Saturday, February 26, 2005

இ.தி. 37




தலைக்கு மேலே மேகம் இருந்தா மீன் மாட்டாதூன்னு என் ராசி. பசி வேளையிலே இது வேறே.

Friday, February 25, 2005

குடிமக்களும் தம் கொடியும்

நாராயண் கார்திகேயன் F1 கார்ப் பந்தயத்தின் போது அணியும் ஹெல்மெட்டில் இந்தியக் கொடியை வரையக்கூடாது என்று நமது அரசாங்கம் அறிவித்து விட்டது. இப்படி ஒரு அபத்தமான நிலைபாட்டை இந்தியா தவிர வேறேதாவது நாடு எடுத்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை.

எத்தனை மில்லியன் மக்கள் அகில உலகத்திலும் பார்க்கும் போட்டி இது. நாட்டின் பெயருக்கும் ஒரு சின்னத்திற்கும் எத்தனை இலவச விளம்பரம். இந்திய அரசு எத்தனை வர்த்தக கண்காட்சிகளையும் (Trade Fair) வேறு விளம்பரப் படையெடுப்புகளையும் நடத்தி இந்த அளவு 'இந்தியா' என்ர பிராண்டை பிரபல்யம் ஆக்க முடியும். யாராவது Brand Building ஆட்கள் இந்த மட இந்திய அரசுக்கு காதில் உரக்க கூவுவார்களா என்று தெரியவில்லை. வர்த்தக அமைச்சு இந்திய ஏற்றுமதிக்கு மாடாய் உழைப்பது இருக்க இப்படி இலவசமாய் வருவதையும் வேண்டாம் என்பதை என்னவென்று சொல்வது?
தன் தேசியக்கொடியை ஒரு குடிமகன் பெருமையுடன் ஹெல்மெட்டில் போட்டால் அதற்கு அவமதிப்பா? வெள்ளைக்காரன் ஆட்சிபோல இருக்கிறது. ஆமாம் ஜிம்மி ஹெண்றிக்ஸ், வுட் ஸ்டாக்கில் ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர் வாசித்த மாதிரி இங்கே யாராவது செய்தால் அரசு என்ன செய்யும்? போடா அல்லது வாடா என்று சட்டம் சொல்லி ஜெயிலில் பிடித்து போட்டு விடுவார்களா?

(நாராயண் புகைப்படம் : நன்றி: (http://www.narainracing.com))

Wednesday, February 23, 2005

இ.தி. 36




" இப்பிடி குறுக்க ஓடி ஓடி இவனுங்களுக்கு சகுனம் சொல்றதுதான் வேலையா, மாட்டேன் போ. "

" இத பாருடா. அவனவனுக்கு விதிச்ச தர்மத்தை செஞ்சுதான் ஆகணும். இப்ப கேள்விகேக்காம ஓடு. "

Friday, February 18, 2005

இ.தி. 35

தமிழருக்கு ஜனநாயகம் புதிதல்ல

சோழர்காலத்து குடவோலை முறை தேர்தல் சாவடி

Wednesday, February 16, 2005

Tuesday, February 15, 2005

இந்தியாவின் அண்டையர் கொள்கை

இன்று இந்தியா தனது "neighbourhood policy" என கருதத்தக்க அண்டையர் கொள்கையை அறிவித்துள்ளது. வெளியுறவுச்செயலாளர் ஷியாம் சரண் இதை உரைநிகழ்த்தினார்.
" உலகிலேயே மிக வளர்ச்சிவேகமும் முன்னெடுப்பும் உள்ள நாட்டுப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவினுடையது இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை போன்றவை இந்தியா வழங்கக் கூடிய இந்த வளர்சந்தையில் பங்கெடுத்து தாமும் பொருளாதார வளர்ச்சி காண வேண்டாமா? "
தெற்காசியப் பிரதேசத்தின் 1.3 பில்லியன் மக்கள் அடங்கிய முழு திறந்த சந்தையின் சாத்தியக்கூறை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் பெரும் சந்தையை வரிவிதிப்புகள் ஏதுமின்றி திறந்து விடவும் இந்நாடு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெறும் சந்தையாக மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருள் வளர்ச்சியில் பங்குதாரராகவும் தாம் ஆகவேண்டும் என்று இந்நாடுகள் முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலியாக இந்தியா தன் அண்டை நாடுகளிடம் என்ன கோருகிறது?
1. இந்தியாவின் மீது ஆயுதம்தாங்கிகள் தாக்குதல் நடத்தி பின் ஓடி ஒளிய தம் நிலப்பகுதிகளை பயன்படுத்த அவை அநுமதிக்கக் கூடாது.
2. இந்தியாவைப்பற்றி எதிர்பரப்புரைகளையோ வன்சொற்பிரயோகங்களையோ அவை உலக அரங்கில் வெளிப்படுத்தக்கூடாது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சனை, வங்கதேசத்துடன் வடகிழக்கு மாநிலங்களின் ஆயுந்தம்தாங்கிகளுக்கு புகலிடம் அளிப்பது பற்றிய பிரச்சினை, நேபாளத்துடனும் கிளர்ச்சிக்காரர்களுடனான பிரச்சனைகள் என பலவும் உள்ளன. ஈழப்பிரச்சனை பற்றி எப்போதும் போல் கருத்து இல்லை.

