Wednesday, May 17, 2006

இட ஒதுக்கீடு - இன்று

இடதுசாரிக் கட்சிகள் தற்போதைய இட ஒதுக்கு முறுக்கு நிலைக்குத் தீர்வாக சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே உள்ளன.
1. பிற்படுத்தப் பட்டோரில் முன்னேறியகுடும்பத்தாரை இடஒதுக்குத் திட்டத்திலிருந்து விலக்குதல்
2. தற்போது இருக்கும் இடங்கள் போதாமையால், இன்னும் எச்சு இடங்களை அனைத்துப் புலங்களிலும் ஏற்படுத்துதல்
3. முன்னேறிய வகுப்புகளில் மிகஏழை மாணவருக்கும் சில சதவீதம் இட ஒதுக்கீடு செய்தல்

என்னைப் பொருத்தவரை இவை சரியான அறிவுறுத்தல்களாகவே படுகின்றன.

1. ஒரு சரியான வெளியேறு வகைமுறை (exit criteria) இல்லாததாலே பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு காலவரையற்றுப் போவதாக பொதுவில் உணரப்படுகிறது. இது தமிழகம் போன்ற மாநிலங்களைப்பொறுத்தவரை ஓரளவு உண்மையும் கூட.
தமிழகத்தின் தற்போதைய நிலைமையில் சில சாதிகளையாவது பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இப்பட்டியல் கல்வித்துறை பயன்படுத்தலுக்கு மட்டுமாவது மாற்றப்படவேண்டும்.
மிச்சமாகும் இடங்களை பொது இடங்களாக அறிவிக்காமல் மிகப்பிற்படுத்தப் பட்டோருக்கும், அட்டவணை சாதிகளுக்கும் பிரித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் இன்னும் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலே பெரும் சதவீதத்தில் மிகப்பிற்படுத்தப் பட்டோரும் அட்டவணை சாதியினரும் பயன்பெற முடியும். ஓரிரு பத்தாண்டுகளில் தமிழகத்தில் இட ஒதுக்கு தேவைப்படாத நிலைக்குக்கூட இது வழிசெய்யலாம். த்மிழகம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், குஜராத், மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.

ஆனால் இது போன்ற தீர்வு வட இந்திய மாநிலங்களுக்கு சொல்ல முடியுமா எனத்தெரியவில்லை. அவர்கள்தாம் இதைச் சொல்ல முடியும்

2. இடங்களை கூட்டுவது என்பதை செய்தே ஆகவேண்டிய கட்டாயக் காலம் இது. வளரும் பொருளாதாரத்தில் வேலையிடங்களை நிரப்ப ஆட்கள் போதவில்லை என்பதே இப்போதைய நிலைமை. அரசு தாராளமாக இடங்களை இன்னும் 50% கூட்டியும் ஐஐடி போன்ற புது தேசியக் கல்லூரிகளை நிறுவியும் இதை நடத்தலாம்

3. முற்பட்டவருக்கும் பிற மதத்தினருக்கும் சேர்ந்து பொருளாதார அடிப்படையில் சுமார் 10 % வரை ஒதுக்கு கொடுக்கப்பட்டால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் நீதிமன்றம் இடையில் புகுந்து 70% இடஒதுக்கீடு ஆகிவிட்டதே என்று கதறக்கூடாது. 100% ஒதிக்கீடு- அவரவர் சாதி விகிதப்படி என்று நடத்தினாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது.மெரிட் ஒன்றும் குறைவுபடாது. அது நியாயமா இல்லையா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம்.

இடது சாரிகளின் இந்த முயற்சி இப்போதைய வெறி பிடித்து அலையும் கும்பல்களை சற்றே சிந்திக்கவைத்தால் நன்றாக இருக்கும்.

7 comments:

Mr.M.Andy said...

ஏற்கனவே எங்கூர்ல இருக்கற லட்சாதிபதியோட ரேசன் கார்டுல போட்ருக்கற மாச சம்பளம் 200 ரூவா!!!!

Venkat said...

அருள் - சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால் நான் இந்த Deliverables and Exit Strategy இரண்டையும் பற்றி எழுதப்போக மானாவாரியாக தர்ம அடி வாங்கினேன். (ஏன் தர்ம அடி வாங்கினேன் என்று என்னைப் பெத்தவளைத்தான் கேட்க வேண்டும்). நீங்கள் தர்ம அடி வாங்காமலிருக்க பரமண்டலத்திலிருக்கும் பரமபிதா இரட்சிக்க இறைஞ்சுகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களாக பல High Tech start-up களில் பங்கெடுத்து வருகிறேன். எந்த ஒரு ரிஸ்க் எடுக்கும் முயற்சிகளிலும் Checks and Balances மிக முக்கியம் என்பதை அனுபவ ரீதியாக அறிந்து வருகிறேன்.

