Saturday, April 23, 2005

ஈமெயில் போதை

சில வாரங்களாக சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் டீலோகலைஸ்ட் எலக்ட்ரான் போல உடலும் மனமும் பரவிக்கிடப்பதால் வலைப்பதிவுகள் போதையிலிருந்து மீண்டு பொருண்மைஉலகில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ப்ளாக்கர்ஸ் அனானிமஸ் என்றொரு மீள்வாழ்வுச்சங்கம் அமைக்கலாம் என்றும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மரியுவானாவை விட ஈமெயில் போதையில் மக்கள் முட்டாள்க்ளாக ஆகிறார்கள் என்றொரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. (http://www.theregister.co.uk/2005/04/22/email_destroys_iq/) நம் யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை (என்று நினைக்கிறேன்). குடி, கஞ்சா, புகையிலை போன்ற எந்த ஒரு பழக்கஅடிமை நுகர்பொருளும் ஒருவரின் இயல்பான மன விழிப்பு நிலையையும், புலனுணரு சக்தியினையும் பாதிக்கும் என்பது பலகாலம் ஆராய்ச்சிகளில் அளந்து நிரூபித்த ஒன்று தான். இதேபோல் இப்போது ஈமெயில் ஆராய்ச்சி! ஒரு கருத்துத் தளத்திலிருந்து மற்றொன்றிற்கு MTV சுய விளம்பர காட்சிசுழற்சி வேகத்தில் நொடிக்கு முப்பதுதரம் மாற்றிக்கொண்டிருந்தால் மூளை முட்டைபரோட்டா மாதிரி குதறி எடுக்கப்படும் என்பதும் நமக்கு வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. எடுத்த காரியத்தில் ஊன்றிச் செய்வது, பிற கவன ஈர்ப்புகளுக்கு ஆளாகாமல் சிரத்தையுடன் முடிப்பது போன்ற வழக்கங்களை சிறு வயதிலேயே கல்லாவிட்டால் பிறகு படிவது கடினம் என்றும் நாம் உணர்ந்திருக்கிறோம். குழந்தைகளின் கவன இயல்பும் திறமையும் கணி உபயோகத்தினால் பாதிக்கப் படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மூன்றுவயதிலேயே ஒரு பையன் மைக்ரோசாப்டின் பல மென்பொருள்களையும் பயன்படுத்துவான் என்று சில மாதங்கள் முன்பு பெருமிதச் செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. குழந்தைகள் விளையாடாமல், அதையும் இதையும் இழுத்துப் போட்டு குறும்பு செய்யாமல் இப்படி கணியிலும் டிவி யிலும் பொழுதைக் கழித்தால் அவர்களுடைய மூளை, மன வளர்ச்சிகள் எந்த அளவு பாதிக்கப்படும் என்பது இன்னும் சரிவர விளங்க சில ஆண்டுகள் ஆகலாம். வீட்டில் 7 வயது பையன் இருக்கிறான். எங்கள் வீட்டில் TV க்கு கேபிள் கிடையாது. ஆண்டனாவும் கிடையாது. வேண்டுமானால் நிறைய கார்ட்டூன் குறுவட்டுகள் இருக்கின்றன. தமிழ், இந்தி பாடல் காட்சிவட்டுகள் இருக்கின்றன. (ஆணும் பெண்ணும் சேர்ந்து குதிக்கும் காட்சிகளை அவன் பார்க்கிறானே என்று நான் கவலைப் படுவதில்லை. சினிமாக்களில் வரும் வன்முறைகளும், சீரியல்களில் வரும் அபத்த மனித உறவுச் சிக்கல் வெட்டிப் பேச்சுகளையும் விட நாயகனும் நாயகியும் கூட ஒரு ஐனூறு தோழியரும் 'அன்பு' செய்து கொள்வது எவ்வளவோ மேல் என்றே நினைக்கிறேன்). இவைகளை அனுமதியுடன் அவன் பார்க்கலாம். கணியில் விடுமுறை நாட்களில் விளையாடலாம். என்ன அப்பா எனக்கு வாங்கறேன்னு அம்மாகிட்ட சொல்லித்தானே இந்த ஆப்பிள் கம்பூட்டர் வாங்கினே. இப்ப நீயே வச்சுக்கிறயே என்று அவன் அடம் பிடித்தாலும் விடுமுறை நாட்களில் தான் கணி என்று உறுதியாக சொல்லிவிட்டேன். இது சரியா தவறா என்று பின்னால் தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஊரும் வயலும் என்று கிராமத்தில் வளர்ந்த எனக்கு வீட்டுக்குள்ளேயே ஒளிர்பெட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சதா 'அறிவை' வளர்த்துக் கொண்டிருப்பது சகிக்கமுடியாததாக இருக்கிறது. ஆனால் இங்கெ தமிழகத்தில் இப்போது எல்லோருக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஒண்ணுக்கு போக கற்றுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, மைக்ரோசாப்ட் வேர்ட் இல் பாபா பிளாக் ஷீப் அடிக்க கற்றுக்கொடுத்து பூரிப்பு அடைகிறார்கள். எதிர்கால கணிஉலக சூப்பர் பவர் நாட்டின் குடிமகன் என்றால் சும்மாவா.

