சென்ற பதிவில் ஸ்டானிஸ்லா லெம்மைப் பற்றி எழுதிய பிறகு வெகுநாளாய் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த 'அறிபுனைவுகளில் பெண்ணியம்?' என்ற இடுகையை எழுதலாம் என்று நினைத்து முதலில் பெண்கள் எழுதிய எனக்குப் பிடித்த கதைகளான வாண்டா மெகின்டாயர் - இன் "Of Mist, Grass and Sand " என்ற கதையைப் பற்றியும் ஆக்டேவியா பட்லர்- இன் "BloodChild " என்ற கதையைப் பற்றியும் எழுதலாம் என்று இணையத்தில் அவர்கள் புகைப்படம் தேடப்போனேன்.
ஆக்டேவியா பட்லர் சென்ற பிப்ரவரிமாதம் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார் என்ற செய்தியைப் பார்த்ததும் சற்று நேரம் ஏதும் எழுதத் தோன்றவில்லை.
ஆக்டேவியா பட்லரின் கதைகளுள் அவரின் Bloodchild ஐத்தான் முதலில் படித்தேன். பெரும் தேள்கள் போன்ற ட்லிக் என்று அழைக்கப்படும் உயிரிகள் வாழும் ஒரு கோளில் மனிதர் இறங்கிவிடுகிறார்கள். மனிதர் தோற்றுப்போய் ட்லிக்களிடம் அடிமைகளாக பிழைக்கிறார்கள். அதுவும் எப்படி? ட்லிக்குகள் இனவிருத்திக்கு நன்கு வளர்ந்த திடகாத்திரமான மனித ஆண்களின் உடம்புக்குள் முட்டைகளை யிடுகின்றன. முட்டைகள் பொறித்து உடம்பைக்கிழித்து வெளியேறும்போது நிச்சயம் அம்மனிதன் இறந்துவிடுவான். மனிதப் பெண்கள் மனிதர்களின் இனப்பெருக்கத்துக்கே உள்ளனர். பலதலைமுறைகளுக்குப் பிறகு இப்போது இவ்வாறு முட்டையிடப்பட்ட ஆண்களில் பேறுகாலத்தின்போது சிலரை யாவது காப்பாற்ற வழிகள் கண்டுபிடிக்கிறார்கள். மனிதர்களிலிருந்தே பிறப்பதால் ட்லிக்குகள் மனிதர்களைத் தாம் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றன. ஒரு ஆண் தன் மனைவிமூலம் பெற்ற மனிதக்குழந்தையும், அவனைக்கிழித்து வெளிவரும் ட்லிக் குழந்தை உயிரியும் சகோதர உறவுடனேயே வளர்கின்றனர். இப்படி ஒன்றுக்குள் ஒன்றாய் பிணைந்து போன சார்பு வாழ்கையில் சில மனிதர்களுக்கு அதிலும் ஆண்களுக்கு உவப்பில்லை. பதுக்கிய துப்பாக்கிகளை ட்லிக்குகள் மிகுந்த மன விசனத்துடன் இப்படி தவறான பாதக்குச் செல்வதாக வருத்தப்பட்டு பறிமுதல் செய்கின்றன....
விரும்பி ஏற்கும் அடிமைத்தனம், ஆண் பெண் உறவு, பலகாலம் இணைந்து சார்ந்து வாழ்வதாலேயே நியாயப் படுத்தப் படும் ஏற்றத்தாழ்வுகள் ... இப்படி பல தளங்களில் பொருள்காணக்கூடிய கதை இது. ஒரு அமெரிக்க கருப்பின பெண் என்றே அடையாளம் காணப்படும் ஆக்டேவியா பட்லர் எழுதிய அருமையான கதை . Genre materials என்பார்கள் - அதை வைத்தே சமுதாயக் கட்டுமானங்களை அறிபுனைவுகள் எப்படி பலமாக அசைக்க முடியும் என்பதற்காக இந்தக் கதையைக் காட்டலாம்.
அவரது wild seed ஐப்பற்றித்தான் விரிவாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் அவரின் அகால மரணச் செய்தியில் ஏதோ இதை இடுகிறேன்.
