Tuesday, August 09, 2005

நூல் அறிமுகம்

பன்னிரண்டு கதைகள். சிறு சிறு கதைகள். நூறே பக்கங்கள். ஒருகதை சராசரியாக ஏழு பக்கம். ஒரு கதையைப் படிக்க ஐந்துமுதல் பத்து நிமிடங்கள் ஆகலாம். அப்புறம் அரைமணி நேரம் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தின் கடந்த நூற்றாண்டின் சரித்திரம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதை நடையின் எல்லையில் இணையத் தாத்தாக்கள் எல்லாம் இல்லை. படித்தால் தெரியும். தமிழ்ச் சிறுகதையில்
மிகச் சிறந்த தொகுப்புகளில் ஒன்று.

ரோபோ என்றொரு கதையிலிருந்து:

"
.......
குருஸ்வாமியின் குறிப்பாணை:

புதிய வரவின் பெயர் முக்தா என்று மாற்றப்படுகிறது - வர்ணம் பொற்கொல்லர்- விஸ்வகர்மா என்றே பதிவு செய்யப் பட வேண்டும். வர்ம முறையில் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்றவன். நாட்டிற்கெதிரான நூல்களை மறக்கச் செய்யும் துறையில் வேலை. பத்திரிக்கை-சிறு பத்திரிக்கைகளை கண்காணிக்க வேண்டும். நமது முன்னோர்கள் இந்த நாட்டின் வேதகால ரிஷிகள் தாம் என்பதையோ, இந்த நாட்டின் மதம் கங்கைக்கரையில் தான் தோன்றியது என்பதையோ மறுத்துப் பேசுவோரை அடையாளம் காணவேண்டும். அவர்களை எதிரிகளாகப் பார்க்கவேண்டும். மிரட்டல் அவசியம். சம்பளம் திறமையைப் பொறுத்தது -அடிக்கடி மாறும். பிறவிஷயங்களை ராமாநந்த ஆசாரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தாய்பாஷையைத் தவிர தேவ பாஷயை கற்றுத்தீர வேண்டும்.
"
........
"துளசி மருத்துவச் சத்து மிகுந்தது என்று விஞ்ஞானம் சொல்கிறது"
"அதனால்தான் நம் முன்னோர் அதை கடவுளுடன் சேர்த்தார்கள்"
"நாளக்கு இன்னொரு விஞ்ஞானி துளசியைத் தொடர்ந்து பயன் படுத்தினால் ஒரு குறிப்பிட்ட நோய் வருமென நிரூபித்தால்..."
"அதனால்தான் ருத்ரன் துளசியை சேர்த்துக் கொள்வதில்லை. விஞ்ஞானம் மாறும்- மதம் மாறாது"
............................

மேலாளர் கோவிந்தா விடுப்பின் காரணத்தை வினவ "முத்தாரம்மன் கோவில் பூசனை" என்று பதில்.
......
இது நமது நெறிமுறைக்கு இழுக்கானதால் "முத்தம்மாளாவது ஜக்கம்மாளாவது. இந்த இடத்தில் சுலோகம் படி-தெரியாவிட்டால் சொல்லித்தருகிறேன் விடுப்பு கிடையாது" என்று கூற முக்தா அவரை நோக்கி ஓரடி வைக்கவும், "முக்தா -நில்" என்று எச்சரித்து இருக்கிறார்.
அதற்கு அவன் " என் பெயர் முத்துக் கறுப்பன். அம்மனைப் பற்றியோ பூசனை பற்றியோ இன்னும் ஒரு வார்த்தை பேசினால் எலும்புகள் இடம் பெயரும்" ...

மறக்கப் பட்ட இந்த அ-தயிர்வடை எழுத்தாளர் மா. அரங்கநாதன்.

நூல்: காடன் மலை
ஆசிரியர்: மா. அரங்கநாதன்
தாமரைச்செல்வி பதிப்பகம்
31/48 ராணி அண்ணா நகர்
சென்னை - 6000078
அக்டோபர், 1995
விலை: 20 ரூ

11 comments:

Boston Bala said...

அறிமுகத்திற்கு நன்றி.

எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசத்தில் இருந்து:

"தமிழ் வாழ்வைத் தனது படைப்பு களில் பதிவு செய்ததில் மிக முக்கியமான எழுத்தாளர் மா.அரங்கநாதன். இவரது கதைகள் ஆழ்ந்த தத்துவத் தளம் கொண்டவை. அவரது எழுத்தில் தமிழ் வாழ்வின் நுட்பங்களும் அறமும் மெய்தேடலும் நுண்மை யாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.

குறிப்பாக, இவரது ‘ஞானக்கூத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘ஏடு தொடங்கல்’ என்ற கதை. அன்றைய நாஞ்சில் வட்டார வாழ்வைச் சொல்வதோடு, ஏடு தொடங்குதலைப் பற்றிய நுட்பங்களையும் பதிவு செய்துள்ளது. அக்கதை மின்னல் வெட்டைப் போல நிமிட நேரமே கடந்து போகும் ஒரு அனுபவத்தைப் பதிவு செய்கிறது.

தமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983-ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள இவர், சாகித்ய அகாதமிக்காக சில சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன. தமிழ் வாழ்வின் நுட்பங்களைப் பேசும் தனித்துவமான எழுத்து இவருடையது."

Jayaprakash Sampath said...

இரா.முருகன் வீட்டில் வைத்து இவரைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வருகிறது. ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். நான் அரங்கநாதனைப் படித்ததில்லை. நல்ல அறிமுகத்துக்கு நன்றி.

//மறக்கப் பட்ட இந்த அ-தயிர்வடை எழுத்தாளர் மா. அரங்கநாதன். //

ஒஹ்ஹொன்னனாம்.... புரிஞ்சு போச்.....

arulselvan said...

பாஸ்டன் பாலா, மிச்ச விவரங்களைத் தொகுத்தளித்தற்கு நன்றி. எங்கே எழுதினார் எஸ். ராமகிருஷ்ணன் இதை?
பிரகாஷ்:
>>>ஒஹ்ஹொன்னனாம்.... புரிஞ்சு போச்.....
எல்லோரும் சாரு கூட்டத்துக்குப் போனோமா. இப்பெல்லாம் தயிர்வடைதான் in thing -இலக்கிய விமரிசனத்தில்.

அருள்.

Jayaprakash Sampath said...

//பாஸ்டன் பாலா, மிச்ச விவரங்களைத் தொகுத்தளித்தற்கு நன்றி. எங்கே எழுதினார் எஸ். ராமகிருஷ்ணன் இதை?//

அருள், நீங்கள் ஆனந்த விகடன் படிப்பதில்லை என்று தெரிகிறது. கடந்த பல வாரங்களாக " கதா விலாசம் " என்ற தலைப்பில், குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர் எழுதி வருகிறார். அதிலே, மா.அரங்கநாதன் பற்றி எழுதியதில் இருந்துதான் பாலா எடுத்துப் போட்டிருக்கிறார். பல கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருந்தன. குறிப்பாக, ஆதவன் பற்றியும், சம்பத் பற்றியும் வந்த கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருந்தன. புத்தகமாக வந்தால் தவற விடவேண்டாம்.

era.murukan said...

மா.அரங்கநாதன் பற்றிய பதிவுக்கு நன்றி, அருள். Aranganathan is an author's author.


'காடன்மலை' பற்றி அந்நூல் வந்தபொழுது ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன். பிரதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

ரங்க்நாதன் தெருவில் புகைவண்டி நிலையத்துக்கு அருகில் (கதர்க்கடைக்கு அடுத்த கட்டிடம்) வணிக வளாகத்தின் இரண்டாம் மாடியில் 'முன்றில்' புத்தக விற்பனை நிலையம். விக்கிரமாதித்யன், ஜெயந்தன், கோபிகிருஷ்ணன், சாரு நிவேதிதா, வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன், இளையபாரதி, என்.ஆர்.தாசன், கவிதாசரண், கே.பி.நீலமணி, யூமா வாசுகி, நான் - இந்தப் பட்டியலில் (எல்லா வித காம்பினேஷனிலும்) குறைந்தது இரண்டு பேராவது அரங்கநாதனுடன் இலக்கிய அரட்டைக்கு ஆஜராகாத மாலைநேரம் அநேகமாக இருக்காது. எங்கள் கூட்டத்தைப் பார்த்தே புத்தகக் கடையில் படியேற மற்றவர்கள் யோசித்திருப்பார்கள் என்று இப்போது தோன்றுகிறது :-)

கோணங்கி அவ்வப்போது சிறப்பு விருந்தினராகக் கோவில்பட்டியிலிருந்து வருவார். பிரமிளை 'முன்றில்' கடையில் வைத்துத்தான். சந்தித்தேன். அவர் அரங்கநாதனைத் திட்டிக் கவிதை எழுதியது அப்புறம் நிகழ்ந்தது. ஏதோ சிற்றிதழில் வெளியான அந்தக் கவிதையையும் அரங்கநாதன் தான் படிக்கக் கொடுத்தார். முன்றிலில் கிடைக்காத சிற்றிதழே இருக்காது. முன்றில் என்ற பெயரில் இலக்கியப் பத்திரிகையும் நடத்தினார். மேலே சொன்ன கூட்டத்தில் எல்லோரும் அதில் எழுதியிருக்கிறோம்.

அரங்கநாதனின் எழுத்து போல் அவர் பேச்சும் தனித்தன்மையோடு இருக்கும். கிட்டத்தட்ட நாற்பது வருடமாகச் சென்னையில் இருந்தும் அவர் பேச்சில் நெல்லைத் தமிழ் கமகமக்கும்.

அருள், மா.அரங்கநாதனின் மற்ற நூல்கள் பற்றியும் எழுத வேண்டும். முக்கியமாக 'உவரி' போன்ற கதைகள். அவருடைய எல்லாக் கதையிலும் முத்துக்கறுப்பன் தான் கதைசொல்லி. இந்தப் பாத்திரத்தை இன்-யான் அடிப்படையில் விளக்க முயன்றிருக்கிறார் ஐராவதம். (முத்து - வெண்மை, ஒளி; கூடவே கறுப்பு).

அம்பலம் மின்னிதழுக்கு திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தபோது அவர் கேட்டுக் கொண்டபடி மா.அரங்கநாதனிடம் ஒரு கதை வாங்கிக் கொடுத்தேன். அம்பலம் களஞ்சியத்தில் தேடினால் அந்தக் கதை கிடைக்கலாம். மற்றப்படி, அவருடைய படைப்பு இணையத்தில் படிக்கக் கிடைப்பதில்லை.

arulselvan said...

முருகன்:
ஏதோ பழைய புத்தகங்களைக் குடைந்து கொண்டிருந்தபோது கிடைத்தது. ரொம்ப நாளாயிற்று என்று மீண்டும் எல்லாக் கதைகளையும் படித்தேன். பஃறளி..யும், இன்னுமொரு பெயர்மறந்த நூலும் என் பெங்களூர் பெட்டிகளில் இருக்கலாம். தேடவேண்டும்.
உங்கள் கட்டுரையை கிடைக்கும்போது தவறாது காயலில் போடுங்கள்.
ஒரே ஒரு முறை பெங்களூரில் இருந்து சென்னை வந்திருந்தபோது முன்றிலுக்கு சென்றிருக்கிறேன். சென்னைநகரம் அப்போது எனக்கு தெரியாது. கொஞ்சம் பயமாக இருந்தது அந்தக் கட்டடமே. இரண்டொரு ஆட்கள் மட்டுமே கடையில் இருந்தார்கள். முடிந்த அளவு புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பி சென்றுவிட்டேன். அப்போது அதை யார் நடத்துவார்கள் என்றெல்லாம் தெரியாது. எவ்வளவோ அருமையான எழுத்தாளர்கள் அறியப்படாமலே இருக்கிறார்கள். நீங்கள் அந்த நாட்களைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.
அருள்

Venkat said...

அருள் - அருமையான தகவல் நன்றிகள். இந்தப் புத்தகமெல்லாம் நான் ஊர் வந்து வாங்கும்வரை கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

(உங்களுடைய அயற்படுகையைப் படிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக வேலை தலே தின்தே).

முருகன் - உங்களுடைய மேலதிகத் தகவலுக்கும் நன்றி. காயல்-ல எப்பவும் சேச்சி-சேட்டன்களை மாத்திரமே எழுதாமல் கொஞ்சம் நம்ம ஊரு சமாச்சாரத்தையும் எழுதுங்களேன். (வேணும்னா கூவம்னு தலைப்பு போட்டு). இந்த மாதிரி முன்றில் பத்தியெல்லாம் எங்களுக்குச் சொல்ல யாரு இருக்காங்க?

இராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
இராதாகிருஷ்ணன் said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி!

இதுபோன்று நூல்களை அறிமுகம் செய்யும் போது நேரமும், விருப்பமும் இருந்தால் பின்வரும் சுட்டியிலும் தகவல்களைச் சேமித்து வைக்க வேண்டுகிறேன் : http://abbe.optics.utoronto.ca/tamilbooks/doku.php?id=

Anonymous said...

அரங்கநாதனைப்பற்றிய அறிமுகத்துக்கு நன்றி அருள், பா.பாலாஜிக்கும் மேலதிக தகவல்களுக்காக. இரா. முருகன் இது போன்ற தகவல்களை எழுதினால் பயனுடையதாக இருக்கும். இத்தகவல்கள் பெரும்பாலும் தனி நபர்களுடனேயே இருந்து மறைவதால் ஒரு வகையில் அது வரலாற்று இழப்பும் கூட. நன்றி!

era.murukan said...

அருள், வெங்கட், தங்கமணி,

நன்றி. நான் குறிப்பிட்டது எல்லாம் 1991-95ல் நிகழ்ந்தது. 'நினைவு கூர' ஆரம்பித்தால் dated / outdated ஆகிப் போகிறது . As such, no retrospection, as of now. Could you wait for just 20 more years, please :-)