Tuesday, April 12, 2005

இ.தி. 39

Image hosted by Photobucket.comகலைத்திருடர்களிடம் என்னவெல்லாம் இழந்தோம்...

Thursday, April 07, 2005

மொசைக் தரையில் திணறும் சிலந்தி

மொசைக் தரையில் திணறும் சிலந்தி
Image hosted by Photobucket.comஎட்டுக்கால்கள் கொண்டும் நடத்தலின் இன்பம் அறியேன்
எத்தனை யுகங்கள் வாழ்ந்தும் அயலவர் சுகிப்பு தெரியேன்
கட்டிய வலைகள்கோடி கவர்ந்தபல உயிர்கள் நினைப்பும்
தெற்றென தெரிந்தபின்பும் சூழலை இகழ்ந்து திரிவேன்

Tuesday, April 05, 2005

91187

பல்லாயிரம் ஆண்டுகள்
வாழ்ந்தனர் மனிதர்
புதர்களில் விலங்குகளை உண்டபடி
பின்னர் அறிவித்தனர்
"கீழ்க்கண்ட முறைகளில்
வாழ்க்கையை அழைக்கலாம்:
நாடகம், தண்டனை, விளையாட்டு
கனவு, பயணம்
தான் ஒரு புண்ணாக்கு என அறிதல்"
ஆகவே மனிதர் சாயம் தரித்தனர்
முகங்களில்
தாழ்ந்த விட்டங்களில்
தொங்கினர் கழுத்தில் சுருக்கிட்டு
மிஞ்சினவர் நடந்தனர்
தார் உருகும் சாலைகள் வழியே
மைதானங்களின் சப்தம் கேட்கும் வரை
மரங்கள் வீட்டுக் கூரைமீது
கும்பலாய் கையசைத்து கதறி
வென்ற அணியின் செருப்புகள் வாங்க
கடைகளில் நுழைந்தனர்
வெய்யிலின் புழுதியை வாளிநீர்
தெளித்தடக்கி வாசல்தோறும் கோலமிட்டு
திண்ணைக்குக்கீழே சாக்கடையில்
கொசுமருந்து பீச்சினர்
இலக்கமிட்ட வீடுகளில்
மின்சாரம் நீர்வர குழாய்களை
கூரையில் பதித்தனர்
சிலர்பேச பலர்பேச அனைவரும்பேச
கருவிகள் நாற்றிசையும்
செயல்வழி இருத்தலைக் காண்பிப்போம்
எனவே உலகம் சுற்ற
சூரியனை முந்திச் செல்ல விமானங்கள்
பூமியை உதறி இருட்டு அண்டம்புக
கணம்தான் தேவை
நட்சத்திரங்களை அடைந்து உயிரினம் தேடுவோம்
பிறகும் நீளுது எல்லைகள்
அலைமிதக்கும் சிற்றெறும்பின்
கரைத்தொலைவு போல

(91187)