இந்தியா இப்போது இத்தகைய நிலைபாட்டை எடுப்பதற்கு சில காரணிகள் உள்ளன.
முக்கியமானவையாக:
1. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பலம். இதை பலம் என்று தற்போது ஏற்றுக்கொள்ள இயலுமா என்று சொல்வது கடினம். குவிந்து வரும் அன்னியச்செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தையில் உள் வரும் அன்னிய முதலீடு, பொதுவான தொழில் வளர்ச்சி விகிதங்கள், விவசாய உற்பத்தி இவற்றைப் பார்க்க இந்தியா ஒரு முக்கிய வளர்ச்சிப் பாதையில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒரு வளர்ச்சியாக நிபுணர்கள் காணத்தொடங்கியுள்ளனர். அமெரிக்க வட்டிவிகித மாற்றங்கள், அது பன்னாட்டு முதலீட்டுச் சந்தையில் கொணரும் விளைவுகள், எரி எண்ணெய் விலையளவு போன்றவை இப்பார்வையை பாதிக்கும் எனக்கொள்ளலாம்.
2. இந்தியாவின் பொருளாதார முன்னெடுப்போடு அதன் பெரிய ராணுவ கட்டுமானம். இந்திய ராணுவ பலம் ஒரு சிறு வல்லரசின் அண்டைப் பகுதியை 'கவனித்துக் கொள்ள' ஏதுவான அளவில் இருப்பதாகவே பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் தவிர்த்து (இதை அமெரிக்கா கண்டுகொள்ளும்) பிற குட்டி நாடுகளை இந்தியாவே சமாளிக்கும் என்பதும் இந்தக் கருத்தின் உள்வாசிப்பாகக் கொள்ளலாம்.

இதெல்லாம் இந்தியா தனக்குள்ளேயே இருக்கும் வேறுபாடுகளைச் சமன் செய்தால்தான் என்பது வெளிப்படை.
கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த திறந்த பொருளாதாரக் கொள்கையில் போட்டியின் முதற்சுற்றில் 'வென்றதாக' கருதப்படும் மாநிலங்கள் 'திராவிட' மாநிலங்களான நான்கு தென் மானிலங்கள் தான். இவற்றுடன் பழங்காலத்தில் 'திராவிட தேசங்களாக' அறியப்பட்ட மராட்டியமும், குஜராத்தையும் சேர்த்து, கூட பஞ்சாப் அரியானா - அவ்வளவுதான் நாட்டின் முன்னேறிய நிலப்பகுதிகள். திறந்த பொருளாதாரத்தின் மூலம் பயன்பெற்று நாட்டின் பொருளாதார என்ஜின்களாக இருப்பவை இவைதான்.
இவை இந்நிலையை எப்படி அடைந்தன என்று பார்த்தால் கொஞ்சம் பழைய சோஷலிசம் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியது இக்கால தாராளமயவாத அறிஞர்களின் தலைவிதி என்பது நல்ல நகைமுரண்.
1. விவசாய நிலச் சீர்திருத்தம்
2. இலவச அடிப்படை, இடைநிலைக் கல்வி
3. பரந்துபட்ட இலவச மருத்துவ மனைகளின் மூலம் பொதுச் சுகாதார கட்டமைப்பு
4. அரசுமயப் படுத்தப்பட்ட அனைத்து கிராமங்களையும் அடையும் போக்குவரத்து, மின்சாரம்
5. மகளிர் சிறார்களை முன்னிருத்திய உணவுத்திட்டம்
6. மகளிர் கல்வி, சுகாதாரம் பற்றிய பரப்புரை.
கவனித்துப் பார்த்தால் மேற்கூறிய மாநிலங்கள் இவற்றையெல்லாம் ஏதோஒரு அளவில் இருபது வருடங்களுக்கு முன்பே ஏறக்குறைய செய்து முடித்திருப்பதைக் காணலாம். அதன் அடித்தளத்தில் அவை மிகச்சுலபமாக மேலே வந்து விட்டன. அறிவுஜீவிகளான நாம் அனைவரும் நகையாடி வெறுக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் இதில் பெரும்பங்கு இருந்திருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