1.http://www.boingboing.net/2006/02/26/rip_octavia_butler_g.html
2.http://www.salon.com/books/feature/2006/03/17/butler/index_np.html
(salon நினைவஞ்சலி)
3.(kindred பற்றி ஒரு உரையாடல்)
http://www.wab.org/events/allofrochester/2003/interview.shtml
4.http://www.locusmag.com/2000/Issues/06/Butler.html
(லோகஸ் மகஸீன்னில் வந்த பேட்டியின் துணுக்குகள்)
7 comments:
இது அற்புதமான கட்டுரை. நீங்கள் தொடர்ந்து இதை எழுதவேண்டும்.
அருள் நான் ஆக்டேவியா பட்லர் படித்ததில்லை. இனிமேல் கட்டாயம் படிப்பேன். ஆனால் போன வாரம்தான் ஆக்டேவியோ பாஸ்-இன் In Light of India என்ற புத்தகத்தைப் படித்தேன்.
அது என்ன ஆ-விகுதி பெண்ணுக்கும் ஓ-விகுதி ஆணுக்கும் ஒரே மாதிரி பெயர்?
சுவாரஸ்யமான கட்டுரை/எழுத்தாளர்.. தொடர்ந்து எழுதவேண்டுமென்று சொல்லி எழுதவைப்பது இயலாத காரியமென்றே நினைக்கிறேன் :-) ஆனாலும், இதுவும் நான் அறிந்திராத மற்றொரு எழுத்தாளர் - புதிதாக யாரைப்பற்றியேனும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதற்காகவாவது தோன்றுவதைச் சிறு குறிப்புகளாகவேனும் பதியவும். குழந்தை பிறக்கும் முறையைப் படிக்கையில் டேவிட் க்ரானென்பெர்கின் குமட்டவைத்த மற்றொரு படமான The Brood நினைவுக்கு வந்தது - nightmarish ectopic pregnancies ;-)
வெங்கட்:
கட்டாயம் படிக்கவும். பேட்டர்ன் மாஸ்டர் கதைகள் படிக்கப் பட வேண்டியவை. ஆ.பாஸ் - கவிதைகள் சில படித்துள்ளேன் .அவ்வளவே.விகுதிகள் ஸ்பானிஷ்க்கும் , ஆங்கிலத்துக்கும் ஒரே வேரா? தெரியவில்லை.
சன்னாசி:
முடிந்தவரை எழுதுகிறேன். ஆக்டோவியா பட்லர் தமிழகத்தில் நிச்சயமாக பரவலாக மொழிபெயர்க்க வேண்டிய எழுத்தாளர். தலித்திய எழுத்துக்கள் வெறும் ரியலிச மரபிலேயே சாதித்து விடமுடியாது. ontological அடிபிறழ்வுகளைச் செய்யவேண்டும். அதற்கு sf சரியான சட்டகம்.
The brood பார்த்ததில்லை. ரொம்ப யக்கி-யாக இருந்தால் பக்கமே போக மாட்டேன்.
அருள்
//தலித்திய எழுத்துக்கள் வெறும் ரியலிச மரபிலேயே சாதித்து விடமுடியாது. ontological அடிபிறழ்வுகளைச் செய்யவேண்டும்.//
நிஜம். நான் நினைப்பதுவும் இதுவே. தன்னளவில் அது தொடங்கும்போது அடித்துப் புதைக்கவும் (ஒண்ணுமே புரியலே உலகத்திலே...) பல கும்பல்கள் தயாராகத்தான் இருக்கும். யதார்த்தவாதம் என்பது ஒரு சிறு மண்வெட்டி மட்டுமே, அதுதவிரவும் பிற உபகரணங்கள் இருக்கின்றன என்பதை உணரவேனும் செய்யவேண்டும்.
Arul,
Can u giv me an idea where can i get this "solaris" book in chennai?...preferably paperback. Thx in adavnce.
kavi
i remember seeing 'solaris' in Land Mark @ NH road about an year back.
There is a series of reissues of many 'Classics' currently available in Spencer's Land Mark. You can check out with them. They also can get it for you if you place an order
arul
நான் ஆக்டேவியாவின் புத்தகங்கள் படித்தைல்லை. அறிமுகத்திற்கு நன்றி. சென்ற வாரம் இங்கே ஒரு கருத்தரங்கு (story discussion) அழைப்பு வந்தும் போக முடியவில்லை. உங்கள் பதிவை படித்ததும் போயிருக்கலாம் என்றூ தோன்றுகிறது.
Post a Comment