Friday, March 18, 2005

சொல்லாதே யாரும் கேட்டால் ...

தமிழக அரசியலில் இப்போது ராமதாஸ் திருமா கூட்டணி பலருக்கும் ஒருவித படபடப்பை ஏற்றியிருக்கிறது போலத் தெரிகிறது. நம் மேல்தட்டு பத்திரிக்கை அறிதிரிபுக் கூட்டணிகளோ, சொல்லவே வேண்டாம். மரம்வெட்டி என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பேசமுடியும். இல்லை, சில ஆண்டுகளுக்கு முன் கூட நிஜமான இனப்படுகொலைகள் செய்த தேசியக் கட்சிகளின் தலைமைகளை தைரியமாக ஆள்வெட்டிக் கட்சியின் முகமூடி மாயாத்மா என்று சொல்ல மனம்தான் வருமா? ஜனநாயகம் எப்பொழுதும் சமூகத்தின் ஒரு மட்டத்திற்குக் கீழே கசியவிடாமல் பார்த்துக் கொள்வதில் படு ஜாக்கிரதையாக இருப்பார்கள் போலும். 67 ல் திமுக ஆட்சியைப் பிடித்தவுடன் ஆரம்பித்தது . எப்படியாவது இந்த மாநில நீரோட்டங்களைக் கலைத்து தேசீயப் பெரும்சாக்கடையில் தமிழகத்தை ஐக்கியப் படுத்திவிடவேண்டுமென்ற திட்டம். தமிழகத்தின் வடக்கு, கிழக்கு மாவட்டகளில் நன்கு பரவியிருந்த திமுகவின் நிலஉடைமை ஆளும் சாதிகள் பதவியைப் பிடித்தவுடன் சமுதாய மாற்றத்திற்கான பொறியை அணைத்துவிட்டு 'ஆட்சி' செய்ய ஆரம்பித்ததால் நிலஉடைமையற்ற கீழ்சாதி, தலித்துகளுக்கு ஏதும் போக்கிடம் இருக்கவில்லை. கம்யூனிஸ்டுகளோ தொழிற்சங்கமே வர்க்கப் புரட்சியை முன்னெடுக்கும் புல்டோசர் என்று சித்தாந்தம் பேசியதால் இயக்கமே வழக்கழிந்துபோக, அன்றைய நடுவண் அரசின் செயல்பொறிகள் எம்ஜியாருக்கு அரசியல் கட்சி அமைத்து அரவணைத்து அடைகாத்து தமிழர்களின் 'திராவிட' இயக்கங்களைப் பிரித்து சரிக்க முயற்சித்தனர். எம்ஜியாரின் ஓட்டுவங்கி, ஞானக்கூத்தனின் சொற்களில் சொல்லவேண்டுமானால், மேலே சொன்ன நரி-பரி மாற்றத்தில் விட்டுப்போன கீழ்சாதி மற்றும் தலித்துகள்தாம். எம்ஜியார் உயிரிருக்கும்வரை திமுகவினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் தேசியக் கட்சிகளும் காலூன்றமுடியாமல் தமிழக அரசியல் ஒரு 'திராவிட' இரட்டையர் ஆட்டம் ஆகிவிட்டது. இது கொடுத்த துயரில் எப்படியாவது மாநில அரசின் அதிகார வரையைக்குறைக்க ராஜீவின் டூன் உயிரிகள் கண்டுபிடித்த 'பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு நேரடி பண வினியோகம்' போன்ற நவகாந்தீயத் திட்டங்கள் முழுதுமாக தேசியக் கட்சிகளுக்கு பயன் தருமுன் வந்தது ஜனதா தள கூட்டாட்சி. அன்றைக்கு ஆரம்பித்து இன்றுவரை நாட்டின் பலமானிலப் பிரதிநிதியாக செயல்படவேண்டிய தலைவிதி நடுவண் அரசுக்கு வாய்த்துவிட்டதால் என்ன செய்தால் இல்லாத இந்த 'திராவிட' மாயையைப் போக்கலாம் என்று தேசியங்கள் திட்டம் போடுகின்றன. திமுக, அதிமுக இரண்டுமே இப்போது முழு பூர்ஷுவாக்கட்சிகள் ஆகிவிட்டதால் கீழ்த்தட்டு மக்கள் தமக்குள்ளே 'ஜாதிக்' கட்சி அமைக்காமல் அகில இந்திய ஜோதிக்கட்சிகளா அமைக்கமுடியும். ராமதாஸின், திருமா, கிருஷ்ணசாமி இவர்களின் பிரபலத்துக்கு காரணம் அவர்கள் சமுதாயத்தின் ஒரு மறக்கப்பட்ட தளத்தை முன்னிறுத்துவதால் தான். மற்றபடி பிற மாநில, தேசியக் கட்சிகள் ஏதோ ஜாதியில்லாமல் கொள்கைப் பிடிப்பில் உடும்புச் சக்கரவர்த்திகள் போலவும் அவர்களுக்கு மட்டுமே தேசபக்திக் கனல் உள்ளில் உறைவது போலவும் கட்டப்படும் பிம்பங்கள் சும்மா மாயாவாதம்தான். மாற்றங்கள் நிறைய அடிதடியில்லாமல் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஆதிக்க ஜாதிகளின் கடைசிப் புகலிடம் கீழ்சாதி ஓட்டுகள் ஒரு திரட்சியாகமல் பார்த்துக்கொள்ளுதல். இதற்கு தயக்கம் எனது தாயகம் புகழ் ரஜினியோ இல்லை இன்னும் அமையாத பட்டாளத்தின் கேப்டனோ ஒரு கருவியாகச் செயல் பட்டால் எப்படியாவது இரு கழகங்களிடமும் தாம் கெஞ்ச வேண்டியதில்லை என தேசியக்கட்சிகள் நினைக்கின்றன. விதி வலியது. அதை யாரும் வெல்ல முடியாது.

15 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு அருள்.

Meyyappan Meyyappan said...

//தேசியக் கட்சிகள் ஏதோ ஜாதியில்லாமல் கொள்கைப் பிடிப்பில் உடும்புச் சக்கரவர்த்திகள் போலவும் //

:) படிக்க நல்ல கட்டுரை.

Meyyappan Meyyappan said...

//தேசியக் கட்சிகள் ஏதோ ஜாதியில்லாமல் கொள்கைப் பிடிப்பில் உடும்புச் சக்கரவர்த்திகள் போலவும் //

:) படிக்க நல்ல கட்டுரை.

Anonymous said...

நல்ல பதிவு!

Jayaprakash Sampath said...

நல்ல, செமத்தியான மூட்லே இருக்கீங்க போலிருக்கே....?

//ராமதாஸின், திருமா, கிருஷ்ணசாமி இவர்களின் பிரபலத்துக்கு காரணம் அவர்கள் சமுதாயத்தின் ஒரு மறக்கப்பட்ட தளத்தை முன்னிறுத்துவதால் தான். //

இது மட்டுந்தானா காரணம்?

இதற்கு தயக்கம் எனது தாயகம் புகழ் ரஜினியோ இல்லை இன்னும் அமையாத பட்டாளத்தின் கேப்டனோ ஒரு கருவியாகச் செயல் பட்டால்

ம்ம்ம்ம்ம் நடத்துங்க... :-)

Thangamani said...

//சில ஆண்டுகளுக்கு முன் கூட நிஜமான இனப்படுகொலைகள் செய்த தேசியக் கட்சிகளின் தலைமைகளை தைரியமாக ஆள்வெட்டிக் கட்சியின் முகமூடி மாயாத்மா என்று சொல்ல மனம்தான் வருமா? //


//எப்படியாவது இந்த மாநில நீரோட்டங்களைக் கலைத்து தேசீயப் பெரும்சாக்கடையில் தமிழகத்தை ஐக்கியப் படுத்திவிடவேண்டுமென்ற திட்டம். //

//கம்யூனிஸ்டுகளோ தொழிற்சங்கமே வர்க்கப் புரட்சியை முன்னெடுக்கும் புல்டோசர் என்று சித்தாந்தம்//

//திமுக, அதிமுக இரண்டுமே இப்போது முழு பூர்ஷுவாக்கட்சிகள் ஆகிவிட்டதால் கீழ்த்தட்டு மக்கள் தமக்குள்ளே 'ஜாதிக்' கட்சி அமைக்காமல் அகில இந்திய ஜோதிக்கட்சிகளா அமைக்கமுடியும். //


படிக்க சுவரஸ்யமாகவும், இந்த 30 ஆண்டுகால திராவிட/தேசிய கட்சி அரசியலும், அதை அழித்தொழிக்க முயலும் சோ பாணி முயற்சிகளும், அவற்றின் நம்பிக்கை ஜிகினா நட்சத்திரமாக ரஜினி ஜொலிக்கையில் மக்கள் கை நழுவி இன்னொரு கூட்டணிக்கு அடித்தளமிடுவதும், மிக சுருக்கமாக, வடிவான வகையில் எழுதப்பட்ட நல்ல பதிவு.

நன்றி

ROSAVASANTH said...

