Sunday, August 14, 2005

ராஜாவும் ஜோக்கர்களும்

(ரோசா வசந்த் ஒரு நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதில் மறுமொழியாகப் போட்டது. எனக்காக சேமித்து வைத்துக் கொள்ள இந்தப் பதிவு. ரோவ பதிவில் படிக்கவும். பலரது முக்கியமான கருத்துக்களும் உள்ளன).


முக்கியமான பல கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். நிறைய நானும் ஒத்துக்கொள்ளும் விதயங்கள்தான். முக்கியமாக ஞானி, ராஜாவின் அரசியலைப் பற்றி உளறிக்கொட்டி தன் நல்ல பல அரசியல் செயல்பாடுகளையும் முட்டாள்கள்கூட கேள்விகேட்கும்படி தன்னைத்தானே எக்ஸ்போஸ் செய்து கொண்டது. சாரு தன் அறிவுப்புல இயக்கத்தைத் தக்கவைக்க இண்டர்நேஷனல் புரொடஸ்ட்டுகளை தமிழகத்துக்கு ஒட்டுப்பதியன் போட முயன்று அடித்துக்கொள்ளும் செல்ப் கோல்கள். விமரிசனங்களோடாவது நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் என்று நினைப்பவர்களே இன்றைக்கு தமிழகச் சூழலில் தாமே தம் முதுகில் shoot here என்று புல்ஸ் ஐ வட்டங்களை வரைந்து கொண்டு திரிகிறார்கள். அப்படியே சமுதாயத்தை கைபடாமல் நிலத்தோடு பெயர்த்தெடுத்து பத்தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழப் பேரரசுப் பெருங்கோயில் கலாச்சாரத் தீவிற்கு கொண்டுபோய் சிறைவைக்க திட்டம் போட்டு நடக்கும் அரசியல்-கலாச்சார இயக்கங்களுக்கும் அவற்றின் தொண்டர் படைகளுக்கும் கன குஷிதான். ராஜா சொல்வதில் முக்கியமானது அவர் இருபத்தைந்து வருடமாக சொல்லிவரும் " இருப்பதே ஏழு சுரங்கள். அதை வைத்துத் தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்" என்பதும்," எனக்கு தியாக ராஜர் கிருதியும், நாய் குறைப்பும் ஒன்றுதான். எல்லாவற்றிலும் இசை இருக்கிறது" என்பதும் தான். இதுதான் ராஜாவின் சாரம். நம் எழுத்தாளர்களெல்லாம் எங்களது சிருஷ்டியாக்கும், தானாக எழுத வருது, எல்லாம் சாமி கடாட்சம் என்ற ரீதியில் பினாத்திக் கொண்டிருக்கும் போது இதைவிட ஒரு கலைஞன் எப்படி தன் "சிருஷ்டி" ரகசியத்தைப் போட்டு உடைக்க முடியும். அய்யா இதையே அய்ரோப்பிய வடிவஇயல்வாதிகள் இலக்கியம் ஓவியம் இசை என்பதில் manifesto போட்டு ஒரு நூறுவருஷம் செயல் பட்டு அதுவே semiotics என்றெல்லாம் மாறி கல்விக்கூடங்களின் ஆராய்ச்சி பார்மால்டிஹைட் இறுக்கங்களாக மாற்றி கன காலமாச்சு. அதை இப்படி கண்ணெதிரே ஒரு கலைஞன் தமிழகத்து மக்கள் அத்தனை பேருக்கும் ரசித்து லயிக்குமாறு எல்லா எல்லைகளையும் காட்டியிருக்கிறான். இதைவிட இந்த அறிவு ஜீவிகளின் பன்னாடை எதிர்க்கலாச்சாரம் சாதித்து விடுமாக்கும்? நடப்பு உலகத்தில் சுற்றிவர இருப்பதை வைத்துச் சிந்திக்காமல் சும்மா தெரிதா விட்கன்ஸ்டைன் என்று உதிர்த்துக் கொண்டு ஒரு தலைமுறைக்கு அப்புறம் இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லாம் சரியில்லை. இவர்கள் கால் சென்டருக்குத்தான் லாயக்கு. எல்லாம் திராவிட அரசியல்-கலாச்சார சீரழிவால் வந்தது என்று 60 களின் சிறுபத்திரிக்கைச் சிந்தனைச் சிக்கலை இப்போது இடம்பெயர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிந்தனையாளர்கள் சிந்திக்க வேண்டும். கழுதை பொதி சுமப்பது போல அது இயல்பாக நடக்கவேண்டும். தம்மைத் தாமே ரேஸ் குதிரைகளாக நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் பத்தாண்டுகால மாயாவாதப் புலரி விடியும்போது எல்லோரும் நரியாக லாயங்களை விட்டு ஓடவேண்டியதுதான்.

No comments: