Tuesday, February 15, 2005

இந்தியாவின் அண்டையர் கொள்கை

இன்று இந்தியா தனது "neighbourhood policy" என கருதத்தக்க அண்டையர் கொள்கையை அறிவித்துள்ளது. வெளியுறவுச்செயலாளர் ஷியாம் சரண் இதை உரைநிகழ்த்தினார்.
" உலகிலேயே மிக வளர்ச்சிவேகமும் முன்னெடுப்பும் உள்ள நாட்டுப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவினுடையது இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை போன்றவை இந்தியா வழங்கக் கூடிய இந்த வளர்சந்தையில் பங்கெடுத்து தாமும் பொருளாதார வளர்ச்சி காண வேண்டாமா? "
தெற்காசியப் பிரதேசத்தின் 1.3 பில்லியன் மக்கள் அடங்கிய முழு திறந்த சந்தையின் சாத்தியக்கூறை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் பெரும் சந்தையை வரிவிதிப்புகள் ஏதுமின்றி திறந்து விடவும் இந்நாடு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெறும் சந்தையாக மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருள் வளர்ச்சியில் பங்குதாரராகவும் தாம் ஆகவேண்டும் என்று இந்நாடுகள் முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலியாக இந்தியா தன் அண்டை நாடுகளிடம் என்ன கோருகிறது?
1. இந்தியாவின் மீது ஆயுதம்தாங்கிகள் தாக்குதல் நடத்தி பின் ஓடி ஒளிய தம் நிலப்பகுதிகளை பயன்படுத்த அவை அநுமதிக்கக் கூடாது.
2. இந்தியாவைப்பற்றி எதிர்பரப்புரைகளையோ வன்சொற்பிரயோகங்களையோ அவை உலக அரங்கில் வெளிப்படுத்தக்கூடாது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சனை, வங்கதேசத்துடன் வடகிழக்கு மாநிலங்களின் ஆயுந்தம்தாங்கிகளுக்கு புகலிடம் அளிப்பது பற்றிய பிரச்சினை, நேபாளத்துடனும் கிளர்ச்சிக்காரர்களுடனான பிரச்சனைகள் என பலவும் உள்ளன. ஈழப்பிரச்சனை பற்றி எப்போதும் போல் கருத்து இல்லை.

இந்தியா இப்போது இத்தகைய நிலைபாட்டை எடுப்பதற்கு சில காரணிகள் உள்ளன.
முக்கியமானவையாக:
1. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பலம். இதை பலம் என்று தற்போது ஏற்றுக்கொள்ள இயலுமா என்று சொல்வது கடினம். குவிந்து வரும் அன்னியச்செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தையில் உள் வரும் அன்னிய முதலீடு, பொதுவான தொழில் வளர்ச்சி விகிதங்கள், விவசாய உற்பத்தி இவற்றைப் பார்க்க இந்தியா ஒரு முக்கிய வளர்ச்சிப் பாதையில் திரும்பியிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஒரு வளர்ச்சியாக நிபுணர்கள் காணத்தொடங்கியுள்ளனர். அமெரிக்க வட்டிவிகித மாற்றங்கள், அது பன்னாட்டு முதலீட்டுச் சந்தையில் கொணரும் விளைவுகள், எரி எண்ணெய் விலையளவு போன்றவை இப்பார்வையை பாதிக்கும் எனக்கொள்ளலாம்.
2. இந்தியாவின் பொருளாதார முன்னெடுப்போடு அதன் பெரிய ராணுவ கட்டுமானம். இந்திய ராணுவ பலம் ஒரு சிறு வல்லரசின் அண்டைப் பகுதியை 'கவனித்துக் கொள்ள' ஏதுவான அளவில் இருப்பதாகவே பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தான் தவிர்த்து (இதை அமெரிக்கா கண்டுகொள்ளும்) பிற குட்டி நாடுகளை இந்தியாவே சமாளிக்கும் என்பதும் இந்தக் கருத்தின் உள்வாசிப்பாகக் கொள்ளலாம்.

இதெல்லாம் இந்தியா தனக்குள்ளேயே இருக்கும் வேறுபாடுகளைச் சமன் செய்தால்தான் என்பது வெளிப்படை.
கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த திறந்த பொருளாதாரக் கொள்கையில் போட்டியின் முதற்சுற்றில் 'வென்றதாக' கருதப்படும் மாநிலங்கள் 'திராவிட' மாநிலங்களான நான்கு தென் மானிலங்கள் தான். இவற்றுடன் பழங்காலத்தில் 'திராவிட தேசங்களாக' அறியப்பட்ட மராட்டியமும், குஜராத்தையும் சேர்த்து, கூட பஞ்சாப் அரியானா - அவ்வளவுதான் நாட்டின் முன்னேறிய நிலப்பகுதிகள். திறந்த பொருளாதாரத்தின் மூலம் பயன்பெற்று நாட்டின் பொருளாதார என்ஜின்களாக இருப்பவை இவைதான்.
இவை இந்நிலையை எப்படி அடைந்தன என்று பார்த்தால் கொஞ்சம் பழைய சோஷலிசம் பேசுபவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியது இக்கால தாராளமயவாத அறிஞர்களின் தலைவிதி என்பது நல்ல நகைமுரண்.
1. விவசாய நிலச் சீர்திருத்தம்
2. இலவச அடிப்படை, இடைநிலைக் கல்வி
3. பரந்துபட்ட இலவச மருத்துவ மனைகளின் மூலம் பொதுச் சுகாதார கட்டமைப்பு
4. அரசுமயப் படுத்தப்பட்ட அனைத்து கிராமங்களையும் அடையும் போக்குவரத்து, மின்சாரம்
5. மகளிர் சிறார்களை முன்னிருத்திய உணவுத்திட்டம்
6. மகளிர் கல்வி, சுகாதாரம் பற்றிய பரப்புரை.
கவனித்துப் பார்த்தால் மேற்கூறிய மாநிலங்கள் இவற்றையெல்லாம் ஏதோஒரு அளவில் இருபது வருடங்களுக்கு முன்பே ஏறக்குறைய செய்து முடித்திருப்பதைக் காணலாம். அதன் அடித்தளத்தில் அவை மிகச்சுலபமாக மேலே வந்து விட்டன. அறிவுஜீவிகளான நாம் அனைவரும் நகையாடி வெறுக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் இதில் பெரும்பங்கு இருந்திருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

இந்த மாநிலங்களைத் தவிர மீதமிருக்கும் பெரும்பான்மை மக்கள் நிறைந்த மாநிலங்களின் கதி என்ன? அண்டை நாடுகள் திறந்த சந்தையில் பங்கு பெருவது இருக்கட்டும். இந்திய மானிலங்கள் சமச்சீராக சற்றேனும் வளரவேண்டாமா? அதுவே பெரும் பணியாக முன்னிற்கும் போது இந்தக் குட்டி வல்லரசு மயக்கங்கள் சற்றே சீரணிக்க முடியாதவையாக இருக்கின்றன.

12 comments:

Jayaprakash Sampath said...

முன்னேறிக்கொண்டிருக்கிற மாநிலங்களின் லிஸ்ட்டில் சட்டீஸ்கரையும், ஒரிசாவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வங்காளம் தொழில் துறையில், கொஞ்சம் பரபரப்பு காட்டி வருகிறது. பீகாரை முஷார·பிடம் ஒப்படைத்துவிடலாம், மற்ற வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பெரும்போக்காகப் பார்த்தால், தாரளமயமாக்கலின் பலன், சில மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஹிந்துவில் வந்த செய்தியைப் படித்தேன். ஏஷியா-பசி·பிக்கில், நம்ம நாடு ஒரு 'பெரியண்ணன் ' மாதிரி ஆகி வருவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்....

Mookku Sundar said...

பெரியண்ணன் ஆகி வருவதும் முன்னெற்றத்தின் ஒரு கூறாக எடுத்துக் கொள்ளலாமே. மற்ற நாடுகள் மீது படையெடுத்துப் போய் துன்புறுத்தும் காரியம் செய்வதற்கில்லாமல், தற்காப்புக்காவது இந்தியா தன்னுடைய ராணுவத்தை பெருமை கொள்ளும் வகையில் வைத்திருப்பது நல்லதுதான் ஒருவகையில்.

