sf - அறிவியல் புனைகதைகள் (அறிபுனைவுகள்) என்றால் இன்றும் அமெரிக்கப் புனைவுகளே பலருக்கும் நினைவுக்கு வரலாம். ஹாலிவுட் வேறு பிளாஸ்டிக் வினைல் விலங்குப் பதுமைகளிலிருந்து முன்னேறி cg என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் வந்தபிறகு (Tron வந்தபோது அதைப்பார்த்த மக்கள் யாராவது இருந்தால், ஒரு ஹலோ- அப்புறம் தனிமடல் போடுகிறேன். :-) ) பல படிகளாக உருமாறி இப்போது டெமி மூருக்கு பதிலாக ஒரு ஏலியன் நாயகியே பரவாயில்லை எனும்படி வளர்ந்து விட்டது. எழுபதுகளில்(லேயே) அமெரிக்க sf பெருங்குவியலை kitsch என ஒரு போலந்து நாட்டு அறிபுனைக் கதையாசிரியர் இடதுகையால் விலக்க அவரை அமெரிக்கக் கூட்டம் ஜாதிப்பிரஷ்டம் செய்தாலும் அவரது கதைகளை படிக்காமல் யாராலும் தப்பிக்க இயலவில்லை. அவர் Stanislaw Lem . நேற்று இறந்து விட்டார்.
முதலில் படித்தது அவருடைய நாவலான சோலரிஸ் ( Solaris) தான். இதைப்போன்ற ஒரு கதையை அதற்கு முன்னும் பின்னும் நான் படித்ததில்லை. பல அறிபுனைவுகளைப்படிக்கும் போது நமது புராணக்கதைகளையே சற்றே தூசிதட்டி மெருகேற்றி இற்றை-அற்றை-எற்றைப் படுத்திச் சொன்னால் இதுபோல இருக்கும் எனத் தோன்றலாம். ஆனால் சோலாரிஸ் வேறுவகையானது.
நம் உள்மனதின் இருப்பையே அசைக்கக் கூடியது. அறிவு என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? உணர்விப்பதுவே என்றார் அருணகிரிநாதர். பிற/அயல் உயிரிகளுக்கு உணர்விப்பது என்றால் என்ன? ஒரு Jacobian Monad ஆக உள்வாங்கியிருக்கும், முழுதும் கடலால் ஆன பெரும் புவிக்கோள் ஒன்றை விண்கலத்தில் சென்றடையும் மனிதர்களின் உள மாற்றங்களை, சிதைவுகளைப் பற்றியது இக்கதை. நண்பர்களே, ஒரே ஒரு அறிபுனைவைத்தான் படிப்பேன் என்றால் இதைப் படியுங்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். லெம்மைப் பற்றியும் பிறரது அறிபுனைவுகளை பற்றியும் நிறையப் பேசலாம்.
முன்னொரு இடுகையில் அவரைப்பற்றியும் அவரது நண்பரைப் பற்றியும் சிறு சுட்டி ஒன்று கொடுத்தேன். இங்கே. இதே சோலரிஸ் கதையை எனக்குப் பிடித்தமான இயக்குநர் அந்ரை டார்கோவ்ஸ்கி (Andrei Tarkovski) மாஸ்கோவில் திரைப்படமாக எடுத்தார். (ஹாலிவுட் இதே கதையை சமீபத்தில் எடுத்தது. அதை நான் பார்க்கவில்லை. ரவி சீனிவாஸ் ஹாலிவுட் படத்துக்கு ஒரு விமரிசனம் எழுதினார் என நினைக்கிறேன்) இத்திரைப்படத்தை அவருடைய மற்றொரு படமான ஸ்டாக்கர் (stalker) உடன் சேர்த்துப் பார்க்கவும்.
டார்கோவ்ஸ்கியின் வீச்சு புலப்படும். லெம்மின் பல சிறுகதைகளையும் படித்தால் உயிர், அறிவு, மனிதத்துவம், இருப்பு இவற்றின் அண்டப் பரிமாணங்களில் ஆன பொருள் என்பதைப்பற்றிய ஓயாத கேள்விகளைக் காணலாம். அறிபுனைவுகளின் முழு வீச்சு என்பது பிற மைய இலக்கியப் பாடுபொருள்களிலிருந்து மாறுபட்டது என்பதையும் அறிபுனைவுகள் தொட்டுச் செல்லும் பல விதயங்களை மைய இலக்கியத்தால் அணுக்முடியாது என்பதையும் குறித்தும் விரிவாக கருத்துப் பறிமாற்றமும் செய்யலாம். தமிழில் மொழிபெயர்க்க Lem, Philip K Dick, Ray Bradbury போன்றவர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.வெங்கட் சமீபத்தில் ஒரு லெம் கதையை பெயர்த்தார். அது என்ன ஆச்சு? பிலிப் கே டிக் -கின் பல கதைகள் இப்போது சினிமாவாக வர ஆரம்பித்து விட்டன. அவர் தமிழ் எழுத்தாளர்களில் புதுமைப் பித்தன் போன்றவர் என்று முன்பு ஒருமுறை எழுதிய ஞாபகம். லெம் முக்கு இணையாக எந்த தமிழ் எழுத்தாளரக் கூறலாம்? யாருமில்லை.