Tuesday, January 31, 2006

2005 ஆண்டின் அறிவியல் -1

2005 ஆண்டின் அறிவியல்
-----------------------------------

1. சென்ற ஆண்டில் (2005) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்கள் இவற்றை சுருக்கமாக அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலங்களில் அனைத்து இயல்களிலும் கடந்த ஓராண்டு வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகவேனும் அறிந்துகொள்ள நூற்றுக்கணக்கான பக்கங்கள் தேவையாக இருக்கும். ஆகவே இங்கு மிகச் சுருக்கிய வரைவையே தரமுடிகிறது. இவ்வரைவில் பல துறைகளும் விடுபட்டுப் போயுள்ளன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
முதலில் அறிவியலில் இயல்பியல், வானியல் மற்றும் அண்டஇயல் துறைகளைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கப் பத்தாண்டுகளில் நடந்ததைப்போன்ற துறையையே புரட்டிப்போடும் மிகப்பெரும் தாக்கம் நிறைந்த கருத்தாக்கங்களும், சோதனைகளும் நிகழ்காலங்களில் நடக்கவில்லை. கடந்த நூற்றாண்டின் தொடர்சியாகவே இப்போதும் இத்துறைகள் வளர்ந்து வருகின்றன. பொதுவான போக்குகளாகப் பார்த்தால், இயல்பியலில் இரண்டு போக்குகள் தென்படுகின்றன. ஒன்று ஆகப்பெரிய இடைவெளி அலகாகிய அண்டஅளவைவைகளிலும், மீச்சிறு இடைவெளி அலகாகிய குவாண்டம் அளவைகளிலும் வெளித்தோன்றும் இயல்பியல் கோட்பாடுகளை ஒரே கணித-இயல்பியல் சட்டகத்துள் அடக்குவது. மற்றது நம் அன்றாட வாழ்கையில் உணரப்படும் இடைவெளி அலகுகளில் காணும் இயற்கைச் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை கோட்பாடுகளை புது கணித மற்றும் இயல்பியல் கோட்பாடுகளால் மீள்பார்வை செய்து அறிவை ஆழமாக்குவது. இவ்விரண்டையும் பார்ப்போம்.----------------------
1.1 இயற்கையின் நான்கு அடிப்படை இடைவினைகளான நிறையீர்ப்பு இடைவினை, மின்காந்த
இடைவினை, வல்இடைவினை, மெல்இடைவினை என்பவற்றில், நிறையீர்ப்பு இடைவினை தவிர பிற
மூன்று இடைவினைகளையும் இணத்து கணித மயமாக்கப் பட்ட கருதுகோள்கள் உள்ளன. அவை
ஓரளவு பரிசோதனைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வினைகளில் தூர அலகுகளில் இயங்கும் நிறையீர்ப்பு இடைவினையினை உள்ளிட்ட ஒருங்குமயப்படுத்திய கருதுகோள் ஒன்று வேண்டும், அப்போதுதான் இயல்பியலின் இடைவினைகளைப்பற்றிய அறிதல் முழுமையாகும் என்பது ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருக்கும் ஒரு தேடலாகும். இவ்வொருங்கு மயப்படுத்தலுக்கு பல வித கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக இம்முயற்சியில் இயல்பியலாளரின் கருத்தில் இழைக்கோட்பாடு முன்னிற்கிறது. அத்துறையில் இவ்வாண்டும் பல கட்டுரைகள் ஆதார பங்களிப்புகளைச்செய்யும் அளவில் வெளிவந்துள்ளன. அவற்றில் முக்கியமாக "மறைப் பரிமாணங்கள்" பற்றிய ஒரு கருதுகோள் முக்கிய இடம் வகிக்கிறது. குவாண்டம் விதிகள் மீச்சிறு தூர அலகுகளில், அளவைகளில் இயங்குவது நாம் அறிந்ததே. அவ்வலகுகளில் இயங்கும் மின்காந்தவினை, வல்வினை, மெல்வினை இவற்றுடன் ஒப்பீடளவில் பார்க்க நிறையீர்ப்பு வினை மிக ஆற்றல் அருகியதாகவே காணப்படுகிறது. இது ஏன் என்ற கேள்விக்கு கணித வாய்பாடுகள் கொண்டு பதிலிறுத்தால் அதில் இன்நான்கு வினைகளையும் இணைக்கும் கோட்பாடு முழுமைபெறும் என்பதே கணிப்பு. இதை நோக்கிய சில நல்ல முயற்சிகள் இவ்வாண்டு இயல்பியலில் நடந்தன.


------------------------
2. இயல்பியலில் கணித-கோட்பாட்டு முயற்சிகளை எந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த இயலும் என்பதற்கு குவாண்டநிறஇயங்கியலில் கிளாஸ்கோ-ஒஹையோ பல்கலைக்கழகங்களின் அறிவியலாளர் சார்ம்-பாட்டம் எனப்படும் குவார்க் துகளின் நிறையை அளவிட்ட கணிப்பு சிலநாட்களிலேயே இல்லினாய் துகள்முடுக்கியில் சோதனை முறையில் சரிபார்க்கப் பட்டது ஒரு சான்றாகும். இவ்விரு முயற்சிகளுக்கும் அதிவேக கணிணிகள் பயன்படுத்தப் பட்டமை மற்றொரு சிறப்பாகும். அறிவியலின் கணித்தல் - அளத்தல் - நிறுவுதல் எனும் துல்லியச் செயல்பாடு மீண்டும் நிரூபணமாகும் நிகழ்ச்சி இது.

------------------------------
3. சனி நீராடு:
இவ்வாண்டின் துவக்கமே கோளியலுக்கு இனிமையான அதிர்ச்சியுடன் துவங்கியது. கஸ்ஸீனி-ஹைஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் நிலவுகளில் ஒன்றாகிய டைடன் இல் இறங்கியதுதான் அது. நம் ஞாயிறு மண்டலத்தில் உள்ள கோள்கள் மற்றும் துணைக்கோள்களில் அடர்த்தியான வானவளிமண்டலம் உள்ளவை நாம் இருக்கும் பூமியும், டைட்டனும் தான். பூமியில் நைட்ரஜன்-ஆக்ஸிஜன்- ஹைட்ரஜன் கலந்த வளிமண்டலம் இருப்பதைப்போல, டைட்டனுக்கு ஹைடிரோகார்பன்ஸ் என்றழைக்கப்படும் கரிம வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. ஹைஜன்ஸ் கோளிறங்கு பொறி டைட்டனில் இறங்கி நிறையப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. டைட்டனில் கரிம மூலக்கூறுகளால் ஆன மழை, கடல், நீரோட்டம், ஆறு, கடல் என புவியைப்போலவே ஒரு அமைப்பு இருப்பதாக இப்போது அறிகிறோம். இத்தகைய சூழலில் ஏதேனு சிறு அளவிலாவாது 'உயிர்' அங்கும் தோன்றி இருக்குமா என்பது முக்கியக் கேள்வி. வெகு தூரத்திலிருந்த்து வரும் சூரிய ஒளி மெல்லக் கசிந்து தரையை அடையுமுன் வளிமண்டலத்தின் அடர்தளங்களில் நம்மால் இதுவரை நினைத்துப் பார்க்கவியலாத பல்வேறு வேதி வினைகளை ஊக்குவிக்கக் கூடும் என்பதால் ஆர்வத்துடன் மேலும் இது ஆராயப்படுகிறது. இப்போது புவியிலிருந்து செலுத்தினால் இன்னொமொரு ஒன்பதாண்டுகளில் அடுத்த டைட்டன் கோளிறக்கம் நடைபெறலாம். அடுத்த சனிக் கரிம மழையில் குளியல் அப்போதுதான்.

----------------------------------

4.பல்லி விழாப் பலன்
பல்லி விழுந்தால் பலன். விழாமல் இருந்தால் தொழில்நுட்பம். பல்லிகள் தலைகீழாய் உத்தரத்தில் நடப்பது அவற்றின் கால்களில் உள்ள ஆயிரக்கணக்கான் சிறு முடித்தொகுதிகளால் என்று நமக்குத்தெரியும். ஒவ்வொருமுடியும் சிறுசிறு அலகுகளில் விசை செலுத்துவதால் எல்லாம் சேர்ந்து தேவையான விசையாகி ஒட்டுமொத்தமாக பல்லியை விழாமல் நம்மைக் காப்பாற்றுகிறது. அதேபோல் நுண்ணிய ஒட்டும் சக்தியுடைய இழைமப் பரப்புகளை நானோ குழல்களால் வடிவமைத்திருக்கிறார்கள். இப்பரப்புகள் நீர்விலக்குத்தன்மையும் பெற்றிருப்பதால் நீர்த்துளிகள் அவற்றில் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கமுடிகிறது. பரப்பை செங்குத்தாக வைத்தாலும் நீர்த்துளி உருண்டடீடுவதில்லை. ஆனால் ஒட்டாமல் இருப்பதால் நீர் ஒட்டும் பரப்புக்கு இதை முழுதுமாக மாற்றிக் கொடுத்துவிட முடியும். இத்தகைய சிறுவிசைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வேதிநுட்பம் பல மாயங்களை சமீப காலங்களில் நடத்திக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று இது.

-----------------------------------
5.
அணுச்சிதைவு மூலமே அணுசக்தி இப்போது அணு உலைகளில் உருவாக்கப்படுகிறது. ஆனால் சூரியனில் நடப்பதுபோல அணுச்சேர்ப்பு மூலம் பெரும் சக்தி இன்னும் பன்மடங்கு அதிகமானதும் குறைவான கதிரியக்கப் பின்விளைவுகள் கொண்டதுமாகும். நம்மால் இப்போது அணுத்தொகுப்பை நடத்தமுடியும் என்றாலும் அதற்க்கு பெரும் செலவினாலான சக்திவாய்ந்த துகள்முடுக்கிகள் தேவை. இதனால் எப்படியாவது அணுச்சேர்ப்பு குறைந்த செலவில் நடத்திக்காட்டமுடிந்தால் அறிவியல்-தொழில்நுட்பத்தில் அது மிகப்பயனுள்ள கண்டுபிடிப்பாகவே இருக்கும். சில ஆண்டுகள் முன்பு வேதியிலாளர்கள் ஆய்வகத்தில் 'குளீர் அணுச்சேர்ப்பு' என்று காட்டிய சோதனைகள் போலிகள் என இனம்காணப்பட்டன. தற்போது ஒரு இயல்பியலாளர் ஒரு படிகத்துண்டின் மின்னேற்றத்தை டங்ஸ்டன் ஊசிகளால் குவியச்செய்து அதிவேக டியூற்றியம் அணுக்களை பாயச்செய்துள்ளார். இவ்வணுக்களின் தாக்கும் சக்தியால் அணுக்கருக்கள் சேர்ந்து நியூற்றான் கற்றயைத் தோற்றுவித்திருக்கின்றன. இது மேசை மேல் அமைக்கக்கூடிய அணுச்சேர்ப்புக் கருவியாக உருமாறுமா என்பது சிலவருடங்களில் தெரியும்.