மற்ற வடமாநிலலங்கள் கூட ஒப்பிட்டால், தென் மாநிலங்கள் கல்வியில் ( முக்கியமாக தொழிற்கல்வியில்) கவனம் செலுத்தியது அவைகளின் இன்றைய முன்னேற்றத்துக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன்.

பதிவுக்கு நன்றி.

arulselvan said...

பிரகாஷ்:
-------------------
>>>
முன்னேறிக்கொண்டிருக்கிற மாநிலங்களின் லிஸ்ட்டில் சட்டீஸ்கரையும், ஒரிசாவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
------------
இப்பவேவா!!!? GNP இருக்கட்டும், அவற்றின் மகளிர்,சிறார் கல்வியறிவு? ஆரம்பச் சுகாதார நிலையங்களின் பரவல்? பிறப்பு விகிதம்? நம் ஸ்டீல் பிளாண்டுகளில் காண்டிராக்ட் வேலை செய்யும் ஆதிவாசி மக்கள் நிலையைப் பார்த்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள். வேறென்ன தொழிலும் அங்கே இருப்பதாகக் காணோம். இன்னும் பத்தாண்டுகள் போகவேண்டும் பிரகாஷ். வேலை நிறைய பாக்கி இருக்கிறது அங்கே.

>>>
வங்காளம் தொழில் துறையில், கொஞ்சம் பரபரப்பு காட்டி வருகிறது.
-----------------
போலத் தெரிகிறது. ஆனால் பெங்களூரிலும், சென்னை பாண்டி பஜாரிலும் வாங்கிக் குவிக்கும் வங்காள, ஒரிய குடும்பங்களைப் பார்த்தால் தெற்கு நோக்கி ஒரு மாபெரும் புலன்பெயர்வு நடந்து வருவது கண்கூடு. ஒரு ஐஐடி மாணவி சொன்னார் - இங்கே வேலை கொடுத்தால் சேர்வீர்களா என்றதற்கு, எம் தாய் தந்தையர் கண்டிப்பாக சென்னைக்கோ பெங்களூருக்கோ போ, அங்கேயே வேலை பார், திரும்பி வராதே, தங்கயையும் அப்புறம் அழைத்துப் போ என்று சொல்லிவிட்டர்கள் என்றார்.
இது இந்திய கிழக்குப் பகுதியின் நடுத்தர குடும்பத்தின் வாழ்வகை. பெங்களூரில் அலைமோதும் வடகிழக்கு இந்திய மாணவர்களைப் பார்த்துப் பேசினால் இன்னும் கதைகதையாய் சொல்வார்கள்.
--------------------------------------------

சுந்தர்,
>>>
தற்காப்புக்காவது இந்தியா தன்னுடைய ராணுவத்தை பெருமை கொள்ளும் வகையில் வைத்திருப்பது நல்லதுதான் ஒருவகையில்.
--------------
அது சரி. பெரியண்ணண்கள் எப்போதும் விட்டுக் கொடுத்தே போகவேண்டும். அப்பத்தான் எல்லாம் சரியாக வரும். என்னை நம்புங்கள் :-)

Jayaprakash Sampath said...

அ.செ : கையும் களவுமாகப் பிடித்துவிட்டீர்கள் :-) நான் சொன்னது, அவ்விரு மாநிலங்களின் தொழில் வளர்ச்சியை மனதில் கொண்டு தான். குறிப்பாக ஒரிசாவில் புதிதாக அறிவிக்கப்பட்ட பெருமுதலீட்டு உருக்காலைகளையும், சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்து வரும் அடிப்படை உள்கட்டமைப்பு வேலைகளையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டேன். தொழில் வளர்ச்சியும் பணப்புழக்கமும், மற்ற எல்லாவற்றையும் கொண்டுவரும் என்ற LLTT* பார்வை எனக்கு உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக சிந்தனை மாறி வருகிறது. நல்ல பதிவு. நன்றி.

