Monday, May 29, 2006

இலக்கர் -1

'இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்கமிட்டு இருக்குதோ? '

-

"இப்போ நாலரைக்கு கெம்பு கெரெ க்கு வந்துடு. விட்டா ஆறுமாசம் கழிச்சு வியன்னாவிலதான்" என்றாள். அணைத்து விட்டாள். மணி இப்பவே மூணரை. அலுவலகத்திலிருந்து ஓசூர் மிதவை ரயிலுக்கு ஓடி பெருநகரில் புகுந்து அறிவுச்சுனையை அடைவதற்குள் வந்து காத்திருந்து சண்டைபிடிப்பாள். கைக்குக் கிடைத்த அலுவல் சுவடிகளை பையில் திணித்துக்கொண்டான்.பிரிக்காமல் வைத்திருந்த மீன்முட்டை வதக்கல் பொட்டலத்தை ஓரத்தில் அமுக்கினான். மிகவும் பிடிக்கும் என்று ஒன்றுகூட தராமல் தானே சாப்பிட்டுவிட்டு முடிந்தபிறகு.
"சே. மறந்தே போச்சு. வா பழச்சாறுகுடிக்கலாம்" என்று இயல்பாக கேட்பாள்.

--
வரவேற்பில் பிருந்தா இன்னிக்குமா என்பதுபோல் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். "பரன்.." அவள் முடிக்குமுன்னே டாட்டா என்று நகர்ந்தான். கதவு உணர்ந்து ஒதுங்கியது. வேகநடைபோல் ஓடி நிலையத்தில் கைவிரலைப்பதித்து
கெகெ க்கு சீட்டை உருவிக்கொண்டு நடைபாதையில் ஓடி 3:57 மிதவையைப் பிடித்தான். பையைப்போட்டு அமர்ந்தபோதுதான் கவனித்தான். பக்கத்தில் இலக்கன். உடனே பின்னால் திரும்பிப் பார்த்தான். மிதவைப் பெட்டி முழுவதும் நிரம்பியிருந்தது. ஐந்தாறு இலக்கன்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். மிதவை ஆனேகல் நிலையத்தில் நிற்காமல் கடந்து விட்டது. ஏதோ சரியாக இல்லை என்று நினைத்தான். பக்கத்தில் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தான். இலக்கன் ஐந்தடி உயரம்தான் இருந்தான். உடையில் சில இடங்களில் இருந்த பொறிகள் என்னசெய்ய என்று ஊகிக்கவே இயலவில்லை. கையில் ஒரே ஒரு ஆயுதம் வைத்திருந்தான். திகைப்புக் குச்சியாக இருக்கலாம். அவனே ஒரு ஆயுதம்தான் என்பதை உணர்வானா அவன் என்று தோன்றியது.

இலக்கன் அவன் பக்கம் திரும்பி மெல்லச் சிரித்தான். "தொட்டபெலாபூர் நிலையமா" என்று கேட்டான்.
பரன் ஒரு கணம் அதிர்ந்தான். இலக்கர்கள் இப்படி வெட்டியாக பேசுவார்கள் என அறியான். குரல் கனமாக, ஆழமாக இருந்தது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

"இல்லை கெம்பு கெரெ. நீங்கள்?"
"நாங்களும் அங்கேதான்" என்றான் இலக்கன்.
நாங்கள். ஆறுபேருமா. அச்சம் விர்ரென உடம்பில் பரவியது.
"ஏதேனும் இடைஞ்சலா அங்கே?"

இலக்கன் பதில் தரவில்லை. நேராக திரும்பி அமர்ந்த கொண்டான்.ஜெயநகரிலும் மிதவை நிற்கவில்லை. பரன் தன்னிச்சையாக பாதஅணிக் கயறுகளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். எதிலிருந்து ஓடித்தப்ப எனத்தெரியவில்லை.

இருநூறு அடி ஓடினாலும் இலக்கன் திகைப்பியால் இங்கிருந்தே வீழ்த்திவிடுவான் என்று தெரியும். பையை இறுக்கிப்பிடித்து எழுந்து நின்றான். கெம்பு கெரெ நிலையம் பரந்து விரிந்திருந்தது. மிதவை நின்று கதவுகள்
திறந்தவுடன் அவசரமாய் வெளியில் குதித்தான். சொரசொரப்பு ஊட்டப்பட்ட தரை ஏனோ வழுக்கியது. கீழே விழுந்தவனை நொடியில் தோளைப்பற்றி இழுத்து தலை அடிபடாமல் நிறுத்தினான் இலக்கன். எப்போது இறங்கினான் எப்படி தான் விழும் வேகத்தில் குனிந்தான் என்று பரன் இலக்கனைப் பார்த்தான். அவன் தோளைப் பிடித்த இடம் கல்லில் பட்டாற்போல் வலித்தது.

"பார்த்து." என்றான் இலக்கன் சிரித்துக்கொண்டே.
"நன்றி" என்று பதற்றமாய் கூறிவிட்டு இறங்கு சுழற்படிகளுக்கு நகர்ந்தான். நிலையத்தின் வெளியில் வந்து இலக்கர்கள் தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று பார்த்தான். தன்னை ஏன் அவர்கள் பின்தொடரவேண்டும் என்று தன் அசட்டுத்தனத்திற்கு தானே இகழ்வாய் தலை அசைத்து சாலையில் இறங்கினான். சனிக்கிழமை கூட்டம் எங்கும் நிறைந்திருந்தது.
பேசி ஒலித்தது.

"கவி? இங்கதான் இருக்கேன். வந்தாச்சு"
"பரன். வந்தியா? மணி நாலரை ஆயாச்சு.இங்க கிழக்குச் சுனையில இருக்கேன்."

சுனையில் எப்போதும்போல் எங்கும் சீனர்களும், அமெரிக்க அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் குவிந்து அலைந்துகொண்டிருந்தார்கள்.
வார இறுதி தரவுச் சுருக்கங்கள் சுனையின் ஐநூறு ஊற்றுகளிலும் மின்கதிர்களாக சுரந்துகொண்டிருந்தன. சுனைக்கு அடியில் இருக்கும் உலகின் ஆகப்பெரிய கணினி மந்தைகளின் திரட்டுகள் பில்லியன் கணக்கில் தரவுச்சரடுகளைக் கோர்த்துப் பொருள் ஆய்ந்து சுரப்பிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. தென்னாசியக் கூட்டரசின் குடிமக்கள் எண்ணும் படியாக ஆங்காங்கே சிலரே இருந்தார்கள். உலகின் பெரிய அறிவுச்சுனையைக் கட்டிமுடித்துவிட்டு அனைத்துப் பழுப்புமனிதர்களும் பெருநகரின் வெளியே சூழ்காடுகளுக்குள் அகன்றுவிட்டனர். சில தென்னாசிய உயரதிகாரிகளும்
அவர்தம் குடும்பங்களுமே நகரில் இன்னும் இருந்தனர்.

"பரன். முட்டாள். இந்த மஞ்சள் மனிதர்களை சுற்றிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப்போய் விட்டது. இப்ப எங்கதான் இருக்கிறே?"
"ஆச்சு. அஞ்சு நிமிஷம்"

பெரும் கிரிக்கட் மைதானம் போலிருந்த பரப்பில் நடுவில் வட்டமாக நூற்றுக்கணக்கில் சுனைகளும் அவற்றில் மொய்த்துக்கொண்டு அயலவர்களும் நிறைந்த கூட்டத்தில் கவி எங்கே இருப்பாளோ என பட்டிக் கதவை திறந்தான்.
ஒரு காவலாளி ஆள் உணர்பொறியைக் காட்டினான். பரன் அருகில் சென்றதும் அவன் ஒருதுளி வியர்வையை தடவி எடுத்துக்கொண்டு உடனே தடுப்புக் கட்டையை விலக்கி வழிவிட்டது பொறி.

"வணக்கம். பரன் அவர்களே" காவலாளி வெடிப்பியைத் தாழ்த்தி கூட்டரசின் உயரதிகாரிக்குறிய மரியாதையைக் காட்டினான்.