நல்ல பதிவு. பல கருத்துக்களில் ஒத்து போகிறேன். ஆனால் 'கீழ்ஜாதி' என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளீர்கள். இன்று இது அரசியல்ரீதியாய் தவறு என்று ஒப்புகொண்டு, 'தலித், ஒடுக்கப்பட்ட ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதி' என்று பல வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன. வேறு வார்த்தைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இப்படி கருத்து சொல்வதை 'வெட்டி உதார்' என்று நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதியுள்ளேன். நன்றி!

arulselvan said...

ரோசா
MBC என்பதை பெரிதாய் 'மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி' என்று எப்படி திரும்பத்திரும்பஎழுதுவது என்றுதான் அப்படி எழுதினேன். கீழ் சாதி என்று எழுதினால் யாராவது offensive ஆக எடுத்துக்கொள்வார்களா என்ன? அப்படியிருந்தால் அதற்கு மன்னிக்கவும். ஒரு விதத்தில் பார்த்தால் தமிழகத்தில் 'பிராமணன்- மற்றெல்லோரும் சூத்திரன்' என்ற மாமுனிவர்களின் வாக்குகளுக்கும் தம்மை தேவ இந்திர வம்சிகளாக பாவித்துக்கொள்ளும் கீழ்குடி மக்களின் அவாவிற்கும் சம்பந்தம் இல்லாமலா போய் விட்டது. முதலில் ஆமாண்டா நான் கீழ்சாதிதான் அதுக்கென்ன இப்போ அப்படிங்கற தைரியம் வரணும். ஆனந்த விகடன் கூட நான் வெஜ் சாமியப் பத்தி எழுதற காலம். இப்ப என்ன தயக்கம் என்று தெரியலை. வசந்த், உதார்னு எல்லாம் நினைக்கமாட்டேன். வார்த்தைகளைத் தாண்டி என்ன சொல்லுகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்:
//இதில் ஆதிக்க ஜாதிகளின் கடைசிப் புகலிடம் கீழ்சாதி ஓட்டுகள் ஒரு திரட்சியாகமல் பார்த்துக்கொள்ளுதல்//

நெடு நாட்களாய் நானே விரிவாக எழுதவேண்டுமென நினைத்திருந்த பொருளை கச்சிதமாக எழுதியிருக்கிறீர்கள். ராமதாஸ்-திருமாவின் 'திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்ச் சூட்டல்' விமர்சனங்களை கிண்டலடிப்பதையும் இந்த எதிர்ப்பின் நீட்சியாகவே காணவேண்டும். ராமதாசை 'மாலடிமை' என விளிப்பது, 'இதுக்கும், அதுக்கும் தமிழ் வார்த்தைகள் என்ன' என்று புத்திசாலித்தனமாக வினவுவது, ராமதாஸ்-திருமா கலைவெளிப்பாட்டின் எதிரிகள் எனத் திரிப்பது போன்ற சொத்தையான தர்க்கங்களை வைப்பவர்களில் ஒருவரும் தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் வைக்க வேண்டியதின் அவசியத்துக்கான உருப்படியான காரணமெதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. ராமதாஸ்-திருமாவுக்கு தமிழ்ப்படப் பெயர் தங்கள் அரசியலுக்கான ஒரு ஆயுதம் என்றால் அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இந்த வறட்டு கிண்டல்கள் ஒரு ஆயுதம். சும்மா சொல்லக்கூடாது, சோவின் தர்க்கசாஸ்திரம் தமிழ் நாட்டில் நன்றாகவே வேரூன்றியிருக்கிறது.

வீரவன்னியன் said...

நல்ல பதிவு, வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று சொல்லுவதே ஒரு சாதியை திட்டும் கெட்டவார்த்தை போலத் தான். இது குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு

வீரவன்னியன் said...

நல்ல பதிவு, வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று சொல்லுவதே ஒரு சாதியை திட்டும் கெட்டவார்த்தை போலத் தான். இது குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு

arulselvan said...

>>>>
நெடு நாட்களாய் நானே விரிவாக எழுதவேண்டுமென நினைத்திருந்த பொருளை
---------------------
சுந்து, கண்டிப்பாக எழுதுங்கள். பலவிதமான பார்வைகள் பதிக்கப்படாமலே போகின்றன.

--------------------------
மதி, மெய்யப்பன், பிரகாஷ், தங்கமணி:
நன்றி.

வீரவன்னியன்: நான் இதை வன்னியரை மட்டும் முன்வைத்து எழுதவில்லை. அனைத்து கீழ்த்தட்டு சாதிகளின் அரசியல் செயல்பாட்டை புரிந்து கொள்ளவே எழுதினேன். அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமை வந்துவிடுமென்று நம்பிக்கையும் இல்லை. தேர்தல் வரட்டும் இதே ராமதாஸ்-திருமா அணி கூட்டாக இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

Jayaprakash Sampath said...

//ராமதாஸ்-திருமாவின் 'திரைப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்ச் சூட்டல்' விமர்சனங்களை கிண்டலடிப்பதையும் இந்த எதிர்ப்பின் நீட்சியாகவே காணவேண்டும். ராமதாசை 'மாலடிமை' என விளிப்பது, 'இதுக்கும், அதுக்கும் தமிழ் வார்த்தைகள் என்ன' என்று புத்திசாலித்தனமாக வினவுவது, //

எத்தனை சுட்டுப் போட்டாலும், எனக்கு இந்த லாஜிக் மட்டும் புரிவதே இல்லை.

"மாலடிமை, அதுக்கும் இதுக்கு என்ன தமிழ் " என்கிற சோ-பாணிக் கிண்டல்களை செய்வது யார் என்று பார்த்தால், பெரும்பாலும் விசிலடிச்சான் குஞ்சுகளாகத்தான் ( எங்கும் எழுதியதில்லை என்றாலும், என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இருக்கும் என்பது என் அவதானிப்பு. நாளையே, ரசினிகாந்துடன், ராமதாசு கைகுலுக்கி, தினத்தந்தி முதல் பக்கத்தில் போட்டோ வந்தால், 'கலையுலகக் காவலன் ராமதாசு' என்று பட்டம் குடுத்து கொம்மாளம் போடப் போவதும் இதே விசிலடிச்சான் குஞ்சுகள் தான்.

ராமதாசுக்கும், திருமாவளவனுக்கும் இந்த பெயர்சூட்டு கலாட்டாக்கள் செய்வதில், எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று சொல்வது ஒருவிதம். அரசியல் ஆதாயங்களுக்காகத்தான் செய்கிறார்கள் என்று சொல்வது ஒருவிதம். உள்நோக்கம் இருந்தாலும், அதை கண்டுகொள்ளப்படாது என்று சொல்வது எந்த விதத்தில் சேர்த்தி?

மு. சுந்தரமூர்த்தி said...

ப்ரகாஷ் வணக்கம்.
இதை ஒருவர், இருவர் செய்தால் ஒரு தமாஷ¤க்காக செய்கிறார் என்று கண்டும் காணாதவாறு போய்விடலாம். இதுவே பலரிடமிருந்தும், பல நேரங்களில் வெளிப்பட்டால் அதன் குழு உளவியலையும், அரசியலையும் கணக்கிலெடுக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று இந்த ஒரு விஷயத்தை மட்டுமே தனியாகக் கிண்டலடித்தால் கூட அதை பொழுதுபோக்குக்காக செய்கிறார்கள் என்று உதறிவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட அரசியலை அல்லது ஆட்களை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் இந்த விஷயத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்போது அதுவும் அரசியலாகத் தானே இருக்கமுடியும்? நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் (அல்லது வாய்ப்பை வலிய ஏற்படுத்திக்கொண்டு) சோவின் பெயரை இழுப்பதும் இது மாதிரித் தானே? எத்தனை பேர் (நான் உள்பட) முன்சாய்வில்லாமல் issue based விமர்சனமோ கிண்டலோ செய்கிறார்கள்?

இந்த உளவியல்/அரசியலின் இன்னொரு பகுதி தடுக்கி விழுந்தால் '...ஆட்டோ வரும்...' என்று எச்சரிக்கை விடுத்து கூடவே இரண்டு சிரித்த முகங்களையும் போட்டு வைப்பது. இதுவரை நிஜத்தில் வந்த ஆட்டோக்களை விட ஓராண்டில் வலைப்பதிவுகளில் வந்த ஆட்டோக்களே அதிகமாக இருக்கும்.

Muthu said...

///இந்த உளவியல்/அரசியலின் இன்னொரு பகுதி தடுக்கி விழுந்தால் '...ஆட்டோ வரும்...' என்று எச்சரிக்கை விடுத்து கூடவே இரண்டு சிரித்த முகங்களையும் போட்டு வைப்பது. இதுவரை நிஜத்தில் வந்த ஆட்டோக்களை விட ஓராண்டில் வலைப்பதிவுகளில் வந்த ஆட்டோக்களே அதிகமாக இருக்கும்.//

அருள்,
நல்ல பதிவு.
சுந்தரமூர்த்தி,
இதுவரை எத்தனை ஆட்டோ உண்மையில் வந்திருக்கிறது என்று யாருக்க்குத் தெரியும் :-) .