LLTT = looking london , talking tokyo :-)

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்:
னீங்கள் குறிப்பிட்டபடி இப்போது காணும் முன்னேற்றத்தில் சமூக முதலீட்டுக்கு அதிமுக்கிய பங்குண்டு. உதாரணமாக, காமாரஜர் காலத்தில் இலவச பள்ளிக் கல்வி, பின்னர் திமுக ஆட்சியில் பல புதிய அரசு கலைக்கல்லூரிகள் திறப்பு (குறிப்பாக தனியார் கல்லூரிகள் அதிகம் இல்லாதிருந்த வடமாவட்டங்களில்), எம்.ஜி.ஆர். ஆட்சியில் புதிய பல்கலைக்கழகங்கள், சுயனிதி தொழிற்கல்விக் கல்லூரிகள் என்று படிப்படியாக ஏதோ முன்கூட்டியே திட்டமிட்டு செய்தது போல
னடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதனிடையே சோ போன்ற அறிவுஜீவிகள் செய்துக்கொண்டிருந்தது பெயர் சூட்டல் போன்ற புறவயச் சடங்குகளை கிண்டலடித்துக் கொண்டிருந்தது மட்டுமே.

இடையிடையே ஊருக்கு வந்தபோது கிராமப் பள்ளிகளில் னாம் படித்தபோதிருந்ததைக் காட்டிலும் பல செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டிருந்தது கண்டு ஆச்சரியமாக இருந்தது. னம் காலத்தில் கேள்விப்படாத Parents Teachers Association எல்லா பள்ளிகளிலும் இருப்பதாக அறிந்தேன். என் அக்கா தலைமை ஆசிரியையாக இருந்த ஆரம்பப் பள்ளியின் மாதாந்திர PTA கூட்டத்தின் போது அதன் தலைவரின் (ஒரு உள்ளூர் விவசாயி) அக்கறையை னேரிலியே பார்த்தேன். தொடர்ந்த முன்னேற்றமும் அரசின் தொடர்ந்த சமூக முதலீடுகளால் மட்டுமே சாத்தியமாகும், அது எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும். சமூகமும் அதைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளது.

Thangamani said...

அருள் நல்ல பதிவு.

இங்கு சோ போன்றவர்கள் திராவிட (தீரா-விட)இயக்கங்களை கிண்டல் அடித்துக்கொண்டே தம்மை வளர்த்துக்கொண்டும், தமிழைப்பற்றிய இளக்காரத்தையும், அரசியல்வாதிகளைப்பற்றிய நம்பிக்கையின்மையையும்,போலியான தேசிய, அடிப்படைவாத கருத்தாக்கங்களை கணம்தோறும் அயராமல் விநியோகித்து வருகையில், தமிழ்நாடு ஏதோ செய்துகொண்டிருந்திருக்கிறது.இதனால் இவர்களைமாதிரி ஆட்களை பீகார் மாதிரி மாநிலங்களை முன்னேற்ற அனுப்பலாம். :)

சரி, இதுவரை அடைந்த முன்னேற்றங்களை இனிமேலும் தக்கவைக்கவோ, தொடர்ந்து எடுத்துச்செல்லவோ ஏதுவான வகையிலான திட்டங்களும், வழிமுறைகளும்தான், வல்லரசுக் கனவுகளை விட மிக முக்கியமானதென நினைக்கிறேன்.
சோவியத்யூனியனை மறந்துவிட முடியாது.உங்கள் ஐ.ஐ.டி மாணவியின் கூற்றைப்படித்த பொழுது இந்தி படிக்காமல் பாழாய்ப்போன தமிழ் தலைமுறையினைப் பற்றி சோ வகையறாக்கள் விடுகிற (முதலை) கண்ணீர் ஏனோ நினைவுக்கு வருகிறது.

வெளியுறவுக்கொள்கை என்ற தலைப்பைப் பார்த்ததும் இந்த தலைப்பை ஒட்டி நான் வேறொன்றும் தமிழ்மணத்தில் படித்தது (இங்கு: http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_16.html) இது விடுபட்ட இலங்கை பற்றிய வெளியுறவுக்கொள்கை வெற்றிடத்தைப் பற்றிய ஒருவித பார்வை.

பதிவுக்கு நன்றி!

arulselvan said...