-----------------------------------

6. மணல் கயிறு
---------------

இயல்பியலில் அதிக கவனத்தைப் பெற்று வரும் மற்றொரு துறை திட,திரவ பொருள்களை ஆராயும் இறுகுநிலை இயல்பியல் ஆகும். சென்ற நூற்றாண்டின் முன் ஐம்பதாண்டுகளில் இத்துறையிலும் குவாண்டம் இயங்கியல் தொடர்பான கோட்பாடுகளே முன்னுரிமை பெற்று விளங்கின. அக்கோட்பாடுகள் இறுகுப்பொருட்களின் குறைக்கடத்தி, மிகுகடத்திப்பண்புகள், மின்காந்தப்பண்புகள், ஒளிமப்பண்புகள் போன்றவற்றை விளங்கச்செய்தன. நூற்றாண்டின் பின்பகுதியில் கடந்த இருபது வருடங்களாக முன்னர் பொறியியல் மட்டுமே பாவித்துக்கொண்டிருந்த உராய்வு, பாகு, இழைமப் பண்புகள் போன்ற குவாண்டம் பார்வையில் பெருஅலகுப் பண்புகளை இயல்பியளாளர் புது கணித, கோட்பாட்டு உதவிகொண்டு மீள்பார்வை செய்ய ஆரம்பித்தனர். பெருஅலகு இயல்பியலுக்கு இது மறு வசந்த காலம் என்றே சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பல சோதனைகள் செய்யப்பட்டன. முக்கியமாக மணற்குவியல்களின் சரிதல்-நிற்றல் பற்றிய சோதனைகள், மணல்த் தொகுதிகளின் ஒட்டும், உராயும், கடினமாகும் நெகிழும் பண்புகளைப்பற்றிய சோதனைகள், கோட்பாடுகள் இவற்றைச்சொல்லலாம். மேலே நடந்தால் கடினமாக இருக்கும் மணல் எப்படி மணல் கடிகாரத்தில் ஒழுகுகிறது, புதைமணல்களில் பதற்றத்துடன் கைகாலை அசைத்தால் மேலும் முழுகுவதும், நிதானமாக மேலே இழுக்க முனைந்தால் அதுவே இறுகிக் காண்பதும் ஏன் போன்ற பல கேள்விகள்.
-------------------------------------
தமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்
------------------------------------

அண்டவியல்: cosmology

நிரையீர்ப்பு இடைவினை:: gravitational interaction
மின்காந்த இடைவினை: electromagnetic interaction
வல்வினை: strong interaction
மெல்வினை: weak interaction
மறைப்பரிமாணங்கள்: hidden dimensions
ஒருங்குமயமாக்கல்: unification

துகள்முடுக்கி: particle accelerator
குவாண்டநிறையங்கியல்: quantum chromodynamics

வளிமண்டலம்: atmosphere
கோளிறங்கு பொறி: lander

நானோ குழல்கள்: nano tubes
அணுச்சிதைவு: atomic fission
அணுச்சேர்ப்பு: atomic fusion
குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion

அணுத்தளங்கள்: atomic layers
பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties
இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics
இடைப்பரப்பு: interface
வெளிப்பரப்பு: surface
சமச்சீர் நிலை: equilibrium
திசைமுகம்: orientation

மாதிரிகளாக: models
உரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages
உயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems

சீரற்றதிண்பொருள்கள்: amorphous materials
கண்ணாடிகள்: glass; vitreous
படலங்கள்: membranes, surfaces

படிச் செல்கள்: cloned cells(--------more )

20 comments:

Boston Bala said...

வாவ்!

Venkat said...

அருள் - அற்புதம். தொடர்ந்து பிற துறைகளையும் பற்றி எழுத வேண்டும்.

1. இழைக் கோட்பாடு என்று சொல்வதைக் காட்டிலும் இழைக் கோட்பாடுகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டன இருக்கின்றன. இழைகளில் ஆய்வு செய்யும் நண்பர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவு அவநம்பிக்கையும் உண்டு. இங்கே பல்கலைக்கழத்தில் இருக்கும் ஒரு நண்பன் "நாவிதன் வேலை" என்று சலித்துக் கொள்கிறான். ஆனால் உண்மையில் 2005 இதை நம்பிக்கையை நோக்கிச் செலுத்தியிருக்கிறது என்று சொல்வதுதான் சரி.

3. ஆமாம், சனியைப் பற்றி நாம் நிறையத் தெரிந்துகொண்டது இந்த வருடம்தான். இதற்கான பாராட்டுகள் நாஸாவிற்கும் ஐரோப்பிய விண்ணாய்வுத்துறைக்கும் சமமான அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒன்றிரண்டு சோதனைகள் பிழைத்துப்போய் விண்கலன்கள் வெடிக்கும்பொழுதுதான் நாஸாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம். தொடர்ச்சியான அற்புத வெற்றிகள் நாஸாவிற்கு எப்பொழுதுமே சாத்தியமாகியிருக்கின்றன.

4. இதுதொடர்பான இன்னும் பல ஆய்வுகள் இப்பொழுது சந்தைக்கு வரத்தொடங்கியிருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் நான் ஆர்டர் செய்து காத்திருக்கும் நானோ இழைகள் பொருந்திய டி.சர்ட் வந்துவிடும். (கலையாதது, கசங்காதது, அழுக்கு படியாதது, நீர் ஒட்டாதது என்று விளம்பரித்திருக்கிறார்கள்).

5. இந்தக் குளிர்ப்பிணைவு, மேசைப்பரப்பு பிணைவுச் சாதனம் எல்லாம் அவ்வப்பொழுது வந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் உற்பத்தியாகும் நியூட்ரானின் அறுவடை செய்யப்பட்ட செலவைக் காட்டிலும் மிகக் குறைவு. (அதாவது அறிவியல் பூர்வமாக சாத்தியாமனவை என்றாலும் நுட்பம் வளர வேண்டும்). இதற்கு இன்னும் பலப்பல வருடங்கள் பிடிக்கும் என்றுதான் நன் நம்புகிறேன்.

6. அருள் - இது குறிப்பாக எந்த ஆராய்ச்சி என்று சுட்டி தர முடியுமா (எல்லாவற்றுக்குமே சுட்டி தந்தால் நலம்).

Jayaprakash Sampath said...

xcellent... pls continue

arulselvan said...

பாலா, நன்றி.

வெங்கட்:
வருடத்திய science, nature, physics today, prl and phil mag ஐ தொகுத்தது. டிசம்பரில் எழுதியது. சுட்டிகளை அப்புறம் தொகுத்து தருகிறேன்.

வெங்கட், சன்னாசி, சுந்தரமூர்த்தி, சுந்தர வடிவேல், தங்கமணி, ரமணி போன்ற அறிவியல்க்காரர்கள் சரியாக இல்லாவிட்டால் தயவுசெய்து திட்டிவிட்டு சரிசெய்யவும்.

அருள்

சன்னாசி said...

அருள் - நல்லதொரு விஷயம்; தொடர்ந்து எழுதவும். என்னால் புரிந்துகொள்ளமுடிவதை எடுத்துக்கொள்கிறேன்.

உயிரியல் தொடர்பாக - ஒருவேளை நீங்கள் இன்னும் இதைப் பார்க்கவில்லையாயின் -
http://scienceblogs.com/ - இதில் gnxp என்ற வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன் - மிக சுவாரஸ்யமான வலைப்பதிவு.
http://blogs.nature.com/ng/freeassociation/

இன்னும் பல இருக்கக்கூடும்... வேறு கிடைத்தாலும் தெரிவிக்கிறேன்.

Venkat said...

அருள் - கலைச்சொற்கள் பயன்பாடு குறித்து (இவை என் பார்வையில். பிழை என்றால் தெரியப்படுத்தவும்).

குவாண்டநிறையங்கியல்=குவாண்டம் நிறவியங்கியல்: quantum chromodynamics
(மேலே சரியாகத்தான் வந்திருக்கிறது, இங்கேதான் தட்டான் (typo) )

அணுச்சிதைவு: atomic fission. இது அணுப்பிளவு என்றிருக்க வேண்டும். சிதைவு என்பது decay என்று பொருள்படும்.

அணுச்சேர்ப்பு: atomic fusion. இது அணுப்பிணைவு என்றிருக்க வேண்டும். சேர்ப்பு என்பது addition என்று பொருளாகும்.

குளீர் அணுச்சேர்ப்பு: cold fusion. குளிர்ப்பிணைவு - Cold Fusion.

அணுத்தளங்கள்: atomic layers. அணுப்படலங்கள் என்று சொல்லலாமா? தளம் என்பது Plane என்பதற்குப் பயன்படுகிறது. பல்படலம் - multilayer, ஈர்படலம் - bilayer, etc.

பெருஅலகுப் பண்புகள்: macroscopic properties. இது பெரும என்று இருக்க வேண்டும். பெரும - macro சிறும- micro என்பதை நாம் முன்னொட்டிகளாகப் பயன்படுத்துகிறோம்.

இறுகுநிலை இயல்பியல்: condensed matter physics. இது ஒருங்குநிலை இயல்பியல் என்று இருக்க வேண்டும். இறுகுதல் என்பது கெட்டியாதல் என்று பொருள்படும். கூழ்மம் (Colloid) உள்ளிட்ட பல ஒருங்கங்களில் இறுக்கம் கிடையாது. தொடர்பாக போஸ்-ஐன்ஸ்டைன் ஒருங்கி = Bose-Einstein Condensate என்று நான் முன்னர் பயன்படுத்தியிருக்கிறேன்.

வெளிப்பரப்பு: surface. Surface என்பதை பரப்பு என்று மாத்திரம் சொன்னால் போதுமே. புறப்பரப்பு என்பது Outer Surface என்பதையும் வெளிப்பரப்பு என்பது குறிப்பிட்ட பொருளை விடுத்து வெளியே இருக்கும் பரப்பையும் குறிக்கப் பயன்படும்.

படலங்கள்: membranes, surfaces. Membrane என்பதைச் சவ்வுகள் என்று பாடப்பொத்தகங்களில் பயன்படுத்துகிறார்கள். (உ-ம்: சவ்வூடுபரவல்), படலம் என்பது நான் மேலே காட்டியிருப்பதைப் போல layers என்பதற்குப் பயன்படுத்தலாம்.

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
தொகுப்புக்கு நன்றி. தொடருங்கள். குற்றம் கண்டுபிடிக்கும் அளவுக்கெல்லாம் இவற்றில் எனக்கு புலமை இல்லை. நான் சொல்ல நினைத்த இரண்டு விஷயங்களை வெங்கட் சொல்லிவிட்டார்:
1. இவற்றைப் பற்றிய கட்டுரைகளுக்கான சுட்டிகள் (இணையத்திலிருந்தால்) அல்லது நூற்பொருள் விவரங்கள் கொடுத்தால் நலம்.
2. கலைச்சொற்களை தரப்படுத்துதல். பாடப் புத்தகங்களிலிருந்து படித்தவை:
அ. nuclear fission -- அணுக்கருப் பிளப்பு
ஆ. nuclear fusion -- அணுக்கருப் பிணைப்பு
இ. outer surface -- புறப்பரப்பு (surface tension க்கே புறப்பரப்பு இழுவிசை என்று தான் படித்திருக்கிறோம்)
ஈ. hydrophobic -- இதை நான் 'நீரஞ்சு' என்று மொழிமாற்றி இருந்தேன்
உ. membrane -- சவ்வு

Thangamani said...

அருள்

நல்ல முயற்சி. எளிதாகவும், சுவையாகவும் இருக்கிறது. பல்லி விழாப் பலன் அருமை. தொடருங்கள்.

arulselvan said...

சன்னாசி சுட்டிகளுக்கு நன்றி. எழுதியதில் தப்பாய் ஏதாவது இருந்தால் திருத்துங்கள்.

வெங்கட்: திருத்தங்களுக்கு நன்றி. இணைச்சொற்களைப் பற்றி தொடர்ந்து தொகுத்துச் சரி பார்க்க வேண்டியிருக்கிறது. இனிமேல் இடுகைகளின் முடிவில் அவற்றைச் சேர்ப்பது என்று நினைத்திருக்கிறேன். மற்றவர்கள் சரி பார்க்கவும், மாற்றுச் சொற்களை காட்டவும், பயன்படுத்தவும் உதவியாக இருக்கும். சிலவற்றை மாற்ற வேண்டும். வாரக்கடைசியில் செய்கிறேன்.

இழைக்கோட்பாடுகள் பற்றி : johnny got religion என சொல்லத்தக்க அளவில் கடந்த இருபதாண்டுகளாக அதன் இயக்கம் இருந்தாலும் இப்போது ஒரு 'அழகான' வடிவுக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. உண்மையோ இல்லையோ சுவாரசியம் இக்காலம் எனச் சொல்லலாம். விரிவாக எழுதவேண்டும்.
பிரகாஷ், தங்கமணி: நன்றி.

- அருள்

-/பெயரிலி. said...

அருள் பயனுள்ள தொடர்.
சின்னச்சந்தேகம்; இயற்பியல் நோக்கிலே தெரியவில்லை; ஆனால், மண்ணியல் நோக்கிலே, "மேலே நடந்தால் கடினமாக இருக்கும் மணல் எப்படி மணல் கடிகாரத்தில் ஒழுகுகிறது, புதைமணல்களில் பதற்றத்துடன் கைகாலை அசைத்தால் மேலும் முழுகுவதும், நிதானமாக மேலே இழுக்க முனைந்தால் அதுவே இறுகிக் காண்பதும்" என்பனவற்றுக்கு , மட்டுகட்(மண்+துகள்)தன்மையின் அடிப்படையிலே விளக்கமிருப்பதாக ஞாபகம் (பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னாலே கற்பித்தவை. தூசு தட்டவேண்டும் ;-()

மு. சுந்தரமூர்த்தி said...

அறிவியலோடு கொஞ்சம் அரசியல்:
நேற்று புஷ்ஷின் 'நாட்டு நிலவரம்' உரையில் 'ஆற்றல் சுதந்திரம்' முக்கிய இடம் பெற்றிருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் பொருண்மை அறிவியல் (physical sciences) ஆராய்ச்சிக்கான திட்ட முதலீடு இரட்டிப்பாக்கப்படும் என்று சொல்லியிருப்பது முக்கியமானது. கடந்த வருடங்களில் 'biodefense' என்ற பேரில் ஆராய்ச்சிக்கான பணம் கணிசமாக திசை திருப்பப்பட்டிருந்தது. அவர் இப்போது மாற்று எரிபொருள், நேனோ தொழில்நுட்பம், அதிவேககணியம் போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழத்த வேண்டும் என்று பேசியிருப்பது ஆறுதலான விஷயம். ஆக நீங்கள் குறிப்பிட்டுள்ள சில துறைகளூக்கு 'ஒளிமயமான எதிர்காலம்' இருக்கிறது என்று நம்புவோம்.

arulselvan said...

ரமணி
இங்கே:
http://prola.aps.org/abstract/PRL/v88/i17/e175501
தூசி தட்டி சட்டுப்புட்டென்று எழுதவும்
:-)
அருள்

இளங்கோ-டிசே said...

அருள் நல்லதொரு முயற்சி. முக்கியமாய் முற்றுமுழுதான தமிழில் இப்படியான கட்டுரையை எழுதியிருந்தது இன்னும் பிடித்திருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் பல என்னளவில் புதியவை, புரிந்து கொள்ள முயல்கின்றேன்.

arulselvan said...

சுந்து:
கலைச் சொற்களைத் தரப் படுத்துதல் என்பதை அனைவரும் தமக்கே ஏற்றவாறு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே வழி வெளியிடப்படும் அனைத்து அறிவியல் தொழில்நுட்பப் புத்தகங்களிலும் 700 பிரதிகள் அரசு கொள்முதல் செய்யும் - தரப் படுத்திய சொற்களைக் கொட்டிருந்தால் என்று அறிவித்தால் தானாக தரப் படுத்தல் வந்துவிடும். ஆனால் இதை யார் செய்வது?
அருள்

arulselvan said...

டீசே
enjoy!
அருள்

மு. சுந்தரமூர்த்தி said...

அருள்,
கலைச்சொற்களை தரப்படுத்தலை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அல்லது தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற அமைப்புதான் செய்ய முடியும். என்னிடம் கலைக்கதிர் அகராதி மூன்று தொகுதிகளும், மணவை முஸ்தபா தொகுத்த இரண்டு தொகுதிகளும் உள்ளன. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு (கலைக்கதிர் பரவாயில்லை).

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கலைக்கதிர், தமிழப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், இலங்கை அரசு போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட அகராதிகளை தேடக்கூடிய வகையில் வலையேற்றியிருக்கிறார்கள். இங்காவது ஒரு குழு அமைத்து ஆண்டுக்கொருமுறை புதுச்சொற்களைத் தரப்படுத்தி இற்றைப்படுத்தலாம்.

