Monday, May 30, 2005

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...

---------------------------------------------------

"கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன்கண்ணே உண்மைசொல்லும் சாட்சியா..."
- பட்டினத்தில் பூதம் படப் பாடல்

நமது புலன்கள் மிகவும் நுட்பமானவை. உலகை உணர, அறிய நமக்கு இருக்கும் வழிமுறை நமது ஐம்புலன்கள்தான். அதனால் புலன்களால் அறியக்கூடிய உணர்சிகளைக்கொண்டே அவற்றால் தூண்டப்பட்டே குழந்தைகளாக இருக்கும் நாம் மெதுவாக உலகைப்பற்றிய பிம்பங்களை உருவாக்குகிறோம். பின் 'உண்மைகள்' அறிமுகமாகின்றன. தாய் எனும் உண்மை, பசி,வலி, சிரிப்பு எனும் உண்மைகள் சேர்ந்து உலகம் உருவாகிறது. சுற்றியுள்ளோரால் சொற்கள் மொழியப்படுகிறன. சொற்களால் ஆன மொழி அமைந்து உலகம் மொழிவழி அறியப் படுகிறது. மூன்று வயதுக் குழந்தையை நம்மால் கணமேனும் பேச்சடக்க முடிவதில்லை. பொறிவழி உணர்தல்-பேச்சு- மொழியின் சிக்கலாக உலகமும் இருப்பும் நிறுவப்படுகின்றன. இதுவே புலனறி வாதம் என அழைக்கப் படுகிறது.

மேலே சொன்னபடி மட்டுமே நமது 'அறிவு' அனைத்தும் பெறப்படுமானால், அப்படி மட்டுமே நமது எல்லா 'அறிவும்' பெறப்படுவதாக நாம் நம்பினால், நம்மை நாம் ஒரு 'புலனறிவு வாதி' என அழைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் 'empiricism' என அறியப்படும் தத்துவச் சொல் தமிழில் புலனறிவாதம் என பயிலப்படுகிறது. அறிவு என்பதை ஆங்கில knowledge என்னும் சொல்லுக்கு இணையாக இங்கே பயன்படுத்தி இருக்கிறேன். வடமொழியில் ப்ரமாண என வழங்கப்படும், அறிவை அடையும் முறைகளில், புலன்கள் மட்டும் தரும் அறிவு ப்ரத்யக்ஷ என அழைக்கப் படுகிறது. (இந்திய ஏரண, தத்துவ இயல் செறிவானது. எனக்கு வடமொழி தெரியாது. ஆங்கிலத்தில் படித்ததை இயன்றவரை தருகிறேன்).

தொல்காப்பியர்:

"
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
"
என்று ஐந்து புலனறிவுகளையும் ஆறாவதாக மனதையும் கூறுகிறார்.
எளிதாக புரிகிறது என நினைக்கிறேன்.

புலன்கள் வழங்கும் வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து நமது மனது உலகத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது என கருதலாம். அது சரிதான். கையை வெந்நீரில் வைத்தால் விரல்கள் எரிகின்றன. இது உணர்ச்சி. கடும் கோடையில் இப்போது சென்னையில் வெளியே சாலையில் நடந்தால் உடம்பே முழுவதும் எரிகிறது. இதுவும் அதே போன்ற ஒத்த உணர்ச்சிதான். ஆனால் இரண்டும் ஒன்றா? உணர்ச்சியை அரூப சிந்தனையாக்கி 'சூடு' என நினைக்கிறோம். 'அப்பா என்ன சூடு' என்று சொல்லும் போது நீங்கள் உணர்ச்சியில் மட்டும் 'அறிய' வில்லை. அதற்கு அடுத்த படியான 'சூடு' எனும் மொழிவழி கற்பித்த ஒரு சிந்தனை அலகுக்கு சென்றுவிட்டீர்கள். சூடு என்று இதை நாம் 'அறிய'த் துவங்கிவிட்டால், வெந்நீர், நெருப்பு, சூரியன் என்று எரிச்சலைத் தரும் வழங்கியிலிருந்து நம் சிந்தனை அகன்று அடுத்த நிலையில் அந்த உணர்ச்சியை பொதுமைப்படுத்தி (இதற்கு மேலும் பொதுமைப்படுத்தி பெண்ணின் கண்களையும் ஒரு வழங்கியாகக் கொண்டால், கோபப் பார்வைகூட கவிஞர்களால் அபத்தமாக சூடு என்று சொல்லப்படும்). இப்போது நமது மனமும் இந்த 'அறிவை' உண்டாக்கும் செயலில் உணர்ச்சியோடு ஏதோ செயல்படுகிறது என்று தெரிந்து கொள்கிறோம்.

மேலே சொன்ன பாடலில் இப்படித்தான் வெறும் கண்கள் கொடுத்த செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு கோபப்படாதே என்று ஜெய்சங்கர் கேயார் விஜயாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். போகட்டும். அடுத்த பாடல்: " உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ..."
ரெடியாக இருங்கள்.

(அறிவியலைப் பற்றி விவாதிக்க பல தத்துவக் கலைச் சொற்களை பயில வேண்டி இருக்கிறது. வெங்கட்டின் சென்ற பதிவில் இதை உணர்ந்திருப்போம். அத்தகைய சொற்களை முடிந்த அளவு சிறு விளக்கங்களுடன் அறிமுகம் செய்து கொள்ளத்தான் இது)

Thursday, May 26, 2005

இ.தி. 43

இ.தி. 43Image hosted by Photobucket.com


ஐயா, பப்ளிக் எடத்திலெ கிராமம் மாதிரி நினச்சதெல்லாம் செய்ய முடியாது. இது டவுனுங்க. இங்கெல்லாம் சிங்க முகமூடி போட்டுத்தான் நம்மையே சுத்தப்படுத்த நக்கணும். ஹூம். எப்பத்தான் திருந்துவீங்களோ...

Tuesday, May 17, 2005

**/**/87 (2)

என்றென்றும்
-------------------

எவரும் வருக
உறைந்த கள்ளி நிழல்
அலையும் காற்றின் மினுப்பு
விரைத்த சாம்பல் வானம்
திக்குகளின் வேட்டொலி
சூழ்ந்ததென் குகை

புல்நுனி கல்முனை
சிறுநீர் மணமாய்
மிருகத்தின் எல்லைகள்
மார்பெலும்பின் மிச்சக்
கூர்நுனி கிழித்த
பாதங்களின் பதிவு தாண்டி
சிதறிய இறைச்சியில் உயிர்த்த
பூக்களின் பரப்பு தாண்டி

நாற்புறமும் என்
கடவுளரை எரித்த
சிதை புகைய
பற்களைத்தீட்டி
காத்திருக்கிறேன். வருக.

Sunday, May 15, 2005

**/**/87

பிரிந்து போனவர்களின் கதி எனக்கும் தெரியும்
தோல் ஆடைகளை முதுகில் சுமத்தவர்கள்
சுழல் வாகனங்களின் விஷயம் தெரிந்தவர்கள்
மின்கற்றை துப்பும் வெடிப்பிகள் பதுக்கியவர்கள்
அனைவரும் சென்ற வழிகளைத் தவிர்த்து
கல் கவண்களைச் சுழற்சி
மயிற்பீலிகளைத் தலையில் தரித்து
அகன்று சென்றவர்கள் இடையில் பிறந்த
என்தோழன் சொல்கிறான்:
"இன்று பிரிந்தவர்களின் குழந்தைநான்
அவர்களின் பாறை எண்ணையை தடவிவளர்ந்த
மினுக்கும் என்கூந்தலின் இடையில்
வைத்துள்ளேன் என் குழுவின் ரகசியங்கள்
ஒவ்வொரு நரை முடிக்கும் ஒன்றாக
நான் மறக்கும் எம்குழுவின் வார்த்தைகளை
என்தலையை கத்தரிக்கும்முன் உம்மிடம் சொல்கிறேன்
உமக்கோ எம் வார்த்தைகள் புரியாது
உமக்கோ எம் பழங்கள் செரிக்காதவை
எம் சிறுத்தைகளின் நகக் கூர்மையில்
செதுக்கிய என் முதுகில் பாருங்கள்
எம் குழுவின் வரலாற்றை
எம் மக்களின் விருப்பம் மறந்த
கடவுளைப் பதித்துள்ளேன்
என் ஒவ்வொரு பொய்ப்பல்லின் கீழும்
தாடைகளை உடைத்து என் பற்களைத்துப்ப நீங்கள்
உதைத்த உதையின் இறுமாப்பு போன்றவை
எமது கழுதைகளின் பிளிரல்கள்
ஈக்களின் சுவாசம் போன்று
இலக்கே இல்லாத உம் கேள்விகள்
எம் முன்னோரின் வாடைகலந்த
காற்று அலையும் சமவெளிகளில்
மூக்கு துடிக்க வரும் நாய்களின் நரம்புகளை
உலர்த்தி அணிகிறோம் அரஞாண் கயிறுகளாக ..."
சகோதரனின் வாளிலிருந்து வீழும்
எரிகற்களை சேகரிக்கும் நண்ப அறிந்துகொள்

Friday, May 13, 2005

இ. தி - 42

Image hosted by Photobucket.com


" உலகம் தெரியாம வீட்டுக்குள்ளேயே பொத்தி வச்சு வளத்த பொண்ணு. கண்கலங்காம நல்லாப் பாத்துக்கங்க மாப்பிள்ளை."

Thursday, May 12, 2005

இ.தி - 41

Image hosted by Photobucket.com


" கிக்கீகுக்கீகுக்கீகூ கக்கீகூகக்க்காகுயீ ..."

" இந்த லூசுப்பய லூகாஸுக்குத் தெரிஞ்சா என்னாகுமா?
தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகுது. முப்பது வருசமா மனுசுக்குள்ள பூட்டி வச்சிருக்கிறத சொல்லிடறேன் கேளு. நான் தான் திரைக்கதையில எல்லா அத்தியாயத்தையும் மாத்தி மாத்தி வச்சு தைச்சிட்டேன்... "

Wednesday, May 11, 2005

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ...

'குமுதம்' கூற்றுப் பொருந்துமா? அது திருந்துமா?
----------------------------------------------------------------------

அமுதம் அனைய தமிழ்மொழி ஆட்சிமொழியாதல் வேண்டுமென்பது உண்மைத் தமிழர் உள்ளக்கிடக்கை. தமிழ் ஆட்சி மொழியானால்தான் தமிழர் வாழ்வு பெறுவர்-தமிழ் நாடு அதன் உண்மைச் சிறப்பைப் பெறும். இது தமிழரின் ஒன்றுபட்ட உணர்ச்சி. இவ்வுணர்ச்சியின் விளைவாகவே தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும் என்னும் எண்ணம் எழுச்சியாக ஆங்காங்கே தலைதூக்கக் காண்கிறோம்.

எனவே ஆட்சி மொழி பற்றிய முயற்சியில் இனி தமிழர் எத்துணை விரைவாக முன்னேற வேண்டுமோ அத்துணை விரைவாக முன்னேற வேண்டும். ஒரு சிலர் உண்டெனினும் அவர்களும் வெளிப்படையாக எதிர்க்கத் துணிந்திலர். இதழ்கள் யாவும் தமிழ் ஆட்சி மொழியாவதை வரவேற்கின்றன.

எனினும் ஒரு சிலர் இயல்பாக தமக்குள்ள பிற்போக்குத் தன்மையை விட்ட பாடில்லை. தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதுபோற் காட்டி 'அவசரப் படக்கூடாது' என்று அறிவுரை கூற முன்வருகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது 'குமுதம்' என்னும் கிழமை இதழ். 1-6-54-ல் வெளிவந்த அவ்விதழ் கூறுவதைச் சற்றே கூர்ந்து நோக்குமின்.

"பஞ்சாயத்து நிர்வாகிகள் வரிப்பாக்கி அறிவிப்புமுதல், சட்டசபை உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினைவரை சகல நடவடிக்கைகளும் இன்று முதலே இந்த வினாடி முதலே தமிழில் நடத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது அவசரப் புத்திக்கு அடையாளமாக இருக்கிறதே தவிர அறிவு முதிர்ச்சியின் சின்னமாக இருக்காது" என்று எழுதுகின்றது.

