Sunday, April 03, 2005

தானே சிதறும் பிம்பங்கள்

இவ்வார அசோகமித்திரனின் அவுட்லுக் பேட்டி சுவாரஸ்யமானது. தமிழ்நாட்டுப் பிராமணர்கள் யூதர்கள் போல அடக்குமுறைக்காளானார்கள் என்றும் அவர்கள் இயல்பாக தமிழகத்தில் இருக்க இயலவில்லை எனவும் இன்னும் பலவும் பேசியிருக்கிறார். தவறாது அதைப் படியுங்கள். அசோகமித்திரன் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். பிடித்த எழுத்தாளர் கூட. அவர் இப்போது சொன்ன கருத்துகள் அவரைப்பற்றிய என் இலக்கியம் சார்ந்த மதிப்பை மாற்றிவிடப் போவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சை பிராமணீய விழுமியங்களைக் கொண்டவராக அறியப்படும் மௌனி இன்னொரு பிடித்த எழுத்தாளர். இவர்கள் கதைகளையெல்லாம் படிக்கும்போது எனக்கு அவர்கள் பிராமணீய வாழ்க்கையைப்பற்றியே எழுதினாலும் அது ஜாதி சார்ந்த்த எழுத்து என்று என்றும் பட்டதில்லை. இலக்கியத்துக்கு ஒரு தன்மை
உண்டு. ஒரு சிறு இனக்குழுவினைப் பற்றிய பிரச்சனைகள், வாழ்வியல் துக்கங்கள் இவற்றைப்பற்றி மிகநுணுக்கமான விவரணைகளுடன் எழுதப்படும் புனைவுகள் மானுடத்தின் பொதுமைகளை தம்முள்ளே வியக்கத்தக்க வகையில் கொண்டிருக்கும். The more particular you get, the more general it becomes. இவ்வகையில் ஜாதிசார்ந்து, வட்டாரம் சார்ந்து எழுதப்படுபவை மிகுந்த வலிமையான ஆக்கங்களாக முழு மானுடத்தைக் காட்டுபவைகளாக மாறுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துகளைப் படிக்கும் எவருக்கும் அவர் ஐயர்கதை எழுதுகிறார் என்று தோன்றாதற்கு காரணம் இதுதான். ஆனால் அசோகமித்திரன் இவ்வாறு எழுதுபவர் அல்ல. அவர் முக்காலும் பொது மானிட சிக்கல்களை ஒரு சிறு கால, வாழ்நிகழ்வு அலகுகளில் எழுதிச் செல்பவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் கூட இருந்த (சென்னையிலேயே ஏறக்குறைய முழுவதும் கழித்திருக்கிறார் என பார்க்கும்போது) இத்தகைய பிராமண அடையாளம் வெளிகாட்டாமல் இலக்கிய சிருஷ்டி படைப்பதற்கு மகத்தான சுயக்கட்டுப்பாடும் மனப்பயிற்சியும் வேண்டும். அது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது.
நான் எழுதுவது ஒரு குழந்தைக்குக்கூட மன அதிர்ச்சியையோ வருத்தத்தையோ தராமல் இருக்க முயற்சித்தேன் என்று சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவில் கூறினார்.
அதனாலேயே அவர் ஒரு மென்மையான மனம் வாய்க்கப் பெற்றும், ஜெயகாந்தனைப் போல உணர்ச்சிப் பிழம்பாய் ஏழைபாளைகளைப் பற்றியோ சமூகத்தின் எல்லைக்கோட்டு மக்களைப்பற்றியோ எழுத அவருக்கு வாய்க்கவில்லை எனப் புரிந்து கொண்டேன். நான் எத்தனை பெரிய முட்டாள் என்பது இப்போது புரிகிறது.

"The Brahmins gave up on government jobs, and in whatever they did have had to work harder to prove themselves. Natural discipline and thrift are brahminic qualities that have survived. If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day".

என்று சொன்ன அவரது பரந்த உள்ளத்தைப் பாராட்டுவது தவிர வேறொன்றும் செய்ய ஆகாது. சிலசமயம் இத்தகைய பேட்டிகளில் தொகுத்து எழுதும் போது சொல்லாத விடயங்களோ சொல்லியவை context மாறியோ மோசமான உச்சரிப்புகளாக தோன்றும் அபாயம் உண்டு. அப்படி நடந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு மேலே உள்ளதை அதிர்ச்சியில்லாமல் ஏற்க வேண்டியிருக்கிறது. உண்மையாகவே அதுதான் அவர் சொன்னது என்றால், what a jerk என்று கடந்து போகவேண்டியதுதான்.
அவருக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் தான் எனக்கு இருக்கிறது. அவரது நண்பர் எழுதிய கவிதையின் ஒரு பகுதி:

"
அவர்கள் அவர்கள்
பங்குக்கு
உதைகள் வாங்கும்
காலத்தில்
உனக்கு மட்டும்
கிடைத்தாற் போல்
சின்னக் கண்ணா
அலட்டாதே. "

(உதை வாங்கி அழும் குழந்தைக்கு, ஞானக்கூத்தன்)

அவுட்லுக் சுட்டி: அ.மி. பேட்டி

18 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//சிலசமயம் இத்தகைய பேட்டிகளில் தொகுத்து எழுதும் போது சொல்லாத விடயங்களோ சொல்லியவை context மாறியோ மோசமான உச்சரிப்புகளாக தோன்றும் அபாயம் உண்டு. அப்படி நடந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு மேலே உள்ளதை அதிர்ச்சியில்லாமல் ஏற்க வேண்டியிருக்கிறது.//

எனக்கும் அப்படி இருக்கலாமோ என்றுதான் தோன்றியது. அசோகமித்ரன் - 50இல் அவர் சொன்னதைப் படித்து அட! என்றிருந்தது. சில நண்பர்கள் அவர் அப்படிச் சொன்னதைச் சிலாகித்தும் எழுதியிருந்தார்கள்.

ஆனால்,
//உண்மையாகவே அதுதான் அவர் சொன்னது என்றால், what a jerk என்று கடந்து போகவேண்டியதுதான்.//

ஆமாம். உண்மையாகவே அவர் சொன்னதுதான் என்றால் இவரைப்போல இன்னும் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

நீங்கள் சொன்னமாதிரி 'JERKS!' என்று சொன்னபடி கடந்துபோய்விட வேண்டியதுதான்!!!

-மதி

Mookku Sundar said...

அருள்,

அந்த அபத்தம் கலந்த பேட்டியை, நான் முரண்படும் இடங்களில் எல்லாம் சுட்டி, எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் உங்கள் அளவு எழுதி இருக்க முடியாது என்று இப்போது உணர்கிறேன்.அசோகமித்திரன் கதைகளை படித்ததில்லை. ஆனால், நான் மதிக்கும் எழுத்தாளர்கள் சொன்னதில் இருந்து அவரைப் பற்றி நானே ஒரு பிம்பம் உருவாக்கி வைத்திருந்தேன். ம்..ஹு..ம்.

இவர்கள் எல்லாம் மியூசியத்தில் வைக்கப்படவேண்டிய ஆசாமிகள். வேறென்ன சொல்ல..???

Badri Seshadri said...

அசோகமித்திரன் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால் நிச்சயம் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவர்.

அவரை நேரில் பார்க்கும்போது, அவர்தான் இதைச் சொன்னாரா என்று உறுதி செய்துகொண்டு நேரிலும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வேன்.

Jayaprakash Sampath said...

arul, இன்று மதியம், வேறு ஒரு வலைப்பதிவில் இந்தக் கட்டுரை கிடைத்தது. படித்த போது 'ஒரு மாதிரியாக ' இருந்தது. எழுதியது அசோகமித்திரன் தானா என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொண்டேன். தொகுத்து எழுதியவரின் கைவரிசையாகக் கூட இருக்கலாம். இரு நாட்களுக்கு முன்புதான், கிழக்குப் பதிப்பகம் இரு பாகங்களாக வெளியிட்டிருந்த அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதியை வாங்கி, தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். அதிலே, ஒரு ஒரு கட்டுரையில் கூட, இக்கட்டுரையில் வரும் கருத்துக்களின் சாயலைக் காண முடியவில்லை. அவரது அனைத்துக் கட்டுரைகளையும் தாங்கி வந்த தொகுதியை, நேற்று இரவுதான் வாசித்து முடித்தேன் என்ற காரணத்தால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். இது போன்ற விவாதங்கள் நடக்கும் போது - குறிப்பாக வலைப்பதிவுகளில் - எடுத்துக்காட்டுகள் மூலமும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தின் வாயிலாகவும், விஷயங்களை, பொதுப்படுத்தி, oversimplify செய்வதுண்டு.( "எனக்குத் தெரிந்த பிராமண நண்பர் அப்படி இல்லை" அல்லது "எனக்குத் தெரிந்த தலித் அப்படித்தான்"... வகையறா.. ) அது போல, அசோகமித்திரன் காஷ¤வலாகச் சொன்னதை, தொகுத்தவர் திரித்திருக்கலாம். நீங்கள் ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டி இருப்பதை, அசோமித்திரன் சொல்லி இருப்பார் என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.

arulselvan said...

நண்பர்களுக்கு:

இந்தப் பேட்டியின் பல வரிகள் அச்சுப்பிரதியில் இல்லை. outlook இணையத்தளத்தில்தான் இருக்கின்றன. என்னால் முதலில் படித்து நம்பவே முடியவில்லை. அசோகமித்திரன் மீது எனக்கு இருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் அளவில்லாதது. அதனால்தான் காலையிலேயே இதைப் படித்திருந்தாலும் ஓரளவு யோசித்தே இப்பதிவை மாலையில் பதித்தேன். பேட்டி எடுத்தவர் எஸ். ஆனந்த். அவரைப் பற்றி எனக்கு தெரியாது. பத்ரி, நீங்கள் இதைத் தெளிவுபடுத்தினால், இவ்வாறு அமி சொல்லாமலிருந்திருந்தால் எனக்கு நிம்மதியாக இருக்கும்.
அருள்

Narain Rajagopalan said...

