Monday, May 29, 2006

இலக்கர் -1

'இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்கமிட்டு இருக்குதோ? '

-

"இப்போ நாலரைக்கு கெம்பு கெரெ க்கு வந்துடு. விட்டா ஆறுமாசம் கழிச்சு வியன்னாவிலதான்" என்றாள். அணைத்து விட்டாள். மணி இப்பவே மூணரை. அலுவலகத்திலிருந்து ஓசூர் மிதவை ரயிலுக்கு ஓடி பெருநகரில் புகுந்து அறிவுச்சுனையை அடைவதற்குள் வந்து காத்திருந்து சண்டைபிடிப்பாள். கைக்குக் கிடைத்த அலுவல் சுவடிகளை பையில் திணித்துக்கொண்டான்.பிரிக்காமல் வைத்திருந்த மீன்முட்டை வதக்கல் பொட்டலத்தை ஓரத்தில் அமுக்கினான். மிகவும் பிடிக்கும் என்று ஒன்றுகூட தராமல் தானே சாப்பிட்டுவிட்டு முடிந்தபிறகு.
"சே. மறந்தே போச்சு. வா பழச்சாறுகுடிக்கலாம்" என்று இயல்பாக கேட்பாள்.

--
வரவேற்பில் பிருந்தா இன்னிக்குமா என்பதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். "பரன்.." அவள் முடிக்குமுன்னே டாட்டா என்று நகர்ந்தான். கதவு உணர்ந்து ஒதுங்கியது. வேகநடைபோல் ஓடி நிலையத்தில் கைவிரலைப்பதித்து
கெகெ க்கு சீட்டை உருவிக்கொண்டு நடைபாதையில் ஓடி 3:57 மிதவையைப் பிடித்தான். பையைப்போட்டு அமர்ந்தபோதுதான் கவனித்தான். பக்கத்தில் இலக்கன். உடனே பின்னால் திரும்பிப் பார்த்தான். மிதவைப் பெட்டி முழுவதும் நிரம்பியிருந்தது. ஐந்தாறு இலக்கன்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். மிதவை ஆனேகல் நிலையத்தில் நிற்காமல் கடந்து விட்டது. ஏதோ சரியாக இல்லை என்று நினைத்தான். பக்கத்தில் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தான். இலக்கன் ஐந்தடி உயரம்தான் இருந்தான். உடையில் சில இடங்களில் இருந்த பொறிகள் என்னசெய்ய என்று ஊகிக்கவே இயலவில்லை. கையில் ஒரே ஒரு ஆயுதம் வைத்திருந்தான். திகைப்புக் குச்சியாக இருக்கலாம். அவனே ஒரு ஆயுதம்தான் என்பதை உணர்வானா அவன் என்று தோன்றியது.

இலக்கன் அவன் பக்கம் திரும்பி மெல்லச் சிரித்தான். "தொட்டபெலாபூர் நிலையமா" என்று கேட்டான்.
பரன் ஒரு கணம் அதிர்ந்தான். இலக்கர்கள் இப்படி வெட்டியாக பேசுவார்கள் என அறியான். குரல் கனமாக, ஆழமாக இருந்தது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

"இல்லை கெம்பு கெரெ. நீங்கள்?"
"நாங்களும் அங்கேதான்" என்றான் இலக்கன்.
நாங்கள். ஆறுபேருமா. அச்சம் விர்ரென உடம்பில் பரவியது.
"ஏதேனும் இடைஞ்சலா அங்கே?"

இலக்கன் பதில் தரவில்லை. நேராக திரும்பி அமர்ந்த கொண்டான்.ஜெயநகரிலும் மிதவை நிற்கவில்லை. பரன் தன்னிச்சையாக பாதஅணிக் கயறுகளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். எதிலிருந்து ஓடித்தப்ப எனத்தெரியவில்லை.