'குமுத'த்தின் இக்கூற்று மிகமிக இரங்கத்தக்கது. இந்நாட்டில் ஆங்கில ஆட்சி நிலவிய காலையில் இக்கூற்றினை குமுதம் வெளியிட்டிருக்குமாயின் அதில் சற்றேனும் பொருள் இருக்கமுடியும். நாடு விடுதலை பெற்று ஆண்டு ஏழாகின்றன. இந்நாள் காறும் தமிழுக்கு ஏற்றமில்லையானால்- தமிழ் ஆட்சி பீடம் ஏறவில்லையானால் விடுதலை என்ற சொல்லுக்கே பொருளில்லை. நாட்டுப்பற்றுக்கு அடிப்படை மொழிப்பற்று. நாட்டு விடுதலைக்கு அடிப்படை மொழி விடுதலை. ஏழாண்டுக் காலத்தில் இதனை நாம் காணமுடியவில்லையானால் தமிழரின் குரல் ஆட்சியாளர் செவிப் புகவில்லை, அல்லது தமிழை ஆட்சிமொழியாக்கத் தமிழர் தகுதியற்றவர் என்பதாக முடியும். எனவே, தமிழை ஆட்சி மொழியாக்க மடிதற்று நிற்கின்றதென்பதை இருண்டபோது மலரும் குமுதம் உணர்க. இனிக் குமுதம் போன்ற பிற்போக்கு இதழ்கள் நாட்டில் நெடுநாள் உலவ முடியாது. அது உலவ வேண்டுமானால் இத்தகைய போலிக் கொள்கைகளை விட்டு விட்டு உடனடியாகத் திருந்த வேண்டும்.

- செந்தமிழ்ச் செல்வி, வள்ளுவர் ஆண்டு, வைகாசி. (ஜுன், '54)


குமுதம் விகடன் இவற்றிற்கெல்லாம் இன்று தமிழே தேவையில்லை. தமிழும் இன்னும் இருக்கிறதே என்பதுதான் எனக்கு வியப்பு.

Sunday, May 08, 2005

மரை பொருள்

மரை என்றால் 'ஒரு வகை மான்' என்றே அகராதிகள் கூறுகின்றன. அப்பொழுது மானில் பல வகை உண்டென்பது தெரிகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் நவ்வி, மரை, கடமா, உழா, இரலை என்று ஐந்து வகை மான்கள் அறியப்படுகின்றன. தற்போதைய தமிழக எல்லைக்காடுகளில் எனக்குத் தெரிந்து புள்ளிமான், மிளா, கலை மான் என்று மூன்று வகை மான்கள் உள்ளன. கலைமானை இயற்கை சூழலில் கண்டதில்லை. மற்ற இரண்டையும் காட்டில் பார்த்திருக்கிறேன். ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் வரை இவை தமிழகமெங்கும் பரந்து காணப்பட்டிருக்கும். புள்ளிமான் எல்லோருக்கும் தெரியும். மிளா என்பது சற்றே பெரியது. சம்பர் என ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. கலைமான் நீண்ட கொம்புகளை உடையது. அருகி வரும் இனம்.
இவற்றில் மரை என்பது எது? சாதாரணமாக புள்ளிமானே உணவுக்காக சமவெளி மனிதர்களால் வேட்டையாடப்பட்டது. கோவைக்கருகிலுள்ள சிறு குன்றுகளை அடுத்த பகுதிகளில் இம்மான்கள் முப்பது வருடங்களுக்கு முன் வரை காணப்பட்டன. இப்போது பந்திப்பூர், முதுமலை சென்றால் புள்ளி மானையும் மிளாவையும் காணலாம்.
மரை என்பது புள்ளிமானா அல்லது மிளாவா இல்லை இரண்டுமேவா என்று ஐயமாக இருக்கிறது.
பழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர்? ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது. மனிதன் உண்ணும் எந்த விலங்கும், பறவையும் (ஆடு, மாடு, குதிரை, கோழி, வான்கோழி) பல்கிப் பெருமே தவிர அழிந்துவிடாது. அதற்கான தேவைகளை அவன் பார்த்துக்கொள்ளுவான். உதாரணமாக, இப்போது ஜப்பான் காடைக் கறி எல்லா செட்டிநாட்டு உணவகங்களிலும் கிடைக்கிறது. ஆனால் நம்ம ஊர்க் காடை அழிந்த்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் உடனடியாக திட்டங்கள் தீட்டினால், பல மிருகங்களைக் காப்பாற்றலாம். என்னே ஒரு உயர்ந்த மானுடப் பண்பு என்று என்னைத் திட்டத் துவங்கும் முன் தென்னாப்பிரிக்காவின் இத்தகைய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். எண்பதுகளிலேயே ஆரம்பித்தார்கள்.

