Wednesday, May 11, 2005

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ...

'குமுதம்' கூற்றுப் பொருந்துமா? அது திருந்துமா?
----------------------------------------------------------------------

அமுதம் அனைய தமிழ்மொழி ஆட்சிமொழியாதல் வேண்டுமென்பது உண்மைத் தமிழர் உள்ளக்கிடக்கை. தமிழ் ஆட்சி மொழியானால்தான் தமிழர் வாழ்வு பெறுவர்-தமிழ் நாடு அதன் உண்மைச் சிறப்பைப் பெறும். இது தமிழரின் ஒன்றுபட்ட உணர்ச்சி. இவ்வுணர்ச்சியின் விளைவாகவே தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும் என்னும் எண்ணம் எழுச்சியாக ஆங்காங்கே தலைதூக்கக் காண்கிறோம்.

எனவே ஆட்சி மொழி பற்றிய முயற்சியில் இனி தமிழர் எத்துணை விரைவாக முன்னேற வேண்டுமோ அத்துணை விரைவாக முன்னேற வேண்டும். ஒரு சிலர் உண்டெனினும் அவர்களும் வெளிப்படையாக எதிர்க்கத் துணிந்திலர். இதழ்கள் யாவும் தமிழ் ஆட்சி மொழியாவதை வரவேற்கின்றன.

எனினும் ஒரு சிலர் இயல்பாக தமக்குள்ள பிற்போக்குத் தன்மையை விட்ட பாடில்லை. தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதுபோற் காட்டி 'அவசரப் படக்கூடாது' என்று அறிவுரை கூற முன்வருகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது 'குமுதம்' என்னும் கிழமை இதழ். 1-6-54-ல் வெளிவந்த அவ்விதழ் கூறுவதைச் சற்றே கூர்ந்து நோக்குமின்.

"பஞ்சாயத்து நிர்வாகிகள் வரிப்பாக்கி அறிவிப்புமுதல், சட்டசபை உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினைவரை சகல நடவடிக்கைகளும் இன்று முதலே இந்த வினாடி முதலே தமிழில் நடத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது அவசரப் புத்திக்கு அடையாளமாக இருக்கிறதே தவிர அறிவு முதிர்ச்சியின் சின்னமாக இருக்காது" என்று எழுதுகின்றது.

'குமுத'த்தின் இக்கூற்று மிகமிக இரங்கத்தக்கது. இந்நாட்டில் ஆங்கில ஆட்சி நிலவிய காலையில் இக்கூற்றினை குமுதம் வெளியிட்டிருக்குமாயின் அதில் சற்றேனும் பொருள் இருக்கமுடியும். நாடு விடுதலை பெற்று ஆண்டு ஏழாகின்றன. இந்நாள் காறும் தமிழுக்கு ஏற்றமில்லையானால்- தமிழ் ஆட்சி பீடம் ஏறவில்லையானால் விடுதலை என்ற சொல்லுக்கே பொருளில்லை. நாட்டுப்பற்றுக்கு அடிப்படை மொழிப்பற்று. நாட்டு விடுதலைக்கு அடிப்படை மொழி விடுதலை. ஏழாண்டுக் காலத்தில் இதனை நாம் காணமுடியவில்லையானால் தமிழரின் குரல் ஆட்சியாளர் செவிப் புகவில்லை, அல்லது தமிழை ஆட்சிமொழியாக்கத் தமிழர் தகுதியற்றவர் என்பதாக முடியும். எனவே, தமிழை ஆட்சி மொழியாக்க மடிதற்று நிற்கின்றதென்பதை இருண்டபோது மலரும் குமுதம் உணர்க. இனிக் குமுதம் போன்ற பிற்போக்கு இதழ்கள் நாட்டில் நெடுநாள் உலவ முடியாது. அது உலவ வேண்டுமானால் இத்தகைய போலிக் கொள்கைகளை விட்டு விட்டு உடனடியாகத் திருந்த வேண்டும்.

- செந்தமிழ்ச் செல்வி, வள்ளுவர் ஆண்டு, வைகாசி. (ஜுன், '54)


குமுதம் விகடன் இவற்றிற்கெல்லாம் இன்று தமிழே தேவையில்லை. தமிழும் இன்னும் இருக்கிறதே என்பதுதான் எனக்கு வியப்பு.

11 comments:

-/பெயரிலி. said...

/"பஞ்சாயத்து நிர்வாகிகள் வரிப்பாக்கி அறிவிப்புமுதல், சட்டசபை உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சினைவரை சகல நடவடிக்கைகளும் இன்று முதலே இந்த வினாடி முதலே தமிழில் நடத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்வது அவசரப் புத்திக்கு அடையாளமாக இருக்கிறதே தவிர அறிவு முதிர்ச்சியின் சின்னமாக இருக்காது" என்று எழுதுகின்றது./
ஒரு மொழியினை உடனடியாக செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதிலே நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன; ஆனால், அம்மொழியினைச் செயற்படுத்துவதற்கான ஒப்புதலை கருத்தளவிலே ஏற்றுக்கொண்டு , நடைமுறைப்படுத்த வேண்டிய அளவு கால அவகாசம் கொடுத்து, எந்தத்தமிழ்மாநில நிகழ்ச்சிகளும் நடக்கலாம்; நடத்தலாம். இந்த மாறுகாலத்திலே, தற்போதைய ஆட்சிமொழி, வரப்போகும் ஆட்சிமொழி இரண்டினையும் பயன்படுத்தலாம். அதனாலே, குமுதம் சொல்வதினை ஓரளவுக்கு/கே ஒத்துக்கொள்ள முடியும். ஆனால், தமிழிலேயே எல்லாமென்பது பஞ்சாயத்துக்கும் சட்டசபைக்கும் மட்டுந்தானே? குமுதம் தன்னுடைய ஓண் மொளியை மாற்றவேண்டியதில்லை என்ற உறுதிப்பாட்டினைக் கொடுத்தால் எல்லாம் இன்பமயமே ;-)

மு. சுந்தரமூர்த்தி said...

//'குமுதம்' என்னும் கிழமை இதழ். 1-6-54-ல் வெளிவந்த அவ்விதழ் கூறுவதைச் சற்றே கூர்ந்து நோக்குமின்.//
அடடா! இத இவ்ளோ தாமதமா சொல்றீங்களே! போன ஆண்டே சொல்லியிருந்தா குமுதத்தின் பொன்னான வாக்குக்கு ஒரு பொன்விழா கொண்டாடியிருக்கலாமே!

சுந்தரவடிவேல் said...

//இனிக் குமுதம் போன்ற பிற்போக்கு இதழ்கள் நாட்டில் நெடுநாள் உலவ முடியாது.//
எல்லாம் சரியாச் சொன்ன செந்தமிழ்ச்செல்வி இதுல கோட்டை விட்டுட்டாரே!

SnackDragon said...

//ஒரு மொழியினை உடனடியாக செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதிலே நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன; //
பெயரிலி சொல்வது சரி என்று படுகிறது. ஆனால் தமிழ் ஆட்சி மொழியாவதன் அவசியம் உள்ளதா என்று கேட்டால், அது நீண்ட கால நன்மைக்கு மிக அவசியம் என்று தான் சொல்வேன். ஆட்சி மொழியாகிவிட்டு கல்வியில் முன்னேறவில்லை என்றால், ஆட்சி மொழி எக்கேடு கெட்டால்தான் என்ன? இந்த 'நீண்ட கால நன்மை' இப்போது வெளிப்படையாக தெரியாமல் இருப்பதால்தான், இவர்களுக்கு(எதிர்ப்பவர்களுக்கு) இத்திட்டத்தை எதிர்க்க உதவுகிறது.

arulselvan said...

//ஒரு மொழியினை உடனடியாக செயற்பாட்டுக்குக் கொண்டு வருவதிலே நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன; //

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஐம்பதாண்டுகள் போச்சு!
நடைமுறைச்சிக்கல் இல்லாத ஏதாவது ஒரு அரசுஆணை இருக்கிறதா?
இதெல்லாம் ஒரு நாள் அரசு தடாரென்று அறிவித்து விடவேண்டும். பத்து வருஷம் போனால் சரியாகி விடும்

மு. சுந்தரமூர்த்தி said...

//இதெல்லாம் ஒரு நாள் அரசு தடாரென்று அறிவித்து விடவேண்டும். பத்து வருஷம் போனால் சரியாகி விடும்//
இதெல்லாம் எம்.ஜி.ஆரால் தான் முடியும். தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சைக்கிளில் டபுல்ஸ் போக அனுமதி என்றெல்லாம் தடாலடியாக அறிவித்ததைப் போல இதையும் செய்துவிட்டுப் போயிருக்கலாம்.
:-(

arulselvan said...

எம்ஜியார் போலவே ஜெயலலிதாவும் செய்யக்கூடியவர்தான். ஆனால் ஏனோ இப்படி பிரயோசனமா எதுவும் செய்வதில்லை.

இராதாகிருஷ்ணன் said...

// குமுதம் விகடன் இவற்றிற்கெல்லாம் இன்று தமிழே தேவையில்லை. தமிழும் இன்னும் இருக்கிறதே என்பதுதான் எனக்கு வியப்பு.// :)

jeevagv said...

'54 இல் குமுதம் எழுதியதை இன்று மேற்கோள்காட்டுவதில் என்ன பயன் என்று தெரியவில்லை.
//தமிழும் இன்னும் இருக்கிறதே என்பதுதான் எனக்கு வியப்பு.//
குமுதம் இன்னமும் இருக்கிறதே என்பது என் வியப்பு.

மாயவரத்தான் said...

ஜீவா.. நுனிப்புல் மேயாதீங்க.. குமுதம் அப்போ சொன்னதை இப்போ மேற்கோள் காட்டலை..! இந்த மேற்கோளும் அப்போ (1954) காட்டினது தான்! குமுதம் இப்போவும் இருக்கிறதிலே உங்களுக்கு அப்படியென்ன வியப்பு?!

arulselvan said...

நான் செந்தமிழ்ச் செல்வி இதழ்களின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். செய்திகள் என்று நாட்டில் நடப்பவைபற்றி ஒன்று ஒன்றரைப் பக்கத்துக்கு குறிப்புகள் வரும். அவற்றில் ஒரு குறிப்பு இது. முக்கிய செய்தியாக இல்லை. ஆனால் எனக்கு இதை எல்லோருக்கும் சொல்லணும் போல இருந்தது. அப்பவே இரண்டு கட்சி. சிலர் இன்னும் ஒன்றும் செய்யமுடியலை என்று. சிலர் இன்னும் சில காலம் செல்லணும் என்று. முடிவெடுக்காமல் காலம் நழுவி ஐம்பது வருடமாகி ஒன்றிரண்டு தலைமுறை கடந்து இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. கிராமத்து மக்களே நிறைய பயன்படுத்தும் ஒரு மணியாடர் பாரம் அவர்களுடைய மொழியிலேயே வேண்டும் என்பதற்கு ஒரு பெரும் போராட்டம், தியாகிகள் பட்டம். கிராமத்தில் வளர்ந்ததால் சொல்லுகிறேன். அப்பெல்லாம் எல்லா குடும்பங்களிலும் படித்தவர்கள் கிடையாது. இப்பல்லாம் பரவாயில்லை. எனக்கு கோபமாக வரும். மனிதனை எவ்வளவு அன்னியப்படுத்தி வெல்லுகிறது இந்த அதிகார கட்டமைப்பு. ஜனநாயகம் என்பது ஒரு பெயர்தான். சுதந்திரம் அடைந்தவுடன் இயல்பாக நடக்க வேண்டிய தம் மொழி கொண்ட ஆட்சி நடக்காதது இந்தியா மக்கள் அனைவர் மீதும் நடத்தப் பட்ட ஒரு பெரும் பிறழ்வு அரசியல். பல நல்ல அரசியல், பொருளாதார மாற்றங்களை அரசை தம்மொழியில் நடத்துவதன் மூலம் மக்கள் விரைவாக்கியிருக்கலாம். அதற்கு முக்கிய தடையாக இருந்தது அதிகார வர்க்கம் தான் - இப்போதும். பார்க்கலாம் புது information act என்ன செய்யும் என்று.