Friday, January 21, 2005

காட்சியும் சொல்லும்

சென்ற கார்ட்டூன் பதிவுக்குக்கான ஜெயஸ்ரீயின் பின்னூட்டம் சற்றே மனக்கசப்புடன் பதிக்கப்பட்டது தெரிகிறது. எழுத்துக்கள் ஆயிரம் வகை வந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அதே பொருளைப் பற்றிய ஒரு படம் ஒருவரை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இது ஏன் என்பது புதிர்தான். நடப்பு நிகழ்ச்சிகளைக் கொண்டு கார்ட்டூன் போடுவது இன்னும் அதிக மன வாட்டுதல்களை அளிக்கவும் கூடும். குறிப்பாக இறப்பு போன்ற மாற்றோரின் துயர்தோய்ந்த நிகழ்வுகளை அதிகவனமாகவே கையாளவேண்டியுள்ளது. நேரடியாக பிறர் துயரத்தை, செய்தியாகக் கையாள்வது எந்த நடப்பு ஊடகச் செயல்பாட்டிலும் பலகேள்விகளை எழுப்பக்கூடியதுதான். பிற மனிதனின் துக்கத்தை வார்த்தைக் கூட்டங்களிலோ, படவரைவுகளிலோ, புகைப்பட எழில்கோணங்களிலோ உடன் மாற்றிக்கொடுப்பது என்பது இன்றைய செய்தி ஊடகங்களின் தினசரிச் செயல்பாடுதான் என்றபோதிலும், ஒரு கொலையை எந்த வார்த்தைகளில் சொல்வது, எந்த கோணத்தில் படம் பிடிப்பது, எந்தக் கீற்றில் கார்ட்டூன் போடுவது? இதில் துறைச் செயல்திறமை ஒருபக்கம் இருந்தாலும் சகமானுடன் ஒருவனின் தகைமை பற்றிய மதிப்பின் செயலாகவும் இது உள்ளது. இதில் எனக்கென்று முழுமையான விடைகள் இல்லாவிட்டாலும் I would rather decontextualise than dehumanise. எடுத்துக்காட்டாக முந்தைய பதிவு. காஞ்சியில் இன்னொரு வைணவ மட அதிகாரி படுகொலை என்ற செய்தியைப் படித்தவுடன் ஏதாவது எழுதலாம் என்றே நினைத்தேன். ஆனால் எழுத்து இயல்பாக வருவதில்லை .தமிழ் தட்டச்சும் அறியாதது. அரைப்பக்க விடயம் எழுத அரை அல்லது முக்கால் மணிநேரம் ஆகிவிடும். அதே பெயின்ட் பிரஷ்ஷில் ஐந்து நிமிடத்தில் கார்ட்டூன், இரண்டு நிமிடத்தில் வலையேற்றம் என சடுதியில் வேறுவேலை பார்க்கப் போய்விடலாம். கார்ட்டூன் போட ஆரம்பித்தால் முதலில் தோன்றியது நான்கைந்து வைணவர்கள் ஊரைவிட்டு வெளியே ஓடுவது போன்ற ஒரு படிமம். தோன்றின உடனே அது சரியல்ல இன்னும் விலக வேண்டும் என எண்ணி, இரண்டொரு மிருகங்கள் திருமண்ணோடு ஓடுவது போலவும் பிற மிருகங்கள் நகைப்பது போலவும் தோன்றிற்று. அதுவும் மிக தாழ் உணர்சியானதாய்ப்பட்டதால் சரி, இயல்பிலும் புராணத்திலும் நாமதாரியான அணில் நினைவுக்கு வந்தது. அதையே வரைந்தேன். ஆனால் இந்த நிகழ்வுக்கான சுட்டியையோ, இணைச்செய்திகளையோ கூறத்தேவையில்லை என்றே நான் நினைத்தேன். அப்படியே இதற்கு முன்னும் பலமுறை செய்துள்ளேன். அதற்கு முக்கிய காரணம் decontexualisation தான். ஆனால் இதுவே ஒரு தேவையில்லாத மருண்மைக்கும் இட்டுச்சொல்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. கார்ட்டூன்களின் subversive செயல்திறம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. பேட் ஓலிபாந்த், கேரி த்ரூதோ போன்றோர் இந்த புஷ் மந்தியின் பாட்டனான ரீகனைக் காய்ச்சிய காய்ச்சை மறக்க முடியுமா. எமர்ஜென்ஸியின் போது தணிக்கை செய்யப்பட்ட அபு அபிரகாமின் பல வெள்ளைச் செவ்வகங்களை எவ்வளவு முறை கண்டோம். எண்பதுகளில், பம்பாயிலிருந்து வந்த ஸண்டே அப்சர்வரில் அன்றைய மஞ்சுளா பத்மனாபனும், ரவிகுமாரும் இளமையின் துடிப்பில் எவ்வளவு வரைந்து குவித்தார்கள். ஆனால் இன்றைக்கு கார்ட்டூன்கள் இந்தியாவில் சொல்லுந்தரமாக இல்லை. ஒரு பத்து ஆண்டுகள் ஸண்டே அப்சர்வர்-இல்லஸ்ட்ற்றேட்டட் வீக்லி-டெபொனேர் கொடுத்த படிப்பவனின் அறிவைக்குறைத்து மதிப்பிடாமல் எழுதிய எழுத்துக்களை பின்வந்த எப்பத்திரிக்கைகளிலும் காணமுடிவதில்லை. இப்படி அணில் ஆனை போடுவதற்கே இன்றைக்கு இணையத்தில் இந்தப்பாடு. கார்ட்டூன்களைப் பற்றிப் பேசினால் நேரம் போதாது. ஆனால் அந்தோனியோ போஹியாஸை காப்பியடித்து விகடனில் வரும் வேட்டி கரை வேட்டியை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்ல என்பதை மீண்டும் சொல்லியே ஆகவேண்டும் (முதலிலேயே சொல்லவில்லையா. பரவாயில்லை). எங்கோ துவங்கியது இங்கே வந்துவிட்டது.

