Tuesday, January 31, 2006

2005 ஆண்டின் அறிவியல் -2

-------------------------------------

7. இதே பெருஅலகுப் பண்புகளில் முக்கிய இடம் வகிக்கும் இடைப்பரப்பு, வெளிப்பரப்பு அறிவியலும் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைச்செய்தது. அனைத்து இறுகுநிலைப் பொருள்களும் மேற்பரப்பைக் கொண்டுள்ளன. தம் புறத்துடன் அவை ஒருவித இயங்குசமச்சீர் நிலையில் இருக்கின்றன. புறப்பொருள், வளி இவற்றுடன் அவை வெப்பம், ஒளி, பொருள்மாற்றம்
போல பல செயல்கள்மூலம் இடைவினைபுரிகின்றன. காட்டாக அப்பளம் பொரிக்கும்போது என்ன நடக்கிறது எனப்பார்ப்போம். புறத்திலுள்ள எண்ணெயிலிருந்து அப்பளத்தின் புறப்பரப்பு மூலம் வெப்பம் உள்புகுகிறது. அப்பளத்தை பொள்ள வைக்கிறது. அப்போது உள்ளே ஊடுருவியிருக்கும் காற்று விரிவடந்து மீண்டும் அப்பளத்தின் பரப்பிலிருக்கும் நிறு
துளைகள் வழியே வெளியேறுகிறது. அப்பளத்தின் புறப்பரப்பின் பரப்பளவு, அதன் கடினத்தன்மை, அதன் பொருகுத்தன்மை, ஈரத்தன்மை என பல காரணிகள் எவ்வாறு அப்பளம் பொரிகிறது என்பதை கட்டுப்படுத்துகின்றன. இயற்கையில் நடைபெறும்
பல நிகழ்வுகளும், தொழில்நுட்பத்துக்கு தேவையான பல வினைகளும் இத்தகைய புறப்பரப்பின் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுவதால் இத்துறை மிகவும் செயலூக்கம் நிறைந்ததாக உள்ளது. குறைக்கடத்திகள் வடிவமைப்பில், சிலிக்கான் சில்லுகள் மீது அடையவைக்கும் வேதி அணுக்களும், அணுத்தளங்களும், அவற்றின் ஒட்டும்தன்மையும், குறையில்லா கட்டுமானமும் சில்லுவின் புரப்பரப்பின் சுத்தம், சீர்தள அமைப்பு, திசைமுகம் ஆகியவற்றைப் பொறுத்தே
அமையும். இது சில பத்தாண்டுகளாகவே நன்கு ஆராயப்பட்ட துறையானாலும் இப்போது நானோ அலகுகளில் அணுத்தொகுதிகலைக் கட்டுப்படுத்தி வடிவமைப்பது இயலுமாகிறது. இதன்மூலம் நேனோ வடிவங்களில் சேர் அணுத் தீவுகள், குவாண்டப் புள்ளிகள் இவற்றின் இயல்புகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. பல திசைகளில் இத்துறை முன்னேற்றம்
கண்டது. மேலும் உயிரியலிலும் இடைப்பரப்புகள் மிகவும் கவனம் பெற்றன. செல்லின் வெளிப்பரப்பின் தன்மையே ஒரு செல்லின் பல செயல்பாடுகளில் பங்குபெறுவதால் இப்பரப்பு மிககவனம் பெற்றது. இத்தகைய பரப்புகளை ஆராய்வதில் இப்போது கணிதமும், கணினித்துறையும், இயல்பியலும் சேர்ந்த பல்துறை அறிஞர்கள் செயல்படுகின்றனர்.---------------------------------------
8. மனிதனென்பவன்..
8.1. மனித ஜினோம் முற்றிலுமாக கோர்க்கப்பட்டுவிட்டது என்று ஓரளவு நிறைவாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு நோய்நாடி, நோய்முதல் நாடி தீர்வுகாணலாம் என்பது தற்போதைய கண்டுபிடிப்புகளால் சற்றே ஆட்டம் கண்டுள்ளது. சிறு அளவுகளில் மட்டுமே தனிநபர்களிடையே மாற்றங்கள் இருக்கும் என கருதப்பட்டதற்கு மாறாக பெரும் அளவைகளில் டி என் ஏ தொகுதிகளில் இக்கோர்ப்புகள் மாறவும், இடவல மாற்றமாகவும், முற்றிலும் காணாமல் போவதும், இடைசொருகி இருப்பதும் கண்டதால் இன்னும் மனிதர் அனைவருக்குமான அடிப்படைக் கதைக்கு ஒரே 'வாசிப்பு' இல்லை என்பதே தெளிவாகி இருக்கிறது.

8.2. நமது செல்களில் ஆற்றலை உருவாக்ககூடியவை மைடொகாண்றியா எனப்படும் இழைகள். இவை அம்மாவிடமிருந்து குழந்தைக்கு குரோமோசோம்களிலுள்ள ஜீன்களைப் போல மாறாமல் அப்படியே வருகின்றன. செயற்கை கருத்தரித்தல் முறையில் ஒரு ஒருபெண்ணின் சினைமுட்டையில் இன்னொரு பெண்ணின் மைடோ காண்ட்றியாவை இணைப்பதன் மூலம் அம்மூட்டை ஊக்கத்துடன் வளர்வதாகவும், முன்னிருந்த மைடோ காண்ட்றியாவில் ஏதோனும் குறகள் இருந்தாள் அவை களையப்படுவதாகவும் ஒரு சோதனை மூலம் நிறுவமுயன்றுள்ளனர். இப்படி கருத்தரித்த குழந்தைக்கு நிஜமாகவே மூன்று பெற்றோர்கள் (இரண்டு தாய் , ஒரு தகப்பன்) என ஆகிவிடும் என்பதால் இதன் மூலம் வரும் அறச்சிக்கல்கலை எப்படி சமூகம் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.


---------------------------

9.
இன்றைய உயிரியல், அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாகிய, புரதங்கள், டிஎன் ஏ,ஆர் என் ஏ, பெப்டைடுகள் போன்றவற்றில் அதிக அளவில் கவனத்துடன் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இவற்றின் கூட்டாகிய செல்கள், திசுக்கள், அவயங்கள் போல அவை உயிரிகளின் கட்டமைப்புகளாக தொகுத்து இயங்கும்போது அவற்றின் இயக்கம் சரிவரப் புரிந்து
கொள்ளப்படவில்லை. அதாவது ஒரு காரில் சக்கரங்கள், செலுத்துக் கருவிகள், கதவுகள், என்ஜின் என தனித்தனியாக ஒவ்வொரு உருப்பின் செயலும் நன்றாக விளங்கிக்கொள்ளப்பட்டாலும் முழுதுமாக கார் எனும் பொருள் வேகமாக சென்று இடித்தால் என்ன ஆகும் என்பதற்கு அத்தகைய தனித்தனியான அறிவு உதவாது. அதேபோல் அடிப்படிஅக்கட்டுமானப்
பொருள்களின் அறிவும் தொகுப்பாக ஒரு கட்டமைப்பின் இயல்பை அறிவதற்கு முழுமையாக போதாது. இவ்வகையில் கட்டமைப்பு உயிரியல் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான தரவுகள், அவற்றின் தரவுத்தளங்கள், அவற்றின் தேடு பொறிகள் என ஒரு முழு நுட்பவியல்துறையாக அது வளர்கிறது. இத்தகைய கட்டமைப்புகளின் தொகுப்பு இயக்க விதிகளை மாதிரிகளாக சமைப்பதற்கு பல்துறைப் பயிற்சியும் தேவைப்படுகிறது. பல்துறை அறிஞர்களிடையே கருத்துப் பறிமாற்றம் குழப்பமின்றி நிகழ உரைக்குறி மொழிச்சட்டகங்களை ஒழுங்குபடுத்தபவேண்டும். இதற்கான முயற்சிகளும் துவங்கப்பட்டிறுக்கின்றன.


--------------------------


10. வேதியியல் பல திடப்பொருட்களை படிகங்களாகவும், சீரற்ற திண்பொருள்களாகவும் வகைப்படுத்துகிறது. படிகங்கள் முப்பரிமாணத்தில் ஒழுங்குபடுத்தப் பட்ட வெளிச் சட்டகங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டவை என்பதை அறிவோம். மாறாக சீரற்ற திண்பொருள்கள் என்பனவற்றின் அணு அல்லது மூலக்கூறு அடிப்படை அலகுகள் வெளிச்சட்டகமில்லாமல் சீரற்ற முறையில் அமைந்துள்ளன. இவற்றில் 'கண்ணாடிகள்' எனப்படும் திடப்பொருள்கள் (நமக்குத்தெரிந்த கண்ணாடிகளைத் தவிர, பீங்கான் பாண்டங்கள் போன்றவையும் கண்ணாடிகள் தாம்) தம்முள் அணு அல்லது மூலக்கூறு அலகுகளில் ஒழுங்கான சட்டகத்தில் அமைந்தும் அதற்கு மேற்பட்ட அலகுகளில் சீரற்றும் காணப்படுகின்றன.

சிலகாலம் முன்பு உலோகங்களின் கூட்டுப் பொருள்களின் மூலமும் இத்தகைய கண்ணாடிகள்
வடிவமைக்கப்பட்டு உலோகக் கண்ணாடிகள் என ஆராயப்பட்டது நமக்குத்தெரியும். இப்படி சிறு
மூலக்கூறு அலகுகளில் ஒழுங்கைக்கட்டுப்படுத்தி, வேதியியல் பல முன்னேற்றங்களை கடந்த
முப்பதாண்டுகளாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. திண்மப்பொருள்களாகவும், மெல்லிய படலங்களாகவும் பல ஆயிரக்கணக்கான வேதிக்கூட்டுப் பொருள்கள் இம்முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் மூலம் உருவக்கப் பட்ட பல பொறிகள் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ளன நாம் அறியாமலேயே. இவ்வகையான கூட்டுப்பொருள்களில் நுண்துளைகளடங்கிய திண்மங்களும் படலங்களும் சிறப்பாக வினையூக்கிகளாகவும், சுத்திகரிப்பான்களாகவும் பயனுடையவை. காட்டாக, ஜியோலைட்டுகள் சாதாரண குடிநீர்ச் சுத்திகரிப்பில்கூட பயன்படுத்தப் படுகின்றன. இன்நுண்துளைத் திண்மங்களுள்,
குறு, சிறு, பெரு துளைத்திண்மங்கள் எனப் பலவகை உண்டு. அவற்றின் பயன்பாடுகளும் வேறாகும். சென்ற ஆண்டு புதிதாக வடிவமைக்கப் பட்ட சிறுதுளைத் திண்மமாகிய ஜெர்மானியம் ஆக்ஸைடு இவற்றுள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் துளை அமைப்பினாலும், அதன் படிகக் கட்டமைப்பினாலும், வளைப் பரப்பினாலும் நூதனமாகிய திண்மமாக கருதப் படிகிறது. செய்முறைகளும், பயன் படுத்துதலும் வரும் ஆண்டுகளில் தொடரும் நுட்பவியலாக மாறும்..


--------------------------------------


11. இயல்பியல், வேதியியல், இவைகளை அடுத்து இப்போது உயிரியல் ஒரு தொழில்நுட்பமாக மாறிவருகிறது. இதில் எவ்வாறு புது உயிர்ப்பொறியியலாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வரும் ஆண்டுகளில் தெரியவரும். இவர்கள் மூலக்கூறு அளவில் அடிப்படைக் கட்டுமானங்களை வடிவமைத்தல், புது ஜீன்களை வடிவமைத்தல் என்பதிலிருந்து ஆரம்பித்து உயிர்-உயிரற்ற இடைவெளிகளில் சில செயற்கைக் கட்டுமானங்களை ஆக்குவதிலும்
செயல்பாடுகள் இருக்கலாம். இதனால் வரும் பல்வேறு கேள்விகள் வருமாண்டுகளில் பெரும் விவாதங்களை துவக்க இருக்கின்றன. மற்றும் சில அடிப்படை அறிவியல் அறம் சார்ந்த கேள்விகளும் சென்ற வருடத்தில் எழுந்தன. மனித ஸ்டெம் செல்களுக்கான ஆராய்ச்சியில் தம் ஆய்வகத்தைச் சார்ந்த இளைய உறுப்பினர்களின் சினைமுட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டன என்பதை முன்னிட்டு தென்கொரிய நாட்டு உயிரியல் நிபுணர் வூ சுக் வாங் விசாரனைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார். அவருடைய ஆய்வு சட்டஅளவில் முறையானதுதான் என்றாலும் தம் உதவியாளர்களைப் பயன்படுத்தியது தவறு என்றே அறிவியல் சமுதாயம் கருதுகிறது. மேலும் வூ சுக் வாங் தாம் பதிப்பித்த அறிவியல் கட்டுரைகளை திரும்பப் பெருவதாக அறிவித்திருக்கிறார்.
இக்கட்டுரைகள் ஒரு நோயாளியின் தன் படிச் செல்களிலிருந்து வளர்த்த திசுக்களைக்கொண்டு அவரின் நோயை குணப்படுத்தும் முறபற்றியதாகும். இதே வூ தான் சில வாரங்களுக்கு முன் தன் ஆய்வகத்தின் இளம் உறுப்பினர்கள்களின் சினைமுட்டைகளை ஆய்வுக்குப் பயன் படுத்தியதற்காக தம் வேலையிலிருந்து சுயவிடுப்பு பெற்று விலகினார். இது உயிரியல் துறையில் பெரும் சர்ச்சையாக தற்போது உருவாகி வருகிறது.


--------------------------------------

12. இத்தொகுப்பு ஒரு முழுமையடையாத ஒன்றாகவே கருதப்பட வேண்டும். மானுடவியல், மருத்துவம், சூழியல், வேளாண்மை, மொழியியல் என பல துறைகளிலும் நடக்கும் ஆய்வுகளைத் தொகுத்தால் இன்னும் பெருகும்

--------------------------------------------------

தமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்
------------------------------------

அண்டவியல்: cosmology

நிரையீர்ப்பு இடைவினை:: gravitational interaction
மின்காந்த இடைவினை: electromagnetic interaction
வல்வினை: strong interaction
மெல்வினை: weak interaction
மறைப்பரிமாணங்கள்: hidden dimensions
ஒருங்குமயமாக்கல்: unification

துகள்முடுக்கி: particle accelerator
குவாண்டநிறையங்கியல்: quantum chromodynamics

வளிமண்டலம்: atmosphere
கோளிறங்கு பொறி: lander

நானோ குழல்கள்: nano tubes
அணுச்சிதைவு: atomic fission
அணுச்சேர்ப்பு: atomic fusion
குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion

அணுத்தளங்கள்: atomic layers
பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties
இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics
இடைப்பரப்பு: interface
வெளிப்பரப்பு: surface
சமச்சீர் நிலை: equilibrium
திசைமுகம்: orientation

மாதிரிகளாக: models
உரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages
உயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems

சீரற்றதிண்பொருள்கள்: amorphous materials
கண்ணாடிகள்: glass; vitreous
படலங்கள்: membranes, surfaces

படிச் செல்கள்: cloned cells

2005 ஆண்டின் அறிவியல் -1

2005 ஆண்டின் அறிவியல்
-----------------------------------

1. சென்ற ஆண்டில் (2005) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்கள் இவற்றை சுருக்கமாக அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலங்களில் அனைத்து இயல்களிலும் கடந்த ஓராண்டு வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகவேனும் அறிந்துகொள்ள நூற்றுக்கணக்கான பக்கங்கள் தேவையாக இருக்கும். ஆகவே இங்கு மிகச் சுருக்கிய வரைவையே தரமுடிகிறது. இவ்வரைவில் பல துறைகளும் விடுபட்டுப் போயுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
முதலில் அறிவியலில் இயல்பியல், வானியல் மற்றும் அண்டஇயல் துறைகளைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளில் நடந்ததைப்போன்ற துறையையே புரட்டிப்போடும் மிகப்பெரும் தாக்கம் நிறைந்த கருத்தாக்கங்களும், சோதனைகளும் நிகழ்காலங்களில் நடக்கவில்லை. கடந்த நூற்றாண்டின் தொடர்சியாகவே இப்போதும் இத்துறைகள் வளர்ந்து வருகின்றன. பொதுவான போக்குகளாகப் பார்த்தால், இயல்பியலில் இரண்டு போக்குகள் தென்படுகின்றன. ஒன்று ஆகப்பெரிய இடைவெளி அலகாகிய அண்டஅளவைவைகளிலும், மீச்சிறு இடைவெளி அலகாகிய குவாண்டம் அளவைகளிலும் வெளித்தோன்றும் இயல்பியல் கோட்பாடுகளை ஒரே கணித-இயல்பியல் சட்டகத்துள் அடக்குவது. மற்றது நம் அன்றாட வாழ்கையில் உணரப்படும் இடைவெளி அலகுகளில் காணும் இயற்கைச் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை கோட்பாடுகளை புது கணித மற்றும் இயல்பியல் கோட்பாடுகளால் மீள்பார்வை செய்து அறிவை ஆழமாக்குவது. இவ்விரண்டையும் பார்ப்போம்.----------------------
1.1 இயற்கையின் நான்கு அடிப்படை இடைவினைகளான நிறையீர்ப்பு இடைவினை, மின்காந்த
இடைவினை, வல்இடைவினை, மெல்இடைவினை என்பவற்றில், நிறையீர்ப்பு இடைவினை தவிர பிற
மூன்று இடைவினைகளையும் இணத்து கணித மயமாக்கப் பட்ட கருதுகோள்கள் உள்ளன. அவை
ஓரளவு பரிசோதனைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வினைகளில் தூர அலகுகளில் இயங்கும் நிறையீர்ப்பு இடைவினையினை உள்ளிட்ட ஒருங்குமயப்படுத்திய கருதுகோள் ஒன்று வேண்டும், அப்போதுதான் இயல்பியலின் இடைவினைகளைப்பற்றிய அறிதல் முழுமையாகும் என்பது ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருக்கும் ஒரு தேடலாகும். இவ்வொருங்கு மயப்படுத்தலுக்கு பல வித கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இம்முயற்சியில் இயல்பியலாளரின் கருத்தில் இழைக்கோட்பாடு முன்னிற்கிறது. அத்துறையில் இவ்வாண்டும் பல கட்டுரைகள் ஆதார பங்களிப்புகளைச்செய்யும் அளவில் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமாக "மறைப் பரிமாணங்கள்" பற்றிய ஒரு கருதுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. குவாண்டம் விதிகள் மீச்சிறு தூர அலகுகளில், அளவைகளில் இயங்குவது நாம் அறிந்ததே. அவ்வலகுகளில் இயங்கும் மின்காந்தவினை, வல்வினை, மெல்வினை இவற்றுடன் ஒப்பீடளவில் பார்க்க நிறையீர்ப்பு வினை மிக ஆற்றல் அருகியதாகவே காணப்படுகிறது. இது ஏன் என்ற கேள்விக்கு கணித வாய்பாடுகள் கொண்டு பதிலிறுத்தால் அதில் இன்நான்கு வினைகளையும் இணைக்கும் கோட்பாடு முழுமைபெறும் என்பதே கணிப்பு. இதை நோக்கிய சில நல்ல முயற்சிகள் இவ்வாண்டு இயல்பியலில் நடந்தன.


------------------------
2. இயல்பியலில் கணித-கோட்பாட்டு முயற்சிகளை எந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த இயலும் என்பதற்கு குவாண்டநிறஇயங்கியலில் கிளாஸ்கோ-ஒஹையோ பல்கலைக்கழகங்களின் அறிவியலாளர் சார்ம்-பாட்டம் எனப்படும் குவார்க் துகளின் நிறையை அளவிட்ட கணிப்பு சிலநாட்களிலேயே இல்லினாய் துகள்முடுக்கியில் சோதனை முறையில் சரிபார்க்கப் பட்டது ஒரு சான்றாகும். இவ்விரு முயற்சிகளுக்கும் அதிவேக கணிணிகள் பயன்படுத்தப் பட்டமை மற்றொரு சிறப்பாகும். அறிவியலின் கணித்தல் - அளத்தல் - நிறுவுதல் எனும் துல்லியச் செயல்பாடு மீண்டும் நிரூபணமாகும் நிகழ்ச்சி இது.

------------------------------
3. சனி நீராடு:
இவ்வாண்டின் துவக்கமே கோளியலுக்கு இனிமையான அதிர்ச்சியுடன் துவங்கியது. கஸ்ஸீனி-ஹைஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் நிலவுகளில் ஒன்றாகிய டைடன் இல் இறங்கியதுதான் அது. நம் ஞாயிறு மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் துணைக்கோள்களில் அடர்த்தியான வானவளிமண்டலம் உள்ளவை நாம் இருக்கும் பூமியும், டைட்டனும் தான். பூமியில் நைட்ரஜன்-ஆக்ஸிஜன்- ஹைட்ரஜன் கலந்த வளிமண்டலம் இருப்பதைப்போல, டைட்டனுக்கு ஹைடிரோகார்பன்ஸ் என்றழைக்கப்படும் கரிம வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. ஹைஜன்ஸ் கோளிறங்கு பொறி டைட்டனில் இறங்கி நிறையப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. டைட்டனில் கரிம மூலக்கூறுகளால் ஆன மழை, கடல், நீரோட்டம், ஆறு, கடல் என புவியைப்போலவே ஒரு அமைப்பு இருப்பதாக இப்போது அறிகிறோம். இத்தகைய சூழலில் ஏதேனு சிறு அளவிலாவாது 'உயிர்' அங்கும் தோன்றி இருக்குமா என்பது முக்கியக் கேள்வி. வெகு தூரத்திலிருந்த்து வரும் சூரிய ஒளி மெல்லக் கசிந்து தரையை அடையுமுன் வளிமண்டலத்தின் அடர்தளங்களில் நம்மால் இதுவரை நினைத்துப் பார்க்கவியலாத பல்வேறு வேதி வினைகளை ஊக்குவிக்கக் கூடும் என்பதால் ஆர்வத்துடன் மேலும் இது ஆராயப்படுகிறது. இப்போது புவியிலிருந்து செலுத்தினால் இன்னொமொரு ஒன்பதாண்டுகளில் அடுத்த டைட்டன் கோளிறக்கம் நடைபெறலாம். அடுத்த சனிக் கரிம மழையில் குளியல் அப்போதுதான்.

----------------------------------

4.பல்லி விழாப் பலன்
பல்லி விழுந்தால் பலன். விழாமல் இருந்தால் தொழில்நுட்பம். பல்லிகள் தலைகீழாய் உத்தரத்தில் நடப்பது அவற்றின் கால்களில் உள்ள ஆயிரக்கணக்கான் சிறு முடித்தொகுதிகளால் என்று நமக்குத்தெரியும். ஒவ்வொருமுடியும் சிறுசிறு அலகுகளில் விசை செலுத்துவதால் எல்லாம் சேர்ந்து தேவையான விசையாகி ஒட்டுமொத்தமாக பல்லியை விழாமல் நம்மைக் காப்பாற்றுகிறது. அதேபோல் நுண்ணிய ஒட்டும் சக்தியுடைய இழைமப் பரப்புகளை நானோ குழல்களால் வடிவமைத்திருக்கிறார்கள். இப்பரப்புகள் நீர்விலக்குத்தன்மையும் பெற்றிருப்பதால் நீர்த்துளிகள் அவற்றில் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கமுடிகிறது. பரப்பை செங்குத்தாக வைத்தாலும் நீர்த்துளி உருண்டடீடுவதில்லை. ஆனால் ஒட்டாமல் இருப்பதால் நீர் ஒட்டும் பரப்புக்கு இதை முழுதுமாக மாற்றிக் கொடுத்துவிட முடியும். இத்தகைய சிறுவிசைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வேதிநுட்பம் பல மாயங்களை சமீப காலங்களில் நடத்திக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இது.

-----------------------------------
5.
அணுச்சிதைவு மூலமே அணுசக்தி இப்போது அணு உலைகளில் உருவாக்கப்படுகிறது. ஆனால் சூரியனில் நடப்பதுபோல அணுச்சேர்ப்பு மூலம் பெரும் சக்தி இன்னும் பன்மடங்கு அதிகமானதும் குறைவான கதிரியக்கப் பின்விளைவுகள் கொண்டதுமாகும். நம்மால் இப்போது அணுத்தொகுப்பை நடத்தமுடியும் என்றாலும் அதற்க்கு பெரும் செலவினாலான சக்திவாய்ந்த துகள்முடுக்கிகள் தேவை. இதனால் எப்படியாவது அணுச்சேர்ப்பு குறைந்த செலவில் நடத்திக்காட்டமுடிந்தால் அறிவியல்-தொழில்நுட்பத்தில் அது மிகப்பயனுள்ள கண்டுபிடிப்பாகவே இருக்கும். சில ஆண்டுகள் முன்பு வேதியிலாளர்கள் ஆய்வகத்தில் 'குளீர் அணுச்சேர்ப்பு' என்று காட்டிய சோதனைகள் போலிகள் என இனம்காணப்பட்டன. தற்போது ஒரு இயல்பியலாளர் ஒரு படிகத்துண்டின் மின்னேற்றத்தை டங்ஸ்டன் ஊசிகளால் குவியச்செய்து அதிவேக டியூற்றியம் அணுக்களை பாயச்செய்துள்ளார். இவ்வணுக்களின் தாக்கும் சக்தியால் அணுக்கருக்கள் சேர்ந்து நியூற்றான் கற்றயைத் தோற்றுவித்திருக்கின்றன. இது மேசை மேல் அமைக்கக்கூடிய அணுச்சேர்ப்புக் கருவியாக உருமாறுமா என்பது சிலவருடங்களில் தெரியும்.


-----------------------------------

6. மணல் கயிறு
---------------

இயல்பியலில் அதிக கவனத்தைப் பெற்று வரும் மற்றொரு துறை திட,திரவ பொருள்களை ஆராயும் இறுகுநிலை இயல்பியல் ஆகும். சென்ற நூற்றாண்டின் முன் ஐம்பதாண்டுகளில் இத்துறையிலும் குவாண்டம் இயங்கியல் தொடர்பான கோட்பாடுகளே முன்னுரிமை பெற்று விளங்கின. அக்கோட்பாடுகள் இறுகுப்பொருட்களின் குறைக்கடத்தி, மிகுகடத்திப்பண்புகள், மின்காந்தப்பண்புகள், ஒளிமப்பண்புகள் போன்றவற்றை விளங்கச்செய்தன. நூற்றாண்டின் பின்பகுதியில் கடந்த இருபது வருடங்களாக முன்னர் பொறியியல் மட்டுமே பாவித்துக்கொண்டிருந்த உராய்வு, பாகு, இழைமப் பண்புகள் போன்ற குவாண்டம் பார்வையில் பெருஅலகுப் பண்புகளை இயல்பியளாளர் புது கணித, கோட்பாட்டு உதவிகொண்டு மீள்பார்வை செய்ய ஆரம்பித்தனர். பெருஅலகு இயல்பியலுக்கு இது மறு வசந்த காலம் என்றே சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பல சோதனைகள் செய்யப்பட்டன. முக்கியமாக மணற்குவியல்களின் சரிதல்-நிற்றல் பற்றிய சோதனைகள், மணல்த் தொகுதிகளின் ஒட்டும், உராயும், கடினமாகும் நெகிழும் பண்புகளைப்பற்றிய சோதனைகள், கோட்பாடுகள் இவற்றைச்சொல்லலாம். மேலே நடந்தால் கடினமாக இருக்கும் மணல் எப்படி மணல் கடிகாரத்தில் ஒழுகுகிறது, புதைமணல்களில் பதற்றத்துடன் கைகாலை அசைத்தால் மேலும் முழுகுவதும், நிதானமாக மேலே இழுக்க முனைந்தால் அதுவே இறுகிக் காண்பதும் ஏன் போன்ற பல கேள்விகள்.
-------------------------------------
தமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்
------------------------------------

அண்டவியல்: cosmology

நிரையீர்ப்பு இடைவினை:: gravitational interaction
மின்காந்த இடைவினை: electromagnetic interaction
வல்வினை: strong interaction
மெல்வினை: weak interaction
மறைப்பரிமாணங்கள்: hidden dimensions
ஒருங்குமயமாக்கல்: unification

துகள்முடுக்கி: particle accelerator
குவாண்டநிறையங்கியல்: quantum chromodynamics

வளிமண்டலம்: atmosphere
கோளிறங்கு பொறி: lander

நானோ குழல்கள்: nano tubes
அணுச்சிதைவு: atomic fission
அணுச்சேர்ப்பு: atomic fusion
குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion

அணுத்தளங்கள்: atomic layers
பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties
இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics
இடைப்பரப்பு: interface
வெளிப்பரப்பு: surface
சமச்சீர் நிலை: equilibrium
திசைமுகம்: orientation

மாதிரிகளாக: models
உரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages
உயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems

சீரற்றதிண்பொருள்கள்: amorphous materials
கண்ணாடிகள்: glass; vitreous
படலங்கள்: membranes, surfaces

படிச் செல்கள்: cloned cells(--------more )