Saturday, May 07, 2005

தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்

"தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும் ..."

திரும்பத் திரும்ப எத்தனை முறை 'மறு வாசிப்பு' செய்தாலும் அனைத்து இந்து மதப் புராணங்களின் பெருங்கதையாடல் இதுதான்:
1. வைதீக மார்க்கமே உண்மை. எல்லாவற்றிலும் உயர்ந்தது. புனிதமானது.
2. வேதங்கள் முதன்மையானவை. அவற்றை சக்தியிருந்தால் மீள்வாசிப்பு செய்யலாம். ஆனால் மறுக்க இயலாது.
3. சனாதன 'தர்மம்' காக்கப் படவேண்டும். அதற்கான அனைத்து யுக்திகளும் நியாயத்தின் பாற்பட்டவை. அதற்கு மாற்றான அனைத்தும் அநியாயத்தின் பாற்பட்டவை. அழித்தொழிக்கப் பட வேண்டுபவை.
இவற்றைத்தவிர வேறு என்னதான் இந்தப் புராணங்கள் கூறுகின்றன? ஏதாவது ஒரு புராணத்திலிருந்து யாராவது ஒரு உதாரணம் காட்டினால் நம்புவேன். மீதி கதைசொல்லும் யுத்திகள் அந்த அந்த படைப்பாளியின் தொழில் திறமை. கம்பன் ஒரு மகத்தான கவிஞன். அவனுடைய ராமகாதை படிக்கப் படிக்க உள்ளே இழுத்து கிறங்க அடிப்பது. அதுவும் மேற்சொன்ன விதிகளைத் தாண்டி புறமாக ஏதாவது சொல்லியிருக்கிறதா என்பதுதான் கேள்வி. வைதீக மார்க்கம் வரலாற்றில் எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. நல்லவை என்று பரப்புரைக்கப் படுபவை இம்மார்க்கத்தைப் பேணும் செயல்பாடுகள். பாவம், கெட்டவை என்று பயமுறுத்தப் படுபவை இதை எதிர்த்த செயல் பாடுகள். அவ்வளவுதான்.
இதில் பிராமணர்கள் மட்டுமே வைதீகத்தைப் போற்றுபவர்கள் அல்ல. அகில இந்தியாவிலும் பார்த்தால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் இவர்கள் மூவரின் கூட்டாட்சி முறையே வைதீகக் கட்டமைப்பு. இவர்களின் தன்னல விழுமியங்களே இந்து மதத்தின், இப்போது இந்த நாட்டின் பொது விழுமியங்களாக புனைவு செய்யப் படுகின்றன. அது வால்மீகியிலிருந்து இன்றைய இயக்குனர் ஷங்கர் வரை அனைத்து படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் ஒரு அசாதாரண அறிவுலகச் சூழல் இருக்கிறது. அண்டை மானிலங்களில் கூட வைதீகத்தை எதிர்த்து தீவிரமாக எழுதிய சமகால படைப்பாளிகள் பெரும்பாலும் பிராமணர்களே. தமிழகத்தில் பிராமணமல்லாதோர் வைதீக எதிர்ப்பை பிராமண எதிர்ப்பாக மாற்றி இயக்கமாக்கியதில் தமிழக பிராமணர்கள் நாங்கள் யூதர்களாக்கும் என்று குண்டுபோட வசதியாகப் போய்விட்டது. கருத்து முறையில் வைதீகத்தை எதிர்த்தாலும் இது பிராமண எதிர்ப்பு ஆகவே இந்துமத எதிர்ப்பு என்றெல்லாம் மேலோட்டமாக வாதிடுவதற்கும் வசதியாக இச்சூழல் இருப்பதால் அதே குழப்பத்தை வலைப்பதிவுகளிலும் பார்க்கிறேன்.

5 comments:

Badri Seshadri said...

வெங்கட், சுந்தரவடிவேல் கருத்துகளில் யாருடைய கருத்துகளை ஆதரிக்கிறீர்கள், எதிர்க்கிறீர்கள் அல்லது உங்களது கருத்து என்ன என்று எதையுமே சொல்லவில்லையே?

கம்பன் என்ன பாடியிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ராமகாதை என்று ஒன்று வழக்கில் இருந்தது. அது கம்பனுக்கு நன்கு தெரிந்திருந்தது. வால்மீகியை நிச்சயமாகக் கம்பன் படித்ததற்கு அவன் பாடல்களிலேயே சான்றுகள் தருகிறான்.

அதைத் தமிழ்ச்சூழலில் பாடும்போது சில மாற்றங்களை - தமிழ்ச்சூழலுக்கு ஏற்றாற்போல - மாற்றுகிறான்.

சுந்தரவடிவேல் வேண்டுமானால் தனக்குப் பிடித்தாற்போல ராமகாதையை பாடிவிட்டுப் போகலாமே? (அதைத்தான் அங்கும் இங்கும் செய்து வருகிறார்.) ஏன் கம்பன் அதைப் பாடவில்லை என்று கேட்பது என்ன நியாயம்?

Thangamani said...

//"தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும் ..."//

அருமையான பாடலோடு தொடங்கியிருக்கிறீர்கள். axis of evil - அப்பொழுது மட்டும் இல்லாமல் போயிருக்குமா? இன்று நாகரீகம் மேற்கில் இருந்து கிழக்குக்கு தேய்ந்துகொண்டே செல்லக்கூடுமெனில், அன்று வடக்கில் இருந்து தெற்குக்கு நாகரீகமும் நசிந்துகொண்டே வந்து குரங்காகி, கொம்புள்ள அசுரனாகியிருக்காதா?

இன்றே சென்னையில் இருக்கிற அரசு ஒரு மாதிரியும், மக்களிடம் விசாரித்து வந்த மனித உரிமைக் குழு ஒருமாதிரியும் வீரப்பன் கதையைச் சொல்லக்கூடும். ஆனால் பாதிக்கப்படுபவர்களே குரலெழுப்ப சாத்தியம் அதிகமில்லையா?

arulselvan said...