12 comments:

Boston Bala said...

நீங்களும் டெபொனேர் படித்து வளர்ந்தவர்தானா ;-)

Jayaprakash Sampath said...

அன்புள்ள அருள்

நேற்றைக்கு காஞ்சியில் நடந்த மற்றொரு கொலை பற்றி ஜெயஸ்ரீ அறிந்திராத பட்சத்தில், அவரது ரீயாக்ஷனைப் புரிந்து கொள்ள முடிகிறது ( அது சரியா தவறா என்பது வேறு பிரச்சனை).

பிசினஸ் லைனின் வரும் ரவிகாந்த் கார்ட்டூன்களை பார்க்கிற/படிக்கிற வழக்கம் உண்டா? அதனுடன் இலவச இணைப்பாக வரும் Praxis என்ற காலாண்டிதழில், வணிகம், தொழில், தகவல்நுட்பியல் பற்றி நல்ல நகைச்சுவையுடன் கூடிய கார்ட்டூன்கள் வரும். ரசிக்கும் படியாக இருக்கும்.

மஞ்சுளா பத்மநாபன்??? ரொம்பக் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது....

Jayaprakash Sampath said...

//நீங்களும் டெபொனேர் படித்து வளர்ந்தவர்தானா ;-)//

இன்னா கேல்வி நைனா இத்து? டெபோனேர் பாக்காம/படிக்காம எப்படி 12 லேந்து 19 வயசை கிராஸ் பண்றது?

dondu(#11168674346665545885) said...

"இப்படி அணில் ஆனை போடுவதற்கே இன்றைக்கு இணையத்தில் இந்தப்பாடு." ஒரே ஒரு பின்னூட்டம் உங்களுக்குப் பாடாகத் தெரிகிறதா?

