Friday, December 31, 2004

அயல்தொழில் நுட்ப ஆபத்துகள்

நேற்று சுனாமி அலை மீண்டும் வரச் சாத்தியம் உண்டென நடுவன் அரசு அறிவித்ததால் பல பணிகள் தடைப்பட்டன. பார்க்க பத்ரியின் பதிவு.

இதை டெர்ரா ரிசர்ச் என்ற தனியார் கம்பெனியின் எச்சரிக்கையை அடிப்படையாக கொண்டு அறிவித்ததாககவும் அனால் அதற்கு முழுப்பொறுப்பு தாம் அல்ல என்பது போலவும் உள்துறை அமைச்சகமும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் சச்சரவில் ஈடுபட்டன. இந்தச் சச்சரவை ndtv பலமுறை காண்பித்தது. யார் இந்த டெர்ரா ரிசர்ச் என்று இணையத்தில் குடைந்ததில் டெர்ரா ரிசர்ச்.நெட் எனும் இணையத் தளத்தில் அந்த நிறுவனம் பூகம்ப முன்னறிவிப்பு தொழில் நுட்பக் கருவிகளை தயாரிப்பதாகவும் மற்ற அது சம்பந்தமான பிற தகவல்களும் இருந்தன.
முதல் பக்கத்திலேயே 'Forbidden Secrets of Earthquake Revealed"
என்ற 104$ (!) புத்தகத்தின் விளம்பரம் இருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு 'அறிவியல்' புத்தகத்தின் தலைப்பு இருந்தால் எனது அநுபவத்தில் உடனே சந்தேகமணி அடிக்க ஆரம்பித்துவிடும். எதற்கும் பார்க்கலாம் என்று பிற தொடர்புச் சுட்டிகளையும் தொடர்ந்து தளத்தில் சுற்றினேன். முக்கியமாக அத்தளத்தில் இருந்த தகவல் அறிக்கைகள் கட்டுரைகளின் பகுதியில் இருப்பதைப் படித்தவுடன் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. முதலில் கருவிகளைப் பற்றியும் நிலநடுக்க அலைகள் தரையின் இறுக்கமேல்பகுதியில் பரவுவதைப்பற்றியும் எதிர்பார்க்கக்கூடிய தகவல்கள் இருந்தன. தொடர்ந்து படித்தால் விலங்குகள் நிலஅதிர்வை முன்னுணர்வதெப்படி என்பது போன்ற இன்னும் அறிவியலில் முடிவுகாணப்படாத சில கேள்விகளுக்கு விடைகளும் அதைப் பற்றிய கருதுகோள்களும்!. இன்னும் தொடர்ந்தால் ஐன்ஸ்டைன்னின் சார்பியல் கோட்பாடைப்பற்றியும் மைக்கேல்சன்- மோர்லெ ஆராய்சியைப்பற்றியும் அவை எவ்வாறு தவறாகும், நிக்கொலாய் டெஸ்லாவின் தொலைந்துபோன ஒரு கட்டுரையில் எப்படி அவர் ஐன்ஸ்டைனை எதிர்த்தார் எப்படி இன்றைய வான் இயல்பியல் ஆராய்ச்சிகள் அத்தனையும் தவறு என்றெல்லாம் அடுக்கடுக்காக. இது எங்கே போய் முடியும் என்று தெளிவாகி விட்டது. வேறெங்கே? பைபிளில் தான். கடவுளே. இவர்களை நம்பியா நமது அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்தது.
சரியான கோமாளித்தனம் என்று பத்ரி எழுதி இருந்தார். It is no more funny. இதற்குக் காரணமான அரசு அதிகாரியை தேடிப் பிடித்து உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

2 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

அப்படி போடுங்க அறிவாள!!

Jayaprakash Sampath said...

// இதற்குக் காரணமான அரசு அதிகாரியை தேடிப் பிடித்து உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.//

கட்டி வைத்து தோலை உரிக்க வேண்டும் என்று சொல்ல உங்கள் பண்பாடு தடுக்கிறது என்று புரிகிறது. எனக்குத் தயக்கமில்லை. கட்டி வைத்து தோலை உரிக்கத் தான் வேண்டும்.

இந்த பீதி கிளம்பிய நேரத்தில் நான் திருவல்லிக்கேணியில் இருக்கிறேன். ஒரு அச்சகத்துக்குள் ஒரு வேலையாக நுழைந்த போது, வண்டியை ரிவர்ஸ் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்த நண்பர், திபுதிபுவென்று உள்ளே ஓடி வந்தார், தண்ணி வருது, தண்ணி வருது என்று சொல்லிக் கொண்டே.. இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தன. ஆனால் தண்ணி வரவில்லை. ஆட்கள் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். எ·ப் எம் ரேடியோவிலே , மீண்டும் சுனாமி அபாயம் என்று அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. கூடவே முதலமைச்சரின் விசிட் ரத்து என்ற செய்தி.

ட்சுனாமிக்கு பின் after -shocks இருக்கலாம் என்றும் அது அத்தனை அபாயமாக இருக்காது என்றும் முந்தைய நாள் படித்த சில இணையக் குறிப்புகள் நினைவுக்கு வந்து, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

இது போல நிகழ வாய்ப்பிருக்கிறது என்றால், நம் அதிகார பூர்வ அறிவியல் அமைப்புக்கள் முன்பே அறிவிப்பு செய்திருக்க வேண்டுமே, ட்சுனாமியை நேரிலே இப்போதுதான் பார்க்கிறோம் என்றாலும், விஞ்ஞானிகள் தியரியிலேயாவது படித்திருப்பார்களே, மேலும் ட்சுனாமி என்பது பிள்ளையார் பால்குடித்த மாதிரியான அறிவுக்கு எட்டாச் சங்கதி ஒன்றும் இல்லையதனால் இந்த பேரலையை இன்னேரம், அக்குவேறு ஆணிவேறாகப் பிச்சி , அடாப்ஸி செய்து, அபாயம் இருக்கிறது/ இல்லை என்று அறிக்கை குடுத்திருப்பார்களே, ஒரு டெக்னோக்ராட் அதிபராக இருக்கும் தேசத்தில் இருக்கிறதுக்கு இது கூட இல்லை என்றால் எப்படி, பிரணாய் ராய் கோஷ்டி, அத்தனை பேரை கூப்பிட்டு குடாய்ந்த போதாவது, ட்சுனாமி உடனடியாக மீண்டும் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று யாராவது ஒருத்தர் சொல்லி இருப்பாரே எப்படி என்று பல யோசனைகள்.

ஒன்றும் அபாயம் இருக்காது என்று தர்க்க ரீதியாக முடிவுக்கு வந்து, அங்கேயே இருந்து வேலையை முடித்துக் கொண்டுதான் திரும்பினோம். ( ஓடிக் கொண்டிருந்த மக்களுக்கு இரண்டு நாள் முன் அனுபவம் இருக்கிறது என்பதால், தடுக்க தைரியம் வரவில்லை) . உங்கள் ஆதார பூர்வமான பதிவைப் பார்த்தால், கொஞ்சம் பயமாக இருக்கிறது. ட்சுனாமி அபாயம் பற்றி கபில் சிபலுக்குப் பதிலாக, எக்ஸ்.மினிஸ்டருக்கு ·பேக்ஸ் அனுப்பியவர்களும் இதே அறிவியல் பெயண்ட் அடித்த அரசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் தானே?

ஹ¥ம்ம்ம்ம் என்னமோ போங்க (: