Monday, August 15, 2005

சில ஆங்கில நூல்கள்

இந்தியப் பதிப்புகளாக முக்கியமான, ஐரோப்பிய சிந்தனைக் களம் சார்ந்த சில நூல்கள் தற்போது வெளிவந்துள்ளன. எல்லாம் பத்து/இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளிவந்தவை.
இந்த வரிசையில் சிலவற்றைப் பரிந்துரைக்கிறேன்:
1. Cinema1, Cinema 2: Gilles Delueze; Rs250;Rs.295 ;
2. Jazz Writings: Philip Larkin; Rs. 195;
3. Violence and the Sacred: Rene Girard; Rs.295;
4. Aesthetic Theory: Theodore Adorno; Rs 395;
5. Criticism and Truth: Roland Barthes; Rs.95;

இன்னும் தெரிதா, ஹைடக்கர், பதேல் எல்லாம் உண்டு. அனைத்தும் இந்தியப் பதிப்பில் இவ்வளவு குறைந்த விலையில் (100-300ரூ) கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. Continuum Impacts, Changing Minds என்ற தொடர்வரிசையில் இப்புத்தகங்கள் வெளியாகின்றன. விடுப்போர்: Viva Books Pvt Ltd
4263 Ansari Road, Daryanganj, New Delhi, 110002;
சென்னையில் லேண்ட்மார்க்கில் எல்லாம் கிடைக்கின்றன.

Sunday, August 14, 2005

ராஜாவும் ஜோக்கர்களும்

(ரோசா வசந்த் ஒரு நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதில் மறுமொழியாகப் போட்டது. எனக்காக சேமித்து வைத்துக் கொள்ள இந்தப் பதிவு. ரோவ பதிவில் படிக்கவும். பலரது முக்கியமான கருத்துக்களும் உள்ளன).


முக்கியமான பல கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நிறைய நானும் ஒத்துக்கொள்ளும் விதயங்கள்தான். முக்கியமாக ஞானி, ராஜாவின் அரசியலைப் பற்றி உளறிக்கொட்டி தன் நல்ல பல அரசியல் செயல்பாடுகளையும் முட்டாள்கள்கூட கேள்விகேட்கும்படி தன்னைத்தானே எக்ஸ்போஸ் செய்து கொண்டது. சாரு தன் அறிவுப்புல இயக்கத்தைத் தக்கவைக்க இண்டர்நேஷனல் புரொடஸ்ட்டுகளை தமிழகத்துக்கு ஒட்டுப்பதியன் போட முயன்று அடித்துக்கொள்ளும் செல்ப் கோல்கள். விமரிசனங்களோடாவது நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் என்று நினைப்பவர்களே இன்றைக்கு தமிழகச் சூழலில் தாமே தம் முதுகில் shoot here என்று புல்ஸ் ஐ வட்டங்களை வரைந்து கொண்டு திரிகிறார்கள். அப்படியே சமுதாயத்தை கைபடாமல் நிலத்தோடு பெயர்த்தெடுத்து பத்தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழப் பேரரசுப் பெருங்கோயில் கலாச்சாரத் தீவிற்கு கொண்டுபோய் சிறைவைக்க திட்டம் போட்டு நடக்கும் அரசியல்-கலாச்சார இயக்கங்களுக்கும் அவற்றின் தொண்டர் படைகளுக்கும் கன குஷிதான். ராஜா சொல்வதில் முக்கியமானது அவர் இருபத்தைந்து வருடமாக சொல்லிவரும் " இருப்பதே ஏழு சுரங்கள். அதை வைத்துத் தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்" என்பதும்," எனக்கு தியாக ராஜர் கிருதியும், நாய் குறைப்பும் ஒன்றுதான். எல்லாவற்றிலும் இசை இருக்கிறது" என்பதும் தான். இதுதான் ராஜாவின் சாரம். நம் எழுத்தாளர்களெல்லாம் எங்களது சிருஷ்டியாக்கும், தானாக எழுத வருது, எல்லாம் சாமி கடாட்சம் என்ற ரீதியில் பினாத்திக் கொண்டிருக்கும் போது இதைவிட ஒரு கலைஞன் எப்படி தன் "சிருஷ்டி" ரகசியத்தைப் போட்டு உடைக்க முடியும். அய்யா இதையே அய்ரோப்பிய வடிவஇயல்வாதிகள் இலக்கியம் ஓவியம் இசை என்பதில் manifesto போட்டு ஒரு நூறுவருஷம் செயல் பட்டு அதுவே semiotics என்றெல்லாம் மாறி கல்விக்கூடங்களின் ஆராய்ச்சி பார்மால்டிஹைட் இறுக்கங்களாக மாற்றி கன காலமாச்சு. அதை இப்படி கண்ணெதிரே ஒரு கலைஞன் தமிழகத்து மக்கள் அத்தனை பேருக்கும் ரசித்து லயிக்குமாறு எல்லா எல்லைகளையும் காட்டியிருக்கிறான். இதைவிட இந்த அறிவு ஜீவிகளின் பன்னாடை எதிர்க்கலாச்சாரம் சாதித்து விடுமாக்கும்? நடப்பு உலகத்தில் சுற்றிவர இருப்பதை வைத்துச் சிந்திக்காமல் சும்மா தெரிதா விட்கன்ஸ்டைன் என்று உதிர்த்துக் கொண்டு ஒரு தலைமுறைக்கு அப்புறம் இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லாம் சரியில்லை. இவர்கள் கால் சென்டருக்குத்தான் லாயக்கு. எல்லாம் திராவிட அரசியல்-கலாச்சார சீரழிவால் வந்தது என்று 60 களின் சிறுபத்திரிக்கைச் சிந்தனைச் சிக்கலை இப்போது இடம்பெயர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டும். கழுதை பொதி சுமப்பது போல அது இயல்பாக நடக்கவேண்டும். தம்மைத் தாமே ரேஸ் குதிரைகளாக நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் பத்தாண்டுகால மாயாவாதப் புலரி விடியும்போது எல்லோரும் நரியாக லாயங்களை விட்டு ஓடவேண்டியதுதான்.

ஏனிந்து, நாநு ஹேளலாரே ...2

Art is a harmony parallel to nature - CezanneMondrian felled by a formalist masquerade

- A play featuring the Motif Anonymous
ஏனிந்து, நாநு ஹேளலாரே ...

Friday, August 12, 2005

pick me up

எல். ஆர். ஈஸ்வரி, டி எம் எஸ் கூட்டணியில் இன்னொரு கலக்கல் பாடல். அருமையான ரிதம் கிடார். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை வேகம் குறையாமல் தெறிக்கும் பாட்டு.
வாரக்கடைசியில் சோர்ந்துபோய் வந்து காலையில் விட்டுப்போன தினத்தாளைப் படிக்கும்போது கேட்க ஏதுவான படலாக இருக்கிறது. Enjoy.
http://www.musicindiaonline.com/p/x/H5fgG-vV2dNvwrOupt7D/

Wednesday, August 10, 2005

1984

இந்திரா காந்தி இறந்தவுடன் நாடு முழுவதும், முக்கியமாக டெல்லியிலும் சீக்கிய இன மக்களுக்கு எதிராக பெரும் கலவரங்கள் நிகழ்ந்தன. டெல்லியிலிருந்து வந்து எங்களுடன் படித்துக்கொண்டிருந்த தமிழ் நண்பன் கலவரம் நடந்த போது அங்கேதான் இருந்தான். அவன் திரும்பி வந்து தன் கண்ணால் கண்ட பல நிகழ்சிகளைச் சொன்னபோது எத்தகைய ஒரு நாடு நம்முடையது என திகைக்காமல் இருக்கமுடியவில்லை. சீக்கிய மத மக்களை கும்பல்கள் நடுத்தெருவில் எரித்துக் கொண்டிருந்தபோது நாட்டின் ராணுவம் கவசவாகனங்களில் வீதிகளில் சும்மாதான் நிறுத்தப் பட்டிருந்தது. செயல் பட ஆணை இல்லை. அரசு இயந்திரம் தனது தலை நகரிலேயே செயல்படாமல் முடக்கிவைக்கப்பட்ட காலம் அது. இப்போது நானாவதி விசாரணைக் கமிஷன் இத்தனை காலம் கடந்தாவது விசாரணை அறிக்கை என்ற பெயரில் ஒரு ஆவணம் கொடுத்திருக்கிறது. அதன் மேல் தக்க நடவடிக்கை எடுக்கும்படி எதிர்கட்சிகள் அரசை இரண்டு நாட்களாக வற்புறுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கிறது. இந்திய ஜனநாயகத்தின் பலம் சாதாரண மக்கள் அதில் கொண்ட நம்பிக்கைதான். நாள்கணக்கில் இனப் படுகொலைகள் நடந்தாலும் அதை அரசு பலவருடங்கள் கழித்தும் அலட்சியப்படுத்தும் என்பது அந்த நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே அசைப்பதாகும்.

