Wednesday, December 29, 2004

செயல்படும் நேரம்

1. அறிவியல், திட்டமிடுதல் தடுமாற்றம்

இன்றுதான்தான் தொலைக்காட்சியில் முழுமையாகப் பார்க்கிறேன். இணையம் வழி மட்டுமே பேரழிவின் செய்திகளைக்கண்டு வந்தேன். கடல் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி. சென்னையிலேயே நிலவரம் மோசமாகத்தான் இருக்கிறது. இன்னும் கடலூர், நாகப்பட்டினத்திலும், ஈழத்திலும் மனம்பதைக்கும் அளவு.

நடந்த பேரழிவு நாட்டின் அறிவியல் திட்டமிடல் சட்டகத்தின் ஒரு செயல்பிறழ்வையே காட்டுகிறது. இந்தியா இப்போதுதான் 26 நாடுகளை உறுப்பிராகக் கொண்ட ட்சுனாமி முன்அறிவிப்பு வலையில் இணையப் போகிறது. அனைவரின் கருத்துப்படியும் முன்னெச்சரிக்கை இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான் உயிர்களைக் காத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. குழந்தைகளும், சிறார்களினதுமாகிய இழப்பு மிக அதிகம். ஒரு மணிநேர முன்னெச்சரிக்கைகூட இவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். இன்று இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கான அமைச்சர் கபில் சைபல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முன்னறிவிப்பிற்காக உணர்பொறிகளும் தொடர்புவலைப் பின்னலும் அமைக்கப் பட்டுவிடும் என்று அறிவித்திருக்கிறார். இந்தியா இதை சற்றே பெரிய கடல்பரப்பில் வங்காள வளைகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல் பரப்பில் அமைந்த அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்கும் இவ்வசதியை அளிக்கவேண்டும். இதற்கான தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கவும், இதை கடல்பரப்பில் நிர்வாகிக்கவும் தேவையான அனைத்து திறமைகளும் இந்தியாவில் இன்றே இருக்கின்றன. தேசிய அளவில் பல்துறை ஒத்துழைப்புடன் திட்டமிட்டு முடிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பவியலாலர்தான் இப்போது நம் குடியரசுத்தலைவராக இருக்கிறார். அவர் நெய்தல் நிலத்தில் வளர்ந்தவர் என்பதும் முக்கியமானது. இதற்குள் நிச்சயம் அரசு, அறிவியல் சட்டகத்தின் சக்கரங்கள் உருளத்தொடங்கியிருக்கும் என்று நினைக்கலாம்.

மீனவர்களுக்கு கடற்கரை அருகில் குடியிருப்பதுதான் வசதி. அவர்களை அங்கிருந்து விலக்கி நகருள் அடுக்குமாடிக்கட்டடங்களில் அடுக்குவதைப்போல அபத்தம் ஏதுமில்லை. முக்காலும் ஒன்றிரு படகுகளை வைத்திருக்கும் சிறு மீனவர்கள். கடற்கரைக்கு அருகில் உள்நிலத்தில் முதல் வரிசைவீடுகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இதற்கு முன்பே தமிழக அரசு சென்னை கடற்கரை மேம்பாட்டுத்திட்டத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் பல்லடுக்கு மாளிகைகள் கட்ட போட்ட ஒப்பந்தப்படி சில மீனவக்குப்பங்களை அகற்ற முயன்றபோது அவர்களின் எதிர்ப்பால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இப்போது வசதியாக இயற்கையே அவர்களை அடித்து பிளாட்பாரத்தில் தள்ளிவிட்டது.

சிவிலியன்களைக் கொண்ட கடற்கரை பாதுகாப்புப் படை ஒன்றை அமைத்து போதுமான பயிற்சி, கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புப்பணிகள், தவறும் பொதுமக்களைக் காத்தல், அழிவுக்காலங்களின் போது உதவிப்பணி போன்ற பணிகளுக்கு செயல் படுத்தலாம். இதற்கு கடலுடன் அறிமுகமான மீனவ இளைஞர்களையே கொண்ட ஒரு அமைப்பை முழு தமிழக கடற்கரையோரப் பகுதிகளிலும் ஏற்படுத்தலாம். இதற்கெல்லாம் பொருட்செலவை விட அமைப்புத் திறமைகள் உடனே வேண்டும். எந்த ஒரு அழிவையும் எதிர்கொள்ள குழுப் பயிற்சிகள் நம்மிடையே இல்லை. மக்கள் தத்தமக்குத் தோன்றியதை மனிதாபிமானம் ஒன்றே கொண்டு உதவுகிறார்கள். ஒரு குழுவாக முன்பயிற்சியோடு இதைச் செய்தால் இன்னும் பல அழிவுகளைத் தவிர்க்கலாம். ஆனாலும் சென்னையில் நிலைமை மற்ற ஊர்களைவிட பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஈழத்தில் வடகிழக்கில் நிலைமை பேசுந்தரமாக இல்லை. இந்திய அரசு உதவக்கூடிய நிலையில்தான் இருக்கும் என நினைக்கிறேன். பின்னணியில் நடக்கலாம் என்று நம்பத்தான் முடியும்.

2. ஆத்மாக்களின் அறுவடைக்காரர்கள்.

தெரிந்த விஷயம் என்றாலும் சில மனவிகாரங்கள் கருத்துருவங்களாக வெளிப்படையாக வருவது அதிர்ச்சியாகவே இருக்கிறது.
நண்பர்கள் முன்பே பதித்ததுபோல் குரானின் வாசகங்கள் அவர்களின் கடவுளின் செயல்பாடுகளைச் சொல்லி நம்மை பயமுறுத்த வெளியிடப்படுகின்றன. கிறுத்துவர்களின் பிரச்சாரம் ஓய்வில்லாது பாவத்தையும் பணத்தையும் காட்டி அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கிறது. சமீபத்திய 'இந்து' வைதீகமும் இதே முறைகளை பரவலாக்க முயல்கிறது. காஞ்சி சாமியாரின் புனிதத்தின் சக்தியைப்பற்றிய பொளராணிகப் புனைவுகள் திட்டமிட்டு மக்களிடையே விதைக்கப் படுகின்றன. எவன் செய்த பாவத்திற்காக, எவன் கடவுள் எம்மக்களைக் கொல்லத் தொடுகிறது?

No comments: