயன்பட்டன என்பது இக்கருதுகோளாகும்.

எழுத்துருவா, இல்லையா?
------------------------------------

-> இத்தகைய கருதுகோளுக்கு எதிர்ப்பும் பலமாகவே இருக்கிறது. பல சிந்து சமவெளி நாகரிக அறிஞர்களின் பதில்வினைகள் இப்படி:

-> "இந்த குறித்தொகுப்பு ஒரு மொழியைக் குறித்ததாகாது எனும் கருத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன் " மார்க் கெனோயர், புதையாராய்ச்சி நிபுணர், விஸ்கான்ஸின் மாடிசன் பல்கலைக் கழகம்
-> "அம்மக்கள் மொழியை பொருள்கட்டுமைக்காமல் வேறே என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? " அஸ்கோ பர்போலா, மொழியியல் வல்லுனர், ஹெல்சிங்கி பல்கலைக் கழகம், ஃபின்லாந்து
-> "அவை ஒரு மொழிக்குறிகளாகவன்றி வேறெதுவாக இருப்பதற்கும் சாத்தியமே இல்லை. அது ஒரு முழுமையான மொழிக்குறியீடு. அது ஒரு பேச்சுஒலிக்குறியீடும் ஆகும்" கிரிகோரி பொஸ்ஸெல், மொழியியலாளர், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகம்.
->இப்படி எதிர்ப்புகள் இருந்தாலும், ஆதரவாளர்களும் கூடுகின்றனர்
-> ஹார்வர்ட் மானுடவியலாளர் ரிச்சர்ட் மெடோ, " இந்தக் கட்டுரை இத்துறைக்கு மிக முக்கியமான பயனளிப்பாகும். இது இத்துறையில் ஹரப்ப மொழிபற்றிய முடிச்சவிழாச்சிக்கலாக இருந்த ஒன்றையும் விடுவிக்கும்" என்கிறார்
-> வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழக ஸ்டீவென் வெபர்," சில சமயங்களில் துறைசாராத வெளியாட்கள் வந்துதான் இத்தகைய மிக அதாரமான கேள்விகளை எழுப்புகிறார்கள். இனி ஹரப்ப குறிகள் இன்ன மொழியின் எழுத்துவடிவம் தான் எனச் சொல்பவர்கள் முதலில் அது ஒரு எழுத்துவடிவம் தான் என்பதை முதலில் நிரூபிக்கவேண்டும்" என்கிறார்.

குறிகளின் காலம்:
--------------------------
-> ஏறக்குறைய 3200 கி.மு வில் இக்குறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன(எகிப்திய ஹீரோக்ளிபிக்ஸ் மற்றும் இராக்கிய கூனிபோர்ம் எழுத்துகளின் காலத்துக்கு இணையாக ). 2800 கி.மு வாக்கில் அவை சகஜமான புழக்கத்தில் வருகின்றன. 2400 கிமு வில் மிகப்பலதரப்பட்ட பன்முகத்தன்மையுடையவையாக காணப்படுகின்றன. 1900 கிமு வாக்கில் குறையத்தொடங்கும் இவை 1700 கி.மு வில் முற்றும் மறைந்து விடுகின்றன.
-> இவை குப்பைத்தொட்டிபோன்ற இடங்களில் வீசிஎறியப்பட்டவை போன்றே தோன்றுகின்றன. மரியாதையுடன் இறந்தவர்களுடன் புதைக்கப்பட்டோ, கல்லறைகளிலோ அல்லது அன்றாட புழக்கத்திலிருக்கும் வீட்ட்டறைகளிலோ காணப்படவில்லை என்பது சுவாரசியமானதாகும்.

ஒட்டியும் வெட்டியும் வாதங்கள்
---------------------------------------
முந்தைய பதிவில் கூறப்பட்ட விவாதங்களையும் ஸயன்ஸ் கட்டுரை குறிப்பிடுகின்றது. அதில் காணாததை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
-> முக்கியமாக இச்சின்னங்கள்/குறிகள் மொழியின் வடிவக்குறிப்புகள் அல்ல என்றும் அவை தொழுபயன் குறித்தவை அல்லது பிற குழுக் குறுகளாகவோ இருக்கலாமென்றும் கருத்து எழுந்துள்ளது.
-> முக்கியமான புதையாராய்ச்சியாளர்களும், மொழியியலாளரும் இதை அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்வதாயில்லை:
-> "எழுத்துசார்ந்த மொழியில்தான் குறிகளின் அலையெண்கள் சீரான இடைவெளிகளில் தொடர்ந்து காணப்படும்." என்கிறார் ஐராவதம் மஹாதேவன். அதாவது ஒலிக்குறியாக மொழியை எழுதினால் அதில் முன்கண்டதைப்போன்ற அலையெண் சீரமைதி காணப்படத்தேவையில்லை என்பது அவர் வாதம்.
-> வெல்ஸ் மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்,"ஒரு கல்வெட்டாய்வாளராக, மொழிக் குறிவல்லுனராக சிலவற்றை பார்த்தாலே அவை ஒரு மொழியின் குறிகள்தான் எனத் தெரிந்துவிடும்" (அதாவது அவ்வளவு வெளிப்படையாக ஹரப்பாவின் குறிகள் ஒரு மொழி குறித்தவை எனத்தெரியும் போது இந்த வாதங்களே தேவையற்றவை என்ற பொருளில்)
->மேலும் "இந்த எழுத்துரு முற்றிலும் வளர்ந்த உட்கட்டமைப்பு உடையதாகவும், சரியான இலக்கணங்களைக் கொண்டதாகவும் தென்படுகிறது" என்றும் வெல்ஸ் கூறுகிறார்.பர்போலாவும் இக்கருத்தை ஆமோதிக்கிறார்.

மற்றும் சில ஆய்வாளர்களுக்கு இந்த புது கருதுகோள் பயனின்றி தேக்கமடைந்து போயிருந்த துறையில் புது உற்சாகம் கொடுக்கும் ஒரு ஊக்கியாக காணப்படுகிறது.
-> ஹன்ஸ் ஹொக், இல்லினாய் பல்கலைக்கழகம், அர்பான ஷாம்பய்ன், " இருபுற வாதங்களும் இன்னும் உறுதியானவையாக முழுமையாக இல்லை. அவர்கள் தத்தம் வாதங்களை முறையாக்கட்டும் "
-> சிலர் முன்னர் இருந்த தம் கொள்கைகளை சற்றே தளர்த்தவும் தொடங்கியிருக்கின்றனர்:
போஸ்ஸல் போன்றவர்கள் இப்போது இக்குறிகள் ஒரு முழுமயடைந்த மொழியின் சொல்லாடல்களாக இல்லாமல் இடம், ஊர், குழு, கடவுளர் போன்றவற்றின் பெயர்குறித்த சொற்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வந்த்துள்ளனர்.
ஹார்வர்ட்டின் புதையாராய்ச்சியாளர் கர்ல் லாம்பர்க்-கார்லோவ்ஸ்கி இக்குறிகள் ஆழம்,அர்த்தம் காணமுடியாதவையாக இருக்கின்றன என்கிறார். அவை மொழிச் சொல்லாடல்களா இல்லையா என்பதைவிட அவை ஒருவித கருத்துப் பறிமாற்ற வழி என்பதுதான் முக்கியம் எனக் கருதுகிறார்.


இப்படி பல்வேறு விதமான கருத்துகள் இருந்தபோதிலும், " துரதிருஷ்டவசமாக இதை இந்தியக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகத் தான் காண்பார்கள்" என டில்லியின் நேரு பல்கலைக்கழகத்திலிருந்த்து ஓய்வுபெற்ற புதையாராய்ச்சியாளர் ஷிரீன் ரட்னாகர் கூறுகிறார்.
மேற்கத்திய இந்தியத்துறை ஆய்வியலாளர்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே பிணக்குகள் தோன்றி பெரும் சச்சரவாக மாற சாத்தியங்கள் உள்ளன என்றே பலரும் கருதுகின்றனர்.
நாம் திறந்த மனத்துடன் இதை அணுகவேண்டும் என்று ஷிரீன் ரட்னாகர் கூறுகிறார். அதுதான் இருப்பதிலேயே கடினமான செயல் என்று தோன்றுகிறது.

No comments: