Wednesday, March 30, 2005

ஓ.வி.விஜயன்

மலையாளத்தின் பிரபல எழுத்தாளரும், கார்ட்டூனிஸ்டுமான ஓ.வி. விஜயன் இன்று காலமானார். அவருடைய சிறுகதைகள் சில தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் இருபதுவருடங்களுக்கு முன் வந்த 'தற்கால மலையாளச்சிறுகதைகள்' ஒரு நல்ல தொகுப்பு. அவர் ஆங்கிலத்திலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலக்கட்டுரைகளின் நடை பொருள் அடர்த்தியாக, சுழிப்புகளுடன் செறிவுடன் இருக்கும். அவருடைய மலையாள நடையும் அப்படித்தான் என நண்பர்கள் சொல்வார்கள். அவருக்குப் பின் ரவிஷங்கர், பிரசன்னராஜன் போன்றோர் அதே தோரணையில் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதினாலும் அவரளவு இயற்கையாக செய்ய முடியவில்லை என்று எனக்குப் படுகிறது. இவர்களின் எழுத்தில் வலிந்து பெறப்பட்ட நடையே மிஞ்சுவதாக எனக்குப் படுகிறது. ரவிஷங்கர் ஒரு கார்ட்டூனிஸ்டும் கூட என்பதும் ஒரு இணச்செய்தி. கேரளம் தயாரித்து நாட்டில் பரவவிட்ட சங்கர் , அபு அப்ரஹாம், ஒவி விஜயன், ரவிஷங்கர், மஞ்சுளா என ஒருபாடு கார்ட்டூனிஸ்ட்கள் கவனிக்கப் படக்கூடியவர்கள்.

6 comments:

Anonymous said...

இந்தியாவிலிருந்த காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்த ஓ. வி. விஜயனுடைய கட்டுரைகளையும், கார்ட்டூன்களையும் தவறாமல் படித்திருக்கிறேன். அவரை எனக்கு அறிமுகப் படுத்திய மலையாள நண்பர் மார்க்ஸியப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராயிருந்தாலும் அக்கட்சியை மிக விமர்சனத்துடன் பார்ப்பவர். அவருடன் நானும் DYFI மற்றும் SFI கூட்டங்களுக்கு நிறையச் சென்றிருக்கிறேன். அவர் எப்பொழுதும் ஓ. வி. விஜயனைப் பற்றியும், அடூர் கோபால கிருஷ்ணனைப் பற்றியும் அவர்கள் மார்க்ஸியப் பொதுவுடைமைக் கட்சியின் மேல் வைத்த விமர்சனங்களையும் பேசியதன் மூலம் எனக்கும் அவர்களின் மேல் மதிப்பு வந்தது. ஓ. வி. விஜயன் மாத்ருபூமியில் எழுதும் தொடர்களை அவரிடம் படித்து மொழி பெயர்க்கச் சொல்வேன். எனக்கு மலையாளம் தெரியவில்லையே என்று வருந்தினேன்.

வெளிப்படையான அரசியல் சம்பவங்களைப் பற்றிய ஒரு ஆழமான ஆராய்ச்சி பார்வை அவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் நையாண்டியுடன் வெளிப் படுவதுண்டு. ஈழப்பிரச்சினை பற்றி அவர் மாத்ரு பூமியில் எழுதிய ஒரு கருத்தை எண்ணி இன்றும் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அப்பொழுது எனக்கு அது ஒரு மிகைப் படுத்தப் பட்ட அல்லது வீண் பயங்கொண்ட சிந்தனையாகப் புலப்பட்டது. அவர் எழுதியது 1986 என்று நினைக்கிறேன், IPKF இந்தியா போகும் முன்பு. இரு சிங்களக் கட்சிகளும் பல ஒப்பந்தங்களைக் குழி தோண்டி புதைத்து தமிழர்களின் மேல் பிரிவினை வாதத்தை திணித்து அரசு வன்முறையின் மூலம் போராளி இயக்கங்களை உருவாக்கி விட்டிருந்த வேளையில் தமிழர்களுடைய நியாயங்களை இந்திய அரசு புரிந்து உதவ முன் வரும் என்று எல்லாத் தமிழரும் நம்பிய காலம்.

ஈழப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான செயல் பாடுகளையே எப்பொழுதும் கொண்டிருக்கும் என்று விஜயன் அடித்துக் கூறியிருந்தார். ஏனெனில் ஈழப்பிரச்சினை என்பது ஒருவிதத்தில் ஆரிய - திராவிடர் பிரச்சினை என்றார். மத்திய அரசை ஆளும் வர்க்கம் ஆரியர்கள், எனவே அவர்களுடைய இனமாகிய சிங்கள இனத்தின் இனவெறியையும், வன்முறையையும் விட அந்த வன்முறையிலிருந்து தம்மை பாது காத்துக்கொள்ள உருவாகும் தமிழ் இனவாதமும், வன்முறையும்தான் இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் உறுத்தும். அப்பொழுது தமிழர்களின் வன்முறையை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் சிங்களப் பேரினவாதத்துக்கு இந்திய அரசு துணை போகும் என்றார். நான் கூட பிரச்சினையை சமாதானமாகத் தீர்க்க முடியாத பட்சத்தில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவளிக்காமல் விட்டு விடும் என்றும், எதிராகச் செயல் படுவதால் எந்தப் பலனும் இந்தியாவுக்கு இல்லை என்றும்தான் எண்ணினேன்.

ஓ. வி. விஜயனின் தீர்க்கதரிசனம் இன்று நிரூபணமான உண்மை என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

arulselvan said...

எனக்கும் நினைவிருக்கிறது. 80 களில் இலங்கைத்தமிழருக்கு ஆதரவு நிலையை ஓ.வி.விஜயனும், கமலா தாஸும் எடுத்திருந்தார்கள். சண்டே போன்ற பத்திரிக்கைகளில் பேட்டிகளிலும் வெளிப்படுத்தியிருந்ததாக நினைவு. இந்த ஆரிய-திராவிட பிளவு மலையாள எழுத்தாளர்களாலும் பேசப்பட்டதென்றாலும் அவர்கள் தமிழர்களைப்போல இதை இரு 'இன'ங்களுக்கிடையேயான வேறுபாடாகக் காணாமல் இரு கலாச்சாரங்கள்/அழகுணர்ச்சிகள் சார்ந்த வேறுபாடாகக் கண்டார்கள் என்றே நான் உணருகிறேன். நான் தவறாக இருக்கலாம். நான் கண்டவரை எனக்குத் தோன்றியது இப்படித்தான். மலையாள இலக்கியத்துடன் தொடர்புடையவர்களால் இதை விரிவாகச் சொல்ல முடியும்.
தமிழகத்தில் பிராமண - பிராமணரல்லாதோர் பிரிவினை, திராவிட -ஆரிய இனப் பிரிவினையாக வடிவெடுத்ததைப் போல கேரளத்தில் நிகழவில்லை. இதன் அரசியல் பரிமாணம் வேறு. அதைப்பற்றி நான் இங்கே சொல்லவில்லை.
அருள்

Jayaprakash Sampath said...

//தமிழகத்தில் பிராமண - பிராமணரல்லாதோர் பிரிவினை, திராவிட -ஆரிய இனப் பிரிவினையாக வடிவெடுத்ததைப் போல//

அருள்: இவை இரண்டுமே ஒரே விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி இல்லை போலிருக்கிறது.

மு. சுந்தரமூர்த்தி said...

//ஈழப்பிரச்சினை என்பது ஒருவிதத்தில் ஆரிய - திராவிடர் பிரச்சினை என்றார்.//

இதே போன்ற ஒரு விஜயனின் கட்டுரையோ அல்லது பேட்டியோ அதே காலகட்டத்தில் Illustrated Weeklyயிலும் வந்ததாக நினைவு. முதலில் மலையாளத்தில் எழுதி பின் அவரே ஆங்கிலத்தில் எழுதிய 'Saga of Dharmapuri' ஒரு அருமையான நாவல்.

arulselvan said...

சுந்து
நீங்கள் சொன்னதும் சரிதான். வீக்லியில் அவரது பேட்டி வந்தது என நினைக்கிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஸண்டே ஸ்டேண்ட்டர்ட்) இல் ஒரு நீண்ட பேட்டி ஒன்றும். அப்போதெல்லாம் Illustrated Weekly (ed Pritish Nandi), Sunday Observer (ed Vinod Mehta), Sunday (ed MJAkbar) மூன்றும் ஒரு விதத்தில் போட்டிபோட்டுக்கொண்டு படிக்க கனமான விஷயங்களைக் கொடுப்பார்கள். இப்போ அதுபோல யாரும் எழுதுவதும் இல்லை, பதிப்பிப்பதும் இல்லை. ஹிண்டு ஞாயிறு மலரே நிறையப் படங்களுடன் 15/20 நிமிடங்களுக்கு மேல் தாங்குவதில்லை.

இகாரஸ்
தமிழக பிராமணர்கள் திராவிடர்கள் இல்லையா? இல்லை தமிழக பிராமணமல்லாதோர் ஆரியர் இல்லையா? இரண்டு பார்ட்டிங்களுக்கும் இப்போ பரவலா நம்பப்படும் நிலையிலே நிறைய அனுகூலங்கள் இருக்கு. அதனாலே கேள்விகேட்டா தரும அடி விழும் :-)

இளங்கோ-டிசே said...

ஓ.வி. விஜயனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அவரது ஆக்கங்கள் என்று எதையும் வாசித்ததில்லை. அவர் ஈழ்த்தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் அணுகுமுறைகளைப் பற்றி இரண்டு தசாபதங்களுக்கு முன்னர் கூறியவை வியப்பூட்டக்கூடியது. எனக்கு இது புதிய செய்தி. பதிவு எழுதிய அருளுக்கும், இது குறித்து பின்னூட்டத்தில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றி.