>>>>
இதனிடையே சோ போன்ற அறிவுஜீவிகள் செய்துக்கொண்டிருந்தது பெயர் சூட்டல் போன்ற புறவயச் சடங்குகளை கிண்டலடித்துக் கொண்டிருந்தது மட்டுமே.
>>>>>
இங்கு சோ போன்றவர்கள் திராவிட (தீரா-விட)இயக்கங்களை கிண்டல் அடித்துக்கொண்டே தம்மை வளர்த்துக்கொண்டும், தமிழைப்பற்றிய இளக்காரத்தையும், அரசியல்வாதிகளைப்பற்றிய நம்பிக்கையின்மையையும்,போலியான
தேசிய, அடிப்படைவாத கருத்தாக்கங்களை கணம்தோறும் அயராமல் விநியோகித்து வருகையில், தமிழ்நாடு ஏதோ செய்துகொண்டிருந்திருக்கிறது.
---------------------------------

:-)

"சோ" போன்றவர்களை அறிவுஜீவிகளாக ஏற்றுக்கொள்ள எஸ்வீசேகரின் விடலை ஜோக்குகளைப் பார்த்து தமிழ் கிராமத்தானை "அறிந்து" கொள்பவர்களாலேயே முடியும். துக்ளக்கை அவர் "நமது தலைநகரம் மாஸ்கோ", "கம்பாசிடர் கவிதைகள்" என்று உளர ஆரம்பித்த காலத்திலிருந்தே படித்து வருகிறேன். இப்போது பச்சை சாதிய இந்துத்துவவாதி ஆகி இருக்கிறார். அவ்வளவுதான்.

Narain Rajagopalan said...

அருள், 'சோ'வினை ஒரு பொருட்டாய் மதித்து பேசுதலில் ஒரு உருப்படியான பிரயோசனங்கள் இல்லை.

முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது மனதுக்கு சந்தோஷமளித்தாலும், முன்னேற்றம் எல்லா தரப்பு மக்களையும் எட்டியிருக்கிறதா என்பதும் கேள்வி. வங்காளம் பரப்ரப்பாக இருக்கிறது. நேற்று படித்தது, ஸ்டீவ் வாக் வங்காள முதல்வரோடு வியாபாரம் பேசி இருக்கிறார்.

தென் மாநிலங்களில் ஐடி தாண்டி மற்ற விசய்ங்களை செவி மடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. பயோ தொழில்நுட்பம், பிபிஓ, அறிவுசார் தொழில்கள், சாலை கட்டமைப்புகள் என விரிய ஆரம்பித்துவிட்டது.

எனக்கு தெரிந்து என் பயம் இனிமேல் தான் நிஜமான ஆட்டம் ஆரம்பிக்க போகிறது, 2010-ல் இந்தியாவில் ஏறத்தாழ 30 கோடி இளைஞர்கள் இருப்பார்கள், உலகின் மிக இளமையான பொருளாதார நாடாக இந்தியா தோற்றமளிக்கும், இன்னும் 5 வருடங்களை உள்ள நிலையில் இவர்களுக்கான வேலை வாய்ப்பு, வசதிகள், கல்வி, இட்ம், சாலைகள், வாகனங்கள், வங்கிகள், துணிமணிகள் இன்ன பிற விசயங்களில் என்ன நடக்கும் ?அறிவு சார் தொழில்கள் மட்டுமே நமக்கு போதுமா ? அதை தவிர்த்து இங்கு வேறு என்ன தொழில்களில் முன்னேற்றங்கள் வர ஆரம்பிக்கும் ? பார்க்க: டீக்கடையில் வெளியாகியுள்ள நியு சயன்டிஸ்ட் இதழின் செய்தி - இந்த செய்தி சந்தோஷமளித்தாலும், இதில் உள்ளூர ஒரு கட்டாயமாக்கல் தெரிகிறது. அறிவு சார் நாடாக நாம் நம்மை பிரகடனப் படுத்திக் கொண்டால், வேலை செய்யும் அனைவரும் அறிவாளிகளாக இருக்க வேண்டிய கட்டாயமுண்டு. நம் கல்வி நிறுவனங்கள் அதை செய்கின்றனவா?