இருநூறு அடி ஓடினாலும் இலக்கன் திகைப்பியால் இங்கிருந்தே வீழ்த்திவிடுவான் என்று தெரியும். பையை இறுக்கிப்பிடித்து எழுந்து நின்றான். கெம்பு கெரெ நிலையம் பரந்து விரிந்திருந்தது. மிதவை நின்று கதவுகள்
திறந்தவுடன் அவசரமாய் வெளியில் குதித்தான். சொரசொரப்பு ஊட்டப்பட்ட தரை ஏனோ வழுக்கியது. கீழே விழுந்தவனை நொடியில் தோளைப்பற்றி இழுத்து தலை அடிபடாமல் நிறுத்தினான் இலக்கன். எப்போது இறங்கினான் எப்படி தான் விழும் வேகத்தில் குனிந்தான் என்று பரன் இலக்கனைப் பார்த்தான். அவன் தோளைப் பிடித்த இடம் கல்லில் பட்டாற்போல் வலித்தது.

"பார்த்து." என்றான் இலக்கன் சிரித்துக்கொண்டே.
"நன்றி" என்று பதற்றமாய் கூறிவிட்டு இறங்கு சுழற்படிகளுக்கு நகர்ந்தான். நிலையத்தின் வெளியில் வந்து இலக்கர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று பார்த்தான். தன்னை ஏன் அவர்கள் பின்தொடரவேண்டும் என்று தன் அசட்டுத்தனத்திற்கு தானே இகழ்வாய் தலை அசைத்து சாலையில் இறங்கினான். சனிக்கிழமை கூட்டம் எங்கும் நிறைந்திருந்தது.
பேசி ஒலித்தது.

"கவி? இங்கதான் இருக்கேன். வந்தாச்சு"
"பரன். வந்தியா? மணி நாலரை ஆயாச்சு.இங்க கிழக்குச் சுனையில இருக்கேன்."

சுனையில் எப்போதும்போல் எங்கும் சீனர்களும், அமெரிக்க அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் குவிந்து அலைந்துகொண்டிருந்தார்கள்.
வார இறுதி தரவுச் சுருக்கங்கள் சுனையின் ஐநூறு ஊற்றுகளிலும் மின்கதிர்களாக சுரந்துகொண்டிருந்தன. சுனைக்கு அடியில் இருக்கும் உலகின் ஆகப்பெரிய கணினி மந்தைகளின் திரட்டுகள் பில்லியன் கணக்கில் தரவுச்சரடுகளைக் கோர்த்துப் பொருள் ஆய்ந்து சுரப்பிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. தென்னாசியக் கூட்டரசின் குடிமக்கள் எண்ணும் படியாக ஆங்காங்கே சிலரே இருந்தார்கள். உலகின் பெரிய அறிவுச்சுனையைக் கட்டிமுடித்துவிட்டு அனைத்துப் பழுப்புமனிதர்களும் பெருநகரின் வெளியே சூழ்காடுகளுக்குள் அகன்றுவிட்டனர். சில தென்னாசிய உயரதிகாரிகளும்
அவர்தம் குடும்பங்களுமே நகரில் இன்னும் இருந்தனர்.

"பரன். முட்டாள். இந்த மஞ்சள் மனிதர்களை சுற்றிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப்போய் விட்டது. இப்ப எங்கதான் இருக்கிறே?"
"ஆச்சு. அஞ்சு நிமிஷம்"

பெரும் கிரிக்கட் மைதானம் போலிருந்த பரப்பில் நடுவில் வட்டமாக நூற்றுக்கணக்கில் சுனைகளும் அவற்றில் மொய்த்துக்கொண்டு அயலவர்களும் நிறைந்த கூட்டத்தில் கவி எங்கே இருப்பாளோ என பட்டிக் கதவை திறந்தான்.
ஒரு காவலாளி ஆள் உணர்பொறியைக் காட்டினான். பரன் அருகில் சென்றதும் அவன் ஒருதுளி வியர்வையை தடவி எடுத்துக்கொண்டு உடனே தடுப்புக் கட்டையை விலக்கி வழிவிட்டது பொறி.

"வணக்கம். பரன் அவர்களே" காவலாளி வெடிப்பியைத் தாழ்த்தி கூட்டரசின் உயரதிகாரிக்குறிய மரியாதையைக் காட்டினான்.