Saturday, May 07, 2005

இ.தி-40

Image hosted by Photobucket.com" உங்கள் விழுமியங்கள் உங்களுக்கு. என் விழுமியம் எனக்கு.
நான் இனி மரக்கறிதான் சாப்பிடுவேன்."

"என்னத்த வேணும்னாலும் சாப்பிடு. விழுமியம் கிழுமியம்ன்னு உளர்ரத நிறுத்தலேன்னா இனிமே வீட்டுக்கு வெளியிலேதான் சாப்பாடு. "

BBC :
Killer dino 'turned vegetarian'

தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்

"தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும் ..."

திரும்பத் திரும்ப எத்தனை முறை 'மறு வாசிப்பு' செய்தாலும் அனைத்து இந்து மதப் புராணங்களின் பெருங்கதையாடல் இதுதான்:
1. வைதீக மார்க்கமே உண்மை. எல்லாவற்றிலும் உயர்ந்தது. புனிதமானது.
2. வேதங்கள் முதன்மையானவை. அவற்றை சக்தியிருந்தால் மீள்வாசிப்பு செய்யலாம். ஆனால் மறுக்க இயலாது.
3. சனாதன 'தர்மம்' காக்கப் படவேண்டும். அதற்கான அனைத்து யுக்திகளும் நியாயத்தின் பாற்பட்டவை. அதற்கு மாற்றான அனைத்தும் அநியாயத்தின் பாற்பட்டவை. அழித்தொழிக்கப் பட வேண்டுபவை.
இவற்றைத்தவிர வேறு என்னதான் இந்தப் புராணங்கள் கூறுகின்றன? ஏதாவது ஒரு புராணத்திலிருந்து யாராவது ஒரு உதாரணம் காட்டினால் நம்புவேன். மீதி கதைசொல்லும் யுத்திகள் அந்த அந்த படைப்பாளியின் தொழில் திறமை. கம்பன் ஒரு மகத்தான கவிஞன். அவனுடைய ராமகாதை படிக்கப் படிக்க உள்ளே இழுத்து கிறங்க அடிப்பது. அதுவும் மேற்சொன்ன விதிகளைத் தாண்டி புறமாக ஏதாவது சொல்லியிருக்கிறதா என்பதுதான் கேள்வி. வைதீக மார்க்கம் வரலாற்றில் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. நல்லவை என்று பரப்புரைக்கப் படுபவை இம்மார்க்கத்தைப் பேணும் செயல்பாடுகள். பாவம், கெட்டவை என்று பயமுறுத்தப் படுபவை இதை எதிர்த்த செயல் பாடுகள். அவ்வளவுதான்.
இதில் பிராமணர்கள் மட்டுமே வைதீகத்தைப் போற்றுபவர்கள் அல்ல. அகில இந்தியாவிலும் பார்த்தால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் இவர்கள் மூவரின் கூட்டாட்சி முறையே வைதீகக் கட்டமைப்பு. இவர்களின் தன்னல விழுமியங்களே இந்து மதத்தின், இப்போது இந்த நாட்டின் பொது விழுமியங்களாக புனைவு செய்யப் படுகின்றன. அது வால்மீகியிலிருந்து இன்றைய இயக்குனர் ஷங்கர் வரை அனைத்து படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் ஒரு அசாதாரண அறிவுலகச் சூழல் இருக்கிறது. அண்டை மானிலங்களில் கூட வைதீகத்தை எதிர்த்து தீவிரமாக எழுதிய சமகால படைப்பாளிகள் பெரும்பாலும் பிராமணர்களே. தமிழகத்தில் பிராமணமல்லாதோர் வைதீக எதிர்ப்பை பிராமண எதிர்ப்பாக மாற்றி இயக்கமாக்கியதில் தமிழக பிராமணர்கள் நாங்கள் யூதர்களாக்கும் என்று குண்டுபோட வசதியாகப் போய்விட்டது. கருத்து முறையில் வைதீகத்தை எதிர்த்தாலும் இது பிராமண எதிர்ப்பு ஆகவே இந்துமத எதிர்ப்பு என்றெல்லாம் மேலோட்டமாக வாதிடுவதற்கும் வசதியாக இச்சூழல் இருப்பதால் அதே குழப்பத்தை வலைப்பதிவுகளிலும் பார்க்கிறேன்.