ஆக, பெரியண்ணனாய் இருப்பது, தோற்றமளிப்பது அழகாய் தெரிந்தாலும், சீன பங்காளி நம்மை கூர்மையாய் பார்த்து கொண்டிருக்கிறார். இதுப் பற்றிய செய்தியொன்றை என் ஆங்கில பதிவில் இட்டிருக்கிறேன் (சுட்டி: 50 வருடங்கள் - ஜனநாயகம் Vs. போராட்டம்) இந்தியாவின் மிகப் பெரிய சவால் இதுதான். சீன நிறுவனங்கள் உலக நிறுவங்களை வாங்கி ஏப்பமிட்டு, புஷ்டியான குழந்தையாய் வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் இன்னமும் உட்வார்ட்ஸ் கிரைப்வாட்டர் நிலையில் தான் இருக்கிறோம் என்பதையும் மறக்கமுடியாது.

நிறைய யோசிக்கவேண்டும் என்று மட்டும் தெரிகிறது.....பார்ப்போம் எப்படி நாம் நம் படிகளை அமைத்துக்கொள்ளப் போகிறோம் என்று.

Balaji-Paari said...

Narain nalla sutti...thanks

dondu(#11168674346665545885) said...

திடீரென்று சோ எங்கிருந்து இந்த விவாதத்தில் வந்தார் ஐயாமார்களே?

மாஸ்கோவைப் பற்றி அவர் எழுதியது உண்மை என்று 1991-க்குப் பிறகு ருஷ்யாவில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ ஆவணங்களே சாட்சி. கம்யூனிஸ்டுகள் தனக்குத் தொல்லை கொடுக்காமலிருக்குமாறு அவர்களிடம் சோவியத் யூனியன் கூற வேண்டும் என்று அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி பிரஷ்னெவிடம் முறையிட்டிருந்தது உங்கள் எல்லோருக்கும் மறந்து விட்டதா? அதே போல ஸ்டாலின் இறந்ததற்கு நம் மத்திய அரசாங்கம் இரண்டு நாட்கள் விடுமுறை விட, சோவியத் யூனியனிலோ அரை நாள் கூட விடுமுறை இல்லை. நாம் அசடு வழிந்ததுதான் மிச்சம். செக்கொஸ்லாவோகியாவில் சோவியத் யூனியன் 1968-ல் செய்த அட்டூழியத்துக்கு எல்லோரும் அதைக் கண்டிக்க இந்தியா மட்டும் நடுநிலைமை வகித்தது வெட்கக் கேடான விஷயம் அல்லவா? இதையெல்லாம் பார்த்துத்தான் சோ அவ்வறு எழுதினார்.

கம்பாசிட்டர் கவிதை? சோ கூறியது முற்றிலும் உண்மை. கவிஞர் சுரதாவின் கவிதையிலிருந்த இலக்கணப் பிழைகளை அவர் விகடனில் எடுத்துக் காட்ட வாயடைத்துப் போய் ஒரு பதிலையும் அப்போது சம்பந்தப் பட்டவர்களால் கூற முடியவில்லை என்பதுதான் உண்மை. இவ்விஷயத்தில் இவையெல்லாம் நான் நேரடியாகப் படித்தேன்.

சோ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப் பார்க்கிறீர்கள்? அவர் பத்திரிகையாளராகத் தன் கடமையையே செய்து வருகிறார். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் தனியாக வலைப் பதிவு போடுங்கள் அங்கும் வந்துப் பின்னூட்டம் இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

arulselvan said...