படிக்காமல் இருக்கும் மற்ற நண்பர்களுக்காக, பேட்டியின் உரல்
http://www.outlookindia.com/full.asp?fodname=20050411&fname=Brahmins+%28F%29&sid=2
இதை அ.மி தான் சொன்னாரா அல்லது இவை ஆனந்தின் கேட்டறிந்து எழுதியதால் எழுதப்பட்ட இடைச்செருகலா என்று தெரியவில்லை. எப்படியிருப்பினும், அவர் பெயரிட்டு, பத்திரிக்கையின் வந்திருப்பின், கண்டிக்கப்பட வேண்டியவர் அவரேயொழிய நிருபர் இல்லை. அ.மி. சொன்னதன் பொருளை அவரின் யதார்த்தவாதத்தில் எங்கேனும் பொருத்த இயலுமா என்று யோசித்துப் பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வேளை வயதின் தளர்ச்சியினால் ஏற்பட்ட பாதிப்பா ? அல்லது, அவர் வார்த்தையில் "நான் - பிராமின்" எழுத்தாளர்கள் ஆர்வத்துடனும், விஷய ஞானத்துடனும் எழுதுவதால் வந்த சலிப்பா? அல்லது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து மேலெழுந்துவந்து இன்றைக்கு எழுதும் எழுத்தாளர்களின் மீது ஏற்படும் பயமா? அருள் சொன்னது போல் " இவ்வாறு அமி சொல்லாமலிருந்திருந்தால் எனக்கு நிம்மதியாக இருக்கும்." இருந்தால், என்னுள் இருக்கும் அ.மியின் பிம்பம் குலையாமல் இருக்கும். அப்படி ஒரு வேளை சொல்லியிருப்பாரேயானால், படைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு தனிமனிதனை சாராமல் போய் விட வேண்டியதுதான், வருத்தத்துடன்.

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,

தனிப்பட்ட முறையில் பத்ரி அ.மி.யைக் கேட்டு வலைப்பதிவில் தெளிவுபடுத்துவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இது வெளிவந்த அதே Outlook இதழில் அ.மி. மறுப்பு வைப்பதன் மூலமே தெளிவுபடுத்த முடியும். அதைச் சொல்லியிருந்தால் அ.மி.யோ, சொல்லாதிருந்தால் ஆனந்தோ Outlook லேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதே சரியானது (இது ஒரு யோசனைதான், வேண்டுகோள் அல்ல). அதுவரை சங்கரபாண்டி என் முதல் பதிவு பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல "எந்த புற்றிலிருந்து எந்த பாம்பு வருமோ" என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஞானக்கூத்தனைப் பற்றிய பிம்பம் அவரில் மறைந்திருக்கும் ஜாதியத்தை பிரமிள் கட்டுடைத்தபோதே புரிந்துகொள்ள முடிந்தது. பின்னாளில் ஞா.கூ. ஒரு இந்துத்துவ ஆதரவாளர் என்பதும் உறுதியானது.

பெரியாரைப் குறித்து Outlookல் ரவிக்குமார் எழுதியதை முன்வைத்து ஒரு தமிழ் நாட்டு அறிவுஜீவியுடன் பேசும்போது கிடைத்த சிறிய தகவல்படி ஆனந்த் என்பவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை.

Balaji-Paari said...

என்ன சொல்றதுன்னே தெரியல. சமீபத்தில் உடையும் இரண்டாம் பிம்பம் இது.

Venkat said...

அருள் - காலையில் இதைப் படித்துவிட்டுப் பிற வேலைகளைக் கவனித்துவிட்டு முதல் காரியமாகத் தேடி அவுட்லுக் கட்டுரையைப் படித்தேன். பிற வேலைகளைக் கவனிக்கும்பொழுது மனதில் உறுத்திக்கொண்டேயிருக்க என் பதிவில் இந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினேன். நீங்கள் முழுக்கட்டுரையையும் படித்திருக்க மாட்டீர்கள் என்று நம்பினேன்.

http://www.domesticatedonion.net/blog/?item=445

மீண்டும் இங்கே வந்து முழுக்கட்டுரையைப் பற்றி எழுத வந்தால் நீங்களே சுட்டி தந்திருக்கிறீர்கள்.

சுந்தரமூர்த்தி சொல்வதைப் போல அசோகமித்ரன் இதை விளக்க/விலக்கக் கடமைப்பட்டவராகிறார்.

என்ன ஒரு அபத்தம்! வெட்கக் கேடு.

பத்மா அர்விந்த் said...

அருள்
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நாமாக ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டு அது உடையும் போது வலிக்க தான் செய்கிறது. தவறாக புரிந்து கொண்டது என் தவறு. சாதிபேதத்தை களைய வெண்டி அறிவுறுத்த வேண்டியவர்களே இப்படி பேசுவதை என்ன சொல்ல

Thangamani said...

அருள், உண்மையில் அசோகமித்திரன் சொன்னது கண்டிக்கத்தக்கதா? அவர் நம்புகிற பெருமிதத்தை, நம்பிக்கையை, அது சோதனைக்குள்ளாகும் போது அடைகிற வலியை அவர் சொல்லக்கூடாதா? நான் இதைக் கேலிக்காக கேட்கவில்லை. சாதி என்பதைப்பற்றிய நமது போலியான புரிதல், நாகரீகம் என்ற புனையப்பட்ட ஆடையைக் கிழித்து வெளிப்பட்டதற்காக அதிர்ச்சி அடைகிற நாம் அந்த போலித்தனத்தைக் குறித்து ஏன் அதிர்ச்சி அடைவதில்லை? அசோகமித்திரன் பார்பனர்களின் சமூக நிலையை, பார்ப்பன மதிப்பீடுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் பேசுகிறார். அது பார்ப்பன அரசியலைப் பேசுவதுதான். பா.ம.கவையும், திருமாவையும் சாதி அரசியலைப் பேசுவதாக கருதும் போது, நாம் வெற்றிகரமாக சாதியைக் கடந்துவிட்டதாக எண்ணினோமே, இப்போது ஏன் அதிர்ச்சி அடைகிறோம்.

சாதி இருக்குமென்றால் இருக்கும் என்பதும், இல்லை எல்லாரும் சமம் என்றால் சமத்துவம் வந்துவிடும் என்று நம்புவதுமாக ஒரு போலியான மனநிலை சாதியை ஒழிக்கப் பயன்படுமா?

எனது பதிவு:

http://ntmani.blogspot.com/2005/04/blog-post_03.html

dondu(#11168674346665545885) said...

அசோக மித்திரன் தன் மனதில் பட்டதை எழுதியிருக்கிறார். இதில் மற்றவருக்கு என்ன வந்தது? பிம்பங்கள் உடைகின்றன? அதற்கு அவர் என்ன செய்வார்? கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அவர் சொல்வது அவர் கருத்து. பிம்பங்கள் உடைவது பற்றி நீங்கள் எழுதுவது உங்கள் உரிமை.
இது பற்றி நானும் பதிவிட்டுள்ளேன். அதிலிருந்து ஒரு பகுதி.
"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். இன்டர்வியூ முடிந்தது என்றார். என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக தேர்வு கிடையாது என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்றுக் கூறியிருந்தார்.

இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும்.

நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். எதிர்க் கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்.

இப்போது வலைப்பூவில் பார்க்கிறேன். எழுதுபவனின் ஜாதியைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். "கமலின் நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருக்கு வாரிசாக மாதவனையும் அரவிந்தசாமியையும் பார்க்கிறேன்" என்று வெங்கடேஷ் எழுதப் போக, "ஆஹா அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்தான் இவ்வாறுக் கூற முனைந்தீரா" என்றுத் தோள் தட்டிக் கொண்டு வந்தனர் மற்றவர். ஒரு பின்னூட்டம் இட்ட என்னை "நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா" என்றுக் கேட்டதாலேயே நான் வடகலை என்று உண்மையைக் கூற என்னமோ நான்தான் அதை முதலில் கூறியது போல கேட்டவர் திரித்து எழுத "நீங்கள் கேட்டதால்தான் கூறினேன்" என்று நான் கூறியதை மனிதர் கவனிக்கவேயில்லை.

அதே போல என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறப்போக, "நீங்கள் பார்ப்பனரானதால்தான் அவ்வாறு கண்டு பிடிக்க முடிந்தது" என்றுத் தேவையின்றி சாதியை இழுத்தார் இன்னொருவர். அதற்கும் மேலாக பார்ப்பனர்கள் தங்கள் சாதியை எப்படியாவது வெளிப்படையாக்குகிறார்கள் என்ற நக்கல் வேறு.

இப்போதுக் கூறுகிறேன். நான் வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்."

உங்கள் மேலானக் கருத்துக்களை அங்காவது இங்காவது எழுதுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

arulselvan said...

தங்கமணி
அமி தன் ஜாதிப் பெருமையைப்பற்றிப் பேசுவது, தன் ஜாதி சாமியாரை அரசாங்கம் தொட்டதால் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறியது, எப்படி உயர்வாக இருந்த தன் ஜாதி இப்படி கீழே வந்துவிட்டதே என கலங்குவது என்று பல விஷங்கள் அந்தப் பேட்டியில் இருக்கின்றது. அதைப்பற்றியெல்லாம் நான் ஒன்றுமே கருத்துச் சொல்லவில்லையே. அவருடைய அடையாளங்களும் பெருமைகளும் அவருக்கு. ஆனால் தான் வசிக்கும் சூழலில் இருக்கும் 90% மக்களைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தை நான் ஒதுக்கி விட இயலாது. அதை 'மட்டுமே' குறிப்பிட்டு பதிவில் தெரிவித்துள்ளேன். உங்கள் பதிவும் பார்த்தேன். அதுவும் சரிதான்.

-arul

மு. சுந்தரமூர்த்தி said...

தங்கமணி,
நீங்கள் எழுதியிருப்பது மெத்த சரி. ஆனால் நான் புரிந்துகொண்ட வரையில் அசோகமித்திரனின் நம்பிக்கையையோ, அவருடைய குலப் பெருமைகளையோ, அவற்றின் இன்றைய நிலைக்கு அவர் வருந்துவது குறித்தோ, அந்த நிலைக்கான காரணமாக ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலை சுட்டிக்காட்டுவதையோ அருள் கேள்விக்குள்ளாக்கியதாகத் தெரியவில்லை. பலரைப் போல அது அவரது தனிப்பட்ட பிரச்சினை, சுதந்திரம். அருள் தடித்த எழுத்துக்களில் மேற்கோள் காட்டிய ஒற்றைவரி எப்படி இதுவரை ஒரு குழந்தைக்கூட மன அதிர்ச்சியையோ வருத்தத்தையோ தராமல் இருக்க முயற்சித்தவரிடமிருந்து வெளிப்பட்டது என்பது தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் வெங்கட்டின் பதிவு அ.மி. தொட்டுச் சென்றுள்ள பல விஷயங்களை அபத்தமாகப் பார்க்கிறது. அவருக்கு அதற்கான காரணங்கள் இருக்கலாம். அதை அமோதிக்கவோ, மறுக்கவோ எனக்கு எதுவும் இல்லை, ஒன்றைத் தவிர.
//வெங்கட்//
சமீபத்தில் நடந்த அவரது பாராட்டுக் கூட்டத்தில் தன் எழுத்து யாருக்கும் மன அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுக்காமல் இருக்க முயல்வதாகச் சொல்லியிருந்தார். அப்பொழுதே ஒரு உள்ளுணர்வில் இப்படியொரு சுயபிம்ய எழுச்சியில் இவர் ஏன் தேவையில்லாமல் ஈடுபடுகிறார் என்று தோன்றியது.
//வெங்கட்//
இப்படி ஒரு சுயபிம்பத் தேவையில் சர்ச்சைக்கில்லாமல் எழுதிய காரணத்தாலோ என்னவோ அவர் ஒரு நுணுக்கமான கதைசொல்லியாக இருந்தாலும் எனக்கு அவர் கதைகளில் ஒன்ற இயலாமல் வறட்டுத்தனமாகவே இருந்தது (அவருடைய எந்த கதையையும் ஒரு முறைக்கு மேல் படித்ததாக நினைவில்லை). ஆனால் பெருமையும் படுத்தாமல், விமர்சிக்கவும் செய்யாமல் பிராமணர்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை புனைவுகளாக எழுதிய மௌனியையோ, தி.ஜா.வையோ, ஏன் இப்போது புதிதாக எழுத வந்திருக்கும் பி.ஏ. கிருஷ்ணனையும், இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தாலும் வாசிக்கவே மனம் விரும்புகிறது. அவர்கள் எனக்கு போலியற்றவர்களாகவே தெரிகிறார்கள். கரிசல் நாயக்கர்களின் வாழ்க்கையைக் காட்டிய கி.ரா.வைப் போலவும், நாஞ்சில் நாட்டு வேளாளர்களின் வாழ்க்கையைக் காட்டிய நாஞ்சில் நாடனைப் போலவும், கொங்கு வேளாளர்களின் வாழ்க்கையைக் காட்டிய ஆர். ஷண்முகசுந்தரத்தைப் போலவும், பல தலித் பிரிவினரின் வாழ்க்கைகளைக் காட்டும் பூமணி, சிவகாமி, பெருமாள் முருகனைப் போலவும், கடலோர முஸ்லீம்களின் வாழ்க்கையைக் காட்டிய தோப்பில் முகம்மது மீரானைப் போலவும், தி.ஜா.வும், கிருஷ்ணனும் நான் கண்டிராத, அனுபவித்திராத உலகத்தைக் காட்டும்போது எனக்கு விரும்பிப் படிக்க முடிகிறது.

-/சுடலை மாடன்/- said...

சாதியை பற்றிய என் அனுபவங்களின் மற்றும் புரிதலின் அடிப்படையில், கற்றவர்களையும், அறிவுஜீவிகளையும் விட சாதிய அடையாளங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் அதிகம் படிப்பறிவில்லாத மக்களை அதிகம் மதிக்கிறேன். ஏனெனில் பின்னவர்களுக்கு வேடமோ அல்லது பிம்பமோ தேவையில்லை. ஆனால் முன்னவர்களுக்கு பிம்பம் மிக அவசியம்.

