Monday, March 21, 2005

ஜெயகாந்தனும் ஒரு சிறுவனும்:

முதலில் ஜெயகாந்தனுக்கு வாழ்த்துக்கள். முப்பது வருடம் தாமதமாக கொடுக்கப்பட்ட விருது என்றால் அது இதுதான். ஒரு உன்னத கலை இலக்கியவாதி இதை ஏற்றுக்கொண்டு ஏதோ சம்பந்தமில்லாமல் முணுமுணுப்பதைத்தான் இனி கேட்க முடியும் என நினைக்கிறேன். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், உன்னைப்போல் ஒருவன், இவற்றுடன் என்னைப் பொருத்தவரை ஜெகே யின் வளர்ச்சியும் சாதனையும் முடிந்து விட்டது. அதுவரை அவர் சாதித்ததற்கு நாட்டின் மிகப் பெரிய எந்த விருதானாலும் அப்போதே அவருக்கு கொடுக்கப் பட்டிருக்கலாம். அவ்வளவுதான். பல்வேறு தாக்கங்களில் நான் எல்லாத்திசைகளிலும் இழுக்கப்பட்டபோது ஜெகே எங்கே இருந்தார் எனப்பார்க்கிறேன். கண்டதையும் படிக்கும் பழக்கம் கிராமத்து லைப்ரரியிலே பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்துவிட்டதால் அப்போதே ஜெகேயின் சிறுகதைகள் படித்துக்கொண்டிருந்தேன். தீவிர பக்திமானாக இருந்த எனக்கு அவர் 60களில் எழுதி நூலகத்தில் கிடைத்த கதைகளும் முன்னுரைகளும் பெரும் அதிர்ச்சியையும் கொஞ்சம் பயமும் கொஞ்சம் தைரியமும் அளித்தன. கிராமத்தில் நேரடியாகப் பார்க்க முடிந்த ஏழ்மை ஜேகே எழுதிய மனிதர்களை எங்களூர் மக்களாகவே நினைக்க வைத்தது. ஒன்பதாம் வகுப்பு கோடைவிடுமுறையில் அப்பா நல்லா இருக்கும் படிடா என்று ஒருமனிதன் ஒருவீடு ஒரு உலகம் புத்தகத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அவருடைய பிற நாவல்களை நூலகத்திலிருந்து படித்து தீர்த்தேன். அப்போது திமுக ஆட்சியிலிருந்தாலும், நாத்திகத்துக்காக யாரும் எங்களூர்ப்பக்கம் ஓட்டுப்போடவில்லை. சும்மா காங்கிரஸுக்கு மாற்றம் வேண்டும் என்றுதான் திமுகவிற்கு ஓட்டுப்போட்டார்கள். ஊரில் இருந்த ஒரே அந்தணகக் குடும்பத்தை நாங்கள் அந்தணர்களாகவே உணராததால் லைப்ரரியில் 'உண்மை' படிக்கும்போது எதை எதிர்கிறார்கள் என்றே புரியாமல் தவித்ததுண்டு. ஜெகே அப்போது ஒரு கம்யூனிஸ்டாக கூடவே(!) காங்கிரஸ்காரராக தன்னைக் காட்டிக்கொண்டார். அவருடைய திராவிட எதிர்ப்பு எதற்காக என்றே திராவிட ஆதரவாளர்களாக இல்லாமலிருந்த எங்களுக்குப் புரியவில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் கிருபானந்தவாரியார் போன்றவர்கள் ஜெகேயை விட இன்னும் பெரிய 'திராவிட' எதிர்ப்பை இத்தனை ஆர்ப்பாட்டமில்லாமல் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழகம் முழுவதும் அலைவீசினாலும் திராவிட இயக்கம் என்பதன் தேவையோ தாக்கமோ எதுவுமில்லாமல் ஊரில் இருந்தோம். புதுமைப்பித்தனும், ஜெகேயும், தி.ஜானகிராமனும் பள்ளி வயதில் எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களாக இருந்தார்கள். பிறகு கிளம்பியது ஒரு தலைமுறையையே உலுக்கி நாற்றிசையும் வீசிய அரசியல் நிகழ்வு. இந்திய ஜனநாயகத்தின் கழுத்து நெறிபட்ட எமர்ஜென்ஸி காலத்தில்
"...................
உலகப் பாறாங்கல்லில் நசுங்கினவன் முனகலின்
தொலைதூர எதிரொலிகூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன
எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்"
என்று இளைஞர்கள் அரற்றிக்கொண்டிருந்தபோது அற வியாக்கியானங்கள் கொடுத்து ஜேகே அடக்குமுறையை ஆதரித்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் என்ன நடக்கிறது என்று நம்பமுடியாமல் இருந்தோம். பின்னர் கல்லூரி சென்றபோது மண்டையில் அறிவியல் புகுந்து மதத்தைத் துறந்து கடவுளை மறுத்து இளமையின் உந்தத்தில் நாங்கள் விரைந்தோடிக்கொண்டிருந்த போது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் ஒரு பறக்கும் கம்பளத்தில் அமர்ந்து ஜயஜய சங்கர என்று ஜபித்தபடி எதிர்த்திசையில் இவர் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவரைப்பார்க்க வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஒரு புரட்சியாளராக கருதப்பட்டவர் போலீஸ் இளைஞர்களை வேட்டையாடியபோது சோவியத் பயணங்களும் கலைத்துவ மொளனமுமாக உருமாற்றம் பெற்றுவிட்டார்.
தமிழ் இலக்கியமோ
" சட்டம் தீட்டும் அவன் கையைக்
கட்ட எத்தனை நாள் ஆகும்
சங்கிலிகள் சிறைச்சாலைகள் எவற்...
செருப்புச் சத்தம் கூச்சல் குழப்பம்
சின்னாபின்னம் மீண்டும் காலியாய்"
என்று சிதைமாற்றம் அடைந்து பாதை திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது எழுதுவதற்கு ஒன்றுமில்லை என ஓய்வு பெற்றுவிட்டார். இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது 'ஹரஹர..' எழுதியிருக்கிறார். படிக்க ஏதும் இருக்கும் இருக்காது என்று கருதி நூலையே வாங்கவில்லை.
அவ்வளவு பெரும் எழுத்தாளராக சிறுவயதில் தோன்றியவரின் ஆளுமை இப்போது இருக்கும் நிலை அவரது வயதினால் வந்த அயற்சியினால் மட்டும் தோன்றுவதல்ல.
(கவிதைகள்: ஆத்மாநாம்)


http://ntmani.blogspot.com/2005/03/blog-post_19.html

http://ntmani.blogspot.com/2005/03/blog-post_111131300969195999.html

தங்கமணியின் இவ்விரு பதிவுகளையும், நண்பர்களின் பின்னூட்டத்தயும் இத்துடன் சேர்த்து வாசிக்க சரியாக இருக்கும்

3 comments:

arulselvan said...

http://ntmani.blogspot.com/2005/03/blog-post_19.html

http://ntmani.blogspot.com/2005/03/blog-post_111131300969195999.html

தங்கமணியின் இவ்விரு பதிவுகளையும், நண்பர்களின் பின்னூட்டத்தயும் இத்துடன் சேர்த்து வாசிக்க சரியாக இருக்கும்

arul

Thangamani said...

நல்ல பதிவு அருள்.

jeevagv said...

ஆகா, உங்கள் ஜெயகாந்தன் அனுபவத்தை படிக்க நிறவாக இருந்தது. வயது முதிர, அறிவு முதிர்ச்சி அடைய, எல்லோருக்கும் ஏற்படும் மாற்றம் என்று மட்டும் நினக்கவில்லை, ஜெயகாந்தனின் மாற்றம் அதற்கும் மேலே - அதுவும் தங்கள் மாற்றங்களை தங்கள் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்திற்காக மூடிபோட்டு மறைக்கும் வேஷதாரிகளுக்கு இடையே.