பரன் கவனிக்காது உள்ளே புகுந்த வேகத்தில் தூரத்தில் கவி கையசைப்பதைக் கண்டான். திருப்பிக் கையசைத்ததும் அவள் கூவுவது இங்கே கேட்டது. இத்தனை சின்னப் பெண்ணாக இருக்கும் இவளை எப்படி பல்கலைக்கழகத்திலன் ஆய்வுக்கூட்த்தில் சேர்த்தார்கள் என்று அவனுக்கு விளங்கியதே இல்லை.
அவளுக்கு பின்புறம் ஐநூறு அடி தூரத்தில் ஒரு இலக்கன் நிற்பதையும் பார்த்தான்.
வலது புறம் திரும்பினால் சுனைச் சதுக்கத்தின் எல்லையில் இன்னொரு இலக்கன் நகர்வதையும் இடது புற எல்லையில் இன்னொருவன் கூட்டத்தை துருவிப்பார்ப்பதையும் கண்டான்.

அவளை நோக்கி விரைந்தபோது கூட்டத்தில் ஒருவன் " ஆயித்து குரு. ஆரம்பவாகிலி" என்பது கேட்டது. இலக்கன் திகைப்புக் குச்சியை குறிபார்த்து இயக்கினான். கூட்டதில் இரு சீனர்கள் சரிந்தனர். பிறர் விலகி ஓடத் துவங்கினார்கள்.
கவி அவன் கைகளில் வந்து விழுந்தாள். இலக்கன் கூட்டத்தை பிளந்து புகுந்து விரைந்தான். சுற்றிலும் த்டுப்புக் கட்டைகள் மின்னேற்றப்பட்டன. இலக்கர் மூவரும் முக்கோணத்தின் மூன்று முனைகளிலிருந்து அனைவரையும் பத்திச் சேர்த்தார்கள்.--

Wednesday, May 24, 2006

தாயுமாகி நின்றாள் ...

டீசே புத்தகத் தேட்டை வந்து சேர்ந்த குஷியில் இட்ட இடுகையிலதாய்வழிச் சமுதாயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உடனே நினைவுக்கு வந்தது, எப்பொழுதும் போல் ஒரு அறிபுனைவுதான். Joanna Russ எழுதிய "when it changed" என்றொரு சிறுகதை. 1972 ல் வந்தது. அம்மணி பல பெண்ணியவாதக் கதைகளை சுறுசுறு என்று எழுதியவர். அவரின் இந்த ஒரு சிறுகதை மறக்கமுடியாதது.

எங்கோ ஒரு கோளில் மனிதர் குடியேறி பலநாள் ஆகிவிட்டன. நடந்த ஒரு பேரழிவில் ஆண்கள் அனைவரும் இறந்து விடுகிறார்கள். பெண்கள் தமக்குள்ளே முட்டைகளைச் சேர்த்து மரபணுக்களைக் கலந்து இனவிருத்தி செய்து வாழ்கிறார்கள். முப்பது தலைமுறைகளாக! பெண்களே கணவன் மனைவியாக பங்குபற்றி நடத்தும் குடும்பங்கள். இனக்குழுக்கள். ஆண்கள் இல்லை மற்றபடி மனிதரின் பழைய சமூகஅலகுகளும் அடுக்குகளும் அப்படியே. அப்போது ஒருநாள் பூமியிலிருந்து நான்கு ஆண்கள் அந்தக் கோளில் வந்து இறங்குகிறார்கள். கதிர்வீச்சு, போதை, மயக்கநிலை வாழ்வு என புவியில் சிதிலமடைந்துகொண்டிருக்கும் தம் மரபணுக்களின் வீரியம் கூட்டி இனத்தைக்காப்பாற்ற எப்போதோ மறந்துபோன அந்த காலனிக்கு வந்து பார்த்தால் ... ஆண்களே இல்லாத சமுதாயத்தை நம்ப இயலாமல் பார்க்கிறார்கள். கூடியிருக்கும் பெணளைப் பார்த்து அடிக்கடி 'எல்லோரும்' எங்கே என்று கேட்கிறார்கள். 'எல்லோரும்' என்பது ஆண்களை என்பது பெண்களுக்குப் புரிய சற்று நேரமாகிறது.