சரி உங்கள் கார்ட்டூனுக்கே வருவோம். அதில் பொருட்குற்றம் இருப்பதாக எனக்குப் படுகிறது. சங்கரராமன் நாமதாரியா? அடிப்படையிலேயே உங்கள் கார்ட்டூன் தவறு.

மற்றும் நீங்கள் கொடுத்த சுட்டி உங்கள் நிலையை வலுப்படுத்துவதாகத் தோன்றவில்லை.

இப்போதுதான் உங்கள் கார்ட்டூன் பார்த்தேன். பொருட்குற்றம் தவிர ஒரு தனிப்பட்டக் கொலையைப் பற்றி ("இரண்டாம்") கொலையைப் பற்றி இன்னும் அதிகம் தெரியாத நிலையில் ஒரு ஜாதியையே எள்ளல் செய்யும் தோற்றத்தை உடையக் கார்ட்டூனைப் போடுவதை எதில் சேர்ப்பது?

கார்ட்டூன் போடுவது மிக மிகக் கடினமானக் காரியம். கார்ட்டூன் போட வரையும் திறன் மட்டும் போதாது. பகுத்தறியும் திறனும் வேண்டும்.

நக்கீரன் திருவிளையாடலில் கூறியது போல "சொற்குற்றம் இருந்தாலும் மன்னிக்கலாம். ஆனல் பொருட்குற்றம் ஏற்றுக் கொள்ள முடியாது."

இன்னுமொன்று. ஒரே ஒரு பின்னூட்டம் உங்களுக்கு இந்தப் பாடாய் இருப்பது போல ஏன் எதிர்வினை கொடுக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

arulselvan said...

அன்பு ராகவன்

>>>
ஒரு ஜாதியையே எள்ளல் செய்யும் தோற்றத்தை உடையக் கார்ட்டூனைப் போடுவதை எதில் சேர்ப்பது?
---------------------
நாமதாரிகள் எல்லாம் ஒரே ஜாதியா. எந்த ஜாதி அது?
வைணவம் ஒரு ஜாதிக்குச் சொந்தமானது என்பது ஒரு பெரிய செய்தியாக இருக்கிறது.
------------------------------
>>>
கார்ட்டூன் போடுவது மிக மிகக் கடினமானக் காரியம். கார்ட்டூன் போட வரையும் திறன் மட்டும் போதாது. பகுத்தறியும் திறனும் வேண்டும்.
-------------------------------------
:-). யார்தான் இதனுடன் வேறுபட முடியும்.
------------------------
>>>
இன்னுமொன்று. ஒரே ஒரு பின்னூட்டம் உங்களுக்கு இந்தப் பாடாய் இருப்பது போல ஏன் எதிர்வினை கொடுக்க வேண்டும்?
---------------------------------
I can ignore abuse but not someones's hurt, that is why.
-----------------
அன்புடன்
அருள்

dondu(#11168674346665545885) said...

"நாமதாரிகள் எல்லாம் ஒரே ஜாதியா. எந்த ஜாதி அது?
வைணவம் ஒரு ஜாதிக்குச் சொந்தமானது என்பது ஒரு பெரிய செய்தியாக இருக்கிறது."

த்லை வணங்கி என் தவறை ஏற்கிறேன். ஒரே ஜாதி இல்லைதான். நாயுடு, முதலியார், ஐயங்கார் ஆகியப் பல ஜாதிகளை உள்ளடக்கியதே வைணவம். ஆனால் நீங்கள் கூற விரும்புவது என்ன? ஒரு ஜாதியைப் பற்றிய எள்ளல் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஜாதிகளைப் பற்றித்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான். நான் முதலாம் ஆண்டுப் பொறியியல் கல்லூரியில் படித்த போது நடந்த விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு மாணவன் ஃபுட் போர்டில் நின்றுக் கொண்டிருந்தான். "ஒருவரும் அங்கு நிற்கக்கூடாது" என்று ஓட்டுனர் சத்தம் போட, "இருவர் நிற்கலாமா" என்று பஸ்சின் பின்னாலிருந்து ஒரு கேட்டது.

அது சரி நான் கூறியப் பொருட்குற்றத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே?

Incidentally, it is not just someone's hurt. Rather it is some persons' hurt. (More than one person)

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஈழநாதன்(Eelanathan) said...

டோண்டு அவர்களே வைணவம் என்னும் இந்துமதத்தின் உட்பிரிவு எப்போது ஒரு ஜாதிக்காரரைக் குறிப்பதாக மாறிற்று.நாமதாரிகளெல்லாம் ஊரைவிட்டு ஓடுவதாக அருள் குறிப்பிட்டிருப்பது நாமதாரிகளெல்லாம் குற்றவாளிகள் என்று குறிப்பிடுகிறதா அல்லது நாமதாரிகளுக்கு ஊரில் பாதுகாப்பு இல்லை அதனாலே ஓடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறதா?

dondu(#11168674346665545885) said...

ஈழநாதன் அவர்களே!

"நாமதாரிகளெல்லாம் ஊரைவிட்டு ஓடுவதாக அருள் குறிப்பிட்டிருப்பது நாமதாரிகளெல்லாம் குற்றவாளிகள் என்று குறிப்பிடுகிறதா அல்லது நாமதாரிகளுக்கு ஊரில் பாதுகாப்பு இல்லை அதனாலே ஓடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறதா?"

இரண்டில் எதுவாயினும் அது நல்ல ரசனை அல்ல என்றுதான் கூற வேண்டும். அதுவும் இக்கொலையைப் பற்றி இன்னும் விஷயங்கள் முழுமையாக வருவதற்கு முன் இப்போதே இவ்வாறு படம் போடுவது தேவையற்ற ஊகங்களுக்கு இடம் கொடுக்கும் என்பதுதான் என் கட்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jsri said...

அருள்செல்வன், காலையிலேயே படித்துவிட்டேன். உடன் பதில் எழுத முடியாத வேலை நெருக்கடி.

எழுத்தைவிடப் படம் உடனடி பாதிப்பு என்பதால்தான் படித்தவர்கள் புழங்கும் இடத்தில்கூட இன்னும் கழிவறைகளில் எழுத்தைவிட முக்கியமாக ஆண் பெண் என்று படம் வரைந்து வைக்கிறோம். :) (இது சும்மா ஜாலிக்கு..)
=====

மத்தபடி கார்ட்டூன்களைப் பற்றி எனக்கும் நிறைய அபிப்ராயம் உண்டு. நானும் கண் அரிக்கற தினமலர் கார்ட்டூன் பார்க்கிறவள் இல்லை.

செய்தித்தாள் வரைக்கும்போகாமல் வலைப்பதிவுகளிலேயே உடனுக்குடன் யாராவது செய்திகளை போட்டுத் தாக்கிவிடுகிறார்கள். அந்த வகையில் நேற்றே நான் அந்த வைணவ அதிகாரி கொலையை அறிந்தே இருந்தேன். ஆனால் உங்கள் கார்ட்டூன் அதைத்தான் குறித்தது என்று இந்தப் பதிவைப் படிக்காமலே பிரகாஷுக்குப் புரிந்திருந்தது என்பது பிரகாஷின் நுண்அறிவைத்தான் காட்டுகிறது. எனக்கு சத்தியமாக அப்படிப் புரியவில்லை. காரணம்..

நீங்களே ரொம்ப யோசித்து ஒரு கொலையைப் பற்றி சொல்ல நினைத்ததாகச் சொல்லியிருப்பது. உலகிலேயே நம்பர் ஒன்னைக் கூட கலாய்க்கக் கூடிய முழு சுதந்திரம் ஒரு கார்ட்டூனிஸ்டுக்குத்தான் இருக்கிறது. எந்தக் கலாய்ப்பும் கார்ட்டூன் வடிவில் வரும்போது சம்பந்தப்பட்ட பெரியபுள்ளிகள் கூட எதுவும் சொல்வதில்லை. எனில், ஒரு வைணவ அதிகாரி கொலையுண்டதைச் சொல்ல இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது?

பொதுவாக கார்ட்டூன்கள் எனக்குத் தெரிந்து இரண்டு வகை. 1)சம்பந்தப்பட்ட நிகழ்வு நடக்கும் காலத்தில் படித்தால் மட்டும் புரிவது; 2) எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் புரிவது. முதல்வகையே அதிகம் பத்திரிகைகளில் வருகிறது என்றாலும் உங்களுடையது பொதுவாக இரண்டாம் வகையையே சார்ந்தது; நானே நிறைய ரசித்திருக்கிறேன்.

வகை எப்படிப் பட்டாதாக இருந்தாலும் இந்தப் பிரச்சனையே வேண்டாம் என்றுதான் பொதுவாக படத்தின்மேல் சம்பந்தப்பட்ட படத்துக்கான தலைப்புச்செய்தியையும் சேர்த்தே போடுவார்கள்(என்னைப் போல மண்டுகளுக்காக) அல்லது படத்திலேயே அவர்கள் யாரைக் குறிக்கிறார்கள் என்றாவது எழுதிவிடுவார்கள்.

தமிழ் வலைப்பதிவில் எனக்குத் தெரிந்து நீங்களும் அருணும்தான் வரைகிறீர்கள். அருணுடைய லேட்டஸ்ட் படம் தா.கி, ஆலடி அருணாவினுடைய கொலையை அடுத்தது. http://arunviews.blogspot.com/2005/01/blog-post_05.html கீழே அவரே எதைத் தொடர்ந்து அதை வரைந்தார் என்பதைச் சொல்லியிருப்பார்; இல்லாவிட்டாலும் உள்ளே பேஷண்டாக இருப்பவரை அரசியல்வாதி என்று படத்தின் அருகே குறிப்பிட்டுவிட்டால் கூடப் போதும். செய்தி படிக்கும் யாருக்கும் புரிந்துவிடும். ஆனால் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனென்றால் 'வாக்கிங்' கொலைகள் தற்சமயம் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான். பொதுமைப்படுத்தினால் புரியாது. அல்லது ரசிக்காது.

அதுவேதான் உங்களுடையதிலும் நடந்திருக்கிறது. நாமம்(வைணவன்), சங்கரராமன்(பட்டை) என்ற அளவு இல்லாவிட்டாலும் இவர்கள் பொதுவாக நாம அல்லது பட்டைக்காரர்கள் என்பதற்காக மட்டும் கொல்லப்பட்டவர்கள் இல்லை; பின் எப்படி அப்படி பொதுப்படுத்திச் சொல்வீர்கள்? செய்தியைப் படித்திருந்தாலும் நாமக்காரர்கள் என்று பொதுவாக எல்லா பிராமணர்களையும் குறிப்பதாகத்தான் நான் நினைத்தேன். அது நேற்றையை செய்திக்கு என்னை இட்டுச் செல்லவில்லை. பொதுவாக கண்மண் தெரியாமல் எல்லா இடத்திலும்(முக்கியமாக வலையில்) தற்சமயம் பிராமணர்களை சொல், செய்லிலிருந்து எல்லாவற்றிலும் தாக்குவது மட்டும்தான் நினைவுக்கு வந்தது. அதைத்தான் சொல்கிறீர்களோ என்றே நினைத்தேன்.

நான் hurt ஆகிவிட்டதாக நினைத்து ஒரு பதிவு விளக்கம் சொன்னதுக்கு நன்றி. ஆனால் நீங்கள் உண்மையிலேயே அப்படி எண்ணத்தைத்தான் வரைந்திருந்தாலும்கூட நான் hurt ஆகியிருக்க மாட்டேன். உண்மை இருக்கும் பட்சத்தில் நானும் ரசித்தே இருப்பேன். (பொதுமைப்படுத்தியதாலேயே அது இடிக்கிறது.) அதையும் தாண்டி எப்படி ராசாவோட பிறப்பின் மதிப்பீட்டை ஜெயேந்திரர் தீர்மானிக்க முடியாது என்று முன்பு சொன்னேனோ அப்படியே என்னுடைய பிறப்பையும் யாரும்.

அதற்கும்மேல் இணைய விவாதங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில் அர்த்தமில்லை என்பதும் புரிந்தே இருக்கிறேன். தூரத்திலிருந்து படித்து சிரித்துவிட்டுப் போய்விடுவேன். Clearly speaking, I never allow net matters affect my personal feelings as otherwise I know my height. அணில் ஆடு போடுவதற்கே தயக்கமாக இருக்கிறது என்பதெல்லாம் கொஞ்சம் ரொம்பவே ஓவர் அருள்செல்வன். படுத்தாமல் எப்பொழுதும்போல் கலக்குங்கள். உங்கள் கார்டூன்களுக்கு நான் ரசிகையாக்கும்.(சிலது புரியாவிட்டாலும்.)

பதிவுக்குப் பதிவெடுத்து விட்டேன். :) நன்றி.

Kathiravan said...

அய்யா அருள்,
கார்டூன் என்பது நடப்பியல்பை உருவகமாக சொல்வதுதானே. கார்டூன் வெளிப்படுத்தும் நிகழ்வு குறித்த மாறுபட்ட தகவல்கள் அறிந்தவர்களுக்கு அது மாறுபட்ட செய்தியை கூறும். இதுவே எழுத்துச்செய்திக்கும் கார்டூனுக்கும் உள்ள வேறுபாடு.
//இணையத்தைவிட்டே ஓடிடணுமா//
என ஜேசிரி கேட்பது - சமீபத்திய பிம்பம் களையும் நிகழ்வுகளால் அவருக்கு ஏற்ப்பட்ட எரிச்சலால் தான். கலைந்த பிம்பங்களின் நிஜத்தை விமர்சிப்பதை தாங்கமாட்டாமல், அவ்வாறு எழும் விமரிசனங்கலையே எதிர்க்கும் இவர்கள் போலி பிம்பங்களை பூசிக்க தருபவர்கள். இந்த போலிகளின் உயர்வே தங்களின் நிலையை உச்சத்திற்கு உயர்த்தும்-அங்கேயே வைத்திருக்கவும் உதவும் என்பதால்.
இவருக்கு எது புரியவில்லை? இங்கே நாமம் குறியீடாக ஆன்மீகத்தை வைத்து வியாபாரம்/அரசியல்/பவர் புரோக்கரிங் செய்வோரை குறிப்பது தானே?
இத்தகையோரால் சமூகமே பாதுகாப்பற்று உள்ளது.
இதுவரை அடிபணிந்திருந்த ஆளும் வர்க்கம் இப்பொழுது எழுந்து நிற்பதால், 'இத்தகையோருக்கும்' பாதுகாப்பில்லை.
இந்த உண்மையை வெளிப்படுத்த்தும் கார்டூனை ஜேசிரி ஏன் புரியாவில்லை கணக்கில் வைக்க வேண்டும் - 'புரிந்து கொள்ள மறுக்கும்' கணக்கிலேயே வைத்துக்கொள்ளட்டும்.
அன்பன்,
கதிரவன்,

Jsri said...

அப்படியா? சே சே நீங்க என்னை ஓவர் எஸ்டிமேட் செஞ்சுட்டீங்க கதிரவன். நெஜமாவே நீங்க சொன்ன அர்த்தம் எனக்குப் புரியவே இல்லை. எனக்கு என்ன எனக்கு, வரைஞ்ச அருள்செல்வனுக்கே புரியலை பாருங்க, வேற ஏதோ அர்த்தம் சொல்லிகிட்டிருக்காரு. உண்மையிலேயே நீங்க சொன்னது நல்லா இருக்கு. படிச்சதும் புல்லரிச்சுட்டேன். கார்ட்டூனும் கவிதையும் ஒண்ணு போல இருக்கு. யார் யாருக்கு எப்படியோ அப்படி அர்த்தம். இருக்கறதுக்குள்ள உங்க பதில் the best. தொடர்ந்து உங்கள் இந்த சேவையை செய்யவும். நன்றி.

arulselvan said...

நண்பர்களுக்கு:

1. படத்தைப் போட்டால், கொஞ்ச நேரத்தில் பதிவு வேலையை முடித்து விட்டு வேறே வேலை பார்க்கலாம் என்று நினைத்தால், தற்காலத் தமிழரின் கலாச்சார அடையாளமான ஜாதி சண்டையில் போய் மாட்டிக்கொண்டேன். எல்லோருடைய வலைப்பதிவிலும் ஒருமுறையாவது இது நடக்கும் போலும்.

2. பொதுவாக: மதம், ஜாதி போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நண்பர்கள் பலரும் அறிவார்கள். எனவே எந்த ஒரு மதத்தின் அல்லது ஜாதியின் உயர்தனிக் கோட்பாடுகளையும் கருத்துக் களத்தில் நாம் அனைவரும் சந்திக்க வேண்டியது தேவையானதே என்று நான் நினைக்கிறேன். ஆதிக்க ஜாதிகளில் பிராமணர்கள் மட்டும் இல்லை மற்ற பிற உயர் ஜாதியினரும் அடக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கருத்துப் புலத்தில் வைதீக சமயக் கோட்பாடுகளை எதிர்க்க வேண்டிய தேவைகளுக்கு அப்புலத்திலேயே அந்த எதிர்ப்பு நடக்க வேண்டும். இதிலும் வைதீகத்தை ஆதரிக்கும் பிராமணரல்லாத நண்பர்கள் உள்ளனர், அதை எதிர்க்கும் பிராமணரும் உள்ளனர். இது இன்றல்ல, பண்டைய காலத்திலிருந்தே நடந்து வரும் ஒன்றுதான். ஆனால் நம் இணைய விவாதங்களில் பெரும்பாலும் நாத்திகம் என்றால் திக, ஆத்திகம் என்றால் பிராமணத்துவம் என்றே குறுக்கிய வளவில் சென்று முடிகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஒரு ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் பிராமணர்- அல்லாதோர் சண்டைகளில் உருவெடுத்த reflexive சொல்லாடல்கள்தான். இணையத்திலாவது நாம் இதை விட்டு நகர்ந்து விவாதங்களை அடுத்த தளத்திற்கு மாற்றினால் அனைவருக்கும் பயனாக இருக்கும்.

3. இனி நண்பர்களின் பின்னூட்டத்திற்கு:

பாலா:
-------
டெபொனேர் பற்றி- எல்லோருக்கும் தெரியும். ஆனால் நான் படித்த காலத்தில் அதன் பதிப்பாசிரியர் வினோத் மேத்தா. தற்போது அவுட்லுக் பத்திரிக்கையின் ஆசிரியர். அவர் அதற்கப்புறம் ஸண்டே அப்ஸர்வரின் ஆசிரியர் ஆனார். அதன் பின்பு டெல்லியில் ஒரு/இரண்டு வருடம் வந்த ஒரு பத்திரிக்கையில் இருந்தார் (என்ன அது? பெயர் மறந்து விட்டது இண்டியா போஸ்ட் மாதிரி). அவர் ஆசிரியராக இருந்த டெபொனேர் இல் படிக்கவும் நல்ல விடயங்கள் இருக்கும். அப்போதைய பிளேபாய் போல. அதன்பின் அநில் தார்க்கர் டெபொனேர் ஆசிரியர் ஆனார் என நினைக்கிறேன். அவரும் நல்ல எடிட்டர்தான். அவிட் என்பவர் ஹிந்திப் படங்களுக்கு அதில் விமரிசனம் எழுதுவார். அவ்வளவு சிரிப்பு வரும் விமரிசனங்களை அதன்பின் எந்த பத்திரிக்கையிலும் பார்த்ததில்லை.
அப்போதெல்லாம் டிவி கிடையாது. வயதுக்கு வருவது படிப்படியாக நடந்தது. கல்லூரி நண்பர்களோடு சேர்த்து விடுதியில் டெபோனேர் படிப்பது ஒரு passage rite. இப்போதெல்லாம் டிவியிலேயே எல்லாம் இருக்குது. பசங்களுக்கு ஏதும் திரில் இருக்கும் என்று தெரியவில்லை.
------------------------------------------------------
பிரகாஷ்:
--------------

மஞ்சுளா பத்மனாபன்: அப்போது ஸண்டே அப்ஸர்வரில் தொடர்ந்து கார்ட்டூன் போடுவார். ஒரு வேலைக்குப் போகும், லேசான பெண்ணியல் நோக்குடைய, பட்டணத்து மத்தியதரப் பெண்ணின் நாள்படு சிரமங்களைப் பற்றி. நல்ல வரைகலைத் திறன் உடையவர். நாலஞ்சு வருடங்களுக்கு முன் ஒரு பரிசு பெற்ற அறிவியல் புனை நாடகம் ஒன்று எழுதினார். நான் படித்ததில்லை.
ரவிஷங்கர் என்பதற்கு பதிலாக ரவி குமார் என்று போட்டுவிட்டேன். இப்போது இந்தியா டுடேயில் போடும் கார்ட்டூன்கள் அவர் அப்போது போட்டவை போன்று சிறப்பாக இல்லை.
----------------------------------
ஈழநாதன்
--------------

நன்றி.நீங்கள் சொன்ன அர்த்தத்தில்தான் நான் போட்டேன்.
--------------------------------
ராகவன்:
------------
>>
அது சரி நான் கூறியப் பொருட்குற்றத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே?
>>
இரண்டில் எதுவாயினும் அது நல்ல ரசனை அல்ல என்றுதான் கூற வேண்டும்.
----------------------------------------

நான் போட்ட கார்ட்டூனை நன்றாக இருக்கிறது என்று சொல்லவும், சரியான குப்பை என்று சொல்லவும் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நான் ஏன் அந்தக் கார்ட்டூனுக்கு முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்தவேண்டும்? It stands or falls by itself. அதற்கு மேல் நான் பேசக்கூடாது. அது உங்களுடையது. வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தூக்கி எறியுங்கள். Ascribed motive களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வது தேவை - இல்லையா.

---------------------------------------------------------------
ஜெயஸ்ரீ
----
பதிவுக்குப் பதிவெடுத்ததற்கு நன்றி. கார்ட்டூன் போடாமல் இருக்க மாட்டேன். Enjoy.

----------------------------------------------------------------
கதிரவன்:
-------------
>>>
இதுவரை அடிபணிந்திருந்த ஆளும் வர்க்கம் இப்பொழுது எழுந்து நிற்பதால், 'இத்தகையோருக்கும்' பாதுகாப்பில்லை.
-------------------------

மேலே முதலிரண்டு பத்திகளில் சொன்னதுதான். தன்னில் ஒரு பகுதியையே எதிர்க்கும் வெறும் பிராமண எதிர்ப்பு தமிழ்ச் சமூகத்திற்கு எந்தப் பெருமையும் சேர்க்காது. ஆதிக்கத்தை அதன் அனைத்துக் களங்களிலும் சந்திப்போம். அதற்கு பிராமணர்கள் துணை நிற்கமாட்டார்கள் என்பது நீங்களாக கற்பித்துக் கொண்டது. இது வேறு நூற்றாண்டு. இதன் போராட்டக் களங்கள் வேறு.
-----------------------

அன்புடன்
அருள்