நீண்ட வராண்டா
சுழலும் மாடிப்படி
தனித்த நெடும்பாதை
எங்கும் எப்பொழுதும்
பின்னால் வருபவர்கள்
முதுகின் பரப்பில்
உறுத்தும் பார்வைகள்
புறங்கழுத்தில்
காது மடல்படிப்பில்
சூழும் வார்த்தைகள்
உதிர்த்தபடி
என்றும் தொடர்ந்து
பின்னால் வருபவர்
ஒற்றைப்பனை
தொத்தி ஏற
பிருஷ்டத்தில் தலைஉரசி
உந்தி வருபவர்கள்
நீரில் பாய்ந்தால்
சுறாப்போல் முகர்ந்து
தடம்பற்றி வருவர்
பின்நெருங்கி
சிறகுவிரித்து புகைபீச்சி
உயரே விரைந்தால்
கண்ணெதிரில் திரையில்
புள்ளியாய்த்தோன்றி
பின்னர் விரிந்து
சிறகடியில் வெடிப்பவர்கள்
ஒவ்வொரு இலையிலும் நூறாய்த் தொங்கி
சாறு உறிஞ்சி சக்கை உதிர்ப்பர்
கூழாங்கல்லடியில் பதுங்கிக்காத்து
கால்பற்றி ஏறி தொடையைக் குத்றுவர்
விட்டுவரும் காலடிகளை
வெட்டி டப்பியில் அடைத்து
கண்ணாடி அறைபதுக்குவர்
ஓடத் துரத்தி
நிற்கக் காத்து
வீழ்கையில் சூழ்வர்
பின்னால் வருபவர்கள்
-ஜூலை, 84
3 comments:
//ஓடத் துரத்தி
நிற்கக் காத்து
வீழ்கையில் சூழ்வர்
பின்னால் வருபவர்கள்//
கவிதை அருமை.. பின்னால் வருபவர்களைப் பற்றி முன்னாள் போகிறவரின் சிந்தனை..
நன்றாகவிருக்கிறது. மாடிக்கு பஸ்ஸ¤க்கும் சேர்த்து எழுதினாற்போல இருக்கிறது. எழுதிய ஆண்டை எண்ணத்திலே வைத்தால், நீங்கள் மிகவும் முன்னால் போயிருக்கின்றீர்கள் (கவிதை குறித்து ;-)) என்று தெரிகின்றது.
ரமணி,
என் பழைய குறிப்புப் புத்தகங்களும் சில விடுதாள்களும் கிடைத்தன. எல்லாம் 87/88 வரை தோன்றியதை எழுதியவை. அதற்குப் பிறகு ஏதும் எழுதியதாக நினைவில்லை. இப்போது படித்தால் வெட்கப்படவேண்டியவைகளை கவனமாக தவிர்த்துக் கொண்டும் இருக்கிறேன்.:-)
அருள்
Post a Comment