நான் உண்மையிலேயே சாதியின் மேல் நம்பிக்கையில்லாதவன் எனில், என் சாதியினரை திட்டுகிறார்களே என்ற கவலை கூட இருக்கக் கூடாது. ஏன் என்னையே நான் துறந்த சாதியின் பெயரைக் குறிப்பிட்டு, "நீ குறிப்பிட்ட அந்த சாதி புத்தியைக் காண்பித்து விட்டாயே" என்று குறிப்பிட்டால் கூட அதை சாதாரண திட்டுதலாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நீ முட்டாள் என்று என்னை ஒருவன் திட்டினால் நான் என்ன செய்வேன்?. நான் முட்டாள் இல்லை என்று உள்ளபடியே கருதினால் அதற்கான எதிர் விவாதத்தை அளிக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட அந்த விசயத்தில் நான் உண்மையிலேயே முட்டாள்தான் என்றால் ஏதாவது சொல்லி மழுப்பி விட்டாவது பிறகு போய் தெளிந்து கொள்ளும் வழியைத் தேட வேண்டும். அதே போல் எனக்கு எந்த சாதிப்புத்தியும் இல்லை என்று மறுத்துப் பேச வேண்டும். அல்லது நான் சாதியை துறந்து விட்டாலும் என்னிடம் சாதிப் புத்தியிருக்கவும் வாய்ப்புண்டு. அப்படியெணில் அந்த சாதிப் புத்தியைக் களைவதற்கான உண்மையான முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டு நான் ஒப்பாரி வைத்தால் எனக்கு உள்ள படியே சாதி மேல் நம்பிக்கை உள்ளது என்று தான் கருத வேண்டும்.

எனக்கு சிறு வயதில் சாதி மேல் நம்பிக்கை இருந்தது. கல்லூரி சென்ற பிறகு பெரியாரிய நூல்களை படித்த பொழுது நம்பிக்கை குறைந்தது. ஆனாலும் சாதிய அடையாளம் இருந்தது. மார்க்ஸிய நூல்களைப் படிக்க ஆரம்பித்த பின் சாதியின் அடிப்படை புரிய ஆரம்பித்த பொழுதும் கூட சாதிய அடையாளம் என்னை விட்டுப் போகவில்லை. தலித்து இயக்க நூல்களையும், இலக்கியங்களையும் படித்த பொழுது தான் அந்த அடையாளத்தை துறக்க ஆரம்பித்தேன் எனலாம். ஆனாலும் பல தலைமுறைகளின் வழி வந்த எத்தனையோ சாதியக் குணங்கள் இன்னும் என்னுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று தான் நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் தலித்திய எழுத்துக்களைப் படிக்கும் பொழுதுதான் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன் தோழர் திருமாவளவன் அமெரிக்கா வந்த பொழுது பல மணி நேரங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது அவர் ஒரு கேள்வி கேட்டார், தலித்து குடும்பங்களில் இந்தியாவின் அனைத்து தலைவர்கள் பெயரையும் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். ஆனால் தலித்தல்லாதவர்கள் ஒருவராவது தலித்து தலைவர் பெயரை வைதது உண்டா என்று கேட்டார். சவாலாகக் கேட்கிறேன் என்றார். எனது சாதியக் குணத்துக்கு ஏன் அது வரை இது உரைக்கவில்லை என்றுதான் பட்டது? அவர் என்னிடம் தட்டியெழுப்பிய சிந்தனைகள் பல. அது போல்தான் எழுத்தாளர்கள் சிவகாமியிடமும், இரவிக்குமாரிடமும் பேசும் பொழுது என்னுடைய சாதியக் குணங்கள் கரைந்து போயிருக்கின்றன. இன்னமும் எத்தனை என்னுள் ஒழிந்திருக்கின்றன என்று எனக்கே தெரியாது.

திராவிட இயக்க சிந்தனையாளர்களும், மார்க்ஸிய சிந்தனையாளர்களும் இன்று தலித்து இயக்கங்களையும், திருமா வளவனையும் சாதிய இயக்கங்களாகச் சித்தரிக்கும் பொழுதுதான் ஏனோ கொதித்துப் போய் விடுகிறென். தேர்தல் அரசியலில் இன்று திருமா பல குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருந்தாலும், தலித்துப் பிரச்சினைகள் அரசியல் அரங்கத்தில் முன்னுக்கு வரக் காரணமாகியிருக்கிறார். திராவிட இயக்கத்தை கலைஞர் குடும்பம் இன்று குழி தோண்டிப் புதைப்பது கூட இயற்கையாக நிகழ்கிறது என்றே நினைக்க்றேன். பார்ப்பனர் அல்லாத மேல் சாதி, மற்றும் நடுத்தர சாதிகள் திராவிட இயக்கத்தின் எழுச்சியால் பயனுற்று இப்பொழுது பார்ப்பனர்களாகிக் கொண்டிருக்கின்றனர். வரலாற்றின் அடுத்த கட்டம் மிகப் பிற்படுத்தப் பட்டவர்களும், தலித்துக்களும் பா.ம.க. மற்றும் தலித்தியக்கங்களின் எழுச்சியில் மேலுக்கு வரும் இந்தக் காலம். இந்த இரண்டு பிரிவினரும் சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஒரே இடத்தில் இயங்க வேண்டிய கட்டாயத்தால் போட்டியும், பூசலும் சாத்தியம். அதைப் பெரிது படுத்தும் பணியில் பார்ப்பனிய, திராவிட இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. அதையும் மீறி, திருமாவும், இராமதாஸும், சேதுராமனும் வெற்றி பெற்றால் நல்லது.

பிற்பட்டவர்களும், தலித்துகளும் மேலே வந்தபின் சாதி இந்துக்களைப் போல், பார்ப்பனிய வாழ்க்கைக் கூறுகளை (கல்யாணம் போன்ற சடங்குகள் தொடங்கி) ஏற்றுக் கொள்வார்கள். கடைசியில் அனைவரையும் (பார்ப்பனர்கள் உள்பட) பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அதன் முக்கிய தேவையாக இருக்கப் போவது, பகுத்தறிவும், பெண் விடுதலையும். மிகக் கடினமான பணியும் இதுதான். ஏனெனில் படித்தவர்கள் பாசாங்கு செய்வதால் விடுதலை செய்வது மிகக் கடினம்.

படித்தவர்கள் மற்றும் உலகத்தின் மற்ற சமூகங்களைப் பற்றி அறிந்தவர்கள் சாதி என்ற கற்பனையான (மொழி, இனம் போலன்றி) அடையாளத்தை இன்னும் துறக்காமல் இருக்கிறார்கள் அல்லது பிம்பத்திற்காக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் அசோகமித்திரன். இவர்களெல்லாம் புனைப் பெயரில் எழுதி விட்டு அது யாரென்றே தெரியாமல் வெளியே வேறு பெயரில் நடந்து கொண்டால் நல்லது (திண்ணை எழுத்தாளர்கள் போல:-). இவர்கள் மட்டுமல்லாமல் இவ்வளவு நாட்கள் மற்ற சாதியினர் அரசியலில் செலுத்தி வந்த அதிகாரத்தை விமர்சனம் செய்யாமல் இன்று தலித்து இயக்கங்களை சாதிக் கட்சிகள் என்று அழைக்கும் ஜெயகாந்தன்கள் கூட சாதிய அடையாளத்தைப் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள்தான்.

அமெரிக்காவில் தமிழர்கள் கூட்டங்களில் நெருங்கி கலந்து கொண்ட போது நான் உணர்ந்து எழுதிய வரிகள் இவை:

இறைவா நீ என்ன சாதி?

மனிதனாய்ப் பிறந்தேன்...
உடையொட்டும் முன்னே
சாதியொட்டிக் கொண்டது!

பள்ளிக்கூடம் சென்றேன்...
பாடம் சொன்னது சாதியில்லையென்று,
படிப்பித்தவர் கேட்டார் நான் என்ன சாதியென்று!

கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்...
படிவம் கேட்டது என்ன சாதியென்று.
கோபம் கொண்டேன் படிவத்தின் மீது!

பின்னால் அறிந்தேன் அது பாவியில்லையென்று.
கோயில் சென்றேன், சொன்னார்கள்
நீதான் படைத்தாய் சாதியையென்று!

மறைந்த பெரியவர்களுக்கும், சாதியை
மறந்த தலைவர்களுக்கும் கூட
அடையாளம் காட்டினார்கள் சாதியுண்டென்று!

பிள்ளைமார் கூடினார்கள் வஊசியைக் கொண்டாட
நாடார்கள் சேர்ந்தார்கள் காமராஜரைப் புகழ்ந்திட
தேவர்கள் குழுமினார்கள் பசும்பொன்னரை வணங்கிட!

முதலியார்கள் உயர்த்திய திருவிகவும்
பிராமணர் உயர்த்திய பாரதியும்
சாதியைய்ச் சாடியதை ஏனோ மறந்தனர் அவர்கள்!

பங்கிட்டனர் மாவட்டங்களை பேருந்துகளை.
படித்தவர் எதிர்த்ததென்னவோ தலித்துகள்
கேட்டுப்போராடிய போது மட்டும்!

பிறந்த நாடுதான் காரணமென்றெண்ணி
பறந்தடைந்தேன் அமெரிக்க நாட்டை
சிறந்து விளங்கினேன் சாதியை மறந்தே!

பாழுமென் நாக்கு பசித்தது தமிழ் பேசாமல்.
தஞ்சம் கொண்டேன் தமிழர் கூட்டங்களில்
தாய்மொழி புசிக்கலாமென்றெண்ணி!