அன்புள்ள டோண்டு ராகவன்,

வேலைகள். தாமதமாகிவிட்டது.
-----------------------------------
>>>
அதே போல ஸ்டாலின் இறந்ததற்கு நம் மத்திய அரசாங்கம் இரண்டு நாட்கள் விடுமுறை விட, சோவியத் யூனியனிலோ அரை நாள் கூட விடுமுறை இல்லை. நாம் அசடு வழிந்ததுதான் மிச்சம்
------------------------------------------
நீங்கள் சரியாக நினைவு கூறவில்லை. பிரஷ்னேவ் இறந்ததற்கு 1982 இல் இந்திரா விடுமுறை விட்டார். ஆனால் அதற்கும் 70-களில் சோ எழுதியதற்கும் - என்னதான் அவர் அரசியல் தீர்க்கதரிசியாக இருந்தாலும்- சம்பந்தமிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
-------------------------------------------
உங்களுடைய மற்ற எடுத்துக்காட்டுகளை பற்றி: சோவினுடைய 'உலகளாவிய' பார்வையில் அந்தக்கால இந்திய வெளியுறவுக்கொள்கை பொருளாதாரக் கொள்கை இவற்றைப் பற்றி பேசுவதற்கு நிச்சயம் முடியும். ஆனால் அது தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
--------------------------------------------
>>>
கம்பாசிட்டர் கவிதை?... இவ்விஷயத்தில் இவையெல்லாம் நான் நேரடியாகப் படித்தேன்.
------------------------------------
இது சோவின் 'இலக்கிய' மற்றும் 'அழகியல்' அறிவை வெளிக்காட்டிய மற்றுமொரு நிகழ்வு. சுரதாவை மட்டும் பேசவில்லை. பாரதி தொடங்கி பிச்சமூர்த்தி, சி.சு செல்லப்பா, சி.மணி, பு.பித்தன், க.நா.சு, ஞானக்கூத்தன் என பலரும் வளர்த்தெடுத்த 'புதுக்'கவிதையை இயக்கத்தையே தம் அறிவாற்றலால் மறுதலித்தார். 'வா வாத்யாரே ஊட்டாண்டே' ன்னு இலக்கியம் வளர்த்தவரின் மேதமை சொல்லமாட்டாது.
-----------------------------------
ஆனால் இவையெல்லாம் மிகச் சின்ன, ஒதுக்கிவிட்டுப் போகக்கூடிய விஷயங்கள். நீங்கள் குறிப்பிட்டதால் எழுதினேன். அவர் தமிழகத்துக்கு எதிராக நாடளவில் நடத்திய பிரச்சாரங்கள், பிராமணரைத் தவிர பிற சாதிகளின் கலாச்சார, மத, மொழிச் செயல்பாடுகளை என்னாளும் கொச்சைப்படுத்தி வெளியிட்ட கருத்துக்கள் என பல உண்டு.
நண்பரே அவரைப்பற்றிப் பேசி நேரம் செலவளிப்பது வீண்.
அவர் செயல்பாடுகளைக் கடந்து தமிழகமும் தமிழரும் போய்விட்டர்கள்.
----------------------------
>>>
சோ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப் பார்க்கிறீர்கள்?
----------------------------
நல்ல நகைச்சுவை எழுத்தாளர். அதில் சந்தேகமே கிடையாது. அதற்குத்தான் துக்ளக் தவறாமல் படிப்பேனே தவிர நடுநிலைதவறாத அவருடைய அறிவுப்பிரவாகத்திற்காக அல்ல.
அவர் இன்னும் நூறாண்டிருந்து நமக்கு நகைச்சுவை அளிக்க சித்திக்கட்டும்
---------------------------------
அன்புடன்
அருள்

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் சரியாக நினைவு கூறவில்லை. பிரஷ்னேவ் இறந்ததற்கு 1982 இல் இந்திரா விடுமுறை விட்டார். "
மன்னிக்கவும், உங்கள் நினைவில்தான் குறைபாடு. ஸ்டாலின் இறந்தது மார்ச் 1953-ல். நான் அப்போது இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஸ்டாலின் இறந்ததற்காக விடப்பட்ட இரண்டு நாட்கள் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்தது என் நினைவில் உள்ளது. அப்போது பிரதமர் நேரு அவர்கள். பிரஷ்னேவுக்காக இந்திரா காந்தி விடுமுறை விட்டதில் ஒரு வியப்பும் இல்லை.
அப்போதிலிருந்தே இந்தியாவை சோவியத் யூனியனுக்கு ஜால்ரா அடிக்க வைப்பது தொடங்கி விட்டது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகும் அதல பாதாள மதிப்புடைய ரூபிளுக்காக பல ரூபாய்கள் அளிக்க வேண்டி வந்தது. எல்லாவற்றுக்கும் முன்னால் சோவியத் யூனியனுடன் செய்துக் கொண்ட ஒருதலை ஒப்பந்தங்கள்தான் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்