Thursday, March 24, 2005

ஹள்ளி திண்டி

(காசியின் நம் உணவுகள் பற்றிய பதிவை ஒட்டி இது. சென்ற வருடம் ராகாகியில் எழுதியது. நண்பர்களுக்காக மறு பிரசுரம்)

பெங்களூர் அதிவேகமாக நவயுகத்தின் அடுத்த தளத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு பல புறச்சாட்சிகள் தென்படுகின்றன.
அவற்றுள் ஒன்று தன் பின்நில குழுக் கலாச்சாரத்தை சந்தைப் படுத்துவது. ஒரு உதாரணமாக அதன் பொது உணவுக்கூடங்களைச் சொல்லலாம். Bull Temple என அழைக்கப்படும் பசவனகுடியில் இருக்கும் நந்தி கோயிலுக்கு முன்னால் ஹள்ளி திண்டி (சிற்றூர் சிற்றுண்டி) என்று ஒரு அருமையான கையேந்தி உணவகம் ஒன்று திறந்திருக்கிறார்கள். உடனே குடும்பத்துடன் நுழைந்து விட்டோம்.
என்ன உண்ண கிடைக்கிறது?

அக்கி ரொட்டி (அரிசிமா அடை)
ராகி ரொட்டி (ராகி அடை)
காய் ஹோளிகே
ஒப்பட்டு
கஜ்ஜாயா
அவரெகாய் உப்பிட்டு

என்று வரிசையாக நாட்டுப்புற உணவுப்பண்டங்கள். இதற்கு முன்னும் இவற்றை சாப்பிட மாணவர்களாயிருந்தபோது எங்கள் நண்பர்குழு கண்டுபிடித்த சிறு உணவகங்கள் மல்லேசுவரம், பளேபெட் போன்ற இடங்களில் இன்னும் இருந்தாலும் இப்படி நட்டநடு சந்தியில் பளபளப்பாக பார்த்ததில்லை. நிலக்கடலை சட்டினி இவற்றோடு சுவையாகவே கொடுக்கிறார்கள். ஏன் சென்னையில் இதுபோல் இல்லை?

'சக்கரப் பொங்கல்' இருக்கிறது. ஆனால் அங்கே எல்லாமே அரிசி, அரிசி, அரிசி தான். தமிழன் வேறு தானியங்களையே மறந்து விட்டானா என்ன? (இப்போது அந்த சக்கரப் பொங்கலையும் மூடிவிட்டு அந்த இடத்தில் மதுரை முருகன் இட்டிலிக் கடை திறந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு அரிசி அடிப்படைவாதக் கடைதான்.)

சிறு வயது நினைவுகளிலிருந்து இதோ ஒரு மெனு:

1. சோள தோசை (அரிசிக்கு பதில் சோளத்தை =மக்காச்சோளமல்ல, நல்ல நாட்டுச் சோளம்- ஊறவைத்து, மற்றபடி உளுந்து எல்லாம் எப்போதும்போல்).
2. மக்காசோள உப்புமா
3. தினை முறுக்கு (ஐயா, இதை சாப்பிட்டு இருக்கிறீர்களா?. அரிசி முறுக்கை அப்புறம் திரும்பியும் பார்க்க மாட்டீர்)
4. ராகி பக்கோடா
5. சாமைச் சோறும் பருப்புக் கீரையும் (ஹும். )
6. பாசிப்பருப்பு உருண்டை (வெல்லம் சேர்த்த இனிப்பு)

இப்படி எத்தனையோ.

இந்த கௌரவப் ப்ரசாதம் ... எப்போ கிடைக்குமோ.


(ஏறக்குரைய ஒரு வருடம் முன்பு மல்லேச்வரத்திலும் ஹள்ளி மனெ என்று ஒன்று திறந்து உள்ளார்கள். சென்றால் விடாதீர்கள்)

10 comments:

Kasi Arumugam said...

சரியாப்போச்சு, சாப்பாட்டு ராமானாக்கி விடுவீங்க போலிருக்கே:-)

இன்னும்,

ஆட்டிய கோதுமையில், **மக்காச்**சோளத்திலும் தோசை, கொள்ளுத் துவையல், நிலக்கடலைத் துவையல், வேகவைத்த கடலைப்பருப்பில் உருண்டை, எள்ளுருண்டை, கொள்ளு/தட்டைப்பயறு சுண்டல், அவரைப் பருப்பஞ்சோறு,...

தைநோம்பிக்கு தினைமுறுக்கு சுடுவது ஒரு பெரிய கல்யாணம் மாதிரி நடக்குமே! எப்படியும் 4-5 பெரிய தகரம் நிறைய சுடுவாங்க.

பன்முகத்தன்மையை எல்லாத் தளங்களிலுமே இழந்துகொண்டுதானிருக்கிறோம்.

Jayaprakash Sampath said...

//நிலக்கடலை சட்டினி இவற்றோடு சுவையாகவே கொடுக்கிறார்கள்//

நிலக்கடலை என்றால் வேர்க்கடலையா? எங்கள் வீட்டில் செய்வார்கள். ஆனால் , எந்த ஹோட்டலிலும், இந்தச் சட்டினியை செய்து பார்த்ததில்லை.

பிறகு சிம்லி என்று ஒரு இனிப்பும் செய்வார்கள். கேழ்வரகு வெல்லம் போட்டு, உருண்டையாக இருக்கும். சின்ன வயசில், அந்த உருண்டையைப் பார்த்து பயப்படுவேன். என் பாட்டி, வலுக்கட்டாயமாகப் பிடித்து, தின்னச் செய்ததும், அந்த ருசி பிடித்துப் போனது. சிம்லி, பாட்டியோடு போய்விட்டது. இப்போது எல்லாம் சாயங்காலம் பசிக்கிறது என்றால், டாப் ரேமன் அல்லது மாகி நூடில்ஸ்தான். ஹ¥ம்ம்ம்ம்

Venkat said...

அருள், ராகி ரொட்டி சரி, ராகி மொத்தே கிடைக்கிற்தா (கேப்பைக் களி) பெங்களூரில் இருந்தபொழுது என் அக்கா (சித்திப் பெண்) ராகி மொத்தேயும் மொச்சைக் குழம்பும் செய்வாள். ம்ம்...

என் பாட்டி ஒரு இன்ஸ்டண்ட் உணவைப் வைத்துப் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்வாள். ஒன்றுமில்லை, கோதுமை, பொட்டுக்கடலை, பாசிப்பயறு மூன்றும் வறுத்து அரைத்த மாவு, நாட்டுச் சர்க்கரை, கொஞ்சம் வாசனைக்கு ஏலக்காய் பொடி. நாங்கள் எல்லோரும் ஹோட்டலில் கல் மாதிரி இட்லி தின்று கொண்டிருக்க சர்வரிடம் "பொங்கப் பொங்க ஒரு கிளாஸ் வெந்நீ கொடுப்பா" என்று கேட்டு வாங்கி, மாவு, சர்க்கரை இரண்டையும் கலந்து உருண்டையாக உருட்டி தின்பாள். சாகும்பொழுது 84 வயது, தலைமுடி இடுப்புவரை இருந்தது.

Thangamani said...
This comment has been removed by a blog administrator.
Thangamani said...

அருள் நீங்க பெங்களூரில் இருக்கீங்களா? இல்ல சென்னையிலா? இப்படி ஹள்ளி மனை, ஹள்ளி திண்டி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இந்த விசயத்தில் பெங்களூர்க்காரர்கள் தமிழர்கள் மாதிரி தங்கள் தானிய/உணவு வகைகளை பேஷன், கெளரவம் என்ற பெயரில் எல்லாம் விட்டுவிட்டு அரிசியை (அல்லது கோதுமையை) மட்டும் சரணடையவில்லை. அது நானும் வியந்த விசயம்தான்.

நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
இந்த முறை ஊருக்கு வந்திருந்தபோது மகாலிங்கம், பாவண்ணன், அலி மூவரும் மல்லேஸ்வரத்தில் உள்ள 'ஹள்ளிமனே' க்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார்கள். பையனைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய் வெளியே வருவதற்குள் போதுமென்றாகி விட்டது. அந்த சந்தடியில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட வெளியே வந்தபிறகு நினைவில்லை. (வீணா ஸ்டோரில் ஆற, நின்று மூன்று நாட்களும் காலை டிபன் சாப்பிட்டது தான் பெரிய பையனுக்கு இந்த முறை பெரிய அனுபவம். இன்னும்கூட 'that was so cool' என்று சிலாகிக்கிறான்).

மு. சுந்தரமூர்த்தி said...

ப்ரகாஷ்,
நீங்களும் சிம்ளி சாப்பிட்டு வளர்ந்தவர் தானா? கேழ்வரகு, வெல்லத்தோடு, மல்லாகொட்டையும் சேர்க்கவேண்டும் (மல்லாகொட்டை = மணிலாக் கொட்டை, அதுதான் வேர்க்கடலை). நேற்று காசியின் பதிவொன்றில் இதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
//கேழ்வரகில் செய்யக்கூடிய (ராகி வடையை விட) சிறப்பான பண்டங்கள்:
1. களி -- கருவாட்டுக் குழம்பு, கீரைக் குழம்போடு
2. கூழ் -- மோர் கலந்து, வெங்காயம் கடித்துக்கொண்டு (காசி கவனிக்கவும் :-) ) குடிக்க கோடையில் இதைவிட வேறென்ன வேண்டும்?
3. ரொட்டி -- வெல்லம் கலந்த இனிப்பு வகை, கீரை போட்ட கார வகை
4. இன்னொன்று 'சிம்ளி' என்று எங்கள் ஊர்ப்பக்கம் செய்வார்கள். இதை அடித்துகொள்ள வேறெந்த கேழ்வரகு பண்டத்தாலும் முடியாது. செய்முறை இன்னொரு பின்னூட்டத்தில்.//

arulselvan said...

------------------------------------------------------------------------------
காசி:
>>>
தைநோம்பிக்கு தினைமுறுக்கு சுடுவது ஒரு பெரிய கல்யாணம் மாதிரி நடக்குமே! எப்படியும் 4-5 பெரிய தகரம் நிறைய சுடுவாங்க.
-------------------------------
எங்க கிராமத்தில பல வீடுகளில் ராத்திரி கடசி பஸ் போனப்புறம் (9;30) முறுக்கு சுட ஆரம்பித்தால் காலையிலே முதல் பஸ் (6;15) வர்ரவரைக்கும் போகும். அப்பிடி தை நேம்பி கொண்டாடினது அப்போ. இப்பெல்லாம்நாக்பூரில் இருந்து வரும் ஹல்திராம் செய்த 5கிராம் நிறையுள்ள 20 ரூ விலையுள்ள பளபள பிளாஸ்டிக்கில் அடைத்த கல்லுப்பு சேர்த்த ..... கடவுளே!
------------------------------------------------------------------------
பிரகாஷ்:

நிலக்கடலை(வேர்க்கடலை)ச் சட்டினி: சென்னை பெங்களூர் பஸ் சித்தூர் வழியாப் போனா, அங்க ஏதாவது ஓட்டல்ல இட்டிலி சாப்பிட்டாலே நிலக்கடலை சட்னி கிடைக்குமே. ஆந்திராவிலும், கர்நாடகா, கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் பழக்கமானது தான் இது.
-----------------------
வெங்கட்:
>>
அருள், ராகி ரொட்டி சரி, ராகி மொத்தே கிடைக்கிற்தா (கேப்பைக் களி)
--------------
ராகி மொத்தே பெங்களூரில் கையேந்தி பவன்களில் (தர்ஷினிகளலல்ல, நிஜமான ரோடுசைட்) இப்பவும் கிடைக்கிறது. நம்ம பேட்டையில்: அஸ்ட்றா -ஐடிஎல் எதிரில் உள்ள விளையாட்டுத்திடலில் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இப்பவும் கிடைக்கிறது. என்ன இப்பல்லாம் சிலர் காரில் வந்து கூட சாப்பிடுகிறார்கள். ராகி மொத்தே-கொண்டைக்கடலை/மொச்சை குழம்பு- default கர்நாடக உண்வாச்சே. நடராஜ் தியேட்டர் பக்கத்தில் ஒரு குட்டி ஹோட்டலில் கூட கிடைக்கும்.
சத்துமாவு எங்க தாத்தாவும் செய்து வைத்திருப்பார். அப்பிடியே சாப்பிட நல்லாத்தான் இருக்கும். ஆனால் பாலில் கொடுத்தால் நழுவி ஓடி விடுவோம்.
---------------------------------
தங்கமணி:
பெங்களூர் புகுந்தவீடு. புகழ்பாடாமல் இருக்கமுடியுமா.(பிழைக்க முடியுமா என்று 'வாசித்து'க்கொள்ளுங்கள்). கர்நாடக மக்கள் கிராமீய பழக்கங்களை அவ்வளவாக இன்னும் விட்டுவிடவில்லை. தமிழரைப் போல தம்மைத் தொலைத்தவரைக் காண முடியாது.
---------------------------------------------------------
சுந்து:
வீணா ஸ்டோர்ஸ்: இன்னும் 15 நாள் கழித்து போகும் போது நிச்சயம் உண்டு. இன்னும் கர்நாடக காலிதோசை புகழ் பாட ஆரம்பிக்கவில்லை. இன்னொரு நாள் இருக்குது.

Jayaprakash Sampath said...

சுந்தரமூர்த்தி, சிம்ளி சாப்பிட்டு வளர்ந்தவன் என்று சொல்ல முடியாது. சாப்பிட்டு இருக்கிறேன். அஷ்ட்டே. நீங்களும், அருளும் காசியும் பட்டியலிட்ட பலகாரங்கள் பலவற்றை நான் கேள்விப்பட்டதுமில்லை. நகரமும் அல்லாத, கிராமமும் இல்லாத இடத்தில் இருந்து , மாநகருக்கு மைக்ரேட் ஆகி, நாட்டார் வழக்கமும் தெரியாது, நரத்துப் பழக்கமும் புரியாமல் சுற்றும் கும்பலின் சாம்பிளாக என்னைக் கொள்ளலாம் :-) இந்தக் குறிப்பிட்ட சிம்ளியை (அதை simly என்றுதான் உச்சரிப்பார்) என் பாட்டி செய்வார். அவர் காலத்துக்குப் பிறகு, அடுத்த தலைமுறையினருக்கு, சிம்ளியைச் செய்யத் தெரியவில்லை. அதிகபட்சமாக, கேழ்வரகில் செய்யும் பலகாரம், முருங்கைக் கீரை தட்டிப் போட்ட அடையும், மாரியம்மன் உபயத்தில், எவர்சில்வர் தம்ளரில், லேசாகச் சீப்பிப் பார்த்து, ஓரமாக வைத்துவிடும் கூழும் தான். கூழுற்றும் பழக்கமும் இப்போது இல்லை. வேகமாக ஓடும் போது , நின்று திரும்பிப் பார்த்தால், எதையோ மிஸ் செய்கிறோம் என்று தெரிகிறது. உற்றுப் பார்த்தால் மசங்கலாகத் தெரிகிறது, ஒண்ணும் விளங்கலை

அருள், பெங்களுரூக்கு, எப்போதுமே சித்தூர் வழியாகத்தான் செல்வது வழக்கம். டிரான்ஸ்போர்ட்டுக்காரன், பலமனேரியில், 'போடுவான்'. நேரங்கெட்ட நேரம் என்பதால் சாப்பிட நேர்ந்ததில்லை. அனேகமாக அடுத்த முறை....

dondu(#11168674346665545885) said...

"இந்த கௌரவப் ப்ரசாதம் ... எப்போ கிடைக்குமோ."
ஹஹஹ்ஹ ஹஹ்ஹ ஹஹ்ஹா, ஹஹஹ்ஹ ஹஹ்ஹ ஹஹ்ஹா ஹஹஹ்ஹ ஹஹ்ஹஹா
அன்புடன்,
டோண்டு ராகவன்