நலமாய்க் கேட்டனர் கேள்விகள்.
புளகாங்கித மடைந்தேன் சாதியில்லையென்று;
பின்னால் உணர்ந்தேன் கேள்வியிலும் சாதியுண்டென்று!

சைவமா அல்லது அசைவமா என்றனர்.
அசைவமென்றால் பிறப்பிலா பழக்கத்திலா ?
டும் கோழியுமா மாடும் சமைப்பேனாவென்று!

கும்பகோணமா கோயம்புத்தூரா ?
திருநெல்வேலியா திருச்சிராப்பள்ளியா ?
புரிந்துகொண்டேன் சாதிக்கூட்டங்கள் பற்றி!

எனக்கு வந்தது கவலை, நான் போற்றத்
தலைவனில்லையென் சாதிக்கு, உடனே சொல்லு
இறைவா உன் சாதியென்னவென்று!


நன்றி - சொ. சங்கரபாண்டி

SAVANT said...

I already posted these comments in ullal.blogspot.com. I want reply badly.... ensure that you reply for the posts...

Could everyone who posted a comment, reply why reservation system is still in place?
If we can't amend that, why are we claiming their supremacy?
We ourselves are accepting our defeat through reservation system. Therefore, they claim the advantage out of ours!
If I am ready for the open competition, why are we claiming the advantage of the reservation system?

I was arguing with my Brahmin neighbour and he asked me all the above questions, for which I had only minimal answers.

Please send your comments on the same. I believe, the government can abolish the reservation system.

dondu(#11168674346665545885) said...

சந்திரன் அவர்களே, உங்கள் பின்னூட்டத்தைப் படித்தேன். அது பற்றி என் எண்ணங்கள்.
சுதந்திரம் வந்தப் பிறகு வெகு விரைவில் இட ஒதுக்கீடு வந்தது. ஆரம்பத்தில் அம்முறையில் பயன் பெற்று க்ளாஸ்- 1 ஆக வந்த ஒரு அதிகாரியைப் பார்ப்போம். அவரைப் பொறுத்த வரை அப்போதே முன்னேறி விட்டார். இருப்பினும் அவருக்கென்று பதவி உயர்வுக்காக தனி லிஸ்ட். தன்னுடன் வேலைக்குச் சேர்ந்தவரை விட பிரமிக்கத் தக்க அளவில் அவர் பதவி உயர்வு பெறுகிறார். அவர் தன் பிள்ளைகளை நல்லப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைத்திருப்பார். அவர்களுக்கும் படிப்பு மற்றும் வேலை சமயங்களில் இலவச படிப்பு மற்றும் இட ஒதுக்கீடு வேலைக்கு மற்றும் பதவி உயர்வுக்கெனத் தொடர்ச்சியாக நடக்கிறது. அப்பிள்ளைகளின் பிள்ளைகள் இப்போது இலவசப் படிப்பு முடிந்து இட ஒதுக்கீடுடன் வேலை மற்றும் தனி ரேஞ்சில் பதவி உயர்வு என்றுப் போய் கொண்டேயிருக்கிறது. இப்போதைக்கு அது நிரந்தரமாகவே உள்ளது.
இதற்கிடையில் மண்டல் கமிஷன் சிபாரிசுகள் வேறு. பார்ப்பனரைத் தவிர மற்ற எல்லா சாதியினரும் இதில் பலன் பெறத் துடிக்கின்றனர். இவர்களுக்குள் பொருளாதரத் தகுதியை முன்னிறுத்த முயன்ற எம்.ஜி. ஆருக்கு பலத்த எதிர்ப்பு.
இப்போது பார்ப்பனர்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாக நினைப்பதில் என்னத் தவறு? அதைத்தான் அசோக மித்திரன் பிரதிபலித்திருக்கிறார்.
தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கக் கோரிக்கை எழுந்தால் பார்ப்பன ஆதரவு என்று எதிர்ப்பவர்கள் தங்களை அறியாமலேயே பார்ப்பனர்கள் திறமை மிக்கவர்கள் என ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளத் தூண்ண்டுகிறது.
தங்களின் மேல் நிகழ்த்தப்படும் இச்செயல்பாட்டைப் பார்ப்பனர்கள் அவரவருக்குத் தோன்றிய முறையில் எதிர் வினை இடுகின்றனர். அவர்களில் சிலர் தங்கள் பார்ப்பனத் தன்மையை மறைத்துக் கொள்கின்றனர். ராமன், சீனுவாசன் என்றத் தங்கள் பெயர்களை முகமூடி மூலம் மறைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவ்வாறில்லாது அடப்போடா ஜாட்டான் என்றுச் செல்லும் பார்ப்பனர்கள் உயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. சுந்தரமூர்த்தி said...

Chandran,
I am surprised that you could have come to such conclusion based on your neighbour's opinion given that you are interested in women getting 1/3 reservation for elected offices. If you put forth your reasons for a need in this case that be a good starting point for the discussion.

Sundaramoorthy