Sunday, April 03, 2005

தானே சிதறும் பிம்பங்கள்

இவ்வார அசோகமித்திரனின் அவுட்லுக் பேட்டி சுவாரஸ்யமானது. தமிழ்நாட்டுப் பிராமணர்கள் யூதர்கள் போல அடக்குமுறைக்காளானார்கள் என்றும் அவர்கள் இயல்பாக தமிழகத்தில் இருக்க இயலவில்லை எனவும் இன்னும் பலவும் பேசியிருக்கிறார். தவறாது அதைப் படியுங்கள். அசோகமித்திரன் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். பிடித்த எழுத்தாளர் கூட. அவர் இப்போது சொன்ன கருத்துகள் அவரைப்பற்றிய என் இலக்கியம் சார்ந்த மதிப்பை மாற்றிவிடப் போவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சை பிராமணீய விழுமியங்களைக் கொண்டவராக அறியப்படும் மௌனி இன்னொரு பிடித்த எழுத்தாளர். இவர்கள் கதைகளையெல்லாம் படிக்கும்போது எனக்கு அவர்கள் பிராமணீய வாழ்க்கையைப்பற்றியே எழுதினாலும் அது ஜாதி சார்ந்த்த எழுத்து என்று என்றும் பட்டதில்லை. இலக்கியத்துக்கு ஒரு தன்மை
உண்டு. ஒரு சிறு இனக்குழுவினைப் பற்றிய பிரச்சனைகள், வாழ்வியல் துக்கங்கள் இவற்றைப்பற்றி மிகநுணுக்கமான விவரணைகளுடன் எழுதப்படும் புனைவுகள் மானுடத்தின் பொதுமைகளை தம்முள்ளே வியக்கத்தக்க வகையில் கொண்டிருக்கும். The more particular you get, the more general it becomes. இவ்வகையில் ஜாதிசார்ந்து, வட்டாரம் சார்ந்து எழுதப்படுபவை மிகுந்த வலிமையான ஆக்கங்களாக முழு மானுடத்தைக் காட்டுபவைகளாக மாறுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துகளைப் படிக்கும் எவருக்கும் அவர் ஐயர்கதை எழுதுகிறார் என்று தோன்றாதற்கு காரணம் இதுதான். ஆனால் அசோகமித்திரன் இவ்வாறு எழுதுபவர் அல்ல. அவர் முக்காலும் பொது மானிட சிக்கல்களை ஒரு சிறு கால, வாழ்நிகழ்வு அலகுகளில் எழுதிச் செல்பவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் கூட இருந்த (சென்னையிலேயே ஏறக்குறைய முழுவதும் கழித்திருக்கிறார் என பார்க்கும்போது) இத்தகைய பிராமண அடையாளம் வெளிகாட்டாமல் இலக்கிய சிருஷ்டி படைப்பதற்கு மகத்தான சுயக்கட்டுப்பாடும் மனப்பயிற்சியும் வேண்டும். அது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது.
நான் எழுதுவது ஒரு குழந்தைக்குக்கூட மன அதிர்ச்சியையோ வருத்தத்தையோ தராமல் இருக்க முயற்சித்தேன் என்று சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவில் கூறினார்.
அதனாலேயே அவர் ஒரு மென்மையான மனம் வாய்க்கப் பெற்றும், ஜெயகாந்தனைப் போல உணர்ச்சிப் பிழம்பாய் ஏழைபாளைகளைப் பற்றியோ சமூகத்தின் எல்லைக்கோட்டு மக்களைப்பற்றியோ எழுத அவருக்கு வாய்க்கவில்லை எனப் புரிந்து கொண்டேன். நான் எத்தனை பெரிய முட்டாள் என்பது இப்போது புரிகிறது.

"The Brahmins gave up on government jobs, and in whatever they did have had to work harder to prove themselves. Natural discipline and thrift are brahminic qualities that have survived. If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day".

என்று சொன்ன அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டுவது தவிர வேறொன்றும் செய்ய ஆகாது. சிலசமயம் இத்தகைய பேட்டிகளில் தொகுத்து எழுதும் போது சொல்லாத விடயங்களோ சொல்லியவை context மாறியோ மோசமான உச்சரிப்புகளாக தோன்றும் அபாயம் உண்டு. அப்படி நடந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு மேலே உள்ளதை அதிர்ச்சியில்லாமல் ஏற்க வேண்டியிருக்கிறது. உண்மையாகவே அதுதான் அவர் சொன்னது என்றால், what a jerk என்று கடந்து போகவேண்டியதுதான்.
அவருக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் தான் எனக்கு இருக்கிறது. அவரது நண்பர் எழுதிய கவிதையின் ஒரு பகுதி:

"
அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற் போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே. "

(உதை வாங்கி அழும் குழந்தைக்கு, ஞானக்கூத்தன்)

அவுட்லுக் சுட்டி: அ.மி. பேட்டி

இந்தியாவில் அரசுமுறை துக்கம்!

போப் இறந்ததற்கு, இந்திய அரசு அரசுமுறை மூன்று நாட்கள் துக்கம் காக்கிறது.புதிரான செய்தி இது. எதற்காக நமது நாடு அரசுமுறையில் துக்கம் காக்க வேண்டும்? அவர் ஒரு மதத்தலைவர் மற்றும் ஒரு நாட்டின் தலைவர் என்பது இருந்தாலும் அதற்கும் நமது இந்திய அரசுக்கும் என்ன சம்பந்தம். இது தேவையில்லாத ஒன்று என்பதே என் கருத்து. எந்த மதத் தலைவரும் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப் படுவதில்லை. அவரகள் இறந்தால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசுகள் ஏன் துக்கம் காக்கவேண்டும்? அவர் நம் நாட்டைச் சேர்ந்தவர் என்ற ஒரு சாக்கு கூட இல்லை.

Saturday, April 02, 2005

இ.தி- 38A

(காசியின் மொழிஉணர் நிரல்துண்டு இதை ஒரு அங்கிலப்பதிவென்று கண்டு விரட்டிவிட்டது. எனவே இந்தத் தமிழ்ப் புலம்பலோடு திரும்பப் பதிக்கிறேன்)

Image hosted by Photobucket.com

Moral of the story:

Never debate with an incessant white noise generator set to max on all dials

இ. தி - 38

Image hosted by Photobucket.com

Moral of the story:

Never debate with an incessant white noise generator set to max on all dials

கணிதமும் அண்டமும்: ஏப்பிரல் 2005

அமெரிக்க கணிதக் கழகமும் (american mathematical society) பிற அமெரிக்க கணிதம் தொடர்புடைய நிறுவனங்களும் சேர்ந்து ஏப்பிரல்2005 மாதத்தை 'கணிதமும் அண்டமும்' பற்றிய சிறப்புப் பார்வைக்குரியதாக தேர்ந்த்தெடுத்த்கு உள்ளனர்.
இது தொடர்பான சுட்டி:

http://www.mathaware.org/announcement.html

தளத்தில் கீழ்க்கண்ட கட்டுரைகள் கிடைக்கின்றன.

1. கணிதமும் அண்டமும் (mathematics and cosmos)
2. அண்டத்தின் வடிவம் ( shape of the universe )
3. விண்ணக இயங்கியல் (celestial mechanics)
4. வெளி ஆராய்ச்சி (space exploration)
5. கருந்துளைகளிலிருந்து இருள்சக்திவரை (from blackholes to dark energy)

தளத்தில் இந்தச்சுட்டியில் இன்னும் பல்வேறு கட்டுரைகள் தளங்களுக்கான சுட்டிகளும் கிடைக்கின்றன.

http://www.mathaware.org/related.htmlவரும் வாரங்களில் சிலவற்றை ஒட்டி தமிழில் எழுதலாம் என்று நினைக்கிறேன்

Friday, April 01, 2005

ஆத்மாநாம் நடத்திய 'ழ' கவிதை இதழைப்பற்றி நண்பர்கள் கேட்டிருக்கலாம். என்னிடம் பழைய இதழ்கள் சில தப்பித்து மீதமிருக்கின்றன.
அதிலிருந்த்து ஒரு கவிதை:


உடன்பாட்டின் நிதரிசனம்
-------------------------------------------

பேச்சின் உக்கிரத்தினால் உருகும்
பனியை கையைமடக்கிக் குவித்து
ஏந்த முயன்றாலும்
மாடிப்படியிலும் வரப்பிலும்
காட்டும் ஜாக்கிரதை
மறையும் சூரியனைக்கண்டு
தூரத்து இருட்டில் ஒளிந்து கொள்ளும்
மணிக்கட்டிற்க்குப் பயப்படும் கோழையாய்
வேகமாக ஸைக்கிளை மிதிக்கும்
கெஞ்சும் கால்களை மறுத்து
அனாதையாய் ஒதுங்கி
முன்நீளும் நிழலை
மனதிற் குறியாய்க் கொண்டு
புகையாய் மறையும் நேரத்தை
சபித்துக் கொண்டேன்
பாறையின் இடுக்குகளில்
ஒளிசிந்தும் மின்மினிகளுக்கும்
எதிரியின் கொண்டாட்டம்
ஒரு சோகமே


-- சத்யன்.
(ழ, செப்-நவம், 1979)