Monday, May 30, 2005

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...

---------------------------------------------------

"கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன்கண்ணே உண்மைசொல்லும் சாட்சியா..."
- பட்டினத்தில் பூதம் படப் பாடல்

நமது புலன்கள் மிகவும் நுட்பமானவை. உலகை உணர, அறிய நமக்கு இருக்கும் வழிமுறை நமது ஐம்புலன்கள்தான். அதனால் புலன்களால் அறியக்கூடிய உணர்சிகளைக்கொண்டே அவற்றால் தூண்டப்பட்டே குழந்தைகளாக இருக்கும் நாம் மெதுவாக உலகைப்பற்றிய பிம்பங்களை உருவாக்குகிறோம். பின் 'உண்மைகள்' அறிமுகமாகின்றன. தாய் எனும் உண்மை, பசி,வலி, சிரிப்பு எனும் உண்மைகள் சேர்ந்து உலகம் உருவாகிறது. சுற்றியுள்ளோரால் சொற்கள் மொழியப்படுகிறன. சொற்களால் ஆன மொழி அமைந்து உலகம் மொழிவழி அறியப் படுகிறது. மூன்று வயதுக் குழந்தையை நம்மால் கணமேனும் பேச்சடக்க முடிவதில்லை. பொறிவழி உணர்தல்-பேச்சு- மொழியின் சிக்கலாக உலகமும் இருப்பும் நிறுவப்படுகின்றன. இதுவே புலனறி வாதம் என அழைக்கப் படுகிறது.

மேலே சொன்னபடி மட்டுமே நமது 'அறிவு' அனைத்தும் பெறப்படுமானால், அப்படி மட்டுமே நமது எல்லா 'அறிவும்' பெறப்படுவதாக நாம் நம்பினால், நம்மை நாம் ஒரு 'புலனறிவு வாதி' என அழைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் 'empiricism' என அறியப்படும் தத்துவச் சொல் தமிழில் புலனறிவாதம் என பயிலப்படுகிறது. அறிவு என்பதை ஆங்கில knowledge என்னும் சொல்லுக்கு இணையாக இங்கே பயன்படுத்தி இருக்கிறேன். வடமொழியில் ப்ரமாண என வழங்கப்படும், அறிவை அடையும் முறைகளில், புலன்கள் மட்டும் தரும் அறிவு ப்ரத்யக்ஷ என அழைக்கப் படுகிறது. (இந்திய ஏரண, தத்துவ இயல் செறிவானது. எனக்கு வடமொழி தெரியாது. ஆங்கிலத்தில் படித்ததை இயன்றவரை தருகிறேன்).

தொல்காப்பியர்:

"
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
"
என்று ஐந்து புலனறிவுகளையும் ஆறாவதாக மனதையும் கூறுகிறார்.
எளிதாக புரிகிறது என நினைக்கிறேன்.

புலன்கள் வழங்கும் வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து நமது மனது உலகத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது என கருதலாம். அது சரிதான். கையை வெந்நீரில் வைத்தால் விரல்கள் எரிகின்றன. இது உணர்ச்சி. கடும் கோடையில் இப்போது சென்னையில் வெளியே சாலையில் நடந்தால் உடம்பே முழுவதும் எரிகிறது. இதுவும் அதே போன்ற ஒத்த உணர்ச்சிதான். ஆனால் இரண்டும் ஒன்றா? உணர்ச்சியை அரூப சிந்தனையாக்கி 'சூடு' என நினைக்கிறோம். 'அப்பா என்ன சூடு' என்று சொல்லும் போது நீங்கள் உணர்ச்சியில் மட்டும் 'அறிய' வில்லை. அதற்கு அடுத்த படியான 'சூடு' எனும் மொழிவழி கற்பித்த ஒரு சிந்தனை அலகுக்கு சென்றுவிட்டீர்கள். சூடு என்று இதை நாம் 'அறிய'த் துவங்கிவிட்டால், வெந்நீர், நெருப்பு, சூரியன் என்று எரிச்சலைத் தரும் வழங்கியிலிருந்து நம் சிந்தனை அகன்று அடுத்த நிலையில் அந்த உணர்ச்சியை பொதுமைப்படுத்தி (இதற்கு மேலும் பொதுமைப்படுத்தி பெண்ணின் கண்களையும் ஒரு வழங்கியாகக் கொண்டால், கோபப் பார்வைகூட கவிஞர்களால் அபத்தமாக சூடு என்று சொல்லப்படும்). இப்போது நமது மனமும் இந்த 'அறிவை' உண்டாக்கும் செயலில் உணர்ச்சியோடு ஏதோ செயல்படுகிறது என்று தெரிந்து கொள்கிறோம்.

மேலே சொன்ன பாடலில் இப்படித்தான் வெறும் கண்கள் கொடுத்த செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு கோபப்படாதே என்று ஜெய்சங்கர் கேயார் விஜயாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். போகட்டும். அடுத்த பாடல்: " உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ..."
ரெடியாக இருங்கள்.

(அறிவியலைப் பற்றி விவாதிக்க பல தத்துவக் கலைச் சொற்களை பயில வேண்டி இருக்கிறது. வெங்கட்டின் சென்ற பதிவில் இதை உணர்ந்திருப்போம். அத்தகைய சொற்களை முடிந்த அளவு சிறு விளக்கங்களுடன் அறிமுகம் செய்து கொள்ளத்தான் இது)

3 comments:

-/பெயரிலி. said...

கட்டுரையிலே என்ன சொல்லியிருக்கின்றீர்களென்று பிறகு பார்த்துக்கொள்கிறேன். ஆனால், இந்தப்பாட்டு பிடித்த பாட்டு.
/உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது ..."/
அதுக்கெல்லாம் ஏரண அறிவியல் விளக்கம் சொல்லி எனக்கு அந்தப்பாட்டிலேயிருக்கிற மோனமோகத்தைக் கெடுத்துவிடாதீர்கள் ;-)

சுந்தரவடிவேல் said...

புலனறிவாதம் - அறிமுகம் நன்று. மற்றவற்றுக்கு ரெடி!
ஆமாம், அந்தப் பாட்டு 'கண்ணிலே' என்றிருக்க வேண்டுமோ?

arulselvan said...

ரமணி,
யாம் பெற்ற இன்பம் ... :-)
எனக்கும் ரொம்ம்ப பிடித்த பாட்டுகளைத்தான் இப்படி கெடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

சுந்தரவடிவேல்,
"கண்ணில் ..."
நீங்கள் கேட்டீர்களே என்று மீண்டும் பாடலைப் பார்த்தேன்.
'கண்ணி-லே ..' என்று பிரிக்காமல் 'கண்ண்-ணில்... ' என்று பாடிப்பாருங்கள். (ண் - அரை மாத்திரை அல்ல, ஒரு முழு மாத்திரை அளவு). சரியாக வரும்.

அருள்