(சுரதாவில் தட்டச்சு செய்வதால், பிழகளைப் பொருத்தருள்க!)

arulselvan said...

சுந்து

தமிழ் virtual university மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள்' - இந்த இரண்டையும் முடிந்தவரை பயன்படுத்துகிறேன். சிலநேரங்களில் முன்பு படித்தது (புறப்பரப்பு போன்றவை) மறந்து விடுகிறது. ஆனாலும் எழுதும் போது தடையின்றி எழுதிவிட்டு பின்னர் சரியா என்று பார்த்துக்கொள்ளலாம் என்றே எழுதுவது வழக்கம். சில சமயம் பின்னர் திருத்துவதில்லை - தவறிப்போகிறது. ஆனால் சில சொற்கள் இந்த பல்கலைத்தொகுப்புகளிலேயே சரியில்லை போல் தோன்றுவதுண்டு.
அருள்

Sudhakar Kasturi said...

«Õû,
Á¢¸ «Õ¨ÁÂ¡É ¦¾¡ÌôÒ. þ¨Æ째¡ðÀ¡Î¸û ÌÈ¢òÐ ±Ø¾ôÀ𼨾 ÁüÈ ¿ñÀ÷¸û ¦º¡ýÉЧÀ¡Ä , Íðʸû ¾ó¾¢Õó¾¡ø þýÛõ ¯¾Å¢Â¡¸ þÕó¾¢ÕìÌõ.
þ¨Æ째¡ðÀ¡Î¸û ÌÈ¢òÐ º¢Ú ¸ðΨÃò¦¾¡¼÷ www.maraththadi.com ø ŨħÂüÈôÀðÎûÇÐ.
¿ñÀ÷¸û ¾í¸û À¢ýëð¼í¸¨ÇÔõ ¸ÕòÐ츨ÇÔõ ¾ÃÄ¡õ.
//இந்த பல்கலைத்தொகுப்புகளிலேயே சரியில்லை போல் தோன்றுவதுண்டு//
¯ñ¨Á. Ó츢ÂÁ¡¸ þÂüÀ¢Âø ,§Å¾¢Âø ¦º¡ü¸Ç¢ý ¯ÕÅ¡ì¸õ «ÅüÈ¢ý þÂíÌ¿¢¨Ä ÌÈ¢òÐ ÁðΧÁ «¨Áó¾¢ÕôÀ¾¡¸ô Àθ¢ÈÐ. ¯¾¡Ã½Á¡¸ addition & integration §ÅÚ ±ýÀ¨¾ þ¨Å ºÃ¢Â¡¸ ¯½÷òО¢ø¨Ä.
«ýÒ¼ý
¸.;¡¸÷

Sudhakar Kasturi said...

My earlier comment had the TSCII 1.7 and Unicode mix. Sorry about that. Pls find the unicode version below. Pls delete my earlier comment from your blog.
அருள்,
மிக அருமையான தொகுப்பு. இழைக்கோட்பாடுகள் குறித்து எழுதப்பட்டதை மற்ற நண்பர்கள் சொன்னதுபோல , சுட்டிகள் தந்திருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்.
இழைக்கோட்பாடுகள் குறித்து சிறு கட்டுரைத்தொடர் www.maraththadi.com ல் வலையேற்றப்பட்டுள்ளது.
நண்பர்கள் தங்கள் பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் தரலாம்.

//இந்த பல்கலைத்தொகுப்புகளிலேயே சரியில்லை போல் தோன்றுவதுண்டு//

உண்மை. முக்கியமாக இயற்பியல் ,வேதியல் சொற்களின் உருவாக்கம் அவற்றின் இயங்குநிலை குறித்து மட்டுமே அமைந்திருப்பதாகப் படுகிறது. உதாரணமாக addition & integration வேறு என்பதை இவை சரியாக உணர்த்துவதில்லை.
அன்புடன்
க.சுதாகர்

பத்மா அர்விந்த் said...

அருள்: எளிமையாக இருக்கிறது. மருத்துவ துறைகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக புற்றுநோய், மற்றும் செல்களின் பிளவு பற்றிய கருத்தில். இதை பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்