ஆண்களின் அனைத்துக் காரியங்களையும்,(ஒற்றைக்கொற்றை டூயல் கூட) ஆளுமைச் சாயல்களையும் தாமே வரித்து தம்பகுதியாய் ஆக்கியிருக்கும் அப்பெண்களுக்கு புவியின் ஆட்கள் சொல்லும் நாம் சேர்ந்து மறுபடியும் மனித இனத்தை உரமாக்கவேண்டும் என்பது உவப்பானதாக இல்லை. 'இங்கே இருப்பது அரை மானுடம்தான்' என்கிறான் ஒருவன் பேசும்போது. அப்படியா? கதையைக் கட்டாயம் படியுங்கள்.

ரஸ்ஸின் 'The female man' இன்னொரு புகழ்பெற்ற நாவல். 'தோழியர்' படித்து அனுபவித்து விட்டு விமரிசனம் செய்தால் சரியாக இருக்கும்.-

ஜூன் 2007ல் இடஒதுக்கீடு

அரசு அறிவிப்பு ஏற்பாடு துவங்கிவிட்டது.
2007 ஜூன் மாதத்திலிருந்து உயர் கல்வியில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு வருகிறது.
மழைக்காலத் தொடரில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கல் நடைபெரும் என முடிவாகியுள்ளது.
93ஆம் அரசியல்சட்டத் திருத்தம் அமலாக்கப்படும்.
27% பிற்படுத்தப்பட்டோர்க்கு எனவும், அனைத்து மாணவர் நலன் கருதி அரசுக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படும் எனவும் முடிவாகியுள்ளது.
நாளை எதிர்வினைகள் கடுமையாக இருக்கக்கூடும்


-

Tuesday, May 23, 2006

ஒரு மாலை கடும் வெய்யில் நேரம் ...

இருட்டிய பிறகும் சுட்டெரிக்கும் சென்னைக் கோடை. இரவு வீட்டுக்கு போகும் வழியில் பாண்டிபஜாரை கடக்கும் போது அந்த கழிவுப் புத்தக காட்சிக்குள்ளே சும்மா என்னதான் இருக்கும் பார்க்கலாம் என்று நுழைந்தேன். அமெரிக்காவிலிருந்து எடைபோட்டு டன் 10$ என்று அமரிக்க கம்பெனிகள் இந்திய ஏஜண்டுகளுக்கு விற்கிறார்கள் என்று நினைக்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாகவே பெங்களூரிலும் சென்னையிலும் இப்படி 30, 40 வருட பழைய புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. இருக்கும் கெட்டபழக்கம் இப்படி பழைய புத்தகங்களை பொறுக்குவது என்பதால் தேட ஆரம்பித்து விட்டேன். மேல்மாடியில் இருந்த கூறையின் தணல் பரப்பும் அறையில் விசிறியை சுற்றவைக்காமல் கடை ஆள் கிறுக்குத்தனம் செய்ததால், வியர்வை புத்தகங்களின் மீது சொட்ட சொட்ட தேடவேண்டி இருந்தது. அறிபுனைவுகள் (sf) மட்டுமே நான் வாங்குவதால் குப்பை மலையில் புத்தகங்கள் தாமே மேலெழும்பி தம்மை அறிவித்துக் கொண்டால்தான் ஏதாவது பயனுறும் நிகழ்சி நடக்கும் என்ற நிலைமை. பத்திருபது புத்தகங்களை ஒரு கெஸ்டால்ட் பார்வை பார்த்தால் சில புத்தகங்கள் மட்டும் லேசாக ஆடுவது தெரியும். அவைதான் நாம் வாங்கவேண்டியவை என நமக்கும் அந்த புத்தகங்களுக்கும் தெரியும். இதெல்லாம் ஜன்மஜன்மமாக வரும் தொடர்புகள் என நமக்குத்தான் தெரியுமே.
கிடைத்த முத்துக்களில் சில:

Immortality, Inc.: Robet Sheckley- 40 ரூ. எப்போதோ படித்தது. 58-இல் எழுதிய ஷெக்லியின் முதல் நாவல். அப்போதே அறிபுனைவுகள் பெரும் ஆதரவுபெற்று எதிர்கால அண்டம்கொள்ளும் அளவுக்கு அறிவியல் சாதனைகளின் எதிர்பார்போடு boy meets spaceship வகை புனைவுகள் பரவிக்கொண்டிருந்தன. அழகான எதிர்கால மேய்ச்சல் வெளிகளில் அலைந்து கொண்டிருந்த புனிதப்பசுக்களின் மீது ஷெக்லி 'எருமை' என்று கிராஃபிட்டி சாயவீச்சுக்குப்பி கிறுக்கல்களாக தன் கதைகளை துவக்கிய காலம்.
The World of Null-A: A.E. van Vogt - 20 ரூ.
என்ன சொல்ல. 1948. வான் வாக்ட் எழுதியவற்றை ஆனானப்பட்ட கேம்பல்லே நிராகரிக்கமுடியாமல் அஸ்டௌண்டிங்கில் பதிக்கவேண்டியதாகப் போயிற்று. இவரால் பாதிக்கப்பட்ட பிற்கால எழுத்தாளர்கள்தான் எத்தனைபேர்.
Transition : Vonda McIntyre - 40 ரூ. மக்கின் டாயரின் பிற்கால ஒரு முத்தொடர் நாவல்களில் மத்திய நாவல். முதலாவது மட்டும் படித்திருந்ததால் தொடர்ச்சிக்காக வாங்கியது.
The flight of the Horse: Larry Niven- 20 ரூ. நிவென் எழுதிய hardsf நிறைய உள்ளதால் அவரின் fantasy சேகரிக்க வாங்கியது. நல்ல சிறுகதைகள் சில உள்ளன.
இன்னும் பல.

அறிபுனைவுகளில் ஆர்வமுள்ள சென்னை நண்பர்கள் தவற விடவேண்டாம்.
-

Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீடு - இன்று

இடதுசாரிக் கட்சிகள் தற்போதைய இட ஒதுக்கு முறுக்கு நிலைக்குத் தீர்வாக சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே உள்ளன.
1. பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியகுடும்பத்தாரை இடஒதுக்குத் திட்டத்திலிருந்து விலக்குதல்
2. தற்போது இருக்கும் இடங்கள் போதாமையால், இன்னும் எச்சு இடங்களை அனைத்துப் புலங்களிலும் ஏற்படுத்துதல்
3. முன்னேறிய வகுப்புகளில் மிகஏழை மாணவருக்கும் சில சதவீதம் இட ஒதுக்கீடு செய்தல்

என்னைப் பொருத்தவரை இவை சரியான அறிவுறுத்தல்களாகவே படுகின்றன.

1. ஒரு சரியான வெளியேறு வகைமுறை (exit criteria) இல்லாததாலே பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு காலவரையற்றுப் போவதாக பொதுவில் உணரப்படுகிறது. இது தமிழகம் போன்ற மாநிலங்களைப்பொறுத்தவரை ஓரளவு உண்மையும் கூட.
தமிழகத்தின் தற்போதைய நிலைமையில் சில சாதிகளையாவது பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இப்பட்டியல் கல்வித்துறை பயன்படுத்தலுக்கு மட்டுமாவது மாற்றப்படவேண்டும்.
மிச்சமாகும் இடங்களை பொது இடங்களாக அறிவிக்காமல் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும், அட்டவணை சாதிகளுக்கும் பிரித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் இன்னும் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலே பெரும் சதவீதத்தில் மிகப்பிற்படுத்தப் பட்டோரும் அட்டவணை சாதியினரும் பயன்பெற முடியும். ஓரிரு பத்தாண்டுகளில் தமிழகத்தில் இட ஒதுக்கு தேவைப்படாத நிலைக்குக்கூட இது வழிசெய்யலாம். த்மிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், குஜராத், மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.

ஆனால் இது போன்ற தீர்வு வட இந்திய மாநிலங்களுக்கு சொல்ல முடியுமா எனத்தெரியவில்லை. அவர்கள்தாம் இதைச் சொல்ல முடியும்

2. இடங்களை கூட்டுவது என்பதை செய்தே ஆகவேண்டிய கட்டாயக் காலம் இது. வளரும் பொருளாதாரத்தில் வேலையிடங்களை நிரப்ப ஆட்கள் போதவில்லை என்பதே இப்போதைய நிலைமை. அரசு தாராளமாக இடங்களை இன்னும் 50% கூட்டியும் ஐஐடி போன்ற புது தேசியக் கல்லூரிகளை நிறுவியும் இதை நடத்தலாம்

3. முற்பட்டவருக்கும் பிற மதத்தினருக்கும் சேர்ந்து பொருளாதார அடிப்படையில் சுமார் 10 % வரை ஒதுக்கு கொடுக்கப்பட்டால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நீதிமன்றம் இடையில் புகுந்து 70% இடஒதுக்கீடு ஆகிவிட்டதே என்று கதறக்கூடாது. 100% ஒதிக்கீடு- அவரவர் சாதி விகிதப்படி என்று நடத்தினாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது.மெரிட் ஒன்றும் குறைவுபடாது. அது நியாயமா இல்லையா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.

இடது சாரிகளின் இந்த முயற்சி இப்போதைய வெறி பிடித்து அலையும் கும்பல்களை சற்றே சிந்திக்கவைத்தால் நன்றாக இருக்கும்.

Nuff, sed t he buffalo man

Today I am in a foul mood. In the national capital the sick are beginning to die one after the other. These are the poor who have no other means except going to a government hospital. The meritorious doctors are on strike so there is no one to attend to the dying. They want merit to win for the good of the nation. Otherwise how do we join the developed world in a nanoblink of the eye? Their great struggle for justice is beamed across the nation incessantly like some intellectual napalm that it scorches your mucus tissues first and then burns your skin rapidly. No, usually I don’t swear but am close to it right now. With a degree in one of those II* places you can pontificate for eternity to all the lowly around you about merit, the curious phenomenon of its sudden appearance in free India and its abundance among the upper castes of this country. It is a national shame really.

I am fed up and giving up on the educated elite. I thought a sense of fair play, a hint of decency and a shred of sympathy for a fellow citizen will be attributes you may exhibit as a result of a well rounded education you are gifted with- subsidised totally by the people of the country. A sense of gratitude perhaps for the others who take pride in these institutions even though none in their families have ever enjoyed the privileged life you have in one of the II*s. And these guys think they deserve them. It is a gift the nation gave you man, and you know the so called intellect is as abundant as oxygen in this planet among the animals that chose to walk on their hind legs. Merit! Gosh, is it like say, 'achtung'? These are a bunch of selfish, clannish and racist neuron assemblies. No hope. Welcome to naya bharat.

சோதனைப் பதிவு

தயவுசெய்து சொடுக்க வேண்டாம். இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே.
நன்றி
அருள்

Friday, May 05, 2006

மைசூர்

பெங்களூரை விட எனக்கு மைசூர் பிடிக்கும். சின்ன ஊர் என்பதாலும் மக்கள் இன்னும் தன்மையாக பழகுவாகள் என்பதாலும். மைசூரும் வேகமாக மாறி ('வளர்ந்து' என்பது பொது வழக்கு) வருகிறது. சில காட்சிகள்.


1

அந்நாளைய நினைவு -12
அந்நாளைய நினைவு - 23
மன்னர்கள் நாற் சந்தியில்
4

இன்போஸிஸ் நுழைந்துவிட்டது. ஐந்து வருடம் போனால் இதெல்லாம் இருக்காது.

5
எத்தனை எம்ஜியார் படங்களில் பார்த்திருப்போம்

நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். நஞ்சைய்யன் எனும் நாட்டார் கடவுளுக்கு நஞ்சுண்ட ஈஸ்வரராக ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் முன்பு கங்க மன்னர்களால் திராவிட மரபில் கட்டப்பட்ட,அருமையான, அழகான கோயில். கபினி நதிக்கரையில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இருபத்தைந்து கல் தொலைவில்.

6
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-17
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-28
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-39
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் -410
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்- 4
(தேர்களைப்பற்றி ஒரு 'கலாச்சார' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)

Wednesday, May 03, 2006

இ.தி. 54

-
-

"What is so scary? I just started telling this agent I internalised all the multiplication tables in school and he throws the ms back at me..."


-