Sunday, May 08, 2005

மரை பொருள்

மரை என்றால் 'ஒரு வகை மான்' என்றே அகராதிகள் கூறுகின்றன. அப்பொழுது மானில் பல வகை உண்டென்பது தெரிகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் நவ்வி, மரை, கடமா, உழா, இரலை என்று ஐந்து வகை மான்கள் அறியப்படுகின்றன. தற்போதைய தமிழக எல்லைக்காடுகளில் எனக்குத் தெரிந்து புள்ளிமான், மிளா, கலை மான் என்று மூன்று வகை மான்கள் உள்ளன. கலைமானை இயற்கை சூழலில் கண்டதில்லை. மற்ற இரண்டையும் காட்டில் பார்த்திருக்கிறேன். ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் வரை இவை தமிழகமெங்கும் பரந்து காணப்பட்டிருக்கும். புள்ளிமான் எல்லோருக்கும் தெரியும். மிளா என்பது சற்றே பெரியது. சம்பர் என ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. கலைமான் நீண்ட கொம்புகளை உடையது. அருகி வரும் இனம்.
இவற்றில் மரை என்பது எது? சாதாரணமாக புள்ளிமானே உணவுக்காக சமவெளி மனிதர்களால் வேட்டையாடப்பட்டது. கோவைக்கருகிலுள்ள சிறு குன்றுகளை அடுத்த பகுதிகளில் இம்மான்கள் முப்பது வருடங்களுக்கு முன் வரை காணப்பட்டன. இப்போது பந்திப்பூர், முதுமலை சென்றால் புள்ளி மானையும் மிளாவையும் காணலாம்.
மரை என்பது புள்ளிமானா அல்லது மிளாவா இல்லை இரண்டுமேவா என்று ஐயமாக இருக்கிறது.
பழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர்? ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது. மனிதன் உண்ணும் எந்த விலங்கும், பறவையும் (ஆடு, மாடு, குதிரை, கோழி, வான்கோழி) பல்கிப் பெருமே தவிர அழிந்துவிடாது. அதற்கான தேவைகளை அவன் பார்த்துக்கொள்ளுவான். உதாரணமாக, இப்போது ஜப்பான் காடைக் கறி எல்லா செட்டிநாட்டு உணவகங்களிலும் கிடைக்கிறது. ஆனால் நம்ம ஊர்க் காடை அழிந்த்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் உடனடியாக திட்டங்கள் தீட்டினால், பல மிருகங்களைக் காப்பாற்றலாம். என்னே ஒரு உயர்ந்த மானுடப் பண்பு என்று என்னைத் திட்டத் துவங்கும் முன் தென்னாப்பிரிக்காவின் இத்தகைய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். எண்பதுகளிலேயே ஆரம்பித்தார்கள்.

11 comments:

சுந்தரவடிவேல் said...

சென்னையில் அண்ணா பல்கலை/ஏ.சி.டெக் பகுதிகளில் 1990களின் தொடக்கத்தில் சர்வசாதாரணமாகப் புள்ளி மான்கள் திரியும். சில நேரங்களில் ஒன்றிரண்டு 'மர்மமான' முறையில் இறந்து கிடப்பதும் உண்டு. இன்னும் திரிகின்றனவா என்று தெரியவில்லை. அந்த ஆப்பிரிக்கக் கதைக்கு ஏதேனும் சுட்டி கொடுங்களேன்.

arulselvan said...

சுந்தரவடிவேல்,

85-86 வாக்கில் முதலில் மனிதன் உண்ணுவதன் மூலம் இந்த வனவிலங்குகளின் அழிவும் காத்தலும்
பற்றி ஒரு நியூ சயன்டிஸ்ட் கட்டுரையில் படித்தேன். பின்னர் மறந்து போய்விட்டது. அனேகமாக அனைத்து வன உயிரி காப்பாற்றும் திட்டங்களும் மிருகங்களையும் பறவைகளையும் பூக்களையும் காப்பாற்றுவதைப்பற்றி பேசுகின்ரனவே தவிர அவ்வனப்பகுதியில் காலங்காலமாக வாழும் மாந்தரைப்பற்றி நினைப்பதில்லை. இதைக்கருத்தில் கொண்டு பல கருத்தரங்குகளும் அப்போது நடைபெற்றன. இப்போது கிடைத்த சுட்டிகள்:

http://www.slowfood.com/img_sito/riviste/slow/EN/24/africa.html

http://www.iucn.org/info_and_news/press/wildmeat.html

http://www.odifpeg.org.uk/activities/forests_and_the_poor/s0108/

http://www.mindfully.org/Food/2005/Bushmeat-Hunger-Commerce26feb05.htm

SnackDragon said...

மரை வேட்டைக்கு நன்றி ஐயா. மிளான்னா என்ன...........(ஆ அடிக்காதீங்க வலிக்குது )

Thangamani said...

மரை பொருள் தந்த மகானே போற்றி அப்படீன்னு யாரவது போஸ்டர் அடிச்சிற போறாங்க!

கிண்டி வளாகத்தில் நிறைய மான்கள் நான் அங்கு இருக்கும் போதும் இருந்தன. ஒருநாள் நான் கேன்டீனில் டீ குடிக்கும் போது பக்கத்தில் வந்த மானுக்கு கொஞ்சம் ஊற்றினேன். அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது..

SnackDragon said...

//ஒருநாள் நான் கேன்டீனில் டீ குடிக்கும் போது பக்கத்தில் வந்த மானுக்கு கொஞ்சம் ஊற்றினேன். அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது..//
ஆஹாங்.. அது மான் என்று சொன்னால் நாங்கள் நம்பிடுவோமா என்ன? :P பொன் மானே மானே உன்னைத்தானே..

-/பெயரிலி. said...

அட இந்தப்பதிவையா சுந்தரமூர்த்தி சொன்னார்!
என் ஊர் திருகோணமலையிலே நகரைச் சுற்றிய பிரதேசங்களிலே, புள்ளிமான்கள் கூட்டமாகத் திரியும். அனால், அதெல்லாம் 1970 களிலே; பின்னால், இராணுவத்தினர் தின்னத்தொடங்கி, இப்போது, இருக்கின்றனவா இல்லையா என்று தெரியாது.

/அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது.. /
;-)

Thangamani said...

கார்த்திக், அது மானே தான். பெண் மானோ, மாய மானோ அல்ல. அது புள்ளி மான்; கள்ளி மான் அல்ல :)

Haranprasanna said...

இந்த மாத உயிர்மையில் அழிந்து வரும் வேங்கைகளைப் பற்றிய கட்டுரை (பிழைக்குமா கானுறை வேங்கை - தியடோர் பாஸ்கரன்) ஒன்று வெளியாகியுள்ளது.

//அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது.//

இப்படி ஒரு கருத்தை நான் வாசித்ததில்லை. பகடியோ? காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ? இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே! தியடோர் பாஸ்கரனும் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கவில்லை!

மிளா என்றதும் காடு நாவலும் அதன் நினைவுகளும் சூழ்ந்து என்னை அழுத்துகிறது. நல்ல நாவலின் தடம் இப்படியாகவும் இருக்கலாம்.

மு. சுந்தரமூர்த்தி said...

//அட இந்தப்பதிவையா சுந்தரமூர்த்தி சொன்னார்!//

அருள்,
பெயரிலியின் ஆழமான பிரதேசத்தில் துள்ளித் திரிந்துக் கொண்டிருந்த மரை(கழன்றவை)களை இந்த பக்கம் ஓட்டியிருக்கிறேன். கவனித்து கொஞ்சம் தீனிபோடவும். இந்த மரை விவகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையிலே இங்கு உள்ளூர் செய்தித்தாளில் மான்கள் தொகை பெருகிவிட்டதென ஒரு கட்டுரை வந்திருந்தது. கண்மூடித்தனமாக காடுகளை அழித்து புறநகர்ப் பகுதி விரிவுபடுத்துவது மான்கள் போன்ற விலங்கினங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்று அஞ்சியதற்கு மாறாக 5-10 மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வீட்டுத்தோட்டப் பராமரிப்பில் தாராளமாகக் கிடைக்கும் இலைதழை உணவு, மக்கள் வசிப்பிடங்களில் வேட்டையாடப்படுவது குறைந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு போன்று சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

Science இதழில் வந்த இன்னொரு செய்தியின்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அழிந்துவிட்டதென்று கருதப்பட்ட தந்த அலகு மரங்கொத்தி என்ற பறவை 2004, 2005 இல் தென்பட்டதாகத் தெரிகிறது.

சு.வ. த.ம.
இந்த கிண்டி மான்கள் நான் படித்த காலத்தில் அண்ணா பல்கலை வளாகத்துக்கும், ஆளுநர் மாளிகைக் காட்டுக்குமாக சாலையை கடந்து செல்லும். நாங்களும் இரவு 10 மணிக்கு மேல் நடுச்சாலையில் நடந்து ஐஐடி நுழைவாயில் பக்கமிருந்த சந்திரன் கடைக்கு டீ குடிக்க செல்வதுண்டு. இப்போது சாலையை மனிதர்களும், மான்களும் கடக்க முடியாத அளவுக்கு 24மணி நேரமும் போக்குவரத்து நெரிசல். மர்மமான முறையில் இறந்த மான்கள் அனேகமாக வாகனம் இடித்து இறந்திருக்கும். அப்படி இறந்த மான்களை சோடியம் வாயு விளக்குக்கடியில் நாலைந்து பேர்கள் நள்ளிரவுகளில் தோலுரித்துக் கொண்டிருந்ததை சிலமுறை வேடிக்கைப் பார்த்திருக்கிறோம்.

arulselvan said...

-------------------------------------------------------------------------------------------------

>>>>
//அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது.//

இப்படி ஒரு கருத்தை நான் வாசித்ததில்லை. பகடியோ? காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ? இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே! தியடோர் பாஸ்கரனும் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கவில்லை!
-------------------------------------------------------------

பிரசன்னா,
பகடியெல்லாம் இல்லை. எனக்கும் முதலில் இப்படி யோசித்தபோது திகைப்பாகத்தான் இருந்தது. கால்,புண் என்றெல்லாம் கவிஞர்கள் மாதிரி சிந்திக்காமல் நடைமுறையைப் பாருங்கள். காடுகளில் வாழ்ந்த, வாழும் மானுட இனக்குழுக்கள் அனைத்து வகை உயிரினங்களையும் உண்டே வாழ்கின்றனர். அவர்கள் தமக்கு உணவாகும் உயிரினங்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர். வேட்டையாடி உண்ணும் எந்த மனிதனும் தன் சக உயிரிகளை அவமதித்ததில்லை. உலகின் எந்தப் பழங்குடி இனத்தைப் பற்றிய அடிப்படை சமூக இயல் புத்தகத்தை வேண்டுமானாலும்
எடுத்துப் படியுங்கள். நேரமிருந்தால் டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபிக் சேனல்களில் வரும் பழங்குடியினரின் வாழ்முறை விவரணங்களைப் பாருங்கள். மனிதனின் இயற்கை வாழ் முறையப் பற்றி அறிந்த யாருக்கும் இக்கருத்துகள் திகைப்பளிக்காது. வேறு ஏதாவது மதம் சம்பத்தப்பட்ட விழுமியக்கண் கொண்டு பார்க்காத வரை.

------------------------------------------------------
சுந்து, தங்கமணி
இன்னும் மான்கள் IIT, கிண்டி வளாகங்களில் உள்ளன. மான்கள் மட்டுமல்ல, புலிகள்(Panther), காட்டுப்பூனை, பலவிதமான பறவைகள், தவளைகள் போன்ற பல்வேறு உயிரிகளும் தம் வாழ்வகையை நகரச் சூழலுக்கு மற்றிக்கொள்ளக்கூடியவைதான். இது தற்போது ஒரு நல்ல ஆராய்ச்சித்துறையாகவும் மாறி வருகிறது.

அருள்
------------------------------------------------------

வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி.
கலைமான் என்று தனியாக ஓர் மானினம் நான் கேள்விப்படவில்லை. அண் மானையே கலைமான் என எங்கள் இடத்தில் சொல்வர். அதற்கு மட்டுமே கிளைவிட்டு வளர்ந்த கொம்புகளிருக்கும். மற்றும் எங்களிடத்தில் மரைகள் நிறைய உள்ளன. மானை விடப்பெரியது, மாட்டை விடச் சிறியது. மான் சத்தமிடுவதைக் 'கூவுதல்' என்றுதான் சொல்வோம். ஆம் மான் கூவும். ஆனால் மரை கத்தும். புள்ளிகளெதுவும் இருக்காது, மண்ணிற மேனி கொண்டது. கிட்டத்தட்ட மானைப்போல் இரண்டு மடங்கு நிறை கொள்ளும்.

மானின் மிகச்சிறிய ஒரு வகையை "உக்கிளான்" எனச்சொல்வோம். யாராவது கேள்விப்பட்டுள்ளீர்களா? முயலைவிடச் சற்றே பெரியது. முதலிற் பார்ப்பவர் அதை முயல் என்றே நினைப்பார்.