இந்த மாநிலங்களைத் தவிர மீதமிருக்கும் பெரும்பான்மை மக்கள் நிறைந்த மாநிலங்களின் கதி என்ன? அண்டை நாடுகள் திறந்த சந்தையில் பங்கு பெருவது இருக்கட்டும். இந்திய மானிலங்கள் சமச்சீராக சற்றேனும் வளரவேண்டாமா? அதுவே பெரும் பணியாக முன்னிற்கும் போது இந்தக் குட்டி வல்லரசு மயக்கங்கள் சற்றே சீரணிக்க முடியாதவையாக இருக்கின்றன.

Saturday, February 12, 2005

இ.தி. 33




" மேல் லோகத்திலே தானே, ஏதோ கொஞ்சம் பரவாயில்ல. இப்பிடி சம்சார சாகர பாரத்தையும் தாங்க வேண்டியதில்ல. மத்தபடி சோத்துக்கு கஷ்டம்தான் ..."

Thursday, February 10, 2005

இ. தி - 32




" நாளைக்கி வடக்குத் தோட்டத்திலே கிணத்து வெட்டு முடிஞ்சுடும். நம்ம சின்னைய்யனும் கெளம்பி வந்துடுவான். அப்புறம் பாரு ஆட்டத்தை. "

Wednesday, February 09, 2005

இ.தி. 31





" சே. என்னடா இது., வலையிலயாவது இலக்கியம் படைக்கலாம்னா சூழல் விடமாட்டேங்குதே ...."

Monday, February 07, 2005

ஐன்ஸ்டைன், அறிவியல் ...

(இதைப்பற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் இப்போதைக்கு நேரம் காரணமாக இதுதான். மன்னிக்கவும். பின்னால் தொடர்கிறேன்)


பத்ரி, வெங்கட் இவர்களின் பதிவுகளின் தொடராக:


பத்திரிக்கைக் கட்டுரைகளைப் பற்றி சில பொதுவான குறிப்புகள்:
----------------------------------------------------------------------------------
பொதுவாக பத்திரிக்கைக் கட்டுரைகள் எடுக்கும் நிலைகள் பற்றி.

1, 'ஐன்ஸ்டைனுக்கு சரியாக கணிதம் தெரியாது'. இதைவிட மகத்தான ஒரு நகைச்சுவை இருக்கமுடியாது. அந்தக் காலத்தில் தேவைக்குப் போதுமான அளவுக்கு மேலேயே அவருக்கு கணிதம் தெரிந்தே இருந்தது. கணிதம் தெரிவது வேறு, கணிதவியலாளராக இருப்பது வேறு. அந்த வித்தியாசத்தை பத்திரிக்கைக் கட்டுரைகள் சரியாக வெளிக்கொணர்வதில்லை.

2.' ஐன்ஸ்டைன் ஒருவரே தனிச்சார்நிலைக் கோட்பாட்டையும், பொதுச் சார்நிலைக்கோட்பாட்டையும் கண்டுபிடித்தார்'.
முக்கியமான ஒன்று அறிவியல் ஒரு ஊர்கூடித் தேர் இழுக்கும் கூட்டு முயற்சிதான் என்பதை மறவாமல் இருப்பது. ஆனால் உரியவர்களுக்கு சரியான அளவில் புகழ் என்பதும் அறிவியலின் எழுதாத விதி.
அறிவியல் அதிலும் முக்கியமாக தனிவேட்டைக்காரன் அல்லது மரத்தடி ஞானம்காணும் ரிஷி போன்ற பிம்பம் கொடுக்கும் இயல்பியல், கணிதம் போன்ற துறைகளைப் பற்றிய பொதுஜன பத்திரிக்கைக் கட்டுரைகளில் தென்படும் தொனி மிகவும் ஏமாற்றமளிப்பது. இதுபோன்ற மனைவியின் அறிவைத் திருடினார், நண்பனின் மூளையை தனதாக்கினார் எனும் நிலைகளை உண்மை என கருதும் முன் சம அறிவு, ஒரே துறை சார்ந்த இருவரிடையே கருத்துப் பரிமாற்றம் 'கொடுத்து எடுக்கும்' முறையில் தான் பெரிதும் நடைபெறுகிறது. இதை பத்திரிக்கையாளர்கள் சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பொதுசார்நிலைக்கோட்பாடு
------------------------------------------
1. ஹில்பர்ட், ஐன்ஸ்டைனுக்கு "ஐந்து நாட்கள்" முன்பாகவே பொதுசார்நிலைக் கோட்பாட்டை முடித்ததாக நம்பப் படுகிறது
2. ஹில்பர்ட் அந்த கட்டுரையை கோட்டிங்கன் அகடமிக்கு அனுப்புவதற்கு முன்னரே ஐன்ஸ்டைன்னுக்கு அதை அனுப்பியதாக நம்பப்படுகிறது.
(என் கார்ட்டூனில் இருக்கும் வேரியேஷனல் டெரிவேட்டிவ் இதுசம்பந்தமானதுதான். ஆனால் அதை 1901 ல் அந்தப் பெண்கள் பையில் வைத்திருப்பதாக காட்டியிருக்கிறேன். அந்த anachronism மும் ஜோக்கின் ஒரு பகுதி என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )
3. இந்த பொதுசார்னிலைக்கோட்பாட்டிந் கடைசிச் சட்டக அமைப்பில் ஐன்ஸ்டைன், க்ரோஸ்மான், ஹில்பர்ட் என மூன்று பெரும் அறிஞர்களின் பங்களிப்பும் இருப்பதாக பொதுவாக அனைவரும் கருதுகின்றனர்.

இந்த சர்ச்சையில் இம்மூவரில் எவருடைய புகழையோ, திறமையையோ எந்த அறிவியலாளரும் குறைத்து மதிப்பதாக தெரியவில்லை. முன்னர் கண்டுபிடித்தவருக்கு புகழ் சேரவேண்டும் என்பது அறிவியலின் எழுதாத செந்நெறிகளில் ஒன்றாக இருந்தாலும் பத்திரிக்கையாளர்கள் இதை ஏதோ சதிப் புலனாய்வு போல பார்க்கவும் எழுதவும் செய்கிறார்கள். சிலருக்கு வேலை வாய்ப்பாக இத்தகைய சதிகள் அமைந்தால் சரிதான்.

Saturday, February 05, 2005

"அன்றும் அன்றும்"

நீர்மழை பெய்தோய்ந்த நெடுங்காலை
நகரா முனையருகே
காத்திருக்கும் இரண்டில் ஒன்று
பதுங்கிக் கொண்டிருந்தது
எச்சரிக்கு முன்
எரிந்து போனான் இணைப் பயணி
மற்றொன்றின் உடல் சிதற
அழல் குழல் உமிழ்ந்து அகன்றேன்
உணர்பொறிகள் தெருவெங்கும் ஓலமிட

தொடர் அசைவைக் கண்டிறங்கும் சுழல்கோளம்
கால்சரவில் தொடுமுனைகள் உயிர்பறிக்க
கூர்சரங்கள் பெய்தோடும் நிழல்திரட்டு
பட்டும் வெடித்தும்
தொட்டும் துடித்தும்
மெய்தீண்டிப் படரும்
கரும்பச்சைத் தொடரரவங்கள்
மூச்சில் முகம் அழியும்
பேச்சில் வளை அதிரும்
ஊர் சூழ்ந்து மேல்விரியும்
ஒளிதுளையா மென்போர்வை

ஒன்றொன்றாய் அடுத்து அடங்கும்
ஆயிரமாயிரம் முனைப்பின் குறுஉருக்கள்

Thursday, February 03, 2005

இ.தி. 30

ஜூரிக் நகர கடைத்தெருவில், 1901 ஜூலை ஒரு நண்பகல் வேளையில்....





" பாத்து பத்திரமா வச்சுக்கோடி. அந்த ஐன்ஸ்டைன் பையனுக்கு கொஞ்சம் கை நீளம்..."

Tuesday, February 01, 2005

இ.தி-29



இயற்கையின் ஃபிராக்டல் எரிச்சல்கள்

புழு: என்ன இலையோ. கவ்வ சவுகரியமா ஒரு இடம் கிடைக்கமாட்டேங்குது ...

பூச்சி: புழுவா இது. தோல்ல ரத்தம்குடிக்க வசதியா வழுவழூன்னு ஒரு இடத்தையும் காணோம் ...