--------------------------------------------------------------------------------------
பத்ரி,
--------------------
>>>
வெங்கட், சுந்தரவடிவேல் கருத்துகளில் யாருடைய கருத்துகளை ஆதரிக்கிறீர்கள், எதிர்க்கிறீர்கள் அல்லது உங்களது கருத்து என்ன என்று எதையுமே சொல்லவில்லையே?
------------------------
வெங்கட்டும் சுந்தரவடிவேலும் வேறு வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள் என்று எனக்குப் படுகிறது. சுந்தர வடிவேல் ஒரு பழைய இலக்கியத்தை எடுத்துக்கொண்டு அது பேசும் பொருள், தொனி இவற்றைப் பார்த்து அது உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களைப் பற்றியும் அவ்விழுமியங்களின் பக்கச் சார்பை கணிக்கவும் முயல்கிறார். இவைகளைச் செய்ய இன்னும் கூர்மையான ஆழ்ந்த இலக்கிய, மொழிப் பயிற்சி இருந்தால், நேரமும் இருந்தால் நாம் அனைவருமே இதுபோலச் செய்யலாம். அதற்காக நமக்குத் தோன்றுவதை ஒரு கருத்தாக, ஊகமாக இப்போதே எழுதுவது தப்பில்லை. இன்னும் விஷயம் தெரிந்தவர்கள் இந்தப் பார்வையை மறுத்தோ ஒட்டியோ விவாதம் செய்து தெளிவாக்கலாம். அதற்கெல்லாம் வலைப்பதிவு போன்றவை சரியான தளமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் பல பார்வைகளின் பதிவுகள் என்பதால் இவற்றுக்கு தேவை இருப்பதாக நினைக்கிறேன்.
வெங்கட்டின் நிலைப் பாடு எனக்குப் புரிந்த அளவில்: நமது தற்கால விழுமியங்கள் வேறு. இதைக்கொண்டு அன்று எழுதுவற்றை, எழுதியவர்களை நிறை எடுக்கக் கூடாது என்கிறார். அது சரிதான். இது போன்ற விஷயங்களில் முன்னோர்களை நான் வைது கொண்டு இருப்பதில்லை. அவன் காலத்தை நோக்கும்போது கம்பனே பெரும் புரட்சியாளன்தானனென்பது தமிழறிஞர் கருத்து. இதுவே புரட்சியா!. சரியாப்போச்சு, நாம் எந்தக்காலத்தில் முன்னேறுவது என்பது தற்கால மக்களின் கருத்து. நாம் எந்தப்பக்கம் சார்பெடுக்கிறோம் என்பது நம் சமய நம்பிக்கைகளையும், சமூக நிலைப்பாடுகளையும் பொருத்தது.
------------------------
>>>
கம்பன் என்ன பாடியிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ராமகாதை என்று ஒன்று வழக்கில் இருந்தது. அது கம்பனுக்கு நன்கு தெரிந்திருந்தது. வால்மீகியை நிச்சயமாகக் கம்பன் படித்ததற்கு அவன் பாடல்களிலேயே சான்றுகள் தருகிறான்.
----------------------------------------------------------------------------------
கம்பனுக்கு நான் வழிசொல்ல முடியுமா. நல்ல கதை.
தமிழில் எனக்கு பிடித்த மூன்று பெரும் கவிஞர்கள் (பிடித்த காவியங்கள் வேறு):
கம்பன், அருணகிரிநாதர், பாரதி. மூன்று பேரும் மூன்று விதமான கவிஞர்கள். ஆனால் அவர்கள் சொல்லும் கருத்துகளில் சில உடன் படலாம். பலவற்றிலும் நான் உடன் படாமலும் இருக்கலாம். அது என் 'ரசனையை' சார்ந்தது. சமூக நிலைப்பாட்டைச் சார்ந்தது அல்ல. கொஞ்சம் மேல்தட்டு வாதம் தான். என்ன செய்வது. Between pleasures and postures falls the shadow.
---------------------------------------------------------------------
>>>
அதைத் தமிழ்ச்சூழலில் பாடும்போது சில மாற்றங்களை - தமிழ்ச்சூழலுக்கு ஏற்றாற்போல - மாற்றுகிறான்.
சுந்தரவடிவேல் வேண்டுமானால் தனக்குப் பிடித்தாற்போல ராமகாதையை பாடிவிட்டுப் போகலாமே? (அதைத்தான் அங்கும் இங்கும் செய்து வருகிறார்.) ஏன் கம்பன் அதைப் பாடவில்லை என்று கேட்பது என்ன நியாயம்?
------------------------------------------------
கம்பன் ஏன் நமக்குப் பிடித்த மாதிரி பாடவில்லை என்று கேட்பது நியாயமில்லைதான். ஆனால் கம்பன் பாடியது நியாயமில்லை என்று சொல்லலாம் தானே?
சுந்தரவடிவேல் எழுதும் ராமகாதையை நானும் எதிர்பார்க்கிறேன்.

(சுந்தரவடிவேலும், வெங்கட்டும் மன்னிக்கவேண்டும். உங்கள் பதிவுகளில் இதை எழுதியிருக்க வேண்டும். ஆனாலும் பத்ரி இங்கே கேட்டதால் இங்கேயே எழுதிவிட்டேன்.)
-----------------------------------------------------------

சுந்தரவடிவேல் said...

//ஆனால் கம்பன் பாடியது நியாயமில்லை என்று சொல்லலாம் தானே?//
இதுதான் என் கேள்வியும்.

//சுந்தரவடிவேல் எழுதும் ராமகாதையை நானும் எதிர்பார்க்கிறேன்.//
இன்னொரு காதையை எழுதுவதை விட இருக்கும் காதைகளை உடைத்துப் பார்ப்பதைச் செய்யலாமென இருக்கிறேன்.

நன்றி அருள்.

Thangamani said...

மீள் வாசிப்பும், மீள வாசிப்பும்

http://ntmani.blogspot.com/2005/05/blog-post_07.html