பரன் கவனிக்காது உள்ளே புகுந்த வேகத்தில் தூரத்தில் கவி கையசைப்பதைக் கண்டான். திருப்பிக் கையசைத்ததும் அவள் கூவுவது இங்கே கேட்டது. இத்தனை சின்னப் பெண்ணாக இருக்கும் இவளை எப்படி பல்கலைக்கழகத்திலன் ஆய்வுக்கூட்த்தில் சேர்த்தார்கள் என்று அவனுக்கு விளங்கியதே இல்லை.
அவளுக்கு பின்புறம் ஐநூறு அடி தூரத்தில் ஒரு இலக்கன் நிற்பதையும் பார்த்தான்.
வலது புறம் திரும்பினால் சுனைச் சதுக்கத்தின் எல்லையில் இன்னொரு இலக்கன் நகர்வதையும் இடது புற எல்லையில் இன்னொருவன் கூட்டத்தை துருவிப்பார்ப்பதையும் கண்டான்.

அவளை நோக்கி விரைந்தபோது கூட்டத்தில் ஒருவன் " ஆயித்து குரு. ஆரம்பவாகிலி" என்பது கேட்டது. இலக்கன் திகைப்புக் குச்சியை குறிபார்த்து இயக்கினான். கூட்டதில் இரு சீனர்கள் சரிந்தனர். பிறர் விலகி ஓடத் துவங்கினார்கள்.
கவி அவன் கைகளில் வந்து விழுந்தாள். இலக்கன் கூட்டத்தை பிளந்து புகுந்து விரைந்தான். சுற்றிலும் த்டுப்புக் கட்டைகள் மின்னேற்றப்பட்டன. இலக்கர் மூவரும் முக்கோணத்தின் மூன்று முனைகளிலிருந்து அனைவரையும் பத்திச் சேர்த்தார்கள்.--

7 comments:

ROSAVASANTH said...

பயங்கர ஃபார்மில் இருப்பது போல் இருக்கிறது...!

-/பெயரிலி. said...

/இத்தனை சின்னப் பெண்ணாக இருக்கும் இவளை எப்படி பல்கலைக்கழகத்திலன் ஆய்வுக்கூட்த்தில் சேர்த்தார்கள் என்று அவனுக்கு விளங்கியதே இல்லை/

சத்தம் போடாமற்சொல்லுங்கள். இதற்கும் ஓர் எதிர்ப்பட்டை ஒதுக்கீடு செய்துவிடுவார்கள் ;-)

arulselvan said...

ரோசா,
த்லைக்கு மேலே வேலை. வேறே வழியே இல்லை. இளைப்பாற இதுதான் ஒரே வழி. கூடவே சூரியன் எஃப் எம். தாங்குமா. இனி ஒருவாரத்துக்கு ராத்திரி கம்பெனி இருக்கு போலிருக்கு. அடிச்சு ஆடுங்க.

ரமணி:
நம்மளை எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கட்டும். பாத்ததைத்தானே சொல்லறோம். :-)
அருள்
.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

என்னங்க அருள், தொடரும் போட மறந்துட்டேன்னு சொல்லிருங்க. இல்லாவிட்டால் கதை என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் பிச்சுக்கிட்டு இருப்பேன்... :-)

மற்றபடி, சுவாரசியமாக இருக்கிறது.

பத்மா அர்விந்த் said...

கார்ட்டூனில் மட்டும்தான் கலைஞர் என்று நினைத்தேன்.

சின்ன பெண்கள் ஆய்வகத்தில் என்றே நிறைய பதிவெழுதலாம்.

இளங்கோ-டிசே said...

விளங்கின மாதிரியும், விளங்காத மாதிரியும் இருக்கிறது.

arulselvan said...

செல்வராஜ்,
தொடரும்தான்.
பத்மா,
ஆய்வகத்தில் சின்னப்பெண்கள் பற்றி உங்களால்தான் எழுதமுடியும். எழுதவும். நன்றி
டீசே,
இப்ப இருக்கற நிலைமையில் எனக்கும் விளங்கலே. என்ன ஆகும்னு பாக்கலம். :-)
அருள்