ஐம்பது வருட ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டு அடிமைத்தனத்துடன் ஒப்பிட்டால் இன்னும் இந்தியா ஒரு Start-up company தான். இதில் கண்கொத்திப் பாம்பாக முன்னேற்றத்தை அளவிடுவதும் போக்குகளை மாற்றியமைப்பதும் முக்கியம்.

சலுகை என்று அளிக்கும் பொழுது அதனுடன் கால வரையறையை பிணைக்க வேண்டியது முக்கியம். அது சில நூறு ஆண்டுகளாவது இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் பத்தாண்டுக்கு ஒருமுறை திட்டத்தின் செயல்பாட்டைக் கணக்கிடும் வசதியும் நடைமுறைகளைச் சற்று தளர்த்தியும் மாற்றியும் அமைக்கும் வசதியும் வேண்டும்.

பத்மா அர்விந்த் said...

அருள்
சட்டதிட்டங்களுடன் கல்வி முறை, கல்லூரிகளில் மாணவர்களின் பயிற்சி முறை போன்ற எல்லாமே 4 வருடத்திற்கொருமுறை சரிபார்க்க வேண்டும். இந்தியாவில் இந்த பழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இங்கே எல்லா கொள்கைகளும்(policy) 4 வருடத்திற்கொருமுறை பரிசீலிக்க பட்டு புதிய மாற்றங்கள் சேர்க்க படுகின்றன. இந்த நடைமுறை மிகவும் நுண்னிய முறையில் செய்யப்படுகின்றன. அதேபோல பொதுமக்கள் விரும்பினால் அவர்களும் கூட்டங்களில் பங்கு கொள்ளலாம். அதில் முக்கியமான ஒன்று minority and women பிரச்சினைகள்.ஆனால் அரசியல் கலப்பில்லாமல் உண்மையில் அடிப்படை மனிதன் நிலை கண்டு மாற்றங்கள் பரிசீலிக்கப்படவேண்டும்.

ROSAVASANTH said...

//முற்பட்டவருக்கும் பிற மதத்தினருக்கும் சேர்ந்து பொருளாதார அடிப்படையில் சுமார் 10 % வரை ஒதுக்கு கொடுக்கப்பட்டால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. //

அருள், நீங்கள் இப்படி எழுதியது மிகவும் ஆச்சரியமாக இருகிறது. இடவொதுக்கீடு என்பதற்கும் பொருளாதரா பிரச்ச்சனைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஏதோ எளியவர்களுக்கு வலியவர்கள் அளிக்கும் சலுகையாக பார்த்தால் இந்த வாதம் ஒத்து வரும். ஆனால் இடவொதுக்கீட்டின் அடிப்படை, இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளில் நிலவும், சாதிய சமூகத்தின் தடைகளை முன்வைத்து, சமன் செய்வதை அடிப்படையாய் கொண்டது. டிவிஎஸ் (வேறு உதாரணத்தையும் எடுத்துகொள்லலாம்) நொடிந்து போய் தெருவுக்கு வந்தால் இடவொதுக்கீட்டிற்கு தகுதியாகிவிடும் என்றால், அது கேலிக்குரியதாக இல்லையா?

ரவி இது போல சொன்ன போது எல்லாம் எதிர்வினை வைக்க தோன்றவில்லை. அவர் புரிதல் அப்படி. உங்களிடம் வேறு புரிதலை எதிர்பார்த்திருந்ததால் எழுதினேன். மற்றபடி இந்த விவாதத்தில் தீவிரமாய் ஈடுபடும் ஆர்வம் இல்லை. (முதல் இரண்டு வாதங்களை ஏற்றுக்கொள்கிறேன்.)

arulselvan said...

ரோசா:

எல்லாமே நியாயமாக சரியாக இருக்கும்போது மாணவர் விகிதம் எப்படி இருக்கும்? சமுதாயத்தில் ஏறக்குறைய அவர்கள் சாதியின் விகிதப்படிதான் இருக்கும். 'அறிவு' என்பது அனைவருக்கும் சாதி வித்தியாசமில்லாமல் சமஅளவில் இயற்கையாக அமைந்திருக்கும் என்பது இதன் பின்னால் இருக்கும் ஒரு கருதுகோள். புறக்காரணிகளால் இந்த இயல்பான நிலையை நாம் காணாத போது அரசு உள்நுழைந்து சரிசெய்ய தேவையாகிறது. இட ஒதுக்கீடு அதற்கான சரியான திட்டம் என்றே நான் கருதுகிறேன். அப்படி பார்க்கும்போது, இப்போது ~ 65% இடங்கள் ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருப்பது பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை சாதியினரை சேர்த்துப்பார்த்தால் இயல்பாகத்தான் படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அனைவருக்குமான தர/பொது இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்/அட்டவனை சாதியினரின் போட்டி இருக்கவே செய்கிறது. இது ஐம்பதாண்டு இட ஒதுக்கீடு கொண்டுவந்த ஆரோக்கியமான நிலை. இந்நிலையில் இந்து உயர்சாதிகள்+கிருத்துவர்கள்+இஸ்லாமியர் இவர்களின் ஏழை மாணாக்கரை 10% ஒதுக்கீட்டில் சேர்த்தால் மொத்த விழுக்காடு 75-80% செல்லும். இது சரியாகவே படுகிறது. 20-25% பொது இடங்கள் இருக்கும். ஏறக்குறைய சமுதாயத்தில் மக்கள் விகிதத்தை பிரதிபலிப்பதான ஒரு கல்வி விகிதமும் இருக்கும் என்பது என் கணிப்பு.
இப்படியான எளிதான சூழ்நிலை மற்ற மாநிலங்களில் கிடையாது என்றே கூறவேண்டும். உதாரணமாக கேரளத்தில் ஏறக்குறைய இந்துக்கள்,கிருத்துவர்கள், இஸ்லாமியர் ஒவ்வொருவரும் 30% இருக்கின்றனர். இதில் இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் 27% கொடுத்தால் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இன்று இல்லாவிட்டால் நாளை.
வட மாநிலங்களை எடுத்துக்கொண்டால் சில மாநிலங்களில் இந்து மேல்சாதியினர் 40% இருக்கின்றனர். விகிதங்கள் நாடுமுழுவதும் இப்படி மாறுவதால் தமிழகம் போன்ற ஒரு தீர்வு நாடு முழுவதற்கும் சரியானதாக இருக்காது. பல்வேறு மாநிலங்களின் சராசரித் தீர்வாகவே இதை இடது சாரிக்கட்சிகள் முன்வைக்கின்றன என நினைக்கிறேன். தேசிய நிறுவனங்களுக்கு நாடுமுழுவதும் ஒரே மாணவர் சேர்ப்புத் திட்டம்தான் இருக்க முடியும் என்பதால் இப்படி சராசரியான திட்டமே இயற்ற முடியும். தேசிய உயர்கல்விக்கூடங்களில் (இளநிலைப் பட்டங்களுக்கு அல்ல) முதுநிலைப் பட்டங்களுக்கும், ஆராய்ச்சிக்கும் மேற்கண்ட வாதங்களில் இன்னும் பெரும் மாறுதல்கள் வேண்டும் என்பது என் நிலை. அவற்றில் 50%க்கும் மேலாக இடஒதுக்கீடு செய்ய தயக்கம் வேண்டும் என்றே இப்போது நினைக்கிறேன்.
இவை பெரும் விவாதங்களுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அருள்

ROSAVASANTH said...

பதிலுக்கு நன்றி!

yetanothervenkat said...

//2. இடங்களை கூட்டுவது என்பதை செய்தே ஆகவேண்டிய கட்டாயக் காலம் இது. வளரும் பொருளாதாரத்தில் வேலையிடங்களை நிரப்ப ஆட்கள் போதவில்லை என்பதே இப்போதைய நிலைமை. அரசு தாராளமாக இடங்களை இன்னும் 50% கூட்டியும் ஐஐடி போன்ற புது தேசியக் கல்லூரிகளை நிறுவியும் இதை நடத்தலாம்//

I completely support this idea and am surprised why a lot of ideas put forth on the issue of reservation do not consider this, at least as part of the solution.

An IITB Professor the other day mentioned to me that the annual budget of all IITs put together is about Rs. 1100 crores, while the JEE traning market generates about Rs. 5000 crores as income in one year. He said with that kind of money, we should be able to start and support 1 new IIT every year!