Saturday, April 23, 2005
ஈமெயில் போதை
சில வாரங்களாக சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் டீலோகலைஸ்ட் எலக்ட்ரான் போல உடலும் மனமும் பரவிக்கிடப்பதால் வலைப்பதிவுகள் போதையிலிருந்து மீண்டு பொருண்மைஉலகில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ப்ளாக்கர்ஸ் அனானிமஸ் என்றொரு மீள்வாழ்வுச்சங்கம் அமைக்கலாம் என்றும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மரியுவானாவை விட ஈமெயில் போதையில் மக்கள் முட்டாள்க்ளாக ஆகிறார்கள் என்றொரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. (http://www.theregister.co.uk/2005/04/22/email_destroys_iq/) நம் யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை (என்று நினைக்கிறேன்). குடி, கஞ்சா, புகையிலை போன்ற எந்த ஒரு பழக்கஅடிமை நுகர்பொருளும் ஒருவரின் இயல்பான மன விழிப்பு நிலையையும், புலனுணரு சக்தியினையும் பாதிக்கும் என்பது பலகாலம் ஆராய்ச்சிகளில் அளந்து நிரூபித்த ஒன்று தான். இதேபோல் இப்போது ஈமெயில் ஆராய்ச்சி! ஒரு கருத்துத் தளத்திலிருந்து மற்றொன்றிற்கு MTV சுய விளம்பர காட்சிசுழற்சி வேகத்தில் நொடிக்கு முப்பதுதரம் மாற்றிக்கொண்டிருந்தால் மூளை முட்டைபரோட்டா மாதிரி குதறி எடுக்கப்படும் என்பதும் நமக்கு வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. எடுத்த காரியத்தில் ஊன்றிச் செய்வது, பிற கவன ஈர்ப்புகளுக்கு ஆளாகாமல் சிரத்தையுடன் முடிப்பது போன்ற வழக்கங்களை சிறு வயதிலேயே கல்லாவிட்டால் பிறகு படிவது கடினம் என்றும் நாம் உணர்ந்திருக்கிறோம். குழந்தைகளின் கவன இயல்பும் திறமையும் கணி உபயோகத்தினால் பாதிக்கப் படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மூன்றுவயதிலேயே ஒரு பையன் மைக்ரோசாப்டின் பல மென்பொருள்களையும் பயன்படுத்துவான் என்று சில மாதங்கள் முன்பு பெருமிதச் செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. குழந்தைகள் விளையாடாமல், அதையும் இதையும் இழுத்துப் போட்டு குறும்பு செய்யாமல் இப்படி கணியிலும் டிவி யிலும் பொழுதைக் கழித்தால் அவர்களுடைய மூளை, மன வளர்ச்சிகள் எந்த அளவு பாதிக்கப்படும் என்பது இன்னும் சரிவர விளங்க சில ஆண்டுகள் ஆகலாம். வீட்டில் 7 வயது பையன் இருக்கிறான். எங்கள் வீட்டில் TV க்கு கேபிள் கிடையாது. ஆண்டனாவும் கிடையாது. வேண்டுமானால் நிறைய கார்ட்டூன் குறுவட்டுகள் இருக்கின்றன. தமிழ், இந்தி பாடல் காட்சிவட்டுகள் இருக்கின்றன. (ஆணும் பெண்ணும் சேர்ந்து குதிக்கும் காட்சிகளை அவன் பார்க்கிறானே என்று நான் கவலைப் படுவதில்லை. சினிமாக்களில் வரும் வன்முறைகளும், சீரியல்களில் வரும் அபத்த மனித உறவுச் சிக்கல் வெட்டிப் பேச்சுகளையும் விட நாயகனும் நாயகியும் கூட ஒரு ஐனூறு தோழியரும் 'அன்பு' செய்து கொள்வது எவ்வளவோ மேல் என்றே நினைக்கிறேன்). இவைகளை அனுமதியுடன் அவன் பார்க்கலாம். கணியில் விடுமுறை நாட்களில் விளையாடலாம். என்ன அப்பா எனக்கு வாங்கறேன்னு அம்மாகிட்ட சொல்லித்தானே இந்த ஆப்பிள் கம்பூட்டர் வாங்கினே. இப்ப நீயே வச்சுக்கிறயே என்று அவன் அடம் பிடித்தாலும் விடுமுறை நாட்களில் தான் கணி என்று உறுதியாக சொல்லிவிட்டேன். இது சரியா தவறா என்று பின்னால் தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஊரும் வயலும் என்று கிராமத்தில் வளர்ந்த எனக்கு வீட்டுக்குள்ளேயே ஒளிர்பெட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சதா 'அறிவை' வளர்த்துக் கொண்டிருப்பது சகிக்கமுடியாததாக இருக்கிறது. ஆனால் இங்கெ தமிழகத்தில் இப்போது எல்லோருக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஒண்ணுக்கு போக கற்றுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, மைக்ரோசாப்ட் வேர்ட் இல் பாபா பிளாக் ஷீப் அடிக்க கற்றுக்கொடுத்து பூரிப்பு அடைகிறார்கள். எதிர்கால கணிஉலக சூப்பர் பவர் நாட்டின் குடிமகன் என்றால் சும்மாவா.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அருள், ஒத்துப்போகக்கூடிய கருத்தினை இந்தப்பதிவிலே சொல்லியிருக்கின்றீர்கள் (எனக்கு இருக்கும் மேற்படிப்போதையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்). ஆனால், தொலைக்காட்சியோ அல்லது இணையமோ பயன்படுத்துவார் பயன்படுத்தும்விதத்திலே பயன்படுத்தின் பயனாகத்தான் இருக்கின்றதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவினைப் பொறுத்தமட்டிலே, கம்பிவழித்தொலைக்காட்சி என்பது பெரிதாக ஏதும் பயனிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. PBS போன்றவற்றிலே வரும் ஒப்பீட்டளவிலே நிதானமான நிகழ்ச்சிகள், கம்பிவழித்தொலைக்காட்சி அலைவரிசைகளிலே கிடைப்பதில்லை. அறி
/சீரியல்களில் வரும் அபத்த மனித உறவுச் சிக்கல் வெட்டிப் பேச்சுகளையும் விட நாயகனும் நாயகியும் கூட ஒரு ஐனூறு தோழியரும் 'அன்பு' செய்து கொள்வது எவ்வளவோ மேல் என்றே நினைக்கிறேன்/
;-)
/என்ன அப்பா எனக்கு வாங்கறேன்னு அம்மாகிட்ட சொல்லித்தானே இந்த ஆப்பிள் கம்பூட்டர் வாங்கினே. இப்ப நீயே வச்சுக்கிறயே என்று அவன் அடம் பிடித்தாலும்/
இந்த வசனத்தை என் வீட்டிலே மகன் சொல்லவில்லை, அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறார் ;-)
நன்றி ரமணி:
சிறார்களுக்கான கணி உபயோகம் மற்றும் கணிவழிப் பயிற்சி பற்றிப் பேசும்போது MIT in Seymour Papert ஐ விட முடியாது அல்லவா. Marvin Minsky உடன் MIT இல் 60 களில் தொடங்கி நடந்த பல ஆய்வுகளும் பயிற்சிகளும் சிறார்களின் அறிவுணர் வகையினையும் அதற்கு கணியின் பயன்வீச்சையும் பரந்த அளவில் ஆய்வுகள் நடத்தினார். LOGO இன்றும் இங்கே சென்னையில் கூட பல பள்ளிகளில் சிறார்களுக்கு கணி ஆய்வகத்தில் கற்றுக் கொடுக்கப் படுகிறது. நல்லது.
சற்றே பெரிய குழந்தைகள் 8-10 வகுப்புகள் பயில்பவர்கள், யாருக்கேனும் ஒரு நல்ல ஒரு சோதனை விளையாட்டுக் களம் வேண்டுமானால் Netlogo வை சிபாரிசு செய்கிறேன். எனக்குப் பிடித்த ஒரு களம் இது:
http://ccl.sesp.northwestern.edu/netlogo/
அருள்
if you want to go further on this see the work of sherry turkle of MIT.there is also an interesting book from MIT Press,From Barbie® to Mortal Kombat :Gender and Computer Games Edited by Justine Cassell and Henry Jenkins. i have read some chapters.
ravi srinivas
அருள் - இங்கே எங்கள் வீட்டில் வேறுவிதமான குழப்பம் நேர்ந்துகொண்டிருக்கிறது. நெடுநாட்களுக்கு வீட்டில் கம்பி, சட்டி இணைப்புகள் இல்லாமல்தான் இருந்தோம். தொடர்ந்து இப்படியே இருக்க வீட்டில் சாமான் வாங்கிவ்ந்த அட்டைப் பெட்டி வாரம்தோறும் வாசலில் வீசப்படும் விளப்பரத் தாள்கள் ஒட்டப்பட்டு கயிறு கட்டி சிறியவனைப் பெரியவன் வைத்து இழுக்க நிகழ் உலகக் குழந்தைகளாக வளர்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் பள்ளியில் சக நண்பர்களிடையே யூகியோ பற்றிப் பேசமுடியாமல், சூப்பர்மேன் அட்டை மாற்றிக் கொள்ளமுடியாமல் மூத்தவன் தனிப்பட்டுப் போவதைப் போல இருந்தது. சில சமயங்களில் இதனால் குழுக்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் வேற்றாளாக நின்றுவிட்டு வீட்டுக்கு வந்து அழத் தொடங்கினான். அவசர அவசரமாக கேம்பாய் வாங்கிக் கொடுத்து கொஞ்சம் தயார் செய்தால்தான் bullying லிருந்து தபபிக்க முடிந்தது. இப்பொழுது கேம்பாய் மூலையில் கிடக்க மீண்டும் சீரியல் அட்டைப் பெட்டியின் படங்கள் வெட்டப்பட்டு வீடுமுழுக்க இரைந்துகிடக்கின்றன.
It is very difficult to survive peer pressure. :(
ரவி, நன்றி. Cassel& Jenkins இங்கு கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன். இல்லாவிட்டால் ஏதாவது நூலகத்தில் பிடித்துவிடலாம். விரிவாக பின்னால் ஒருநாள்.
வெங்கட்: பள்ளியில் சக மாணவர்களின் தொல்லை தாங்கமுடியாததுதான். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மெட்டி ஒலி, கோலங்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். இவன் இரண்டுமூன்று நாட்களுக்கு ஒரு முறை பெங்களூருக்கு பாட்டியுடன் பேசி கதை தெரிந்து கொள்கிறான். இதுக்கு நடுவிலே நான் ஙே என்று முழித்துக்கொண்டு இருக்கிறேன்! பெரியவனுக்கு Netlogo அறிமுகப்படுத்துங்கள். அதில் இருக்கும் ants simulation படு சுவாரஸியமானது.
அருள்,
இந்த வாரம் International TV Turn-off Week ஆம். (இதை என் பையனிடம் சொன்னால் இதே மாதிரி "தமிழ்மணம் Turn-off Week" ம் வைக்கவேண்டும் என்பான்). பொது இடங்களில் உள்ள தொலைகாட்சிகளை அணைக்க TV-B-Gone என்ற குட்டி universal remote control ஐ உருவாக்கி விற்றுக் கொண்டிருக்கிறார் ஓர் அமெரிக்கர். இதை நம் ஊரிலும் உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது கொண்டுசெல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாம் வந்திருப்பது கூட தெரியாமல் அண்ணாமலை, மெட்டிஒலி என்று மூழ்கியிருப்பார்கள்.
பாதி நேரம், குழந்தைகள் டீவி முன்னால் உட்கார்ந்து பொழுதைப் போக்க நாமும் ஒரு காரணம். விளையாட தோழ/துணைவர்கள் இல்லாமல், என்னை வீட்டுக்குள்ளேயே பந்து விலையாடக் கூப்பிடுகிறான். பேனாவை எடுத்து அக்கு அக்காக பிரிக்கிறான். சமையல் உள்ளில் அம்மா கூட உட்கார்ந்து கொண்டு கொதிக்கும் குழம்பில் கரண்டியை விட்டு கலக்குகிறான். தோசைகல்லில் ஊற்றும் முன்பே மாவை எடுத்து தின்கிறான்.மீன் தொட்டியை திறந்து பார்த்துவிட்டு சாப்பாடு போட அலைகிறான் என்று என் வாண்டு படுத்தும் பாடில் நானே டீவியை போட்டு " உக்காருடா" என்று சொல்லி விடுகிறேன். குழந்தியுடன் அதிக நேரம் செலவிட்டால், அவர்கள் டீவி பக்கம் ஏன் போகப் போகிறார்கள்.?????ஆனா, முடிய மாட்டேங்குதே...
miga sariyana karuthukkal..
en pen 15 madangal aagindrathu.. amma appa endu solli koduthom..
TV cartoon parthu mummyamma daddy endru azhaikkiral.. enna seivathu..
anbudan vishy
நல்ல பதிவு அருள். எங்கள் வீட்டிலும் முடிந்தவரை தொலைக்காட்சி கணினி நேரங்களைக் குறைக்க முயற்சி செய்கிறோம். மூக்கன் சொன்னது போல் பெற்றோர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிட்டால் நல்லது. அது முடியாமல் போகும் போது தான் பிரச்சினையாக இருக்கிறது.
நாங்கள் படம் பார்க்க வேண்டுமென்றால், சரி போ கணினியில் விளையாடு என்று சொல்வதும், நான் கணினியில் வலைமேய்வதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதும் தவறு தான். அவர்களோடு குதிப்பது பிடித்திருந்தாலும் எல்லா நேரங்களிலும் முடியாத இயலாமையை என்ன செய்வது?
peer pressure பற்றி வெங்கட் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது. ஐந்து வயதில் அமெரிக்கன் ஐடல் பார்த்துவிட்டுப் பேசும் சக தோழியிடம் பழக அது பற்றி அறியாத என் மகளுக்குக் கஷ்டமாக இருக்கும் என்று புரிகிறது. தோழியின் பெற்றோர் அவளுடைய graduation present (!) ஆக அமெரிக்கன் ஐடல் காட்சிக்கு நேரில் அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருக்கையில் நானென்ன செய்வது!
அருள்
இன்றுதான் உங்கள் பதிவைப் படித்தேன். தொலைகாட்சியில் வரும் குழந்தைகள் நிகழ்ச்சி வயதுக்கேற்ற மாதிர் அவர்களின் மனநிலைக்கு தக்க தயாரிக்க பட்டவை என்றெல்லாம் படித்தாலும், ஜப்பானில் போக்கிமான் சண்டையில் வன்முறை பல்கி பெருகியதும், அமெரிக்காவில் அது ஆபத்தில் முடிந்ததும் பழைய நிகழ்ச்சி. என்னுடைய வீட்டில் நாங்களே அதிகம் தொலைகாட்சி பார்ப்பதில்லை என்பதால் என் மகனுக்கு பிரச்சினை இல்லை. புத்தகம் படிக்க, படிக்க தெரியாத குழந்தைகளுக்கு படித்துக் காட்ட என்று அவனை பழக்கியுள்ளேன். பள்ளியிலும் தோழர்களின் கூட்டதில் சேர அவனுக்கு பிரச்சினை இல்லை ஏனெனில் அவனுக்கு ஒவ்வொருவருடைய
இ ரசனையும் விருப்பமும் வேறு வேறு, உன்னுடைய விருப்பம் கரத்தே, சங்கீதம் மற்றும் சமூக சேவை என்று சொல் என்று அவன் பள்ளியிலேயே சொல்லிவிடுவார்கள். நல்ல பதிவு, மிக்க நன்றி.
Watching TV Makes You Smarter: http://www.nytimes.com/2005/04/24/magazine/24TV.html?ex=1271995200&en=e08bc7c1e7acbb59&ei=5090&partner=rssuserland&emc=rss
இங்கு எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் தொலைக்காட்சி பார்ப்பதே பெரிய குற்றமாகவும், செய்யக்கூடாத காரியம் போலவும் நினைப்பதாகத் தெரிகிறது. தொலைகாட்சி பார்ப்பது அழிவுப் பாதையில் தான் இட்டுச் செல்லும் என்கிற முன்சாய்வு இந்திய படித்த நடுத்தர வர்க்கத்தினரின் உளவியல். தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைப் பார்க்கவிடுவது, நேரக்கெடு கொடுத்து பார்க்கவிடுவது, செய்த பாட/வீட்டு வேலைகளுக்கு வெகுமதியாக தொலைகாட்சி பார்க்க அனுமதிப்பது, குழந்தைகளோடு பெற்றோரும் அமர்ந்து சில நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போன்று ஒழுங்குபடுத்தி இளம்பருவத்தில் பெறக்கூடிய ஒரு அனுபவத்தை அவர்களுக்கு அளிக்கலாம். இங்கு இந்தியப் பெற்றோர்கள் சதா படிப்பு, அறிவு என்று நச்சரிப்பதும், பொதுவில் அதைப் பற்றி பீற்றிக்கொள்வதும் பல சமயங்களில் குமட்டலை வரவழைக்கும். "எங்கள் வீட்டில் தொலைகாட்சிப் பெட்டியே இல்லை" என்று சொல்லிக்கொள்வதும் சில பெற்றோர்களுக்கு கௌரவமாக இருக்கிறது. வார இறுதியானால் குமோன் கணிதம், சதுரங்கம், கோயில் வகுப்பு, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் என்று இழுத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கும் போது குழந்தைகள் பெற்றோர் இருவர் மீதும் பரிதாபம் ஏற்படும். எல்லாம் செய்துவிட்டு கடைசியில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் முக்காலே மூணுவீசம் இந்தியப் பிள்ளைகள் மருத்துவம் படிப்பார்கள். அதை விட்டால் பொறியியல்/மேலாண்மையியல்.
நல்ல பதிவு அருள். நன்றி.
சுந்தரமூர்த்தி
தொலைக்காட்சியில் வரும் சில குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், தேர்ந்தெடுத்த சில நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே பார்க்காவிட்டால் கோபம் வருவதும் ஒருவித வெறி வருவதும் ஆபத்தில் முடியும். இங்கே என்றில்லை, இந்தியாவிலும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விருப்பமா இல்லையா என்று பார்க்காமல் பொழுதுபோக்குகளை திணிப்பதும் உண்மை. முன்போலன்றி இப்போது வரும் கார்ட்டூன்களிலும் வன்முறையே அதிகமாகிவிட்டது. 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பரவாயில்லை, ஆனால் 10 வயது சிறுவர்களுக்கு வரும் எந்த நிகழ்ச்சியுமே சரியில்லை. இதில் காதலும், காமமும், வன்முறையும்தான் அதிகம்.
வீட்டுவேலைகள் செய்வதற்கு வெகுமதி தந்தால் கடமையை செய்ய பரிசுதருவது போலாகும் அன்றோ.
/இங்கு இந்தியப் பெற்றோர்கள் சதா படிப்பு, அறிவு என்று நச்சரிப்பதும், பொதுவில் அதைப் பற்றி பீற்றிக்கொள்வதும் பல சமயங்களில் குமட்டலை வரவழைக்கும். "எங்கள் வீட்டில் தொலைகாட்சிப் பெட்டியே இல்லை" என்று சொல்லிக்கொள்வதும் சில பெற்றோர்களுக்கு கௌரவமாக இருக்கிறது. வார இறுதியானால் குமோன் கணிதம், சதுரங்கம், கோயில் வகுப்பு, கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் என்று இழுத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கும் போது குழந்தைகள் பெற்றோர் இருவர் மீதும் பரிதாபம் ஏற்படும். /
சொன்னாலும் சொன்னீர்கள்; இதைப் பெருமளவு இலங்கைப்பெற்றோருக்கும் சேர்த்துக்கொள்ளுங்கள்; இதிலே கராட்டி, பியானோவும் அடக்கம்.
//என்ன அப்பா எனக்கு வாங்கறேன்னு அம்மாகிட்ட சொல்லித்தானே இந்த ஆப்பிள் கம்பூட்டர் வாங்கினே. இப்ப நீயே வச்சுக்கிறயே என்று அவன் அடம் பிடித்தாலும்//
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பொருள்.. ஆனால் அப்பாக்கள்தான் அதிகம் விளையாடுவார்கள் என ஒரு விடுகதை. அது ஞாபகம் வந்துச்சி.... வானாம்பா இந்த வெள்ளாட்டுக்கு நான் வரலை.. எஸ்கேப்!
Post a Comment