Tuesday, August 09, 2005

நூல் அறிமுகம்

பன்னிரண்டு கதைகள். சிறு சிறு கதைகள். நூறே பக்கங்கள். ஒருகதை சராசரியாக ஏழு பக்கம். ஒரு கதையைப் படிக்க ஐந்துமுதல் பத்து நிமிடங்கள் ஆகலாம். அப்புறம் அரைமணி நேரம் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தின் கடந்த நூற்றாண்டின் சரித்திரம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதை நடையின் எல்லையில் இணையத் தாத்தாக்கள் எல்லாம் இல்லை. படித்தால் தெரியும். தமிழ்ச் சிறுகதையில்
மிகச் சிறந்த தொகுப்புகளில் ஒன்று.

ரோபோ என்றொரு கதையிலிருந்து:

"
.......
குருஸ்வாமியின் குறிப்பாணை:

புதிய வரவின் பெயர் முக்தா என்று மாற்றப்படுகிறது - வர்ணம் பொற்கொல்லர்- விஸ்வகர்மா என்றே பதிவு செய்யப் பட வேண்டும். வர்ம முறையில் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்றவன். நாட்டிற்கெதிரான நூல்களை மறக்கச் செய்யும் துறையில் வேலை. பத்திரிக்கை-சிறு பத்திரிக்கைகளை கண்காணிக்க வேண்டும். நமது முன்னோர்கள் இந்த நாட்டின் வேதகால ரிஷிகள் தாம் என்பதையோ, இந்த நாட்டின் மதம் கங்கைக்கரையில் தான் தோன்றியது என்பதையோ மறுத்துப் பேசுவோரை அடையாளம் காணவேண்டும். அவர்களை எதிரிகளாகப் பார்க்கவேண்டும். மிரட்டல் அவசியம். சம்பளம் திறமையைப் பொறுத்தது -அடிக்கடி மாறும். பிறவிஷயங்களை ராமாநந்த ஆசாரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தாய்பாஷையைத் தவிர தேவ பாஷயை கற்றுத்தீர வேண்டும்.
"
........
"துளசி மருத்துவச் சத்து மிகுந்தது என்று விஞ்ஞானம் சொல்கிறது"
"அதனால்தான் நம் முன்னோர் அதை கடவுளுடன் சேர்த்தார்கள்"
"நாளக்கு இன்னொரு விஞ்ஞானி துளசியைத் தொடர்ந்து பயன் படுத்தினால் ஒரு குறிப்பிட்ட நோய் வருமென நிரூபித்தால்..."
"அதனால்தான் ருத்ரன் துளசியை சேர்த்துக் கொள்வதில்லை. விஞ்ஞானம் மாறும்- மதம் மாறாது"
............................

மேலாளர் கோவிந்தா விடுப்பின் காரணத்தை வினவ "முத்தாரம்மன் கோவில் பூசனை" என்று பதில்.
......
இது நமது நெறிமுறைக்கு இழுக்கானதால் "முத்தம்மாளாவது ஜக்கம்மாளாவது. இந்த இடத்தில் சுலோகம் படி-தெரியாவிட்டால் சொல்லித்தருகிறேன் விடுப்பு கிடையாது" என்று கூற முக்தா அவரை நோக்கி ஓரடி வைக்கவும், "முக்தா -நில்" என்று எச்சரித்து இருக்கிறார்.
அதற்கு அவன் " என் பெயர் முத்துக் கறுப்பன். அம்மனைப் பற்றியோ பூசனை பற்றியோ இன்னும் ஒரு வார்த்தை பேசினால் எலும்புகள் இடம் பெயரும்" ...

மறக்கப் பட்ட இந்த அ-தயிர்வடை எழுத்தாளர் மா. அரங்கநாதன்.

நூல்: காடன் மலை
ஆசிரியர்: மா. அரங்கநாதன்
தாமரைச்செல்வி பதிப்பகம்
31/48 ராணி அண்ணா நகர்
சென்னை - 6000078
அக்டோபர், 1995
விலை: 20 ரூ

Saturday, August 06, 2005

தமிழரின் அக்காலம்


இன்று ஹிந்துவில் நான் சிறுவயதில் விளையாடி வளர்ந்த ஒரு ஊரைப்பற்றி வந்திருக்கிறது. பின்னால் விரிவாக எழுதுகிறேன்.

முன்பு ஒரு பதிவில் எழுதிய இந்தக் கதைகூட இவ்வூரின் நினைவுகளில் எழுதியதுதான்.


இங்கே சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. சீக்கிரம் போக வேண்டும்.

Thursday, August 04, 2005

அயற் படுகை - 3

Image hosted by Photobucket.com முத்திசைநோக்கு மாகலன் மீகாமன் மதவயன் என்ற மயன் தன் மகளே இந்த வான்தாக்கு ஓட்டத்திற்கு சரியான ஆள் என்று நினைத்தார். ஆனால் கிவிரா குழந்தைகளுடன் தளம் ஏழுக்கு விரைகிறாள். திட்டம் புரியவில்லை. மிதவைகளை எப்படியும் பெரோ காப்பாற்றியிருப்பான். ஏன் இவர்களுக்குள்
ஒத்துப் போவதில்லை? ஒரே தலைமுறையில் இத்தனை மாற்றங்களா? அவள் அம்மா இருந்தால் இதைப்பார்த்து என்ன நினைப்பாள்.
" கலனில் அமர்ந்து கனவுகாணாதே மயன். நீதான் நடு"
"ம்ம். ஆம். நன்றி. இடதும் வலதும் யார் "
" கவி, பிரன்"
"ஹ. சரியாப்போச்சு"
மிகுமூவர் என்றழைக்கப்படும் கவி-மயன்-பிரன் கூட்டுதானா மறுபடியும்.
"மயன், கவி. இது பிரன். உயரலாமா?"
"இது கவி. உடனே உயருங்கள். திரிபுரச் சமர் நினைவிருக்கட்டும்"
"அதேதான் நானும் நினைத்தேன். பாசாண்டர்கள் வீழ்வதில்லை"
மூன்று கலன்களும் வளையைவிட்டு கண்ணிமைக்கும் வேகத்தில் வானில் உயர்ந்தன.
மனிதர்களின் பறப்பிகள் தரைக்கு மிக அருகில் தாழப் பறந்து கொண்டிருந்தன. உருவுக்குண்டுகளை உயரத்தில் இருந்து சரியாக இயக்க முடியாதுபோல்
இருக்கிறது. மேலே வெகு உயரத்தில் இருந்து உணர்பொறிகளை இயக்கினர் மிகுமூவரும். ஒரு மனிதப் பறப்பி படு வேகமாய் விலகி உவர்குன்றுகளை
நோக்கி விரைந்தது. மற்றொன்று அதற்குள் இரண்டு உருவுகளை தரையில் செலுத்தி விட்டது.

"கவி. குன்றுகளில் மறையும் அப்பறப்பியை கவனி. நாங்கள் இந்த ஒன்றைப் பார்த்துக்கொள்கிறோம்"
கவி பிரிந்து குன்றுகளை நோக்கிச் சரிந்தான்.
மயனும் பிரனும் ஒத்திசைந்து செலுத்திய கற்றைகள் பறப்பியை அலைத்தன. கணத்தில் சிதறியது அது.
உருவுகள் அதற்குள் தரையைத் துளைத்து விட்டன. வளை வாயில் வெடித்து மண்மூடியது.
"கவி. வளை மூடிவிட்டது. பறப்பி என்ன ஆயிற்று?"
"குன்றுப் பாறை அளைகளில் ஒன்றில் ஒடுங்கிவிட்டது மயன். உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் "
"நாங்களும் சேர்கிறோம் கவி. இதோ "
மயனும் பிரனும் கலன்களை உவர்குன்றுகளுக்கு மேல் சரித்தனர்.
Image hosted by Photobucket.com "அளையை உணர்ந்து விட்டேன் மயன். அங்கே விரைகிறேன். இடக்குறி எண்கள் இதோ "
அவ்எண்களின் இடத்தை அடைய ஐந்து கல் தொலைவில் இருக்கும்போது மயனும் பிரனும் கவியின் கலன் நிலைபிறழந்து தரைநோக்கி வீழ்வதைக் கண்டார்கள். அழைப்புகளுக்கு கவியிடம் இருந்து பதில் வரவில்லை. கவியின் கலம் தரையில் முட்டித்தெறித்தபோது சூழ குன்றுகளில் காணும் நூற்றுக்கணகான அளைகளில் ஒன்றில் புறக்கதிர்கள் அணைந்தன. பறப்பியை விட்டு வெளிவந்து அளையின் தரைப் பாறைகளில் தாவி அமர்ந்த அந்த மானிடப்பெண் வெளியே பார்த்தபோது பரனும் மயனும் கலன்களை தன் அளையை நோக்கித் திருப்புவதைக் கண்டாள்.