Tuesday, April 04, 2006

ஆக்டேவியா பட்லர் - Octavia Butler

வெள்ளைக்கார விடலைப் பையன்களின் அண்டத்தைக் கையகப்படுத்தும் கனவுகளுக்கே பழைய அமெரிக்க அறிபுனைவுகள் தீனிபோட்டுக்கொண்டிருந்தன. ஆனால் 1960-70 களில் உள்ளிருந்தே கிளம்பிய புதுஅலைப் போராட்டம் அப்போதைய இளம் எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்பட்டு அறிபுனைவுகள் பல்வேறு மானுட உறவுத் தளங்களை அடையத் தலைப்பட்டன. முதன் முதலில் அறிபுனைவுகளில் உடலுறவு கூட ஓரிருவரி எழுத முயற்சித்தார்கள். இதேகாலத்தில் பெண்ணியக்கருத்துகளும் பரவலாக துவங்இயதால் சில பெண் எழுத்தாளர்கள் அறிபுனைவுகள் வழங்கும் பரிசோதனைச் சாத்தியங்களை வேகமாக வரித்து நல்ல பல கதைகள் எழுத ஆரம்பித்தனர்.
சென்ற பதிவில் ஸ்டானிஸ்லா லெம்மைப் பற்றி எழுதிய பிறகு வெகுநாளாய் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த 'அறிபுனைவுகளில் பெண்ணியம்?' என்ற இடுகையை எழுதலாம் என்று நினைத்து முதலில் பெண்கள் எழுதிய எனக்குப் பிடித்த கதைகளான வாண்டா மெகின்டாயர் - இன் "Of Mist, Grass and Sand " என்ற கதையைப் பற்றியும் ஆக்டேவியா பட்லர்- இன் "BloodChild " என்ற கதையைப் பற்றியும் எழுதலாம் என்று இணையத்தில் அவர்கள் புகைப்படம் தேடப்போனேன்.
ஆக்டேவியா பட்லர் சென்ற பிப்ரவரிமாதம் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார் என்ற செய்தியைப் பார்த்ததும் சற்று நேரம் ஏதும் எழுதத் தோன்றவில்லை.
ஆக்டேவியா பட்லரின் கதைகளுள் அவரின் Bloodchild ஐத்தான் முதலில் படித்தேன். பெரும் தேள்கள் போன்ற ட்லிக் என்று அழைக்கப்படும் உயிரிகள் வாழும் ஒரு கோளில் மனிதர் இறங்கிவிடுகிறார்கள். மனிதர் தோற்றுப்போய் ட்லிக்களிடம் அடிமைகளாக பிழைக்கிறார்கள். அதுவும் எப்படி? ட்லிக்குகள் இனவிருத்திக்கு நன்கு வளர்ந்த திடகாத்திரமான மனித ஆண்களின் உடம்புக்குள் முட்டைகளை யிடுகின்றன. முட்டைகள் பொறித்து உடம்பைக்கிழித்து வெளியேறும்போது நிச்சயம் அம்மனிதன் இறந்துவிடுவான். மனிதப் பெண்கள் மனிதர்களின் இனப்பெருக்கத்துக்கே உள்ளனர். பலதலைமுறைகளுக்குப் பிறகு இப்போது இவ்வாறு முட்டையிடப்பட்ட ஆண்களில் பேறுகாலத்தின்போது சிலரை யாவது காப்பாற்ற வழிகள் கண்டுபிடிக்கிறார்கள். மனிதர்களிலிருந்தே பிறப்பதால் ட்லிக்குகள் மனிதர்களைத் தாம் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றன. ஒரு ஆண் தன் மனைவிமூலம் பெற்ற மனிதக்குழந்தையும், அவனைக்கிழித்து வெளிவரும் ட்லிக் குழந்தை உயிரியும் சகோதர உறவுடனேயே வளர்கின்றனர். இப்படி ஒன்றுக்குள் ஒன்றாய் பிணைந்து போன சார்பு வாழ்கையில் சில மனிதர்களுக்கு அதிலும் ஆண்களுக்கு உவப்பில்லை. பதுக்கிய துப்பாக்கிகளை ட்லிக்குகள் மிகுந்த மன விசனத்துடன் இப்படி தவறான பாதக்குச் செல்வதாக வருத்தப்பட்டு பறிமுதல் செய்கின்றன....
விரும்பி ஏற்கும் அடிமைத்தனம், ஆண் பெண் உறவு, பலகாலம் இணைந்து சார்ந்து வாழ்வதாலேயே நியாயப் படுத்தப் படும் ஏற்றத்தாழ்வுகள் ... இப்படி பல தளங்களில் பொருள்காணக்கூடிய கதை இது. ஒரு அமெரிக்க கருப்பின பெண் என்றே அடையாளம் காணப்படும் ஆக்டேவியா பட்லர் எழுதிய அருமையான கதை . Genre materials என்பார்கள் - அதை வைத்தே சமுதாயக் கட்டுமானங்களை அறிபுனைவுகள் எப்படி பலமாக அசைக்க முடியும் என்பதற்காக இந்தக் கதையைக் காட்டலாம்.
அவரது wild seed ஐப்பற்றித்தான் விரிவாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் அவரின் அகால மரணச் செய்தியில் ஏதோ இதை இடுகிறேன்.

1.http://www.boingboing.net/2006/02/26/rip_octavia_butler_g.html

2.http://www.salon.com/books/feature/2006/03/17/butler/index_np.html
(salon நினைவஞ்சலி)
3.(kindred பற்றி ஒரு உரையாடல்)
http://www.wab.org/events/allofrochester/2003/interview.shtml
4.http://www.locusmag.com/2000/Issues/06/Butler.html
(லோகஸ் மகஸீன்னில் வந்த பேட்டியின் துணுக்குகள்)